குழந்தைகள் வீட்டுக்கு ஒளியூட்டுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் வெளிச்சத்தை அணைத்து விடுவதில்லை. -ரேல்ப்பால்
ஒரு புது உயிர் தன்னால் இந்த உலகில் உருவாகப் போகிறது என்பது பெண்களுக்கு மட்டுமே கிடைத்த பேறு. அந்த உன்னத தருணத்தில்தான் பெரும்பாலான பெண்கள் தங்கள் வாழ்க்கை முழுமை அடைவதாக, பரிபூரணம் அடைவதாக உணர்கிறார்கள். அப்படி ஒரு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார் ஹசினா.
ஹசினா சென்னை கண்ணகி நகரைச் சார்ந்தவர். திருமணமாகி 7 ஆண்டுகள் குழந்தை இல்லை என்ற கவலை மட்டுமே ஹசினாவை சூழ்ந்திருந்தது. குழந்தையின்மைக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம்தான் அரசு மருத்துவர்கள் கர்ப்பம் என்று உறுதி செய்தனர்.
ஹசினாவும் அவரது கணவரும், குடும்பத்தினரும் இன்னொரு உயிரின் வரவுக்காக காத்திருந்தனர். சமீபத்தில் ஹசினாவுக்கு வளைகாப்பு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
நவ.18-ம் தேதி பிரசவ தேதி குறிக்கப்பட்ட நிலையில், நவ.14-ம் தேதி வயிற்று வலியால் துடித்த ஹசினாவை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையின் வருகை அற்புதங்களை நிகழ்த்தும் என கனவு கண்டவருக்கு, வயிற்றில் கட்டிதான் இருக்கிறது, கர்ப்பம் இல்லை என்ற தனியார் மருத்துவரின் பதில் இடியாய் இறங்கியது.
குழந்தை குறித்த கனவுகள், ஆசைகள், விருப்பங்கள் எல்லாம் ஒரே நாளில் முடிந்து போனது. இருந்தாலும் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துப் பார்த்ததில் கட்டிதான் குழந்தை இல்லை என்று மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.
5, 7 மாதங்களில் ஸ்கேன் செய்து குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறிவிட்டு இப்போது கட்டி என்பதா என ஹசினாவும், அவரது உறவினர்களும் கலங்கினார். ஆற்றாமையில் வெடித்தனர். அரசு மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
மருத்துவமனையோ, சரியாக பரிசோதனைக்கு வரவில்லை என்று பதில் சொன்னது. வயிற்றில் உள்ள கட்டியை மாத்திரையால் கரைத்துவிட முடியும் என்று சொன்ன மருத்துவமனை மீது ஹசினாவுக்கு வெறுப்புதான் ஏற்பட்டது.
உற்றார், உறவினர் சூழ வளைகாப்பு கொண்டாட்டம் முடிந்த உடனே இப்படி ஒரு திடீர் வலியை ஹசினாவால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஹசினாவின் எண்ணங்களுக்கு நாம் என்ன ஆறுதல் சொல்ல முடியும்?
முறையான மருத்துவம் பெறும் உரிமையைப் பெற்றும் ஹசினாவுக்கு சரியாக மருத்துவம் பார்க்காமல் அலைச்சல், மன உளைச்சலில் தள்ளியதற்கு யார் காரணம்?
தேசிய மனித உரிமை ஆணையம் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஆனால், இன்னொரு கோணத்தில் பார்க்கப் போனால் இன்னும் சில பெண்கள் கர்ப்ப கால பராமரிப்பு, பரிசோதனை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமலும், உரிமை பற்றியும் அறியாமலேயே இருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்ப காலத்திலும், பிரசவ காலகட்டத்திலும் மருத்துவப் பராமரிப்பு பெறும் உரிமை முழுவதுமாக உள்ளது. ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்தில் வரையறுக்கப்பட்ட கவனிப்பு, அறிவுரை, ஆலோசனைகள், மருத்துவருடன் கலந்தாய்வு செய்தல், மருத்துவர் பரிந்துரைப்படி உணவு, மாத்திரை எடுத்துக்கொள்ளுதல் போன்றவை வெறுமனே ஆரோக்கியம் மட்டுமே சம்பந்தப்பட்டது அல்ல. தாய்மையை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்ணின் உரிமை.
கர்ப்ப கால பராமரிப்பில் உயரம், எடை, நோய்கள் கண்டறிதல், நோய்களின் தன்மை அறிந்து குணப்படுத்துதல் அல்லது கட்டுக்குள் கொண்டு வருதல், குழந்தையின் வளர்ச்சியை உறுதி செய்தல், தூய்மையைக் கடைபிடித்தல், ஓய்வு, உறக்கம் போன்றவையும் கூட அந்த உரிமைக்குள் அடங்கும்.
இந்நிலையில் பெண்ணின் கர்ப்பத்தை உறுதி செய்வது எப்படி? கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு முறைகள் என்ன என்பது குறித்து மூத்த மகப்பேறு மருத்துவர் உமா செல்வத்தை சந்தித்துப் பேசினேன்.
(மகப்பேறு மருத்துவர் உமா செல்வம்)
''கருத்தரித்தலுக்கு முன் பெண்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு இருக்கிறது, தைராய்டு பிரச்சினை இருக்கிறதா என்று பரிசோதனை செய்வது அவசியம். பெண்ணுக்கோ அல்லது அவரின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கோ வலிப்பு இருக்கிறதா என்பதையும் மருத்துவரிடம் கூறுவது அவசியம்.
அப்படி உடல்நலனில் பிரச்சினை இருக்கும் பட்சத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு கருத்தரிக்க திட்டமிடுவது சிறந்தது.
கர்ப்பத்தை உறுதி செய்வது எப்படி?
28 நாட்கள் அல்லது 30 நாட்களுக்கு ஒரு முறை சரியாக மாதவிலக்கு வருகிறது என்றால் அந்த மாதவிலக்கு தள்ளிப்போவதுதான் கர்ப்பத்துக்கான முதல் அறிகுறி. அப்படி மாதவிலக்கு தள்ளிப்போவதை சிறுநீர்ப் பரிசோதனை மூலம் பரிசோதித்து கர்ப்பம்தானா என்பதை உறுதி செய்துகொள்ளலாம். தற்போது எல்லா மருந்துக்கடைகளிலும் சிறுநீர் பரிசோதனைக்கான யூரின் ப்ரெக்னன்சி கிட் கிடைக்கிறது.
அந்த பரிசோதனையை செய்ய முடியாதவர்கள் அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாதவர்கள் மருத்துவர்களிடம் சென்று கர்ப்பத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
சிலருக்கு மாதவிலக்கு 45 நாட்களில் கூட வரும். அப்படி குறிப்பிட்ட கணக்கீட்டுப்படி மாதவிலக்கு வராதவர்கள் சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பமா இல்லையா என்பதை தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை என்றால் ரத்தப் பரிசோதனை அல்லது ஸ்கேன் மூலம் கர்ப்பம்தானா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
கர்ப்ப கால பராமரிப்பு
கர்ப்பம் உறுதியான பிறகு மருத்துவரிடம் கர்ப்பமானதை பதிவு செய்து, பரிசோதனை, பராமரிப்பு, உணவு முறை குறித்து ஆலோசனை பெறுவது அவசியம். இது பெண்ணின் உரிமையும் கூட.
மருத்துவரின் அறிவுறுத்தலின்படி தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளலாம். ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு, ஹீமோகுளோபின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் கருவில் இருக்கும் குழந்தை அபார்ஷன் ஆவதை தடுக்க முடியும். வளர்ச்சி தடைபடாமல் இருக்கும். இதயம், மூளை, சிறுநீரகத்தில் எந்தக் குறைபாடும் இருக்காது.
கர்ப்பமான பெண்கள் மாதாமாதம் ஒரு முறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது. 7மாதங்கள் வரை மாதத்துக்கு ஒரு முறை பார்க்கலாம். அதற்குப் பிறகான 2 மாதங்களில் 2 வாரங்களுக்கு ஒரு முறை மருத்துவரைப் பார்க்கலாம். 9-வது மாதத்தில் 10 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவரைப் பார்ப்பது சிறந்தது.
கிராமப்புறங்களில் மருத்துவ வசதியே இல்லாத சூழலில் இருக்கும் கர்ப்பிணி பெண்கள் பிரசவம் ஆவதற்கு முன் குறைந்தபட்சம் 5 முறையாவது மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்களுக்கு வாந்தி வருகிறது என்பதற்காக சாப்பிடாமல் இருப்பதோ, பட்டினி கிடப்பதோ நல்லதல்ல. அது தாய், சேய் ஆகிய இருவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பட்டினி கிடந்தால் வாந்தி வராமல் இருக்கும் என்பதும் உண்மையில்லை. வாந்தி என்பது ஹார்மோன்களால் வருவது.
அடிக்கடி வாந்தி வருகிறது என்பதற்காக சாப்பிடாமல் இருப்பதைக் காட்டிலும் 3 முறை மட்டுமே சாப்பிடாமல் 6 அல்லது 7 முறை என பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவதன் மூலம் தாய், சேய் இருவருக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். நீர்ச்சத்துள்ள உணவுகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவது நல்லது.
ஸ்கேன் பரிசோதனை:
கர்ப்பிணி பெண் மூன்று முறை ஸ்கேன் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். கர்ப்பம் ஆன 8 வாரத்தில் ஸ்கேன் செய்து குழந்தையின் வளர்ச்சியை அறியலாம். குழந்தை கருப்பையில் சரியாக தங்கி இருக்கிறதா என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
12 வாரத்தில் ஸ்கேன் செய்வது குழந்தையின் நரம்புத் தண்டில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்பதை பார்க்க உதவும். டவுண் சின்ட்ரோம் போன்ற பிறவிக்குறைபாடுகள் வருவதற்கு சாத்தியம் உள்ளதா என்பதை கண்டறியலாம்.
22வது வாரத்தில் ஸ்கேன் செய்வதால் இதயம், மூளை, சிறுநீரக வளர்ச்சி குறித்தோ அல்லது அதில் உள்ள குறைபாடுகள் குறித்தோ அறிந்துகொள்ளலாம். அப்படி குறைபாடு இருப்பின் மருத்துவர் உரிய முறையில் குறைபாடுகளை சரிசெய்ய முடியும்.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் தலைவலி, காய்ச்சல் போன்ற தொல்லைகளுக்கு வழக்கமான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாமா? கூடாதா?
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு காய்ச்சல், தலைவலி வந்தால் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளையோ அல்லது மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துக்கடைகளில் மாத்திரைகளை வாங்கியோ சாப்பிடக் கூடாது. மருத்துவரின் பரிந்துரையோடு மாத்திரை எடுத்துக்கொள்வது குழந்தையைப் பாதிக்காது'' என்றார் மருத்துவர் உமா செல்வம்.
(டாக்டர் கணேசன்)
கர்ப்பிணிகளுக்கான பொதுவான தடுப்பூசிகள் குறித்து பொதுநல மருத்துவர் கு.கணேசனிடம் பேசினேன்.
''கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களில் ஜெர்மன் தட்டம்மை நோய் கர்ப்பிணியைத் தாக்கினால், குழந்தைக்குப் பிரச்சினைகள் உருவாகலாம். எனவே, இதற்கான தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது நல்லது, அப்படி போட்டுக்கொண்டவர்கள் அடுத்த மூன்று மாதங்கள் வரை கருத்தரிக்காமல் இருக்க வேண்டியதும் முக்கியம். இதுபோல் ஹெப்படைடிஸ்-பி தடுப்பூசி மற்றும் ஃபுளு காய்ச்சலுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதும் நல்லது. இவற்றைக் கர்ப்பமானதும்கூட போட்டுக்கொள்ளலாம்.
டெட்டனஸ் தடுப்பூசி
கர்ப்பிணிகளுக்குப் பிரசவத்தின்போது டெட்டனஸ் நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ள காரணத்தால் அதைத் தவிர்ப்பதற்காக டெட்டனஸ் டாக்சாய்டு அல்லது டி.டி.ஏ.பி ( Tdap) தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். முதல் முறையாக கர்ப்பம் ஆகும்போது கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனேயே முதல் தவணையாக இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.
ஒரு மாதம் கழித்து இரண்டாம் தவணையைப் போட்டுக் கொள்ள வேண்டும். இப்படி இரண்டாம் தவணையைப் போடத்தவறியவர்கள் பிரசவத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாவது இரண்டாம் தவணையைப் போட்டுக்கொள்ள வேண்டியது கட்டாயம். இரண்டாம் முறை கர்ப்பம் தரிக்கும்போதும் இதேபோல் இரண்டு தவணைகள் போட்டுக்கொள்ள வேண்டும்'' என்றார் டாக்டர் கணேசன்.
யுனிசெஃப் ஆய்வு முடிவுகள்:
கர்ப்ப காலத்தில் ஊட்டச் சத்து குறைவாக இருப்பது, வளர்ச்சி குறைவாக, குள்ளமாக இருப்பது (145 செ.மீ/4 அடி 9 அங்குலம்) கர்ப்ப காலத்தில் உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இல்லாமல் குறைவாக இருப்பது கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கிறது, அதனால் குழந்தை பிறக்கும் போது எடை குறைவாகவும் உரிய காலத்துக்கு முன்பே பிறப்பதும் குழந்தை இறந்தே பிறப்பது போன்ற செயல்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில், உயரத்துக்கு ஏற்ற எடை விகிதம் (BMI) 18.5க்கும் குறைவாக இருக்கும் பெண்கள் 14.6 சதவீதம் பேர் உள்ளனர். தாயின் ஒவ்வொரு 1 செமீ உயரமும் வளர்ந்த குழந்தைகளின் 0.5 செமீ உயரம் அதிகரிப்பதோடு தொடர்புடையது (Lancet 2008, Cesar G Victora et al)
சமச்சீராக அளிக்கப்படும் புரதமும் ஆற்றலும் கர்ப்ப காலத்தில் குழந்தைகள் தேவையான அளவுக்கு வளர்ச்சியோடு இல்லாமல் சிறியதாக இருப்பதை 32 சதவீதம் குறைத்துள்ளது மற்றும் பிரசவத்துக்கு மிக நெருங்கிய நாளில் கருவிலேயே குழந்தை இறப்பது 45 சதவீதம் குறைகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச் சத்து மிகுந்த உணவு தேவை. கர்ப்பிணிப் பெண்கள் துரித உணவுகளையும் பொறித்த உணவுகளையும் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஓய்வு, பாதுகாப்பு, உடல் (சுகாதாரம்) பரிசோதனை ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஓய்வு தேவை. தவிர கர்ப்ப காலத்தில் அந்தப் பெண்ணுக்குக் குறைந்தது 3லிருந்து 4 பரிசோதனைகள் தேவை. தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு- 4இன்படி, தமிழ்நாட்டில், ஏறக்குறைய ஐந்தில் ஒரு தாய்மார்களுக்கு (18.8 சதவீதம்) 4 கர்ப்பகாலப் பரிசோதனை கிடைப்பதில்லை. வளைகாப்பு என்ற சமூக விழா, கர்ப்பிணிப் பெண்களுக்குஓய்வு, பாதுகாப்பு மற்றும் சத்தான உணவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இது குடும்பத்திலும் சமூகத்திலும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
ஏன் இவ்வளவு பராமரிப்பு? அது தாயின் உரிமை மட்டுமல்ல, வயிற்றில் வளருகின்ற குழந்தையின் அடிப்படை உரிமையும் கூட. ஒரு குழந்தை வளர்ச்சி அடிப்படையில் எந்த குறைபாடும் இல்லாமல் ஆரோக்கியமாக வளர வேண்டும். அதுவே குழந்தைக்கும் நாம் கொடுக்க வேண்டிய முதல் உரிமை. அதனால் தாயின் உரிமையை ஒட்டியே வயிற்றில் வளரும் குழந்தையின் உரிமையையும் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
நாவல் பழம், பேரீச்சம் பழம் சாப்பிட்டால் குழந்தை கறுப்பாகப் பிறக்கும். குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்று சொல்லப்படுகிறதே?
இரண்டுமே உண்மையில்லை. குழந்தையின் நிறம் என்பது பெற்றோர், அவர்களின் முன்னோர் என மரபு ரீதியான தொடர்புடையது. குழந்தைக்கு நிறம் தரும் சக்தி மரபணுக்களே மட்டுமே உள்ளது. நாவல் பழம், பேரீச்சம் பழம், குங்குமப் பூவுக்கு நிறம் தரும் சக்தி இல்லை. வாந்தி மயக்கத்தால் சிலர் பால் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுவதுண்டு. ஆனால், பாலில் இருக்கும் கால்சியம் சத்து தாய்க்கும், குழந்தைக்கும் தேவை என்பதால் எப்படியாவது பாலைக் குடிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாலில் குங்குமப்பூ கலந்து சுவையை மாற்றவோ அல்லது குழந்தையின் நிறத்துக்காக குடி என ஆசை வார்த்தை ஜாலத்தில் மயங்க வைத்தோ பாலைக் குடிக்கச் செய்து விடுகின்றனர்.
*
டாட்டூ, வாசனை திரவியங்கள் பயன்படுத்தலாமா?
கர்ப்பம் ஆவதற்கு முன் வாசனை டாட்டூக்களை உடலில் வரைந்திருந்தால் பிரச்சினையில்லை. ஆனால், கர்ப்ப காலத்தில் டாட்டூ வரைந்துகொள்வது உகந்ததல்ல. அது நோய்த்தொற்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதால் டாட்டூ தவிர்ப்பது நல்லது. வாசனை திரவியங்களை புதிதாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
*
வளைகாப்பு ஏன்?
கர்ப்பிணி பெண் தாய் வீட்டார், கணவன் வீட்டார், நண்பர்களால் கொண்டாடப்படுவதின் மூலம் குழந்தை பிறப்பு குறித்த தேவையற்ற பயத்தைப் போக்க முடியும். மன அமைதியும், ஓய்வும், மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும் என்பதற்காக வளைகாப்பு கொண்டாடப்படுகிறது. மேலும், வளையல் சத்தம் கேட்கும் திறனுடைய சிசுவை சென்றடையும். அதனால் கருவில் இருக்கும் குழந்தை வெளியுலகத்தை உணர முடியும்.
அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு பேறு கால விடுப்பு ஆறு மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
*
டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் மகப்பேறு திட்டத்தின் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசு ரூ.12 ஆயிரம் வழங்கி வந்தது. தற்போது இந்த உதவித்தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
*
மத்திய அரசு பிரதமரின் பாதுகாப்பான தாய்மை திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு கர்ப்பிணி தாய்க்கும் அரசு மருத்துவமனைகளில் ஒவ்வொரு மாதமும் 9-ந்தேதி அனைத்துப் பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படுகிறது.
குழந்தை பிறந்த 1 மணிநேரத்துக்குள் தாய்ப்பால் அளிப்பது 22 சதவீத பிரசவத்துக்குப் பிந்தைய குழந்தை மரணங்களைத் தடுக்கும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை அடுத்த அத்தியாயத்தில் பகிரலாம்.
க.நாகப்பன், தொடர்புக்கு: nagappan.k@thehindutamil.co.in
முந்தைய அத்தியாயம்: >பதினெட்டுக்குள்ளே 2: ஊட்டச்சத்து உண்மைகளும் உரிமைகளும்!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago