இணைய களம் | அண்டை நாட்டின் அவலம்

By ஆர்.ஷாஜஹான்

நவீன துக்ளக் சர்க்காரின் பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியான ஓரிரு நாட்கள் கழித்து, நேபாள நண்பர் ஒருவர், நேபாளம் சந்தித்துவரும் செய்திகளை அவ்வப்போது பகிர்ந்துவந்தார். எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்ததில் நாட்கள் கழிந்துவிட்டன. மூன்று பக்கம் இந்தியாவையும், ஒரு பக்கம் சீனத்தையும் எல்லையாகக் கொண்டது நேபாளம். இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் காலம்காலமாக நெருங்கிய உறவு. இரண்டு நாட்டினரும் பரஸ்பரம் பாஸ்போர்ட், விசா இல்லாமல் போய் வரலாம். உறவின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட வேண்டுமானால், இந்திய ராணுவத்தில் கூர்க்கா ரெஜிமென்ட் என்று ஒரு படைப் பிரிவே உண்டு என்பது போதுமானது.

பணமதிப்பு நீக்க பாதிப்பு

நேபாளம் பெரும்பாலும் மலைப் பகுதிகள் கொண்டது என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்தியாவுடன் ஒப்பிட்டால், தகவல் தொடர்பு, சாலை வசதிகள் மிகவும் குறைவு. சிறிய விமான நிலையங்கள் நிறைய உண்டு. ஏராளமான கிராமங்களுக்கு மின் வசதியே கிடையாது. மக்களில் சுமார் பாதிப் பேர், சுமார் இரண்டு மணி நேரம் நடந்தால்தான் சாலையை அடைய முடியும். பல பகுதிகளுக்குச் சாலை போட முடியாது. 75 மாவட்டங்களில் 15 மாவட்டத் தலைநகர்களுக்கே சாலை வசதி கிடையாது. 60% சாலைகளும் கிராமப்புற சாலைகளும் மழைக் காலத்தில் பயன்படுத்த முடியாத நிலையை அடையும். விவசாயம்தான் முக்கிய வேலைவாய்ப்பு. பெரும்பாலான ஆண்கள் நாட்டுக்கு வெளியே வேலை செய்பவர்கள். நேபாளம் குறித்து இதற்கும் அதிகமான அறிமுகம் தேவையில்லை.

நேபாளத்திலும் இந்தியாவில் இருந்தது போன்ற அதே ரூபாய் நோட்டுகள்தான் (ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.1,000) புழக்கத்தில் இருந்தன. இந்திய ரூ.1-க்கு நேபாள மதிப்பு ரூ. 1.60. இத்தனை காலமும் இந்திய ரூபாய் நோட்டு நேபாளத்தில் தாராளமாகச் செல்லுபடியாகிவந்தது. நேபாளி கள் பல தலைமுறைகளாக இந்தியாவில் வேலை செய்துவருகிறார்கள். அவர்கள் சம்பாதிக்கிற பணத்தை ஊரில் இருக்கும் குடும்பங்களுக்கு அனுப்புவார்கள். 2016 மதிப்பீட்டின்படி, நேபாளிகள் இந்தியாவிலிருந்து அனுப்பும் தொகை 640 மில்லியன் டாலர். நேபாளத்தின் இயற்கை அமைப்பையும், இந்தியாவில் நேபாளிகளின் வருவாயையும் கணக்கில் கொண்டு பார்த்தால், அவர்கள் வங்கிகள் மூலம் அனுப்புவது மிகவும் குறைவாகவே இருக்க முடியும். 6 மாதங்களுக்கு அல்லது ஓராண்டுக்கு ஒரு முறை ஊருக்குச் செல்லும்போது எடுத்துச் செல்வார்கள். அல்லது நண்பர்கள் ஊருக்குச் செல்லும்போது கொடுத்து அனுப்புவார்கள். கையில் இந்தியப் பணம் வைத்திருப்பதும் புழங்குவதும் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் தந்ததில்லை.

குரலுக்குப் பதில் இல்லை

நவம்பர் 8 அவர்களுடைய வாழ்க்கையைச் சிதைத்துவிட்டிருக்கிறது. நேபாள மக்களிடம் இருக்கும் பணத்தை மாற்றுவதற்கான வழிகளை வகுக்குமாறு நேபாள அரசும் நேபாள தேசிய வங்கியும் (இந்திய ரிசர்வ் வங்கி போன்றது) பல முறை வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆனால், இந்திய அரசின் தரப்பில் எந்தப் பதிலும் இல்லை. இந்தியர்கள் எழுப்பும் கேள்விகளுக்கே பதில் தராத அரசா நேபாளக் குரல்களைக் கண்டுகொள்ளப்போகிறது? பணநீக்க மதிப்பு அறிவிப்பு வந்த புதிதில், நேபாள தேசிய வங்கி என்ன வேண்டுகோள் விடுத்ததோ, அதே வேண்டுகோளை நான்கு நாட்களுக்கு முன்னும் விடுத்திருக்கிறது. இந்திய ரூபாய் நோட்டுகளைத் தமது வங்கிகளில் மாற்றிக்கொள்ள முடியாது என்பதால், மக்கள் சட்டவிரோதமாக மாற்றுவது தவிர வேறு வழியில்லாமல் தவிக்கிறார்கள்.

அதாவது, இந்திய எல்லையை அடைந்து, கமிஷன் கொடுத்து, பழைய நோட்டுகளுக்கு புதிய நோட்டுகளாக மாற்றுவது. இந்தியாவிலேயே பல கிராமங்களில் தரகர்கள் ரூ. 500 நோட்டுக்கு ரூ. 400 தந்தார்கள் என்ற செய்திகளைப் பார்த்தோம். நேபாளிகளுக்கு அதைவிடக் குறைவாகவே தரப்பட்டது. நேபாளிகள் உழைத்துச் சேர்த்த பணத்தைத் தரகர்களிடம் இழக்க வேண்டிய நிலை ஒரு பக்கம். நோட்டுகளை மாற்றுவதற்காகத் தொழிலை விட்டுவிட்டு அலைய வேண்டிய நிலை இன்னொரு பக்கம். சாலை வசதிகளே இல்லாத தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த இரண்டையும் செய்ய இயலாமல் தவிப்பது மற்றொரு பக்கம்.

ரத்து செய்த நேபாளம்

இந்திய ரூபாய் நோட்டு விவகாரம் நேபாள மக்களின் வாழ்க்கையை மட்டுல்ல, நேபாள பொருளாதாரத்தையும் குலைத்துவிட்டிருக்கிறது. உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு 2.2% வீழ்ச்சி அடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து நேபாளத்துக்குச் செல்வார்கள். கையில் இந்திய ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்வார்கள். இப்போது பணப் பற்றாக்குறையாலும், மாற்ற முடியாத நிலையாலும் நேபாள சுற்றுலாத் துறை நசிந்துவிட்டது.

இந்தச் சூழலில், நேபாள தேசிய வங்கி ஒரு மென்பொருளை வடிவமைத்திருக்கிறது. ஒருவர், தன்னுடைய அடையாள அட்டையை ஆதாரமாகக் காட்டி, ஒரே ஒரு முறை மட்டும் பழைய நோட்டுகளை ரூ.25 ஆயிரம் வரை மாற்றிக்கொள்ள வகை செய்யுமாறு வடிவமைத்திருக்கிறது. இந்தத் திட்டத்தை முன்வைத்து நேபாள அதிகாரிகள் தூதுக் குழு இந்தியா வர இருக்கிறதாம். இத்தனை காலம் திணறவிட்ட இந்திய அரசு ஏற்றுக்கொண்டால் நல்லது. இல்லையேல், நேபாளத்துக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என்பது ஒருபக்கம் இருக்கட்டும். நேபாளத்தை சீனாவின் பக்கம் இன்னும் தள்ளிவிடாமல் இருப்பது முக்கியம்.

பி.கு. இந்தியா - நேபாளம் இடையே ஆறுவழி நெடுஞ்சாலை அமைக்கவிருப்பதை மிகப் பெரிய சாதனையாக இந்திய அரசும், செல்பி பிரதமரும் விளம்பரம் செய்து கொண்டனர். இந்த ஒப்பந்தத்தை நேபாளம் சில வாரங்களுக்கு முன்பு ரத்துசெய்துவிட்டது. இந்தச் சாலைக்காக மதிப்பீட்டுச் செலவு சுமார் ரூ.40 கோடியைத் தந்து விடுகிறோம் என்று கழன்றுகொண்டது. இதன் அர்த்தம் அரசியல் நோக்கர்களுக்குப் புரியும்.

- ஆர்.ஷாஜஹான், தொடர்புக்கு: shahjahanr@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்