இந்த 2022ஆம் ஆண்டில்தான், ‘மனநலம்’ என்ற சொல் முதல் முறையாக மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றது. பொதுமுடக்கத்துக்குப் பின், அதிகரித்துவரும் மனநலப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, அவற்றைத் தடுப்பதற்கான ஒருங்கிணைந்த வழிமுறைகள் உருவாக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.
தனிநபர் ஒருவரின் மனநலம் என்பது சமூக நலத்தோடு இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக, உடல்நலனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, நாம் மனநலனுக்குக் கொடுப்பதில்லை. மனரீதியாக ஒருவர் பாதிக்கப்படும்போது, அதைத் தனிநபரின் பலவீனமாகக் கருதும் நிலைதான் இங்கிருக்கிறது.
ஆகவே, மனநலம் தொடர்பாக வெளிப்படையாக உரையாடுவதைக் களங்கமாகப் பார்க்கிறோம். எனினும், உடல்நலனுக்கான முக்கியத்துவத்தை மனநலமும் சமீப காலங்களில் பெற்றுவரும் சூழலில், மத்திய அரசின் முன்னெடுப்பு, மனநலம் மீதான எதிர்மறையான பார்வையை, களங்கத்தைக் குறைத்து, அது தொடர்பான ஆக்கபூர்வமான விவாதங்கள் சமூகத்தில் தொடங்குவதற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கலாம்.
பொதுமுடக்கத்துக்குப் வேண்டாம்...: உலகம் முழுக்கப் பொதுமுடக்கக் காலத்துக்குப் பின், மனநலப் பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்துவருவதாக உலக சுகாதார நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. குறிப்பாக, வளர்ந்துவரும் நாடுகளில் இந்தப் பிரச்சினைகளின் தீவிரம் அதிகமாக இருக்கிறது.
பொருளாதார மந்தநிலை, வேலையிழப்பு, கல்வியில் தேக்கம், குடும்ப உறவுகளிடையே ஏற்பட்ட நெருக்கடிகள், சமநிலையின்மை, வன்முறை, அதிகரிக்கும் சமூக ஊடகப் பயன்பாடு, இளைஞர்களின் மனநிலையில் அவற்றின் தாக்கம், குடும்ப அமைப்பில் மாற்றங்கள் அதன் விளைவாகத் தனிமைப்படுத்தப்படும் முதியவர்கள் போன்ற பல்வேறு காரணங்களால் மனநலப் பிரச்சினைகள் தீவிரம் பெற்றுவருகின்றன.
ஒவ்வொரு நாடும் இதை உணர்ந்து இந்தப் பிரச்சினைகளைத் தடுத்து, களைவதற்கு உண்டான ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது. அதன் தொடர்ச்சியாகவே, இப்பிரச்சினைகளைக் குறிப்பிட்டு, மத்திய நிதியமைச்சர் பேசியிருக்கிறார்.
தற்கொலைத் தடுப்பு: இந்தியாவில் தற்கொலைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 7% அதிகரித்துள்ளதாக, ஆகஸ்ட் மாதம் வெளியான தேசியக் குற்ற ஆவணக் காப்பக (NCRB) அறிக்கை கூறுகிறது. மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகம் பதிவாகியிருக்கின்றன. இந்தியாவில் இளவயதுத் தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.
கடந்த ஆண்டு நடந்த தற்கொலைகளைப் பொறுத்தவரை 60%க்கும் அதிகமானோர் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர். பொதுமுடக்கத்துக்குப் பிறகான பொருளாதார நெருக்கடிகளும் வேலையிழப்பும் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்களின் தற்கொலைகளுக்குப் பெரும்பாலும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக இருக்கின்றன. தற்கொலைகளைத் தடுப்பதற்கான புதிய செயல்திட்டங்களும் வழிமுறைகளும் மத்திய, மாநில அரசுகளால் இந்த ஆண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இணையவழி மனநல ஆலோசனை, உளவியல் நிபுணர்களின் நியமனம் போன்ற மேலோட்டமான தீர்வுகளே அதில் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் தற்கொலைகள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரிடையே அதிகம் நிகழ்கின்றன. அவர்களுக்கான சமூக, பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்யாமல், அவர்களின் சமூக, பொருளாதார நெருக்கடிகளைக் குறைப்பதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுக்காமல் வெறும் ஆலோசனைகளை வழங்குவதாலேயே அப்பிரிவினரில் நடக்கும் தற்கொலைகளை முழுமையாகத் தடுத்துவிட முடியாது என்பதை அரசாங்கம் உணர வேண்டும்.
மாணவர்களும் மனநலமும்: தொழில்நுட்பக் கருவிகளின் வரவால் மாணவர்களும் இளைஞர்களுமே அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அதிகரித்துவரும் இளைஞர்களின் மனநலப் பிரச்சினைகளுக்குத் தொழில்நுட்பம் ஏதோ ஒருவகையில் காரணமாக இருக்கிறது. நீண்ட நேரம் திறன்பேசித் திரையில் செலவிடுவதால், மாணவர்களின் கவனிக்கும் திறன் பெருமளவு குறைந்திருக்கிறது.
அதேபோல், அவர்களின் சக மனித உறவுகள் குறைந்திருக்கின்றன, மனிதர்களின் மீதான மதிப்பீடுகள் மாறியிருக்கின்றன, அவர்களின் மீதும் புகார்களைச் சொல்லும் பெரியோர்களை மிகச் சுலபமாக அலட்சியப்படுத்துகிறார்கள், சக மனித அன்பும், பரிவும் குறைந்து, முற்றிலும் சுயநலமிக்கவர்களாக, யாரையும் மதிக்காத பண்புகள் கொண்டவர்களாக மாணவர்கள் மாறிப்போயிருக்கிறார்கள்.
பெற்றோர்கள் இந்தப் பண்புகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. தங்கள் குழந்தைகளுக்கு எந்தப் பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதால், அவர்களைத் தன்னிச்சையாகச் செயல்பட விடுவதில்லை. இதன் விளைவாக முதல் முறையாக ஒரு நெருக்கடியைச் சந்திக்கும்போது, மிகுந்த உணர்ச்சிவசப்பட்டவர்களாக மாணவர்கள் மாறிவிடுகிறார்கள். அதுவே அவர்களை ஏதேனும் ஒரு ஆபத்தில் கொண்டு நிறுத்திவிடுகிறது.
மேலும், டிஜிட்டல் சாதனங்களின் அதீதப் பயன்பாடு, அவர்களை இன்னும் தனிமைப்படுத்துகிறது, இணைய விளையாட்டுகள் அவர்களுக்குள் வன்முறையைத் தூண்டுகின்றன, வெளிப்படையற்ற தன்மையால் இணையக் குற்றங்களில் மிகச் சுலபமாக மாணவர்கள் சிக்கிவிடுகிறார்கள், சுலபமாகக் கிடைக்கும் போதைப் பொருட்கள் அவர்களை இன்னும் ஆபத்துக்குள்ளாக்குகின்றன. இப்படிப் பல காரணங்களால் மாணவர்களின் மனநிலை, சமீப காலத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இளைஞர்களின் பிரச்சினைகளை எப்போதையும் விடக் கடந்த ஆண்டு மிக அதிகமாக எதிர்கொண்டோம். இணைய விளையாட்டுகளால் தற்கொலை செய்துகொள்வது, திருடுவது, பிறர் மீது வன்முறையைப் பிரயோகிப்பது, ஆசிரியர்களை மிரட்டுவது, பெண்கள் மீது குற்றச் செயல்களில் ஈடுபடுவது எனப் பல்வேறு சம்பவங்களின் வழியாக நாம் புரிந்துகொள்ளக்கூடியது, அவர்களின் மனநலன் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுவருகிறது என்பதைத்தான்.
இளைஞர்களின் மனநலனைப் பாதுகாக்க, ஒருங்கிணைந்த செயல்திட்டங்களை உருவாக்க அரசாங்கங்கள் முயல்கின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாணவர்களின் கலைத் திருவிழா, சினிமா திரையிடல், உளவியல் ஆலோசனை எனப் பல திட்டங்கள் இந்த ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இவை தவிர, பள்ளிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் மாநில அளவிலான செயல்திட்டங்களைத் திட்டமிட வேண்டும்.
மனநலனை மேம்படுத்துதல்: ‘அனைவருக்குமான மனநலத்தை உறுதிசெய்ய வேண்டும்’ என்பதை 2022இன் உலக மனநல நாள் கருப்பொருளாக, சர்வதேச மனநல அமைப்புகள் அறிவித்தன. ஏனென்றால், ஐநாவின் ‘நூற்றாண்டு வளர்ச்சி இலக்கு’களில் (2000) பசி, வறுமை ஒழிப்பு, குழந்தைகள் இறப்பைத் தடுத்தல் ஆகியவற்றோடு மனநல மேம்பாடும் இடம்பெற்றிருந்தது. புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகவும் மாறிவரும் வாழ்க்கை முறையின் காரணமாகவும் மனநலச் சீர்கேடுகள் தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்றன.
மக்களை நோய்மையில் ஆழ்த்தும் ஐந்து முக்கியமான நோய்களில் மனச்சோர்வும் ஒன்று. பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை, ‘உடல்-மன ஆரோக்கியத்தின் உயரிய நிலையை அடைய அனைவருக்கும் உரிமை உண்டு’ என்கிறது. ஒவ்வொரு சமூகமும் அந்தச் சமூகத்தின் இயல்பை உணர்ந்து, அதன் விளிம்புநிலை மக்களின் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.
நல்வாழ்வை அடைவதற்கான முயற்சிகளில் மனநலத்தை முதன்மையாகக் கொள்ள வேண்டும். அதேபோல், மனநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியமும், மனித உரிமைகளும், வாழ்வாதாரமும் பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்க வேண்டும்.
தனிநபர்களும் தங்கள் மனநலப் பிரச்சினைகள் தொடர்பாக, வெளிப்படையாக உரையாட வேண்டும். மனநலமின்மை என்பதைப் பலவீனமாகக் கருதாமல், அதை உணர்ந்து அதற்கான தீர்வை அடையும் வழிகளைக் கண்டறிவதைப் பலமாகக் கருத வேண்டும். மானுட அறங்கள், மதிப்பீடுகள், சக மனித உறவுகளின் மீதான மாண்புகள் போன்றவற்றைக் குழந்தைகளுக்குக் கடத்த வேண்டும். அதன் மூலம் அவர்களின் மனநலத்தையும் உறுதிசெய்ய முடியும். அனைவருக்குமான மனநலத்தை அனைவரும் இணைந்து செயல்படுவதன் வழியாகவே பெற முடியும் என்பதைக் கடந்த ஆண்டின் செயல்பாடுகளிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம். - சிவபாலன் இளங்கோவன் மனநல மருத்துவர், தொடர்புக்கு: sivabalanela@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago