நிறவெறிக்கு எதிரான உலக மாநாடு, ஐக்கிய நாடுகள் சபையில் 2001-ம் ஆண்டு நடைபெற்றுக்கொண்டிருந்தது. கியூபத் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ உள்ளே நுழைந்ததும், அந்த இடமே அமைதியானது. மேடை ஏறிய காஸ்ட்ரோ, "நிறவெறியை மட்டுமல்ல, முதலாளித்துவம் ஏற்படுத்திவரும் ஆழமான வடுவையும் நிராகரிக்கிறோம்" என்று முழங்கியதும் அரங்கமே ஆர்ப்பரித்தது. "ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா ஆகிய மூன்று கண்டங்களிலும் வாழும் 450 கோடி மக்கள் மனிதாபிமானமற்ற முறையில் சுரண்டப்படுகின்றனர். இந்த வரலாறு காரணமாகத்தான் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், கல்வியறிவின்மை, நோய் ஆகியவற்றுக்கு இரையாகி பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
நம்பிக்கைதான் அவருடைய ஆளுமையாக இருந்தது. அவநம்பிக்கையுடன் அவர் எதையும் அணுகியதே இல்லை. "மக்களை ஒன்றுதிரட்டுவதிலும் அவர்களைக் கொண்டு போராடுவதிலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீதி நிலைபெறும் என்று நம்புகிறேன்; உண்மை நிலைக்கும் என்று நம்புகிறேன்; நல்ல முயற்சிகளுக்கு மக்கள் துணையிருப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று முழங்கினார். கரவொலி அடங்க நீண்ட நேரம் ஆனது.
அந்தக் கரவொலி முக்கியமான ஒன்றை உணர்த்தியது. அவர்களால் வெளிப்படுத்த முடியாத விழுமியங்களுக்காக அவர் குரல் கொடுத்தார் என்பதே அது. அவர் பேசிய வார்த்தைகள் உண்மை. ஆனால், உலக கோளத்தின் வடக்கில் இருப்பவர்களும் தெற்கில் உள்ள அவர்களுடைய பிரதிநிதிகளும் அதை எள்ளி நகையாடுவர். காஸ்ட்ரோவின் நம்பிக்கைகள், மக்களைத் திரட்டிப் போராட முடியும் என்ற அவருடைய நம்பிக்கை ஆகியவற்றை அவர்கள் வெகுவாகவே கேலி பேசுவர். நீதி, உண்மை என்ற வார்த்தைகள் அவர்களைப் பொறுத்தவரை வெறும் சொற்களே. அவற்றுக்கு இப்போது நேரெதிர்ப் பொருள்தான்.
முடிவுக்கு வந்தது நிறவெறி அரசு
வல்லரசு ஒன்றினால் முற்றுகைக்கு உள்ளான சிறு தீவு நாட்டிலிருந்து வந்த தலைவராக காஸ்ட்ரோ இருக்கலாம், ஆனால் அவர்தான் வரலாற்றில் ஒடுக்கப்பட்ட சக்திகளுக்காக எதிர்த்து நின்றார். ஹவானாவை ஆண்டுகொண்டிருந்த மாஃபியா கும்பலை வென்ற சியலா மெய்ஸ்த்ரா கெரில்லாக்கள்தான் வாஷிங்டனின் தாக்குதல்களிலிருந்து நாட்டைக் காப்பாற்றினர். ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிடுவது அவசியம் என்று உணர்ந்திருந்த கியூபா, மூன்று கண்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளின் மாநாட்டை 50 ஆண்டுகளுக்கு முன்னதாக நடத்தியது. இந்த மாநாட்டில்தான், "காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற விரும்பும் நாடுகளின் புரட்சிப் போருக்கு கியூபா துணை நிற்கும்" என்று காஸ்ட்ரோ அறிவித்தார். ராணுவரீதியிலும் மருத்துவத்திலும் கினி-பிஸ்ஸாவ், மொசாம்பிக், அங்கோலா ஆகிய நாடுகளுக்கு கியூபா உதவியது. இந்தப் போராட்டங்களில் போராளிகளுக்கு கியூபா அளித்த உதவிகளால்தான் அவர்களால் போர்ச்சுகலை வெல்ல முடிந்தது. அது மட்டுமின்றி, 1974-ல் போர்ச்சுகலில் இருந்த பாசிச ஆட்சியை எதிர்த்தும் புரட்சி நடைபெற கியூபா உதவியது. அங்கோலாவில் கியூபா தலையிட்டதன் விளைவாகவே 1988 போரில் தென்னாப்பிரிக்க ராணுவத்தை வெல்ல முடிந்ததுடன் நிறவெறி அரசின் முதுகெலும்பையும் முறிக்க முடிந்தது. அதன் பிறகு, அந்த அரசும் முடிவுக்கு வந்தது.
மண்டியிடாத காஸ்ட்ரோ
கியூபா இப்படிப் பிற நாடுகளுக்கு உதவிசெய்து முடித்ததும், களத்திலிருந்து விலகித் தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. தான் உதவிசெய்த நாட்டிலேயே படைகளைத் தங்கவைத்து, வியாபாரரீதியாகத் தனக்குச் சாதகமான உடன்பாடுகளைச் செய்துகொள்வதையோ, ராணுவத்தளத்தை ஏற்படுத்துவதையோ கியூபா என்றைக்குமே மேற்கொண்டதில்லை. உதவிக்கு வரும், உதவி செய்து முடித்தவுடன் தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிவிடும்.
1983-ல் 'நாம்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் 'அணி சாரா'நாடுகளின் இயக்கத் தலைமைப் பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்காகப் புது டெல்லி வந்தார் காஸ்ட்ரோ. காலனி எதிர்ப்பு இயக்கங்கள் தோற்றுவித்த அத்தனை நம்பிக்கைகளையும் அந்நாடுகளுக்கு ஏற்பட்டிருந்த கடன் சுமை தகர்த்திருந்த நேரம் அது. வற்றிப்போயிருந்த தங்களுடைய கருவூலங்களை நிரப்ப, பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்.) உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களின் வாயில்களில், மூன்றாவது உலக நாடுகளின் நிதியமைச்சர்கள் கடனுக்காகத் தவம் கிடக்கத் தொடங்கினர். வல்லாதிக்க நாடுகளுக்கு எதிரில் மண்டியிட காஸ்ட்ரோ தயாரில்லை. "கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது என்று மறுத்துவிட்டால் என்ன?" என்று அவர் கேட்டார். அணி சாரா இயக்கத்தைச் சேர்ந்த எல்லா நாடுகளுமே வாங்கிய கடனைத் திருப்பித் தர முடியாது, வட்டியும் செலுத்த முடியாது என்று கூறி, கடன் நிபந்தனைகள் குறித்து மீண்டும் பேச வேண்டும் என்று கடன் கொடுத்த நாடுகளிடம் கூற வேண்டும் என்றார்.
பேராசைகளின் விளைவே போர்
மாநாட்டில் பங்கேற்றவர்கள் பலத்த கரகோஷம் செய்து, அந்த யோசனையை வரவேற்றனர். ஆனால், எந்த நாடுமே அவரைப் பின்பற்றத் தயாரில்லை. அவர் அழைப்பு விடுத்தபடி, "கடனைத் திருப்பிச் செலுத்த மாட்டோம்" என்று அதிரடியாக பிற நாடுகள் கூறவில்லை. பதிலாக, நவ தாராளமயக் கொள்கைகளைக் கடைப்பிடித்துத் தங்களுடைய இயற்கை வளங்களை வளர்ந்த நாடுகளின் லாபத்துக்குத் தாரை வார்த்தன.
இந்தப் போக்கு சரியில்லை என்று காஸ்ட்ரோ தொடர்ந்து முரசறைந்து எச்சரித்தார். எல்லா நாடுகளையும் சூழ்ந்துள்ள ஆபத்துகளை எச்சரித்து, அணி திரளுமாறு அறைகூவல் விடுத்தார். நிதிநிர்வாக அமைப்பு ஒரு சூதாட்டக் கருவியாகவும், சமூக நலத் திட்டங்கள் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்தும் வழிமுறைகளாகவும் மாறிவிட்டன. இயற்கை வளங்களை வரம்பில்லாமல் விழுங்கும் நுகர்வியம் வளர்ந்துவிட்டது. வல்லரசுகளின் பேராசையாலேயே போர் ஏற்படுகிறது. புதுப் புது எண்ணங்கள் நல்ல சிந்தனைகளைக்கூடக் கெடுத்துவிடுகின்றன. "இன்றைய சந்தைப் பொருளாதாரம் எல்லோரும் பின்பற்றப்பட வேண்டிய உருவ வழிபாடாகவே மாறிவிட்டது. எல்லா நேரமும் உச்சாடனம் செய் யும் மந்திரமாகவே ஆகிவிட்டது" என்று 1999-ல் வெறுப்பின் உச்சத்தில் கூறினார் காஸ்ட்ரோ.
அருவருப்பான ஏற்றத்தாழ்வு
உலகின் 10% உயர் பணக்காரர்கள், உலக செல்வங்களில் 89% அளவை வைத்திருக்கிறார்கள். சந்தைப் பொருளாதாரம் என்ற சிந்தனை மனித மனங்களையே சிந்திக்க முடியாமல் தடுத்துவிட்டது என்று வருந்தினார். "நீங்கள் கனவுலகில் வாழ்கிறீர்கள்" என்று செய்தியாளர் இக்னாசியோ ரமோனெட், காஸ்ட்ரோவைப் பார்த்துக் குற்றஞ்சாட்டினார். "கனவாளர்கள் என்று யாரும் இல்லை; கனவில்கூடக் காண முடியாததை நேரில் பார்க்கும் வாய்ப்பு பெற்றவரிடமிருந்து (என்னிடமிருந்து) இதற்கான விளக்கத்தை நீங்கள் பெறலாம்" என்று நிதானமாகப் பதில் அளித்தார் காஸ்ட்ரோ.
பெரும் பணக்காரர் - பரம ஏழை என்ற அருவருப்பான ஏற்றத்தாழ்வுகளுக்குத் தீர்வுகள் தேவை. இந்தத் தீர்வு குறுங்கடனிலோ, மென்பொருள் திட்டத்திலோ கிடைக்காது. ஏற்றத் தாழ்வுகளை நீக்க மிகப் பெரிய சிந்தனை தேவைப்படுகிறது. காஸ்ட்ரோவுக்கு அதைத் தீர்க்க வேண்டும் என்ற பேரவா இருந்தது.
சிந்தனைகளைக் கொல்ல முடியாது
1953-ல் ராணுவத்தின் லெப்டினென்ட் பதவியில் இருந்த ஒரு அதிகாரியும் அவருடைய சிறு படையினரும் காஸ்ட்ரோவையும் அவருடைய சகாக்களையும் சுற்றிவளைத்துப் பிடித்துவிட்டனர். அங்கேயே சுட்டுக்கொன்றுவிடுவார்கள் என்ற அச்சத்தில், தான் யாரென்ற அடையாளத்தை காஸ்ட்ரோ மறைத்துக்கொண்டார். அதிகாரியுடன் இருந்தவர்களோ அனைத்து கெரில்லாக்களையும் சுட்டுக் கொன்றுவிடத் துடித்தனர். அந்த அதிகாரி அவர்களை சாந்தப்படுத்திக்கொண்டே நடந்தார். "உங்களால் சிந்தனைகளைக் கொல்ல முடியாது… உங்களால் சிந்தனைகளைக் கொல்ல முடியாது" என்று திரும்பத் திரும்பக் கூறினார். அந்த அதிகாரி ஏன் யாரும் கொன்றுவிடாமல் காப்பாற்றினார், அதே வாக்கியத்தை ஏன் திரும்பத் திரும்பக் கூறினார் என்று காஸ்ட்ரோவுக்குப் பெரிய வியப்பு மேலிட்டது. "எங்களுடைய சிந்தனைகள் சாகவே இல்லை" என்று காஸ்ட்ரோ அச்சம்பவத்தை நினைவுகூரும் வகையில் கூறினார். யாராலும் அவர்களைக் கொல்லவும் முடியவில்லை.
"நீண்ட காலப் போராட்டம் இல்லாமல், பரிசோதனை முயற்சிகள் இல்லாமல், மக்களுக்குக் கற்றுத்தராமல், கருத்துகளை விதைக்காமல், விழிப்புணர்வை ஊட்டாமல், ஒற்றுமை உணர்வை வளர்க்காமல், பரந்துபட்ட சர்வதேச உத்வேகத்தை வழங்காமல், எங்களுடைய மக்களால் ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்து நிற்கும் வலிமையைப் பெற்றிருக்க முடியாது" என்றார் காஸ்ட்ரோ.
ஆம், சிந்தனைகளைக் கொல்ல முடியாது. காஸ்ட்ரோ, மூன்றாவது உலக நாடுகளுக்கு வெறும் தலைவர் மட்டுமல்ல. அந்நாடுகளின் உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தும் கண்ணாடி யாகத் திகழ்ந்தார். அந்தக் கண்ணாடிதான் இப்போது நொறுங்கிவிட்டது.
சுருக்கமாகத் தமிழில்:சாரி,
விஜய் பிரசாத், டிரினிடி கல்லூரியில் சர்வதேச ஆய்வுகள் துறைப் பேராசிரியர்.
© 'தி இந்து' ஆங்கிலம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
13 days ago