முதியோருக்கும் குழந்தைகளுக்குமாக ஒருசேர நடத்தப்படும் பகல்நேரப் பராமரிப்பு மையம் பற்றிய காணொளிக் காட்சி அது. விசாலமான கூடத்தில் வட்டமாக அமர்ந்திருக்கிறார்கள் முதியவர்கள். சிறிய நாற்காலிகளில், தங்கள் போக்கில் அமர்ந்துகொண்டும் நின்றுகொண்டும் இருக்கிறார்கள் குழந்தைகள். பராமரிப்பாளர் வழிகாட்ட, அதற்கேற்ப இருதரப்பினரும் ஆடிப்பாடிக் களிக்கிறார்கள்.
இன்னொரு காணொளியில், சகாக்களுடன் உரையாடிக்கொண்டே தோட்டச் செடிகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டும், களை எடுத்துக்கொண்டும் இருக்கும் உற்சாகமான முதியவர்கள். மூன்றாவது காணொளியில், சோலைப்பாங்கான இடம் ஒன்றில் அமைக்கப்பட்டிருக்கும் தங்கும் இடங்களின் தொகுப்பு காட்டப்படுகிறது. அமர்ந்து பேச ஆங்காங்கே இருக்கைகள், விசாலமான உணவுக்கூடம், உடன் இணைக்கப்பட்ட மருத்துவ மையம் எனப் பல வசதிகள்.
முதல் இரண்டு காணொளிகளிலும் காட்டப்பட்ட இல்லங்கள் அயல்நாட்டு அரசுகளாலும், மூன்றாவது கேரள மாநில அரசாலும் நடத்தப்படுபவை. பலவற்றிலும் தாக்கம் செலுத்துகிற பொருளாதாரப் பாய்ச்சல்கள் குடும்ப அமைப்பிலும் செலுத்திய தாக்கத்தின் விளைவாக, கூட்டுக் குடும்ப அமைப்பிலிருந்து விலகி, கருக் குடும்ப அமைப்புக்கு (nuclear family) வந்து சேர்ந்துவிட்டோம். இந்நிலையில், நம் நாட்டில் முதியோரின் நிலை என்ன?
உதவிகள் போதாது: இந்திய அரசமைப்பின் 41ஆவது பிரிவு, பெற்றோருக்கும் மூத்த குடிமக்களுக்குமான பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007 என முதியவர்களின் நலத்தைப் பாதுகாக்கப் போதுமான சட்டங்கள் உள்ளன. மேலும், மத்திய-மாநில அரசுகளின் கூட்டுப் பங்களிப்பில், வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள முதியவர்களுக்கு ஓய்வூதியம், வீடு கட்டிக்கொள்ள மானியம், மருத்துவச் செலவுகளுக்கு ரூ.30,000 வரை உதவித்தொகை, வருமானவரி விலக்கு, வங்கி வைப்புத்தொகைக்கு அதிக வட்டி, பயணக் கட்டணங்களில் சலுகை போன்ற நலத்திட்ட நடைமுறைகளும் செயல்பாட்டில் உள்ளன.
ஆனால், இவை மட்டுமே போதுமா? அவர்களுடைய உணர்வுத் தேவைக்கும் உதவ வேண்டிய கடமை அரசுக்கும் சமூகத்துக்கும் இல்லையா? முதியவர்களின் உணர்வுத் தேவைகள் உணரப்படாததால்தான், அல்சைமர், பார்கின்சன் போன்ற நரம்புச் சிதைவு நோய்களுக்கு அவர்கள் ஆட்படுவது அதிகரித்திருக்கிறது.
அரசின் பொறுப்பு: கடற்கரை என்னும் பொதுவெளிக்கு, மாற்றுத்திறனாளிகளும் வந்து காற்று வாங்கவும் அலைமோதும் கரையை அருகிருந்து ரசிக்கவும் பாதை அமைத்துக் கொடுத்தது தமிழக அரசு. மாற்றுத்திறனாளிகளைப் போலவே முதியவர்களும் தம்மியல்பாகப் பொதுவெளியில் புழங்க வழிசெய்து கொடுப்பது அவசியம்.
பொதுவெளிகளில் பொதுச் சமூகத்தோடு ஊடாடுவது முதியவர்களின் உணர்வுக்கு இதமளிக்கும். ஆனால், பெரும்பாலான சாலைகள், உணவகங்கள் மட்டுமின்றி மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் போன்ற பொதுவெளிகள்கூட முதியோர் சிரமமின்றி அணுக ஏற்றவகையில் இல்லை. இந்நிலையில், சட்ட விதிமுறைகள் சமூக நடைமுறைகளாக மாற நிறைய செய்ய வேண்டியிருக்கிறது.
முதியவர்களைப் பராமரிப்பது அவர்கள் பெற்ற பிள்ளைகளின் பொறுப்பாக இருக்க, அதற்கான சட்டமும் நடப்பில் இருக்க, அந்தக் கடமையை அரசின்மேல் சுமத்துவது ஏன் என்னும் கேள்வி வரலாம். முதியோரைப் பராமரிப்பது எளிதல்ல. வீட்டிலேயே இருந்து பார்த்துக்கொண்டாலும் சிரமமே. எல்லோரும் வேலைக்குப் போகும் குடும்பம், அதிலேயும் எளியவர்களின் குடும்பம் என்றால் சொல்லவே வேண்டாம்.
செய்ய வேண்டியவை: முதியோருக்கான பகல்நேரப் பராமரிப்பு மையங்களை அமைத்தல் அவசியம். கேரள அரசின் மாதிரியைப் போல, இயன்ற இடங்களில் சோலைச் சூழலில் மருத்துவ மையத்துடன் கூடியதாக அமைத்தால் சிறப்பு. இந்த மையங்களில் சிறு நூலகம் அமைப்பது, கலைத் திருவிழாக்கள் நடத்துவது, சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்வது, சிறு சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்வது போன்றவற்றைக் கருத்தில் கொள்ளலாம்.
மேலும், முதியோரின் இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில் கற்ற, சேகரித்த அனுபவங்களிலிருந்து அடுத்த தலைமுறை கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றன. அவற்றைப் பரிமாறிக்கொள்ள ஏதுவாகக் கலந்துரையாடல் நிகழ்வுகளுக்கு ஆவன செய்யலாம். இத்தகு முன்னெடுப்புகள் முதியவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.
கட்டணம் ஒரு பொருட்டல்ல: சரியான முறையில் இந்த மையங்கள் செயல்பட்டால், இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ளும் மக்கள் ஒரு சிறு தொகையைக் கட்டணமாகச் செலுத்தவும் தயாராகவே இருப்பார்கள். அரசுக்கும் அதிக நிதிச் சுமையிருக்காது. தனியாரால் நடத்தப்படும் மையங்களின் கட்டணங்கள் எல்லோராலும் கொடுக்கக் கூடியவை அல்ல.
சமூகநலன்-மகளிர் உரிமைத் துறை வரைவுக் குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்ட ‘தமிழ்நாடு, மூத்த குடிமக்களுக்கான மாநிலக் கொள்கை வரைவு–2022’ அரசுக்கு 10 கூறுகளைப் பரிந்துரைத்திருக்கிறது. இவற்றில் வீட்டுவசதி-சுற்றுச்சூழல் என்ற பிரிவின் கீழ், பகல்நேரப் பராமரிப்பு மையங்களை நிறுவுவதும் ஒன்று.
ஆனால், இந்த வரைவின் பரிந்துரைகள், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமானவையா அல்லது எல்லோருக்குமானவையா என்ற விவரம் இல்லை. எப்படியானாலும் முதியோருக்கான பகல்நேரப் பராமரிப்பு மையங்களை நிறுவுவது முக்கியமானதே.
மாட்ரிட் உலகளாவிய செயல்திட்டம்: 2002இல், ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் முதியோருக்கான பாதுகாப்பு, உரிமைகள் ஆகியவற்றை மையமாக வைத்து, ‘மாட்ரிட் உலகளாவிய செயல்திட்டம்’ என்ற ஒன்று வகுக்கப்பட்டது. 21 பிரிவுகளை உள்ளடக்கிய அந்தச் செயல்திட்டத்தின் பரிந்துரைகளை ஏற்றுக் கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
மாட்ரிட் செயல்திட்டத்தின் பரிந்துரைகளில், ‘தனது சூழலிலேயே மூத்து முதிர்தல்’ (Ageing in place) என்பதும் ஒன்று. அதாவது, ஒரு முதியவர், தன் வாழ்நாளின் பெரும்பகுதியை எந்தச் சூழலில் கழித்தாரோ, அதே சூழலில், அதே ஊரில், அதே அண்டை அயலாருடன் தன் முதுமையைக் கழிக்க வகைசெய்வது.
அரசுகள் முனைந்தால், வீட்டு வசதி வாரியத்தால் பல்வேறு ஊர்களில் கட்டப்படும் வீடுகளில் ஒரு பகுதியை முதுமையின் தேவைகளுக்கேற்ப வடிவமைத்து அந்த ஊரின் முதியவர்களுக்கு ஒதுக்கீடு செய்தோ, முன்னுரிமை கொடுத்தோ இயன்ற அளவு இந்தத் தேவையை ஈடுகட்டலாம். முக்கியமாக, பெருநகரங்களை மையப்படுத்தி மட்டுமே வடிவமைக்காமல் ஊராட்சிகள்வரை இவற்றை அமல்படுத்தலாம்.
2021 முதல் 2030 வரையிலான 10 ஆண்டுகளை ‘உடல்நலத்தோடு முதுமை அடைவதற்கான பதிற்றாண்டா'கக் கடைப்பிடிக்க ஐநா அவை முடிவெடுத்திருக்கிறது. இந்த 10 ஆண்டுகளில், இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டில் பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு இடையேயும் மேற்சொன்னதுபோலச் சிலவற்றைச் சாதிக்க முடியும் என்றால், அதைவிடப் பெரிதாக நம் முதிய குடிமக்களுக்கு நாம் வேறு என்ன செய்துவிட முடியும்? - சுகந்தி செல்வம், தொடர்புக்கு: editpage@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago