ஏன் தமிழ் வாசிக்கத் தெரியவில்லை?

By செய்திப்பிரிவு

தமிழகப் பள்ளிகளில் படிக்கும் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 20% பேர் மட்டுமே தமிழ் மொழியை எழுத்துக்கூட்டி வாசிக்கக்கூடியவர்கள் எனவும் தென்னிந்திய மாநிலங்களில் மொழி வாசிப்புத் திறனில் மிகவும் பின்தங்கியிருப்பது தமிழகம்தான் எனவும், தேசியக் கல்வி ஆராய்ச்சி - பயிற்சிக் குழு (NCERT) நடத்திய ‘அடிப்படைக் கற்றல்’ (2022) ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அதிர்ச்சியில் உறைந்துபோகாமல், இந்த அறிக்கையை ஒட்டி சில உண்மைகளை உடைத்துப் பேசவேண்டியது அவசியம்.

கரோனா மட்டுமே காரணமா?: 2022 மார்ச் மாதம் நிகழ்ந்த நடப்பு ஆண்டுக்கான இந்த ஆய்வில், மூன்றாம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது; 86,000 மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த மாணவர்கள் ஒன்றாம் வகுப்பு சேர்ந்து படிக்கவேண்டிய காலத்தில்தான் கரோனா ஊரடங்குக் கட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் உச்சத்தில் இருந்தன.

தவிர்க்கப்பட்ட தமிழ்ப் பாடங்கள்: கைபேசிகளில் ‘ஸூம்’, ‘ஜி கிளாஸ் ரூம்’ ஆகியவற்றின் வழியாக மிக வேகமாக இணைய வகுப்புகள் முன்னெடுக்கப்பட்டன. இப்படியான வகுப்பறைச் சூழல் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் புதிது என்றாலும் இக்கட்டான காலச்சூழல் இரு தரப்பும் விரைந்து கற்றுக்கொள்வதற்கு இந்த ஏற்பாடு வழிசெய்தது.

ஆயினும் நேரடி வகுப்பறையைப் போன்று கற்பித்தல் செயல்பாட்டையும் கற்றல் செயல்பாட்டையும் இதற்குள் முழுமைப்படுத்த முடியவில்லை. கல்விச் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கிக் கிடந்த வேளையில் ஒரு சிறு வெளிச்சக் கீற்றை இந்த வகுப்பறைகள் மாணவர்களுக்கு வழங்கின. ஆனால், அந்த வெளிச்சம் தமிழ் மொழிப் பாடத்தின் மீது விழாதவாறு திட்டமிடப்பட்டே பெரும்பாலான தனியார் பள்ளிகளால் இவை முன்னெடுக்கப்பட்டன.

பாரபட்ச கண்ணோட்டம்: தற்போதைய கற்றல் சூழலில், கல்லூரிக் கல்விக்கு பள்ளி வகுப்புகளிலேயே திட்டமிடப்பட்டுக் கணிதம், அறிவியல் பாடங்களில் கவனம் செலுத்தப்படுகிறது; இந்தப் பாடங்களுக்கு அதிகமான பாடவேளை ஒதுக்கப்படுகிறது. இதனால் பள்ளிகளாலேயே மொழிப்பாடம் இரண்டாம் இடத்துக்குப் தள்ளப்படுகிறது. ஏறத்தாழ எல்லா பள்ளிகளிலும் நிகழ்வது இதுதான். இந்த மாற்றாந்தாய் மனோபாவம், மொழிப்பாடத்தின் மீதான மந்தத்தன்மையை ஆசிரியர்கள், மாணவர்களின் மனத்திலும் மிக அழுத்தமாக ஏற்படுத்திவிடுகிறது.

பெற்றோரின் புரிதலின்மை: இன்றைய பெற்றோர்களில் பெரும்பாலானோர் தம் குழந்தைகள் மொழிப்பாடம் படிப்பதை விரும்புவதில்லை. அவர்களின் கனவு, இலக்கு எல்லாம் மருத்துவம், பொறியியல் சார்ந்த தொழிற்கல்வியின் மீது படிந்துகிடக்கிறது. இதனால், அக்கல்விக்குத் தேவையான அடிப்படைப் பாடங்களில் தங்கள் குழந்தைகள் முழுக் கவனம் செலுத்தினால் போதும் என்கிற இருட்டுச் சிந்தனையில் அவர்கள் மூழ்கியிருக்கிறார்கள். அதை ஆரம்ப வகுப்புகளில் இருந்தே குழந்தைகளின் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் திணிக்கத் தொடங்கிவிட்டனர்.

மொழிப்பாட ஆசிரியர்கள் கடின உழைப்பைச் செலுத்தி, தமிழை வாசிக்கவும் எழுதவும் கற்பிக்கும் வேளையில், மாணவர்கள் படிக்க முன்வந்தாலும் பெற்றோர்கள் தாமே முன்வந்து, ‘தமிழ்தானே?! அதை அப்புறம் படித்துக்கொள்ளலாம், இப்போது கணிதம் படி, அறிவியல் படி’ எனக் கூறி, மாணவர்களை மொழிப்பாட வாசிப்பு-சிந்தனையில் இருந்து மடைமாற்றிவிடுகின்றனர். மொழிப்பாடத்தில் மாணவர்களின் திறன் மேம்பட்டிருந்தாலும் கணிதம்,அறிவியல் பாடங்களை முன்னிறுத்திப் பெருமை பேசுவதைப் போல இதனைப் பேச மறுத்துவிடுகின்றனர்.

சமூகப் பார்வை: மேலைநாட்டு மொழிகள் கல்வியின் மீது ஏற்படுத்தியிருக்கிற தாக்கம் மிக அதிகம். அந்த மொழிகளைக் கற்றுக்கொள்வது அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தாய்மொழிப் பாடம் கண்கள் போன்றது. அந்தக் கண்களின் வழியேதான் பிற மொழிக் கட்டமைப்பையும் இயங்கு தன்மையையும் மாணவர்களால் ஒப்பிட்டு உணரமுடியும். இந்தச் சமூகம் இதை உணராமல் கடந்துபோகிறது.

தமிழில் பேசுபவர்களை வேற்றுக்கிரகவாசிகளைப் பார்ப்பது போன்ற மனநிலை, சமூகத்தில் மிக வேகமாகப் பரவிவருகிறது. இல்லங்களிலும் பொதுவெளிகளிலும் தமிழில் பேசுபவர்களின் மீதான இந்தப் புறக்கணிப்பைப் பார்த்தும் கேட்டும் வளரும் இளைய தலைமுறையினரின் உள்ளத்தில் மொழிப்பாடத்தின் மீதான மதிப்பு இயல்பாகவே குறைந்துபோகிறது.

குழந்தைகள் தொலைத்த விளையாட்டு: குழந்தைகள் விளையாட்டின் வழி அதிகப்படியான சொற்களைக்கற்றுக்கொள்வது இயல்பு. பாடியும் ஆடியும் ஓடியும்விளையாடும் விளையாட்டுக்கள் உடலை மட்டுமே பண்படுத்துவதில்லை. மாறாக அந்த விளையாட்டு தொடர்பான சொற்களை விளையாட்டின்வழி கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். விளையாட்டின் வழி குழந்தைகளிடம் கட்டமைக்கப்படுகின்ற சொற்களஞ்சியமானது, குழந்தைகளின் சுயம் சார்ந்ததுஎன்பதை நாம் மறந்துவிட்டோம்.

இன்றைய பொருளாதாரஉலகம் நம் குழந்தைகளின் மரபுசார்ந்த விளையாட்டுகளை விழுங்கிவிட்டது என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ளலாம். குழந்தையின் வாசிப்பும்கற்றலும் பன்முகத்தன்மை வாய்ந்தவை. அவர்களுக்கான கற்பித்தல் வகுப்பறைக்குள் மட்டுமே நிகழ்ந்து முடிந்துவிடுவதில்லை. வீடு, சமூகம், பள்ளிஎன அனைத்துத் தளங்களிலும் அவர்கள் கற்றுக்கொண்டேதான் இருக்கிறார்கள். இந்தச் சூழல்கள் அனைத்தும் சரியான விகிதத்தில் அமையும் குழந்தைகள் கற்றல் வெளிப்படுத்துதல் திறன்களில் சிறந்து விளங்குகிறார்கள்.

மொழிப்பாடத்தில் ஒரு குழந்தை சிறந்து விளங்க வேண்டுமெனில் மேற்கண்ட சூழல்கள் அனைத்தும் தாய்மொழி வழியிலேயே நிகழ்த்தப்பட வேண்டும். அந்த நிலையை எட்டாத வரை நம் குழந்தைகள் மொழிப்பாட அறிவில் பின்தங்கித்தான் இருப்பார்கள். தமிழ் மொழி குறித்த அக்கறை கொண்டவர்கள் செயலில் இறங்க வேண்டிய தருணம் இது. - மகா.இராஜராஜ சோழன், தமிழாசிரியர், தொடர்புக்கு: cholan1981@gmail.com

To Read in English: Why children are unable to read Tamil

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்