பண மதிப்பு நீக்க நடவடிக்கையை ஆழ்ந்து ஆராய்ந்தால் அரசு அதிகாரம், அரசியல் பொருளாதார சித்தாந்தம் ஆகியவற்றில் நரேந்திர மோடி அரசு புதிய அணுகுமுறையைக் கையாள்வது வியப்பையே ஏற்படுத்துகிறது.
இந்திரா காந்தியின் தலைமைப் பண்புக்குக் கிடைத்த சிகரமான வெற்றியாகக் கருதப்படும் 1971 வங்கதேச விடுதலைப் போர் நிகழ்ச்சியின் 45-வது கொண்டாட்ட வாரத்தில் இந்த அணுகுமுறை அப்பட்டமாக வெளிப்படுகிறது.
மோடி அரசுக்கு மிகவும் வேண்டப்பட்ட பொருளாதார அறிஞர் பேராசிரியர் ஜகதீஷ் பகவதி யிடமிருந்து இந்த ஆய்வைத் தொடங்குவோம். ‘ரொக்கத்தைச் சொத்தாகப் பயன்படுத்தும் உரிமையை இந்தியர்களுக்கு மறுக்க, இந்திய அரசியல் சட்டத்தில் இடம் இருக்கிறது’ என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இந்திய அரசியல் சட்டத்தைக் கற்றுத்தரும் தனக்கு நன்றாகவே தெரியும் என்று பகவதி பேசியிருக் கிறார். சமூகப் பயன்பாட்டுக்காக இந்தியர்களின் சொத்துரிமையைப் பறிக்கும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது, ஆனால் அதற்கேற்ற இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதை அவர் சுட்டிக்காட்டி யுள்ளார். ஜமீந்தாரி முறை ஒழிப்பு, மன்னர் மானிய ஒழிப்பு எல்லாம் இதை அடியொற்றியவையே.
சீர்திருத்தத்துக்கு மிகவும் ஆதரவான ஒரு பொருளாதார அறிஞர், சோஷலிசத்துக்கான ஒரு சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்; அதுவும் வறுமையை ஒழிக்க இந்திரா காந்தியால் கையாளப்பட்ட ஆயுதம் அது. மிகக் குறுகிய காலத்துக்காகத்தான் என்றாலும் அரசு இயந்திரத்தின் முரட்டுத்தனமான வலிமையைப் பயன்படுத்த ஆதரவு காட்டுகிறார் பகவதி. இது என்ன விதமான சீர்திருத்த ஆதரவு நடவடிக்கை? பண மதிப்பு நீக்கம், தேசப் பொருளாதாரத்தையும் பணச் சுழற்சியையும் மிகவும் பாதித்துவிட்டது. சோவியத் பாணி ஐந்தாண்டு திட்டத்தை அமல் செய்ய விரும்பிய பி.சி.மஹ்லாநோபீஸ் கூட இது சாத்தியம் என்று தன் காலத்தில் நினைத்திருக்க மாட்டார்.
பொருளாதாரச் சீர்திருத்தத்தை அமல்படுத்து வேன், வளர்ச்சியைக் கொண்டுவருவேன் என்று பிரச்சாரம் செய்த நரேந்திர மோடியும் உலக அளவில் பாராட்டுப் பெற்ற ஜகதீஷ் பகவதியும் இந்திரா காந்தியின் நிர்வாக பாணியையும் அவர் கடைப்பிடித்த பேரழிவுக்கு இட்டுச்சென்ற பொருளாதாரக் கொள்கைகளையும் பின்பற்று வதைத்தான் இப்போது பார்க்கிறோம். வேறுவித மாகச் சொல்வதானால், மத்திய அரசில் திட்டக் குழுவே தேவையே இல்லை என்று அதை கலைத்த மோடி, வங்கிகள் தேசியமயத்துக்குப் பிறகு மிகப்பெரிய பொருளாதார நடவடிக்கை யான, ‘மையப்படுத்தப்பட்ட தேசியப் பொருளா தார’ கொள்கையை மட்டும் எப்படித் தீவிரப்படுத்துகிறார்?
1971-வது ஆண்டு போர் வெற்றியை நினைவுகூர்ந்தாலும், இந்திராவைப் பாராட்டி யாரும் ஒரு வார்த்தைகூட பேசாமல் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
25 ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த தாராளமயக் கொள்கையை அப்படியே புரட்டிப் போடும் வகையில் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட் டிருக்கிறது. வருமான வரித்துறையைச் சேர்ந்த கீழ்நிலை அதிகாரிகள் கூட சந்தேகம் வந்தால் வீடுகளிலும் நிறுவனங்களிலும் நுழைந்து சோதனை போட வழி செய்யும் வருமான வரிச் சட்ட சீர்திருத்தம் மக்களவையில் அமளிக்கு இடையில், விவாதம் ஏதும் இல்லாமல் நிறை வேற்றப்பட்டிருக்கிறது; பண மதிப்பு நீக்கம் குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வில்லை என்று குற்றஞ்சாட்டி, தொடரின் கடைசி 2 நாள்களில் ஆளுங்கட்சி உறுப்பினர்களைக் கொண்டே அவை நடவடிக்கைகளை நடத்த விடாமல் இடையூறு செய்யப்பட்டிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர், மத்திய நிதி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் பதவி அந்தஸ்துக்கு நிகரானவர் போல நடத்தப்படுகிறார். “ நாலு நிலைகளுக்குக் கோப்புகள் நகர்ந்து ஒப்புதல் பெற்ற பிறகே எதுவும் நடக்கவேண்டும் என்றாலே மத்திய ஆட்சியாளர்கள் முகம் சுளிக்கின்றனர். இதே பாணியைத்தான் இந்திராவும் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் கடைப்பிடித்தார். விதிமுறை, நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் தந்த நிர்வாகத்தை நேரு கடைப்பிடித்தார். அதையே லால் பகதூர் சாஸ்திரியும் பின்பற்றினார். இந்திராவுக்கு அவற்றின் மீது நம்பிக்கையும் இல்லை, பொறுமையும் இல்லை.
1967 மக்களவை பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு அரசு நிர்வாக இயந்திரத்தைப் பிரித்துப்போடும் வேலையில் இறங்கினார் இந்திரா. அமைச்சர்களையும் கட்சித் தலைவர்களையும் ஆமாம்சாமிகளாக்கினார். நீதித்துறையும் நிர்வாகமும் அரசின் லட்சியங் களுக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதிதீவிர தேசியவாதத்தை ஊக்குவித்தார். முழு நம்பிக்கை இல்லாவிட்டாலும் சோஷலிசத்தை ஆதரித்தார். நேரு கட்டியெழுப்பிய தார்மிக, தாராளவாத ஜனநாயகக் கட்டமைப்புகளைத் தகர்த்துவிட்டார் என்பதற்காக இந்திராவைப் பாராட்டியது ஆர்எஸ்எஸ். நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார், அரசியல் எதிரிகளைச் சிறையில் அடைத்தார், இவற்றையெல்லாம் செய்ய நேரு கனவிலும் நினைத்திருக்க மாட்டார். மோடி-ஆர்எஸ்எஸ் கூட்டும் விரும்புவது அரசு இரும்புக்கரம் கொண்டு செயல்படுவதைத்தான். செய்தி ஊடகங்கள், மக்களின் உரிமைக் குழுக்கள், சட்ட நிபுணர்கள், தொழில்நுட்ப அறிஞர்கள், நீதிபதிகள் என்று எந்தத் தரப்பும் தங்களுடைய பணிகளில் குறுக்கிடுவதை அவர்கள் விரும்புவதில்லை.
1977-ல் ஜனசங்கத்தை உள்ளடக்கிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது இந்திரா காலத்திய அரசியல் சுதந்திரக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள்தான் நீக்கப்பட்டனவே தவிர பொருளாதாரக் கொள்கை கள் அப்படியே பின்பற்றப்பட்டன. முக்கியமான அரசுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள பிரதமராக இருந்தபோது வாஜ்பாய் முயன்றார். அதை ஆர்எஸ்எஸ் எதிர்த்தது. உலகப் பொருளாதாரத்துக்குக் கதவு திறந்துவிடுவதை யும், பனிப்போருக்குப் பிந்தைய அரசியல் முறைமைக்கு ஏற்பச் செயல்பட அவர் முனைந்ததையும்கூட ஆர்எஸ்எஸ் ஏற்கவில்லை. இவ்விரு துறையில் மாற்றத்தைக் கொண்டுவர முயன்ற வாஜ்பாய் அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ராவை ‘அமெரிக்க ஆதரவு ஐந்தாம் படை’ என்ற அளவுக்குக்கூட ஆர்எஸ்எஸ் தூற்றியது.
மோடி தலைதூக்க ஆரம்பித்ததும் அவர் இந்திராவின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு விடைகொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித் தது. குஜராத்தில் அவர் மேற்கொண்ட நிர்வாக நடைமுறையால் அந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆட்சியின் பாதிக்காலம் முடிந்த நிலையில் அவருடைய செயல்பாடு தளர்வற்ற மதச்சார் பின்மை என்ற கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியதுடன் சரி. இந்திராவின் தவறான பொருளாதாரச் சிந்தனைகள் அனைத்தும் வலுவாகச் செயல்படுத்தப்படுகின்றன. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு மக்களுக்குப் பணத்தை அளிப்பதற்கு அரசு வங்கிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அரசு இயந்திரம் மீண்டும் அசுர பலம் பெற்று வருகிறது. “இப் போதைய பிரச்சினையெல்லாம் புதிய கருத்து களை உருவாக்குவதல்ல, ஏற்கெனவே இருந்த தவறான பழைய கருத்துகளிலிருந்து தப்பிப்பது தான்” என்று பொருளாதார அறிஞர் ஜான் மேனார்ட் கீன்ஸ் கூறியது நினைவுக்கு வருகிறது.
- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,
இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர்,
இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.
தொடர்புக்கு: shekhargupta653@gmail.com
தமிழில் சுருக்கமாக: ஜூரி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago