பதினெட்டுக்குள்ளே 4: தாய்ப்பால் - உரிமையும் உணர்வும்!

By க.நாகப்பன்

குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே; கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே - இனியவை நாற்பது.

ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தை மீதான கனவுகளும், எதிர்பார்ப்புகளும் அதிகம் உள்ளன. ஆனால், அந்தக் குழந்தையின் வளர்ச்சிக்குத் தடையாய் ஒரு சில பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா?

சமீபத்தில் நடந்த சம்பவமே அதற்கு சாட்சி. கேரளாவில் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் பகுதியைச் சார்ந்தவர் அபூபக்கர் சித்திக். இவருக்கு குழந்தை பிறந்தவுடன், தாய்ப்பால் ஊட்ட மனைவியை அனுமதிக்கவில்லை. காரணம், ஐந்து முறை பிரார்த்தனையில் ஈடுபட்ட பிறகே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று கண்டிப்பு காட்டியிருக்கிறார்.

மதகுருவின் அறிவுறுத்தலின் பேரில்தான் இப்படிச் செய்வதாக கூறிய அபூபக்கர், மருத்துவமனை நிர்வாகம் மன்றாடியும் தாய்ப்பால் தரக் கூடாது என்று மனைவிக்குக் கட்டளையிட்டார். கடைசியில் மருத்துவமனை நிர்வாகத்துடன் முரண்டு பிடித்து டிஸ்சார்ஜ் செய்துகொண்டு குழந்தையையும், மனைவியையும் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் உரிமைகள் ஆணையம், சிறார் நீதி சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நபரின் மீது காவல் துறையில் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது தாயின் முழு முதல் கடமை. தாய்ப்பால் பெறுவது பிறந்த குழந்தையின் அடிப்படை உரிமை. தாய்ப்பால் அமுத ஊற்று. குழந்தையின் கிரியா ஊக்கி. தாய்மையின் கொடை. குழந்தையின் வரம்.

ஆனால், எல்லா தாய்மார்களும் அப்படிக் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். சில தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்க மனமில்லாமல் அல்லது பொறுமை இல்லாமல் இருக்கின்றனர்.

சில தனியார் மருத்துவமனைகள் தாய்ப்பாலின் அவசியத்தை உணர்ந்தும், குழந்தை பிறந்த உடன் தாய்ப்பால் கொடுக்க தாயிடம் அறிவுறுத்துவதில்லை. தேவையில்லாத நேர விரயத்துக்குப் பிறகே தாய்ப்பால் கொடுக்க அனுமதி தருகின்றனர். சிசேரியன் மூலம் பிறந்த குழந்தையாக இருந்தாலும் 2 1/2 மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம்.

குழந்தை பிறந்த 1 மணிநேரத்துக்குள் தாய்ப்பால் அளிப்பதற்கு முன்முயற்சி அளித்தல். குழந்தை பிறந்த 1 மணிநேரத்துக்குள் தாய்ப்பால் அளிப்பது 22 சதவீத பிரசவத்துக்குப் பிந்தைய குழந்தை மரணங்களைத் தடுக்கும் (Ghnba Study, 2006).

ஆனால் தமிழகத்தில் அனைத்துப் பிரசவங்களும் மருத்துவமனைகளில் நடந்தாலும் பாதி தாய்மார்கள் மட்டும் தான் (54.7%) குழந்தை பிறந்த ஒரு மணிநேரத்துக்குள் தாய்ப் பால் கொடுக்கின்றனர். மூன்றில் ஒருபங்கு (34%) பிரசவங்கள் சிசேரியன் மூலமாகத் தான் நடக்கின்றன. 1 மணிநேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்கப்படுவதில்லை (NFHS-4)

தமிழ்நாட்டில் பாதிக்கும் குறைவான தாய்மார்கள் (48.3%) குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே அளிக்கிறார்கள். இந்திய அளவில் இந்த எண்ணிக்கை 65 சதவீதமாகும் (RSOC 2013-14).

அதிர வைக்கும் புள்ளிவிவரம்

> பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் வழங்கினால், உலக அளவில் ஆண்டுக்கு 8,20,000 குழந்தைகள் இறப்பைத் தவிர்க்கலாம்.

> ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பில், தாய்ப்பால் தராமல் போவதால் ஏற்படும் இறப்பு 13 சதவீதம்.

> தாய்ப்பால் கொடுத்தால், இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 1,56,000 குழந்தைகள் இறப்பதைத் தவிர்க்கலாம்.

> குழந்தைகளுக்கு அறிவுத்திறன் மேம்படுவதால், நாட்டின் வருமானம் அதிகரிக்கும். இது ஆண்டுக்குச் சுமார் 4,300 கோடி ரூபாய் என்கிறது கணிப்பு.

> ஆண்டுக்குச் சுமார் 20 ஆயிரம் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் இந்தியாவில் மடிகின்றனர். தாய்ப்பால் அளிப்பதன் மூலம் இதில் 4,915 இறப்புகளைத் தடுக்க முடியும்.

> பிறக்கும் எல்லாக் குழந்தைக்கும் தாய்ப்பால் வழங்கப்பட்டால், வருங்காலத்தில் நீரிழிவு நோய் 35 சதவீதம் குறையக்கூடும்.

> எல்லாக் குழந்தைகளும் தாய்ப்பால் குடித்து வளர்ந்தால், வருங்காலத்தில் உடல் பருமன் நோய் 26 சதவீதம் குறையும்.

> மாவுப் பால் எனப்படும் புட்டிப் பால் வகைகளைத் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம், இந்தியாவிலிருந்து 1,11,226 டன் பசுமை வாயுக்கள் ஆண்டுதோறும் வெளியேறுகின்றன.

> உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7 வரை கொண்டாடப்படுகிறது.

தாய்ப்பாலின் அவசியம் குறித்து பொதுநல மருத்துவர் கு.கணேசனிடம் பேசினேன்.

உலகிலேயே விலை மதிப்பில்லாத ஓர் உணவுப் பொருள் தாய்ப்பால். சத்தான, சுத்தமான. கலப்படம் இல்லாத உணவும் அதுதான். முழுமையாக தாய்ப்பால் அருந்திய குழந்தைகள் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வளர்கிறார்கள் என்பதும், மற்ற குழந்தைகளைவிட அதிக அறிவு வளர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதும் பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கிற உண்மைகள் என்றார்.

(மருத்துவர் கு.கணேசன்)

குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்க தாய்மார்கள் செய்ய வேண்டியது என்ன?

பிறந்ததிலிருந்து குழந்தைக்கு என்ன உணவு கொடுப்பது என்பதை ஒவ்வொரு தாயும் புரிந்து பின்பற்றினால் மட்டுமே குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கும்.

குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் ஏற்படும் வேகமான வளர்ச்சிக்கு மற்ற சத்துக்களைவிட புரதச் சத்தின் தேவை அதிகமாக இருக்கும். இவை அனைத்தையும் ஈடுகட்டுவது தாய்ப்பால் மட்டுமே!

ஏன் சீம்பால் ஊட்ட வேண்டும்?

குழந்தை பிறந்ததும் தாய்க்குச் சுரக்கும் முதல் பாலைச் 'சீம்பால்' என்று அழைக்கிறோம். மஞ்சள் நிறத்தில் பிசுபிசுப்பாகச் சுரக்கும் இச்சீம்பால்தான் குழந்தைக்கு முதல் உணவு; முதல் தடுப்பூசியும் இதுதான். இதில் இம்யூனோகுளோபுலின் ஏ எனும் நோய் எதிர்ப் புரதம் இருக்கிறது. இது குழந்தைக்குச் சளி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. மற்ற நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியையும் தருகிறது. மூளை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களும், கார்போஹைட்ரேட், கேலக்டோஸ், வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துக்கள் சீம்பாலில் போதுமான அளவுக்கு உள்ளன. குழந்தை பிறந்த முதல் 3 நாட்களுக்கு இந்தச் சீம்பால் தாயிடமிருந்து கிடைக்கும்.

அடுத்துச் சுரக்கும் தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான கொழுப்பு, சர்க்கரை, புரதம், வைட்டமின் ஏ, சி, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட எல்லா சத்துக்களும் அடங்கியுள்ளன. 7 - 8 % கார்போஹைட்ரேட், 87.47 % தண்ணீர், 3.76 % கொழுப்பு, 2.14 % புரதம், 3.76 % லேக்டோஸ், 0.31 % தாதுக்கள் தாய்ப்பாலில் உள்ளன. இதில் இரும்புச் சத்து இல்லை; வைட்டமின் டி இல்லை.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு தண்ணீர் தரலாமா?

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு, முதல் ஆறு மாதங்களுக்குத் தண்ணீர் தர வேண்டியதில்லை. குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஆரம்பக்கட்டத்தில் தேவைப்படுகிற கொழுப்பு அமிலங்களும் சிஸ்டீன், டாரின் ஆகிய அமினோ அமிலங்களும் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளன. இதிலுள்ள லைசோசைம் எனும் என்சைம் நோய்க் கிருமிகளை அழித்துவிடுகிறது.

எத்தனை வயதுவரை தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம்?

பிறந்த குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் தரவேண்டியது முக்கியம். இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் நிறைய பெண்கள் வேலைக்குச் செல்வதால், பலரும் இத்தனைக் காலம் தாய்ப்பால் தருவதைத் தவிர்க்கின்றனர். பதிலாக, செயற்கைப் புட்டிப்பால் தருகின்றனர். இது அம்மாக்கள் செய்யும் மிகப் பெரிய தவறு.

வேலைக்குச் செல்லும் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் தாய்ப்பால் வழங்க முடியுமா? எப்படி?

பாலை 'பிரஸ்ட் பம்ப்' மூலம் எடுத்து, ஃபிரீஸரில் பாதுகாத்துவிட்டால், வீட்டில் உள்ளவர்கள் குழந்தைக்குத் தேவைப்படும் போதெல்லாம் கொடுக்கலாம். இப்படி 24 மணி நேரத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் பாலை ஃபிரீஸரிலிருந்து எடுத்து அறை வெப்பநிலைக்குக் கொண்டு வந்து குழந்தைக்குப் புகட்டலாம்.

இப்படி முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் தர வேண்டியது கட்டாயம்

செயற்கைப் பால் பவுடர் பயன்படுத்தக் கூடாது. ஏன்?

செயற்கைப் பால் பவுடரில் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் அமினோ அமிலங்கள் பல இல்லை. முக்கியமாக, சிஸ்டின், மீத்தியோனின் எனும் அமினோ அமிலங்கள் இல்லவே இல்லை. எனவே, தாய்ப்பாலுக்கு இவை ஈடாகாது. இவற்றை சில அவசர நிலைமைகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தாய்ப்பாலுக்கு மாற்றாக இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தினால் குழந்தைக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படவும், தேவையான அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காமல் போகவும் அதிக வாய்ப்பு உள்ளது'' என்றார் மருத்துவர் கு.கணேசன்.

100 மில்லி பாலில் உள்ள சத்துக்கள் - ஓர் ஒப்பீடு!

சத்துக்கள்

தாய்ப்பால்

பசும்பால்

எருமைப் பால்

சக்தி (கலோரி)

65

67

117

தண்ணீர் (கிராம்)

88

87.5

81

கார்போஹைட்ரேட்(கிராம்)

7.4

4.4

5

புரதம்(கிராம்)

1.1

3.2

4.3

கொழுப்பு(கிராம்)

3.4

4.1

6.5

கால்சியம்(மி.கி)

28

120

210

பாஸ்பரஸ்(மி.கி)

11

90

130

தயமின்(மி.கி)

0.02

0.05

0.04

பீட்டா கரோட்டீன்(மை.கி)

137

174

160

ரிபோஃபிளேவின் (மி.கி)

0.02

0.19

0.1

வைட்டமின் சி (மி.கி)

3

2

1

இரும்புச்சத்து (மி.கி)

0

0.2

0.2

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு விளையும் பயன்கள்

(கோப்புப் படம்: சிவசரவணன்)

* தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் உடல் எடையை விரைவாக இழக்க முடிகிறது. அவர்கள் தங்களின் உடல் வடிவத்தை விரைவில் திரும்பப் பெற முடிகிறது.

* தாய்ப்பால் அளிப்பது மார்புப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய், இரண்டாம் வகை சர்க்கரைநோய், ஆகிய நோய்கள் பின்னாளில் தாய்மார்களை தாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது,

* பிரசவத்துக்குப் பின்னர் இரத்தப் போக்கைக் குறைக்கிறது, தாய்மார்கள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப உதவுகிறது.

* தாய்ப்பால் அளிப்பது ஒரு கர்ப்பத்தடை போல செயல்பட்டு அடுத்த கர்ப்பத்தை தாமதப்படுத்துகிறது.

* தாய்ப்பால் தாயின் மார்புக் காம்பிலிருந்து நேரடியாக பெறப்படுவதால் கெட்டுப்போகும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

தாய்ப்பால் குடிப்பதால் குழந்தைக்கு விளையும் பயன்கள்

• தாய்ப்பால் அளிப்பது 13 சதவீதம் 5 வயதுக்குட்பட்ட குழந்தை மரணங்களைத் தடுக்கிறது.

• தாய்ப்பால் குடித்த குழந்தைகளுக்கு பாட்டிலில் பால் குடித்த குழந்தைகளைவிட அறிவாற்றல் புள்ளிகள் 5 முதல் 8 வரை உள்ளது. தாய்ப்பால் குடித்த குழந்தைகள் குழந்தைப் பருவத்திலும் வளரிளம் பருவத்திலும் அறிவுசார் தேர்வுகளில் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளைவிட நன்றாக செயல்படுகிறார்கள்.

* தாய்ப்பால் குடித்த குழந்தைகளுக்கு தொற்று, நிமோனியா, குடல் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு.

* முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே அளிப்பது 2 வயது வரை காதுகளில் தொற்று வரும் வாய்ப்பை 43 சதவீதம் குறைக்கும் செயலோடு தொடர்புடையது.

* தாய்ப்பால் குடித்த குழந்தைகளுக்கு சர்க்கரை நோய், இதய நோய்கள், ஆஸ்துமா, புற்று நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் வருவது குறைவு.

* பல் சொத்தைகளிலிருந்து பாதுகாக்கிறது.

* பிரசவத்துக்குப் பின்னர் குழந்தைகள் இறப்பதைத் தடுப்பதற்கான சிறந்த மந்திரத் தோட்டா, குழந்தைப் பிறந்த 1 மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும், தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதற்கான முன் முயற்சி எடுப்பது தான். தாய்ப்பால் அளிப்பதை வலியுறுத்துவது அனைத்து காரணங்கள் மற்றும் தொற்றுகளால் பிறந்தவுடன் குழந்தை இறப்பதை 44லிருந்து 45 சதவீதம் குறைப்பதோடு தொடர்புடையது (Debes AK)

* பிரசவத்துக்குப் பின்னரான குழந்தை இறப்பைத் தடுப்பதற்கான இரண்டாம் சிறந்த வழி என்னவென்றால், கங்காரு தாய் பராமரிப்பு அல்லது குழந்தை பிறந்தவுடன் தாய்க்கும் குழந்தைக்கும் உடலோடு உடல் தொடர்பு, அது பின்னரும் தொடரும். இந்த நடைமுறை பிறந்தவுடன் குழந்தை இறப்பதை 40 சதவீதம் குறைக்கிறது தீங்கு விளைவிக்கும் கிருமிகள் இருப்பதை 58 சதவீதம் குறைக்கிறது, உடல் வெப்பக் குறைவை 77 சதவீதம் குறைக்கிறது. (Cochrane review, Conde- Agudelo A, 2011).

* தாய்ப்பால் கொடுப்பது, 13 சதவீதம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மரணங்களை தடுக்கிறது.11.6 சதவீத குழந்தை மரணங்களுக்கு காரணம் குறைந்த அளவிலான தாய்ப்பால் கொடுக்கப்பட்டது தான் என்று லான்சர் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். குழந்தை பிறந்து 1 மாதத்துக்குள் இறப்பதை 55லிருந்து 87 சதவீதம் வரை தடுக்கிறது (Gary L Darmstadt et al).

தாய்ப்பால் வங்கி

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரு தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. தற்போது உலகத் தாய்ப்பால் ஊட்டும் வாரத்தை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் ஏழு தாய்ப்பால் வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன.

அனைத்துக் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்கச் செய்வதே தாய்ப்பால் வங்கிகளின் நோக்கம். சில தாய்மார்களுக்கு அதிகமாக பால் சுரக்கும். சில குழந்தைகள் பிறந்தவுடன் இறந்துவிடும். அந்த தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பாலைப் பெற்று, பாதுகாத்து, தாய்ப்பால் கிடைக்காமல் தவிக்கும் குழந்தைகளுக்குக் கொடுக்கவே தாய்ப்பால் வங்கிகள் செயல்படுகின்றன.

எல்லா தயக்கங்களையும் உடைத்தெறிந்து பிறக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்கச் செய்து, ஆரோக்கியத் தலைமுறையை உருவாக்குவோம்.

தாய்மார்கள் பாலூட்டும் அறை

2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நாள், உலக தாய்ப்பால் தினம் கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு, பாலூட்டும் தாய்களுக்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம், தமிழ்நாட்டின் முக்கிய பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்கள் அறைகளை நிறுவியுள்ளது.

சென்னையில் 39 பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் 32 அறைகள் மாநகர போக்குவரத்துக் கழகத்தாலும், 7 அறைகள் பெருநகர சென்னை மாநகராட்சியாலும் நிர்வகிக்கப்படுகின்றன.

குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் ஏன் அவசியம்? மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்டுக்கும், பிறப்புச் சான்றிதழுக்கும் என்ன தொடர்பு? அடுத்த அத்தியாயத்தில் பகிரலாம்.

க.நாகப்பன், தொடர்புக்கு: nagappan.k@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: >பதினெட்டுக்குள்ளே 3: தாய் - சிசு உரிமைகளை அவசியம் அறிக!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்