சோ என்னும் ஒற்றைச் சொல்லின் இரட்டை அடையாளம்!

By அரவிந்தன்

சோ 'வந்தே மாதரம்' என்ற தொடர்கதையை 'துக்ளக்'கில் எழுதிவந்தார். ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் அதில் 'கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலிருந்து' என்று குறிப்பிடப்பட்டு ஒரு மேற்கோள் சம்ஸ்கிருதத்தில் தரப்பட்டு, அதன் தமிழாக்கமும் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த வாரத்தின் கதையோட்டத்தில் இந்த மேற்கோள் தகுந்த இடத்தில் எடுத்தாளப்பட்டிருக்கும். வாசகர்களைப் பெரிதும் கவர்ந்த இந்த மேற்கோள்களை எழுதியவர் சாணக்கியர் அல்ல என்பதையும் அவர் பெயரில் தானே எழுதியதையும் தொடர் முடிந்த பிறகு தெரிவித்து, வாசகர்களை அசடுகளாக்கி அழகு பார்த்தார் சோ.

வேடிக்கையைத் தாண்டி, இந்தச் சம்பவத்தில் முக்கியமான ஒரு செய்தி உண்டு. சாணக்கியர், அரிஸ்டாட்டில், காந்தி என்று பிரபலமானவர்களின் பெயர்களைப் பார்க்கும்போது, மக்கள் அவற்றைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்கிறார்கள். அதே சமயம், ஒரு சாதாரண மனிதர் எவ்வளவுதான் முக்கியமான விஷயங்களைச் சொன்னாலும் மக்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பதை இதன் மூலம் அம்பலப்படுத்தினார் சோ.

தனித்துவமான சாதனைகள்

இப்படிக் கூர்மையும் விளையாட்டுத் தனமும் கொண்ட தண்டவாளங்களின் மீது தனது கருத்துலக இயக்கம் என்னும் வாகனத்தை வெற்றிகரமாக ஓட்டியவர் சோ. அவருடைய நாடகங்கள், திரைப்படங்கள், 'துக்ளக்' என எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த இரட்டை அடையாளமே அவரது ஆளுமை என்றுகூடச் சொல்லலாம்.

விளையாட்டுத்தனமான சாகசமாகத் தொடங்கப்பட்ட 'துக்ளக்' பத்திரிகையின் மூலம் சோ செய்த சாதனைகள் தனித்து வமானவை. அவரது அரசியல் விமர்சனங்கள் எள்ளலும் கூர்மையும் நிறைந்தவை. அரசியல்வாதிகளின் விவரங்கெட்ட தன்மை யையும் நேர்மையின்மையையும் அவரைப் போல அம்பலப்படுத்தியவர் யாருமில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களைப் பகைத்துக்கொள்வது பற்றிய கவலையே அவருக்கு இருந்ததில்லை. நெருக்கடிநிலைக் காலத்தில் 'துக்ளக்' செயல்பட்ட விதம் தமிழ் இதழியலில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது.

கருத்துலகின் மையம்

கருத்தளவில் மட்டுமல்லாது, இதழியலின் பிற பரிமாணங்களிலும் சோ கவனம் செலுத்தினார். நேரடியாகக் கள ஆய்வுசெய்து நிகழ்வுகளை அலசும் கட்டுரைகளை வெளியிட்டுவந்தார். கி.வீரமணி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட ஆளுமைகளுடனான விரிவான நேர்காணல்கள் ஒரு காலத்திய 'துக்ளக்' இதழின் சிறப்பம்சங்களில் ஒன்று. கறாரான திரை விமர்சனங்களை வெளியிட்டு, அந்த விமர்சனங்களுக்கு இயக்குநர்களின் பதில்களையும் கேட்டு வாங்கிப் பிரசுரித்தார். அதன் மூலம் ஆரோக்கியமான விவாதம் உருவாக வழி வகுத்தார். தீவிர இலக்கியப் பரப்பைச் சேர்ந்த ஆளுமைகளுக்கும் அவருடைய பத்திரிகையில் இடம் இருந்தது. அரசியல் பத்திரிகையாகவே அறியப்பட்டாலும் உடல் நலம், சட்டச் சிக்கல்கள் குறித்த கட்டுரைகளுக்கும் அதில் இடமுண்டு.

வெகுஜனச் சிந்தனைகளுக்கு முரணாக இருப்பதுபோலத் தோன்றினாலும் மைய நீரோட்டச் சிந்தனைகளை அடியொற்றியே சோவின் கருத்துலகம் அமைந்திருந்தது. பொது வாழ்வில் நேர்மை, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி, தார்மிக உணர்வு ஆகியவையே அவரது கருத்துலகின் மையம். அவருடைய கருத்துக்களின் அடிப்படையை அனைவரும் அறிந்திருந்தாலும், அதை முன்வைக்க அவர் பயன்படுத்தும் வாதங்கள், ஆதாரங்கள் ஆகியவை வாசகர்களிடத்தில் அவருக்குத் தனி மதிப்பை ஏற்படுத்தித் தந்தன.

விமர்சனப் பார்வை

விமர்சனங்களில் சமரசமற்ற கடுமையும் யாருக்கும் சலுகை அளிக்காத போக்கும் அவரது கருத்துக்களுக்கு நம்பகத்தன்மையை அளித்தன. தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிப்பதை முற்றாகத் தவிர்த்துவந்தார். பலருடன் நட்புப் பேணிவந்த அவர், விமர்சனம் என்று வரும்போது நட்பைக் குறுக்கே வர அனுமதிக்க மாட்டார். அதேசமயம், நட்பையும் அவர் இழந்ததாகத் தெரியவில்லை. அவரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான நட்பை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

சோ மரபுவாதி. தேசியவாதி. இந்திய மரபைப் போற்றியவர். அவரது சிந்தனைகள் என்று புதிதாக எதையும் சொல்லிவிட முடியாது. தொடக்கத்தில் மனித உரிமைக் குழுவில் தீவிரமாகச் செயல்பட்டுவந்த சோ, பின்னாளில் காவல் நிலைய மரணங்கள், போலி மோதல் கொலைகள், ராணுவ, காவல் துறைகளின் அத்துமீறல்கள் ஆகிய பிரச்சினைகளில் மனித உரிமைகளின் பக்கம் நிற்காமல், அமைப்பின் சார்பில் நின்று வாதிடு பவராக மாறினார். அவரது மைய நீரோட்டச் சிந்தனை, நடுத்தர வர்க்கச் சார்பு ஆகியவற் றின் பின்னணியில் வைத்துத்தான் இந்தப் போக்கினைப் புரிந்துகொள்ள முடியும். இந்திய மரபைப் போற்றிய அவர் அதன் ஞான மரபை முன்னிறுத்தாமல், அதன் சமூகக் கட்டமைப்பு, சமயச் சடங்குகள், வாழ்வியல் அணுகுமுறை முதலானவற்றுக்கே அதிக முக்கியத்துவம் அளித்தார்.

பாதை மாறிய பார்வை

தொண்ணூறுகளிலும் அதற்குப் பின்னும் அவரது விமர்சனக் கத்தியின் கூர்மை மழுங்கத் தொடங்கியது. விமர்சனங்களில் சார்பு நிலைகள் முளைத்துவிட்டன. பொது வாழ்வில் நேர்மை என்பதற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்த அவர், மைய நீரோட்ட தேசியவாதத்தை அந்த இடத்தில் வைத்து ஆராதிக்கத் தொடங்கினார். மாநில உணர்வுகள், உரிமைகள் ஆகியவற்றின் நியாயங்களை அவர் பேசவில்லை. விளிம்பு நிலைகளின் நியாயங்களைப் பேசவில்லை. திராவிட இயக்கத்தின் நாத்திகவாதத்தோடு, அவ்வியக்கம் முன்னிறுத்திய மாநில உரிமைக் குரலையும் புறமொதுக்கினார். மார்க்ஸியச் சித்தாந்தங்களைக் கொள்கை அளவில் எதிர்த்த அவர், மார்க்ஸிய இயக்கங்களின் மக்கள் சார்பு அரசியலுக்கான மரியாதையைக் கொடுக்கத் தவறினார். ஒரு கட்டத்துக்குப் பிறகு, தேசியவாதத்தை ஒரு மதமாகவே முன்னிறுத்தினார், பிற விழுமியங்களில் சமரசம் செய்துகொள்ளவும் தலைப்பட்டார். கறாரான அரசியல் விமர்சக ராக இந்திய அளவில் புகழ்பெற்ற அவர், ஒரு கட்டத்தில் அரசியல் பேரங்களை நடத்தித் தருவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

எனினும் தமிழ் இதழியலில் சோ ஆற்றிய பங்கு மிகவும் முக்கியமானது. பொழுதுபோக் கையே முதன்மைப்படுத்திய வெகுஜன இதழியலில் மாற்றுப் போக்குகளுக்கும் இடமுண்டு என்பதை நிரூபித்தவர் சோ. எம்.ஜி.ஆர்., கருணாநிதி முதலான சில ஆளுமைகளைப் பற்றி நடுத்தர வர்க்கத்தின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் சில பிம்பங்களைக் கட்டமைத்ததில் அவரது எழுத்துகளுக்கு முக்கியமான பங்கு உண்டு. லட்சங்களில் விற்கும் பல இதழ் களுக்குச் சாத்தியமாகாத சாதனை இது. புதிய சிந்தனைகளை முன்வைத்ததன் மூலம் அவர் இதைச் சாதிக்கவில்லை. நடுத்தர வர்க்கத்தினரின் ஆழ்மன அபிலாஷைகளை யும் கருத்துக்களையும் அழுத்தமான மொழி யில் தர்க்கபூர்வமாக முன்வைத்ததன் மூலம் சாதித்தார். ஒரு தலைமுறையின் அறிவார்த்த அடையாளமாக 'துக்ளக்' பத்திரிகையை வளர்த்தெடுத்தார். தன் கருத்துக்களுக்கு அழுத்தம் தந்த அதே வேளையில், பல்வேறு விதங்களில் இதழியலின் வரையறைகளை விரிவுபடுத்தினார். விமர்சனங்களைத் தாண்டி அவரை வரலாற்றில் நிலைபெறச் செய்யும் அம்சமாக இது இருக்கும்!

- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்