கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு, இந்த உலகம் வளங்குன்றா வளர்ச்சியை நோக்கி நகருமா, பசுமை மீண்டெழுதல் (Green Recovery) சாத்தியமா என்பன போன்ற பல கேள்விகளுடன் 2022ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால், ஆண்டு இறுதித் தரவுகள் அந்த நம்பிக்கைகளைப் பொய்யாக்கியிருக்கின்றன.
காடழிப்பு, காற்று மாசு அளவு உள்ளிட்ட பல அலகுகள் இந்த ஆண்டும் ஏறுமுகத்திலேயே இருந்தன. மேலும், பல உயிரினங்கள் அற்றுப்போயிருக்கின்றன. பல உயிரினங்கள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும் பவளத்திட்டில் நடந்த மிகப் பெரிய வெளிறும் நிகழ்வில் (Mass Bleaching event), அங்கிருந்த பவளத்திட்டுகளில் 60% வெளிறிப்போயிருக்கின்றன. இவை மீண்டுவருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வழக்கமாக இதுபோன்ற நிகழ்வுகள் அதிக வெப்பநிலைப் பருவத்தில்தான் நடக்கும். ஆனால், குளிர் பருவம் என்று கருதப்படும் ‘லா நினா’ (La Nina) ஆண்டில் இது நடந்திருப்பது, விஞ்ஞானிகளைக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. புவியையே குளிர்விக்கும் ஒரு காலநிலை நிகழ்வின்போதுகூட வெப்பநிலை, சராசரியைவிட அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
வெப்பமும் வெள்ளமும்: 2022இல் புவியின் சராசரி வெப்பநிலை, தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தைவிட 1.1 முதல் 1.3 டிகிரி செல்சியஸ்வரை அதிகரித்திருந்தது. மனிதகுல வரலாற்றிலேயே அதிக வெப்பநிலை கொண்ட ஆண்டுகளில் 2022க்கு நான்காம் அல்லது ஆறாவது இடம் கிடைக்கலாம் என்று இதுவரையிலான தரவுகள் தெரிவிக்கின்றன. ‘லா நினா’ ஆண்டின்போதும் வெப்பநிலை அதிகமாக இருந்தது என்கிற தகவல், காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது. உக்ரைன் போரின் விளைவால், உணவு மற்றும் ஆற்றல் பிரச்சினைகளை ஆராய்ந்த அறிஞர்கள், காலநிலை மாற்றமும் இதுபோன்ற புவி அரசியல் பிரச்சினைகளும் எந்தளவுக்குப் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதற்கு இதுவே உதாரணம் என்று தெரிவித்தனர். ஆகவே, வருங்காலத்தின் சூழலியல் மற்றும் காலநிலைப் பிரச்சினைகளின்போது, இதுபோன்ற அரசியல் விவகாரங்களையும் சேர்த்து விவாதிப்பது அவசியமாகிறது. போர் ஏற்படுத்தும் அரசியல் குழப்பங்கள், காலநிலைத் தீர்வுக்கான செயல்பாடுகளிலிருந்தும் உலக நாடுகளைத் திசைதிருப்பிவிடுகின்றன.
இந்த ஆண்டு அன்டார்க்டிகாவின் பனி அளவு வரலாறு காணாத அளவுக்குச் சரிந்திருக்கிறது. சராசரிக் கடல்மட்டம் வழக்கம்போல அதிகரித்தது. சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைகள் மிக அதிகளவில் உருகியிருக்கின்றன. மார்ச் மாதம் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெப்ப அலைகளால் உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது; அதே பாகிஸ்தானில் ஜூன் மாதம் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு 1,400 பேரின் உயிரைப் பறித்தது. வெள்ளத்தால் 33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர், 17 லட்சம் வீடுகள் சேதமடைந்தன. சேதத்தின் நிகர மதிப்பு 3000 கோடி அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டது. வரலாறு காணாத இந்த மழைப்பொழிவில் காலநிலை மாற்றத்தின் பங்கு முக்கியமானது என்று வல்லுநர்கள் வரையறுத்தனர். வங்கதேசத்தில் ஏற்பட்ட மோசமான வெள்ளப்பெருக்கு, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம், சீனாவிலும் ஐரோப்பாவிலும் வெப்ப அலைகள் மற்றும் காட்டுத்தீ நிகழ்வுகளால் ஏற்பட்ட சேதம், சோமாலியா, கென்யா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட வறட்சியால் உணவு உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு, அனா, காம்பே, இஸா போன்ற அடுத்தடுத்த புயல்களால் தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட சேதம், அமெரிக்காவில் 131 பேரின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்த இயான் புயல், ஒரு லட்சம் ஹெக்டேருக்கு மேல் காடுகளை அழித்த ஐரோப்பியக் காட்டுத்தீ என இந்த ஆண்டில் ஏற்பட்ட அதீத காலநிலை நிகழ்வுகளின் பட்டியல் மிகப் பெரிது.
» ஜம்முவில் என்கவுன்ட்டர் | 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: மேலும் ஒருவரை தேடுகிறது பாதுகாப்புப் படை
» இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
இந்தியாவின் காலநிலை: 2022இல் இந்தியாவின் காலநிலையைப் பற்றிய அறிக்கையை, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE) வெளியிட்டிருக்கிறது. ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான இந்தியாவின் காலநிலை பற்றிய தரவுகள் அதில் தரப்பட்டிருக்கின்றன. மொத்தமாக ஆராயப்பட்ட 273 நாட்களில், 241 நாட்களில் இந்தியாவில் தீவிரக் காலநிலை நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன; இது ஏறக்குறைய 88%. காலநிலை நிகழ்வுகளால் இந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 2,755 பேர் இறந்திருக்கின்றனர். இறப்பு விகிதம் இமாச்சலப் பிரதேசத்தில் அதிகம். பெரும்பாலானோர் மழை வெள்ளத்தால் இறந்திருக்கின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளால் 18 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களும் 4 லட்சம் வீடுகளும் சேதமடைந்திருக்கின்றன; 70,000 கால்நடைகள் இறந்திருக்கின்றன. இது பத்து மாதங்களுக்கான முதற்கட்ட அறிக்கை மட்டுமே என்பது கவலையளிப்பதாக உள்ளது.
2023ஆம் ஆண்டும் ‘லா நினா’ குளிர் ஆண்டாகவே தொடரும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ‘லா நினா’ நீடிப்பது மிகவும் அரிதானது. இதை Triple Dip என்பார்கள். இந்த நூற்றாண்டில் முதல் முறையாக இந்த Triple Dip நடக்கவிருக்கிறது. சராசரி வெப்பநிலை, 2023இல் அதீத காலநிலை நிகழ்வுகள், மழைப்பொழிவு ஆகியவை எப்படி இருக்கும் என்பது இந்த ‘லா நினா’வின் தாக்கம் மற்றும் பசுங்குடில் வாயுக்களின் அளவைப் பொறுத்தே அமையும். இந்த ஆண்டு நடந்த (COP27) காலநிலை உச்சி மாநாட்டில், நிதி பற்றிய சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தாலும், புதைபடிவ எரிபொருட்கள் பற்றி அதிகம் விவாதிக்கப்படவில்லை என்பது பெரிய ஏமாற்றத்தைத் தந்தது. 2023இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவிருக்கும் உச்சி மாநாட்டிலாவது காலநிலைத் தீர்வுகளை நோக்கிய முன்னேற்றத்தைச் செயற்பாட்டாளர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
காலநிலை தவிர, பல்லுயிர்ப் பெருக்கம், மாசுபாடு, ஞெகிழிப் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்காகவும் சர்வதேச அளவில் நடத்தப்பட்டுவரும் பல கூட்டங்கள் இப்போது கவனம் பெற்றுவருகின்றன. சுற்றுச்சூழல், காலநிலை ஆகியவை பற்றிய விழிப்புணர்வு, பொதுச் சமூகத்தில் அதிகரித்திருப்பதையும் பார்க்க முடிகிறது. இவற்றையெல்லாம் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகளாகப் பற்றிக்கொண்டே நாம் அடுத்த ஆண்டுக்குள் நுழைய வேண்டியிருக்கிறது!
To Read in English: Environmental development, an optical illusion?
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago