பூமி இதுவரை ஐந்து பேரழிவுகளைச் சந்தித்திருக்கிறது.
பூமியில் பல்லி பாம்பு, ஆடு, மாடு, யானை, திமிங்கிலம் எனப் பல்வகையான உயிரினங்கள் உள்ளன. மொத்தம் சுமார் 87 லட்சம் இனங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இனம் ஒவ்வொன்றிலும் பல்வேறு வகைகள் உள்ளன. பாம்பு என்றால், அதில் மட்டும் சுமார் 3,000 வகையான பாம்புகள். எல்லா இனங்களிலும் இப்படித்தான்.
பூமியில் எந்த ஒரு மூலை முடுக்கானாலும் ஏதாவது உயிரின வகை காணப்படுகிறது. பாலைவனம் மனிதன் வாழ முடியாத இடம். அந்தப் பாலைவனத்திலும் பலவகையான பூச்சிகள் உண்டு. பாலைவனத்தில் வாழும் ஒரு வகைப் பூச்சியானது, காற்றில் அடங்கிய ஈரப்பசையை நீராக மாற்றும் திறன் கொண் டது. பூமி ஒரு உயிரினப் பூங்கா போன்றதே.
மூத்த குடிமகன்கள்
சுமார் 410 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் நுண்ணுயிர்கள் வடிவில் உயிரினம் தோன்றியதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பின்னர், பரிணாம வளர்ச்சியில் பல உயிரினங்கள் தோன்றியதாக நம்பப்படுகிறது. பூமியில் உள்ள உயிரினங்களில் மூத்த குடிமகன்கள் உண்டு. கரப்பான் பூச்சி 32 கோடி ஆண்டுகளாக இருந்துவருகிறது. குதிரை லாட நண்டு 44 கோடி ஆண்டுகளாக இருந்துவருகிறது. ஜெல்லி மீன்கள் 55 கோடி ஆண்டுகளாக இருந்துவருகின்றன. இவற்றுடன் ஒப்பிட்டால், மனித இனம் தோன்றி சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளே ஆகின்றன.
பூமியில் ஆதியில் தோன்றிய உயிரினங்கள் அனைத்துமே இப்போது காணப்படுவதாகச் சொல்ல முடியாது. பல்வேறு காரணங்களால் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்த உயிரினங்கள் பல உண்டு. இதல்லாமல் பூமியில் அவ்வப்போது பேரழிவில் உயிரினங்கள் அழிந்துபோயுள்ளன. இது உயிரினப் பேரழிவு எனப்படுகிறது. பூமியில் உயிரினங்கள் தோன்றியதிலிருந்து குறைந்தது ஐந்து தடவை பேரழிவு நடந்துள்ளதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். இப்படி அழிந்தவற்றில் அனேகமாகப் பலரும் நன்கறிந்த உயிரினங்களில் ஒன்று டைனோசர்.
உயிரினப் பேரழிவு
முதல் பேரழிவு சுமார் 44 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது. அப்போது உலகின் கண்டங்கள் அனைத்தும் ஒரே நிலப் பிண்டமாக இருந்தது. இந்தப் பெரும் நிலப் பிண்டம், பூமியின் தென் பகுதியில் இருந்தது, பூமியின் வட பகுதி ஒரே கடலாக இருந்தது. அப்போது நிலப் பகுதியில் அவ்வளவாக உயிரினங்கள் இல்லை. கடல்களில்தான் அவை இருந்தன. கடலின் பெரும் பகுதி உறைந்த பனியால் மூடப்பட்டதால், உயிரினப் பேரழிவு நிகழ்ந்த தாகக் கருதப்படுகிறது. அப்போதிருந்த உயிரினங்களில் 85% அழிந்துபோயின.
இரண்டாவது பேரழிவு, சுமார் 41 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது. உலகின் கண்டங்கள் அப்போது மூன்று தொகுதியாகப் பிரிந்திருந்தன. ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் ஒரு தொகுதியாகச் சேர்ந்திருந்தன. தெற்கே ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகியவை ஒன்று சேர்ந்திருந்தன. வடக்கே சைபீரியா மட்டும் தனியே இருந்தது. அப்போதுதான் நிலப் பகுதியில் செடிகொடிகளும் பூச்சிகளும் உருவாகியிருந்தன. கடல் மட்டம் ஒரேயடியாகக் குறைந்ததாலும் அத்துடன் அஸ்டிராய்ட் (சிறுகோள்) ஒன்று பூமியைத் தாக்கியதாலும் உயிரினங்களின் பெரும் பகுதி அழிந்துபோயின.
ஜுராசிக் காலம்
மூன்றாவது உயிரினப் பேரழிவு, சுமார் 29 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது. கடல்களில் இருந்த உயிரினங்களில் 96% அழிந்தது. நிலப் பகுதியில் 70% உயிரினங்கள் அழிந்தன. பூச்சிகளும் அழிந்தன. அக்காலகட்டத்தில் கண்டங்கள் அனைத்தும் ஒரே நிலப் பிண்டமாக இருந்தது. எரிமலை வெடிப்பு, அஸ்டிராய்ட் தாக்குதல், பருவ நிலை மாற்றம் ஆகியவை காரணங்களாகக் கருதப்படுகின்றன.
நான்காவது உயிரினப் பேரழிவு, சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது. அப்போது கண்டங்கள் தனித்தனியே பிரிய ஆரம்பித்தன. உயிரினங்களில் பாதி அழிந்து போயின. இந்த அழிவைத் தொடர்ந்து பூமியில் டைனோசர் உயிரினங்கள் தோன்றின.
நிபுணர்கள் பூமியின் வரலாற்றைப் பல காலகட்டங்களாக வகைப்படுத்தியுள்ளனர். இவற்றில் டெவோனியன், பெர்மியன், ஜுராசிக் எனப் பல காலகட்டங்கள் அடங்கும். டைனோசர்கள், ஜுராசிக் எனப்பட்ட காலத்தில் வாழ்ந்தன. ஜுராசிக் பார்க் என்ற ஆங்கில சினிமாப் படத்துக்கு அப்பெயர் வைக்கப்பட்டதற்கு இதுவே காரணம். டைனோசர்கள் பல கோடி ஆண்டுக் காலம் பூமியில் ஆதிக்கம் செலுத்தின. சுமார் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர் இனம் அழிந்துபோயிற்று. இது ஐந்தாவது உயிரினப் பேரழிவாகும்.
ராட்சத விண்கல் ஒன்று பயங்கர வேகத்தில் பூமியில் வந்து மோதியிருக்க வேண்டும் என்றும் அதனால் ஏற்பட்ட பயங்கர விளைவுகளால்தான் டைனோசர்கள் அழிந்தன என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். லூயிஸ் வால்டர் ஆல்வாரஸ் என்ற நிபுணர் இது பற்றி விரிவாக ஆராய்ந்து அதை உறுதிப்படுத்தினார். அந்த விண்கல் விழுந்த இடம் இப்போது மெக்சிகோ நாட்டுக்கு அருகே கடல் பகுதியாக உள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியில் பெரிய விண்கல் வந்து விழுந்தால் அல்லது எரிமலை ஒன்று வெடித்தால் பூமியில் பெரிய அளவில் உயிரினம் அழியுமா என்று கேட்கலாம். விண்கல் ஒன்று பயங்கர வேகத்தில் பூமியில் வந்து மோதினால் பல விளைவுகள் ஏற்படும். அவற்றில் ஒன்றாகப் பெரும் தூசுப் படலம் தோன்றி, அது பூமியைச் சூழ்ந்துகொள்ளும். எரிமலை வெடித்தால் இதேபோல தூசுப் படலம் பூமியைச் சூழ்ந்துகொள்ளும். இதன் விளைவாக சூரியனிலிருந்து பூமிக்குக் கிடைக்கும் வெப்பம் குறையும். இதனால், உலக அளவில் பருவ நிலை பாதிக்கப்படும். தாவர வளர்ச்சி பாதிக்கும். உயிரினங்கள் பட்டினியால் சாக நேரிடும்.
இயற்கையின் படைப்பாற்றல்
1815-ல் இந்தோனேசியாவில் டம்போரா எரிமலை வெடித்தபோது, பூமியைத் தூசு மேகம் சூழ்ந்தது. இதனால் உலகம் தழுவிய அளவில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. இந்தியாவில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பருவ மழை பொய்த்தது. அமெரிக்காவில் நல்ல வெயில் அடிக்க வேண்டிய காலத்தில் பனிப் பொழிவு ஏற்பட்டு பயிர்களும் கால்நடைகளும் பாதிக்கப் பட்டன. வேறிடங்களில் உதாரணமாக சுவிட்சர்லாந்தில் மழை கொட்டித் தீர்த்தது.
கடந்த காலத்தில் உயிரினப் பேரழிவு ஏற்பட்டபோது அனைத்துமே அழிந்து விடவில்லை. சில வகை உயிரினங்கள் தப்பிப் பிழைத்தன. வேறு வகை உயிரினங்கள் தோன்றின. உலகில் டைனோசர் வகை உயிரினம் அழிந்ததற்குப் பிறகுதான் மான், பூனை, பன்றி, யானை, குதிரை, ஆந்தை, முயல்கள் முதலியவை தோன்றின. இயற்கையின் படைப்பாற்றல் ஒருபோதும் ஓய்வதில்லை.
இவை ஒருபுறம் இருக்க, மனிதனின் செயல்களால், பூமியில் ஏற்கெனவே ஆறாவது உயிரினப் பேரழிவு தொடங்கிவிட்டதாக அறிவியலாளர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். சிட்டுக் குருவிகள் காணாமல் போய்விட்டன. தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுகின்றன. காண்டா மிருகங்களின் கொம்புகள் அவற்றுக்கு ஆபத்தாக முளைத்துள்ளன. சீனா உட்பட கிழக்காசிய நாடுகளில் புலிகளின் உடல் பகுதிகளுக்கு பயங்கர கிராக்கி உள்ளதால் திருட்டுத்தனமாகப் புலிகள் வேட்டையாடப்படுகின்றன. சில நாடுகள் தடையை மீறி பகிரங்கமாகவே திமிங்கிலங்களை வேட்டையாடிவருகின்றன. இந்தப் பட்டியல் நீளமானது. தவணை முறையில் நாம் உருவாக்கிவரும் பேரழிவு என்று இதைச் சொல்லலாம்!
- என்.ராமதுரை, மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு: nramadurai@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago