பறவை மாரியப்பன்!

By த.நீதிராஜன்

ஆங்கிலேயர்கள் 1872 முதல் 1931 வரையிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளில் முதன்முதலில் மாற்றுத்திறனாளிகளைக் கணக்கெடுத்தனர். ஆனால், அவற்றின் நம்பகத்தன்மை பற்றிச் சந்தேகமும் விமர்சனமும் எழுந்ததால் 1941 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் மாற்றுத்திறனாளிகளைக் கைவிட்டோம் என்கிறது இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நிறுவனம்.

சுதந்திரம் கிடைத்த பிறகு, இந்தியா நடத்திய 1951, 1961,1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளிலும் மாற்றுத்திறனாளிகள் பற்றிய விவரங்கள் எடுக்கப்படவில்லை. 1981 கணக்கெடுப்பில் மாற்றுத்திறனாளிகளை மீண்டும் கவனித்தார்கள். மீண்டும் பழைய கதைதான். மாற்றுத்திறனாளிகளைக் கணக் கெடுக்க மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முறை சரியாக வராது என்று சொல்லி விட்டார்கள். 1991-ல் மாற்றுத்திறனாளிகள் விஷயத்தில் மீண்டும் கண்ணை மூடிக் கொண்டார்கள். ஆனால், அதே நிலையைத் தொடர முடியவில்லை.

அரசை நோக்கிச் சூடான கேள்விகள் கிளம்பிவிட்டன. மாற்றுத்திறனாளிகள் மத்தியிலிருந்தே சண்டைக்காரர்கள் உருவாகிவிட் டனர். அதனால் 2001 கணக்கெடுப்பில் மாற்றுத்திறனாளிகள் பக்கம் அரசின் பார்வை மீண்டும் திரும்பியது. இந்த முறை நல்ல மாற்றம். அடுத்து, 2011 கணக்கெடுப்பு மேலும் மேம்பட்டது. இப்போது மொத்த இந்தியரில் 2.13 % பேர் மாற்றுத்திறனாளிகள். எதற்காக இதை எழுதுகிறேன் என்றால், மாற்றுத்திறனாளிகளைச் சக மனிதர்களாக அணுக அரசாங்கத்துக்கே இவ்வளவு காலம் ஆகியிருக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டைப் பொறுத்த அளவில், இந்தக் கணக்கெடுப்பு ரொம்பவும் முக்கியமானது. இதன் அடிப் படையில்தான் அவர்களுக்கான திட்டங் களை யோசிக்க முடியும்; அமலாக்க முடியும். அதற்கே இவ்வளவு தாமதம்! தமிழக மக்கள்தொகையில் மாற்றுத்திறனாளிகள் 3%. இவர்களில் 1% பார்வையற்றோர். 0.6%, உடல் ஊனமுற்றோர். 0.2% மனவளர்ச்சி குன்றியோர். 0.1% காது கேளாதோர் 0.02% பேச்சுத் திறனற்றோர். இவர்களுடைய நிலை இன்றைக்கு என்ன?

மாரியப்ப அற்புதம்

சமீபத்தில், அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளின் சங்கக் கூட்டமைப் புத் தலைவர் ஜான்சிராணியுடன் பேசிக் கொண்டிருந்தேன். “பார்வைத் திறன் இல்லாதவர்கள் ப்ரெய்லி முறையில்தான் படிப்பார்கள். அவர்களுக்குத் தேவையான அளவுக்குப் பாடப் புத்தகங்கள்கூட இல்லை” என்று அவர் சொல்லச் சொல்ல எனக்கு வேதனை மிகுந்தது. “கல்வி, வேலை மட்டுமல்ல, நடமாட்டமே அவர்களுக்குச் சிரமம்தான். அரசுக் கட்டிடங்களிலேயேகூட இயல்பாக மாற்றுத்திறனாளிகள் நடமாடும் வசதிகள் முழுமையாக இல்லை. பொதுக் கழிப்பறைகளில் சக்கர நாற்காலி நுழையாது. பேச்சுத்திறன் இழந்தவர்களுக்கு உதவ ரயில், பேருந்து நிலையங்களில் சைகை மொழிபெயர்ப்பாளர்கள் கிடையாது. உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வீடுகள் கிடையாது. மனநலம் குன்றியவர் களுக்கான அரசின் பராமரிப்பு மிகவும் குறைவு…”

அவருடன் பேசிவிட்டுத் திரும்பியபோது தான் மாரியப்பன் நினைவு வந்தது. இப்படிப் பட்ட சூழலிலிருந்து ஒரு மாரியப்பன் உருவாவதும், உயரம் தாண்டுதலில் மாற்றுத்திறனாளி களின் உலக சாம்பியனான அமெரிக்க வீரர் சாம் கிரீவ்வை பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தோற்கடித்து உலக சாதனையை நிகழ்த்துவதும் எவ்வளவு பெரிய அற்புதம்!

பாராமுகத்தின் குறியீடு

மாரியப்பன் பிறவி மாற்றுத்திறனாளி அல்ல. ஐந்து வயதில் பள்ளி செல்கையில் பேருந்து அவரது வலது காலில் கட்டை விரல் தவிர்த்த மற்ற பகுதிகளை உருக்குலைத்துவிட்டது. மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர் மாரியப்பன். தன்னம்பிக்கை மட்டுமே அவர் சொத்து. 14 வயதில் பள்ளி அளவில் நடந்த போட்டியில் எல்லோருடனும் சேர்ந்து விளையாட்டுப் போட்டியில் பங் கேற்றவர், நடந்த போட்டியில் இரண்டாவதாக வந்துள்ளார். அந்தத் தன்னம்பிக்கைதான் அவரைத் தொடர்ந்து வளர்த்து வந்துள்ளது.

வீட்டுக்கு வந்ததும் மாரியப்பன் பங்கேற்ற போட்டிகளின் காணொலிகளைப் பார்த்தபோது, அமெரிக்க வீரர்கள் தங்களின் கால்களில் மாட்டியுள்ள சாதனங்களின் தரம், நுட்பத்தோடு ஒப்பிடவே முடியாத சூழலில், மாரியப்பனுடை சாதனங்கள் இருந்ததைக் கவனிக்க முடிந்தது. பொதுவாக, நமது விளையாட்டு வீரர்கள் அரசின் பாராமுகத்தை மீறிச் சொந்த முயற்சியால் முன்னேறி வருகிறார்கள் என்பதைக் காட்டும் குறியீடுபோல இருந்தது அது.

ஒரு விளையாட்டு வீரரைச் சின்ன வயதிலேயே அடையாளம் கண்டு, அவருக்குத் தேவையான எல்லாவிதமான கருவிகளையும் வசதிகளையும் அளித்து வளர்த்தெடுக்கிற அணுகுமுறை நம்முடைய அரசிடம் இன்று வரையிலும் இல்லை.

பலவீனத்தை இறக்கையாக்கி…

ஒரு வாரம் கழித்து நண்பர் சிவசாமி யைச் சந்தித்தேன். தமிழக அரசின் தடகள விளையாட்டுக் கழகத்தின் மாநிலத் துணைத் தலைவராகப் பணியாற்றியவர் சிவசாமி. அப்போது மாரியப்பன் அணிந்திருந்த சாதனங்களையும் அமெரிக்க வீரர் அணிந்திருந்த சாதனங்களையும் பற்றி அவருடன் பேசினேன்.

“மாரியப்பன் பள்ளி அளவிலும் மாவட்ட அளவிலும் விளையாட்டுகளில் பெற்ற வெற்றிகளின்போது அவருக்குக் கிடைத்த உதவிகளைக்கொண்டே இந்த சாதனங்களை வாங்கியிருப்பார். யாராவது கடுமையாகப் பயிற்சி எடுத்துத் தனது சொந்த முயற்சியில் வெற்றி பெறும் சூழலிலேயே நம்முடைய அரசாங்க அமைப்புகளும் விளையாட்டு அமைப்புகளும் அவரைச் சுவீகரித்துக்கொள்ளும் கலாச்சாரமே இங்கு நீடிக்கிறது” என்றார் சிவசாமி.

மாரியப்பன் நன்றாக இருக்கிற தனது இடது காலால் ஏழு எட்டுகளை வைத்து ஓடிவந்தார். பாதிக்கப்பட்ட வலது காலின் நசுங்கி விரிந்த கட்டை விரலை அழுத்தி ஊன்றி, அதனைத் தனது ஏவுகணையாக மாற்றி, வெற்றியை நோக்கிப் பாய்ந்தார் மாரியப்பன். தனது நசுங்கி விரிந்த கட்டை விரலை ‘எனது கடவுள்’என்றும் வர்ணித்தார் மாரியப்பன். தனது பலவீனத்தைப் பலமாக மாற்றிக்கொள்வது எல்லா சாதனையாளர் களுக்கும் பொதுவானதுதான்.

ஆனாலும், சமூகம் தனது காலடியில் போட்டு மிதித்து வைத்திருப்பவர்கள் சில நேரம் தங்களின் முயற்சியால் வானில் பறப்பதுண்டு. அத்தகைய ஒரு பறவைதான் மாரியப்பன். அவர் இந்திய விளையாட்டுத் துறையின் போக்கு களையும் மதிப்பீடுகளையும் மட்டும் நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்த வில்லை. மாற்றுத்திறனாளிகள் எனும் ஒரு புறக்கணிக்கப்படும் சமூகத்தையும் ஒட்டு மொத்தமாகக் கொண்டுவந்து நிறுத்து கிறார். அரசும் சமூகம் உரிய வாய்ப் பளித்தால், இன்னும் அவர்கள் எவ்வளவு உயரம் பறப்பார்கள் எனும் சிந்தனையை யும் நம்மிடத்திலே உருவாக்குகிறார்!

-த.நீதிராஜன், தொடர்புக்கு: neethirajan.t@thehindutamil.co.in

டிசம்பர் 3: மாற்றுத்திறனாளிகள் தினம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்