இயற்கை வேளாண்மை என்பது ரசாயனமற்ற, நஞ்சற்று விளைவிக்கும் விவசாய நடைமுறை என்பது அனைவரும் அறிந்ததுதான். இயற்கை வேளாண்மை / உணவு, ஆங்கிலத்தில் ‘ஆர்கானிக்’ என்று அறியப்படுகிறது. Ecological agriculture என்னும் இந்தச் சூழலியல் வேளாண்மையானது இயற்கை, உயிர்ம, கரிம, உயிர்ச் சூழல் விவசாயம் (biodynamic farming) எனப் பலவற்றையும் உள்ளடக்கும். இவற்றின் பாதைகள் பல என்றாலும், இலக்கு ஒன்றே.
இது அழைக்கப்படும் விதத்தை வைத்து அவ்வப்போது முரண்கள் எழுவது உண்டு. எனவே, ‘இயற்கை எதிர் உயிர்ம’ சர்ச்சைக்குள் செல்லாமல், இயற்கை வாழ்வியல் முறையையும் வேளாண்மையையும் நஞ்சில்லா உணவையும் நாம் பார்க்க வேண்டும். இல்லையெனில், சான்றிதழ் பெறுதல் உள்பட பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகள் ஏற்படும். வர்த்தகத்தில், முக்கியமாக ஏற்றுமதியில் இந்த வித்தியாசமான சொற்றொடர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம்.
வளர்ச்சிக்கான வழிகள்: இயற்கை வேளாண்மையை உயிர்ம அல்லது சூழலியல் வேளாண்மை என்று தமிழ் வல்லுநர்கள் பொதுவாக அழைக்கிறார்கள். இப்போதைக்குப் பொதுப் புரிதலுக்காக இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு, இயற்கை வேளாண் சந்தை என்றே குறிப்பிடுவோம்.
இயற்கை வேளாண் பொருள்கள், ரசாயன இடுபொருள்கள் இல்லாமல் உற்பத்தி செய்யப்படுபவை. விதை முதல், மாற்று இடுபொருள்கள் வரும் முறை, விவசாயிகளுக்குக் கிடைக்கும் நியாய விலை, சுற்றுச்சூழல் அக்கறை, ஓரினப் பயிர் இல்லாது பல்லுயிர் போற்றுதல், உயிர்/விதை பன்மையம் ஆகியவை இதில் அடக்கம். உலகளவிலும் இந்திய அளவிலும் செயல்பாட்டில் இருக்கும் இயற்கை வேளாண்மை, 1 முதல் 2% மட்டுமே. இயற்கை வேளாண் சந்தை வளர வளர இதன் வளர்ச்சி அதிகரிக்கும்.
» நவம்பர் 2023ல் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு
» கட்டிட அனுமதிக்கு 2 ஆண்டு கூடுதல் அவகாசம் - கரோனா பாதிப்பையொட்டி நடவடிக்கை
முதலில் இன்றைய வேளாண் சந்தையில் நிலவும் பிரச்சினைகளை மனதில் கொண்டு, இயற்கை வேளாண் சந்தையில் அந்தப் பிரச்சினைகளைத் தவிர்க்கத் திட்டமிட வேண்டும்.
உற்பத்தி, பதப்படுத்துதல், பொதிதல் ஆகியவற்றில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களின் அதீதப் பயன்பாடு; பெரும் வியாபாரிகள், பெரு நிறுவனங்கள், அதிக முதலீடு, கொள்ளை லாபம் ஆகியவற்றால் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகள்; சிறு வியாபாரிகள், வாடிக்கையாளர்கள், உற்பத்தியாளர்கள் ஒதுக்கப்படுதல்; சுரண்டல் நிறைந்த நியாயமற்ற விலை; சுற்றுச்சூழல் / சூழலியல் மீது அக்கறையின்மை; ஆரோக்கியமற்ற உணவுகள் போன்ற பிரச்சினைகளைக் களைய திட்டங்கள் வேண்டும். நியாயமான, இதயம் நிறைந்த, கை முறுக்குதல் இல்லாத, பன்மையம் நிறைந்த, சமூக/ அரசியல்/ சூழல் நீதி நிறைந்த வன்முறையற்ற நன்முறைச் சந்தைகள் வேண்டும்.
இயற்கை வேளாண்மையின் அவசியம்: இயற்கை வேளாண் விளைபொருள்கள் அதிக விலையில் விற்கப்படுவதாகப் பரவலான விமர்சனங்கள் உண்டு. தேவை மற்றும் வழங்கல் (உற்பத்தி) பெருகப் பெருக விலை சரியாகும். அதுவரை சமூகத்தின் கடைசிவரை இதைக் கொண்டுசெல்வது அரசின் கடமையாகும்.
இயற்கை விளைபொருள்களில் ரசாயன எச்சம் இல்லை என்பதைக் கண்டறிவதற்குச் சான்றிதழ் உள்ளிட்ட பல வழிகள் இருப்பினும், நம்பிக்கையே முதன்மையானது. நுகர்வுக்கும் உற்பத்திக்குமான இடைவெளி குறைக்கப்பட வேண்டும். விளைபொருள் எந்த விவசாயியிடமிருந்து, எப்படி வருகிறது; நுகர்வோராக நாம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் விவசாயிக்கு எவ்வளவு செல்கிறது என்பதுவரை கேட்டறிந்து செயல்பட்டால், இயல்பாக இந்த வழிமுறை மேன்மை அடையும்.
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்களுக்குக்கூட ஒவ்வாமை, தோல் நோய்கள், நரம்புக் கோளாறுகள், இதய நோய்கள், புற்றுநோய் எனப் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. நம் உணவில் கலந்திருக்கும் ரசாயனமே இதற்குக் காரணம். இன்று பலதரப்பட்ட வேளாண் ரசாயனங்களின் கொடிய பின்விளைவுகள் பெரும் தரவுகளுடன் உலகெங்கிலும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இதை உணர்ந்திருக்கும் பல விவசாயிகளும் ரசாயனங்களைவிட்டு, இயற்கை வழிமுறைகளைக் கையாள்கின்றனர். நுகர்வோரில் சிலரும் இம்மாதிரியான பொருட்களைத் தேடித் தேடி வாங்குகின்றனர். ஆயினும் இது மிகச் சிறிய அளவுதான். அரசு போன்ற பெரு இயந்திரம் கையிலெடுத்தால் இதை விரிவுபடுத்த முடியும்.
அரசு செய்ய வேண்டியவை: மத்திய, மாநில அரசுகள் பெரும் திட்டங்களை, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும். தமிழகம் இப்போது இயற்கை வேளாண் கொள்கையைக் கொண்டுவருவதில் தீவிர முனைப்புக் காட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலதிக யோசனைகளையும் திருத்தங்களையும் ஏற்று இத்திட்டங்களை மேம்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கான திட்டங்கள், மதிய உணவு, நியாய விலைக்கடைகள் போன்றவற்றில் இயற்கை வேளாண் விளைபொருள்களைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.
ஆந்திர மாநிலத்தில் சமூகவள நபர்கள் விதை, பூச்சி மேலாண்மை, இடுபொருள் தயாரிப்பு, சந்தை என எல்லாவற்றிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கினார்கள். தமிழகத்திலும் அப்படியான ஏற்பாடுகளைச் செய்யலாம். இயற்கை வேளாண்மைக்கான நிறுவன அமைப்பு, சிறப்புச் சந்தைகள், இயற்கை விவசாயிகளுக்குத் தனிக் கிடங்குகள், பதப்படுத்தும் ஆலைகள் மற்றும் சேமிப்பகங்கள் போன்றவை அமைக்கப்பட வேண்டும். வேளாண் துறை அதிகாரிகள், வேளாண் பல்கலைக்கழகஅதிகாரிகள் உள்பட எல்லோருக்கும் தீவிரப் பயிற்சி அவசியம்.
மாற்றம் நிகழட்டும்: இயற்கை விவசாயத்தில் மரபணு மாற்றுப்பயிர்களுக்கு இடமே இல்லை. அவை உலகெங்கிலும் தடை செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து வந்த கோதுமையில் மரபணு மாற்று எச்சம் இருப்பதாகத் திருப்பி அனுப்பியது ஜப்பான். ஆராய்ந்து பார்த்ததில் அந்தக் கோதுமை, மரபணு மாற்றுப் பயிர் அல்ல என்றும், 13 ஆண்டுகளுக்கு முன் அந்த நிலத்தில் மரபணு மாற்றுப் பயிர் பரிசோதனை நடந்ததும் தெரியவந்தது. சாதாரண ரசாயன சந்தையிலேயே இந்த நெருக்கடி என்றால், இயற்கை வேளாண்மையில் இன்னும் தீவிரமான கண்காணிப்பு அவசியம்.
பருவகால மாற்றம், இயற்கைச் சீற்றங்கள், விவசாய நெருக்கடிகள் போன்றவற்றிலிருந்து காக்கவும், உழவர் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் மேம்படவும், விவசாயிகளின் நிலையான மேம்பட்ட வருமானத்துக்கு வழிவகுக்கவும், நம் பாரம்பரிய முறைகளை, மரபு விதைகளை மீட்கவும், உணவு / ஊட்டச்சத்துப் பாதுகாப்புக்கும், அனைவரது ஆரோக்கியத்துக்கும் இயற்கை வேளாண்மையே திடமான தீர்வாகும். இவை எல்லாம் நிறைவேற நம் மாநிலத்துக்கான இயற்கை வேளாண் கொள்கை அவசியம். அது விரைவில் வர வேண்டும் என அரசை வலியுறுத்துவோம். - அனந்து பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு, தொடர்புக்கு: organicananthoo@gmail.com
To Read in English: Organic farming policy is the need of the hour
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago