ஜெயலலிதா, தன் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியை முடித்து வனவாசத்தில் இருந்த காலத்தில், அரிதாக அளித்த விரிவான தொலைக்காட்சி நேர்காணல் ஒன்று எனது ஞாபகத்தில் இன்னும் இருக்கிறது. தனது தந்தையைப் பற்றிப் பேசியபோது, அவர் குறித்த ஒரேயொரு ஞாபகம்தான் புகைமூட்டமாக நினைவில் இருப்பதாகக் குறிப்பிட்டார். அவர் வசித்த பெரிய பங்களாவின் போர்டிகோவுக்குள் நுழையும் ஒரு காரின் பின்சீட்டில் அவருடைய அப்பா சடலமாக வந்த காட்சிதான் அது. அவர் தந்தை ஜெயராம் இறந்தபோது அவருக்கு இரண்டு வயது. ஜெயலலிதா தொடர்பாக என்னிடம் பதிந்திருந்த எதிர்மறையான பொதுப் பிம்பம் சற்று துணுக்குற்ற நிகழ்ச்சி அது.
தந்தையின் மரணத்துடன் தனது பால்யத்தையும் தனது சின்னஞ்சிறிய கனவுகளையும் புதைத்து, தாயுடன் தனித்து விடப்பட்ட, இன்னும் அந்த இழப்பின் வலி ஆறாத எளிய சிறுமி ஒருத்தியும் அவருடன் இப்போது அமைதி கொண்டிருக்கக் கூடும். வெற்றி, புகழ், அதிகாரம்,தோல்விகள் விமர்சனங்கள், பலவீனங்கள் என அவர் அனுபவித்த எல்லாவற்றோடும் அவரது தனிமை ஒட்டிக்கொண்டிருக்கிறது. அவரது மரணத்துடனும் அது அத்தனை கூட்டத்துக்கு மத்தியிலும் அந்த இரண்டு வயதுச் சிறுமியைப் போல அமர்ந்துள்ளது.
இந்திய, தமிழகச் சூழலில் பொது வாழ்க்கையில் ஆணாதிக்கச் சூழலை நொறுக்கி, பல்வேறு நெருக்கடிகளை மீறி, ஒரு பெண் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னால் என்னென்ன இழப்புகள் மற்றும் துயரங்களைச் சந்திக்க வேண்டுமோ அதையெல்லாம் ஜெயலலிதா சந்தித்தவர். அவர் எத்தனையோ அவமானங்களைத் தாங்கியவர் மட்டுமல்ல; பெண், பெண் உடல் தொடர்பான பாலியல் கொச்சைகளையே கலாச்சாரமாக வரித்துக்கொண்ட ஒரு அரசியல், பண்பாட்டு வெளியில் வல்லாதிக்கம் செலுத்தும் ஆணிய வெளிக்குள் தன் தலைமைத்துவத்தை வளர்த்துக்கொண்டவர்.
அந்தத் துயரங்கள் மற்றும் அனுபவங்களின் எதிர்மறை அம்சங்களும் சேர்ந்ததே அவரது அரசியல் ஆளுமை. ஜெயலலிதா என்ற பெண் தலைவரின் ஆளுமை உருவாக்கத்தில், இந்தியச் சமூகத்தின் பெண் சார்ந்த அணுகுமுறைக்கும் பங்குண்டு.
இந்தியாவைப் பொறுத்தவரை பெண் தெய்வரூபமாக, சக்திரூபமாக வணங்கப்படுபவள் அல்லது வெறும் பொருளாக, பண்டமாக ஒடுக்கி உபயோகித்து வீசப்படுபவள். இந்த இரண்டு பிம்பங்களில் ஒன்றைத்தான் அவள் தேர்ந்தெடுக்க முடியும். இந்தியாவில் இந்திரா காந்தி, மாயாவதி, மம்தா பானர்ஜி தொடங்கி ஜெயலலிதா வரை தங்களை வேறு வழியின்றி துர்க்கையாக, துடிகொண்டு ஆட்டுவிக்கும் சொரூபமான பிம்பத்தைத் தங்களுக்கென்று தேர்ந்தெடுத்துக்கொண்டவர்கள்.
அப்போதுதான், பெண்ணைக் காலம்காலமாகத் துச்சமாக நினைக்கும் ஆண்களை நிர்வகிக்க முடியும். அதனாலேயே அவர்கள் துர்க்கையானார்கள். தெய்வம் துடிகொள்ளும்போது அச்சமும், கலக்கமும், கேட்பாரற்ற அமைதியும் நிலவும். அந்த உக்கிரம் மிகவும் தனிமை கொண்டதும்கூட. அதன் மூடிய உறைக்குள்தான், அவரது ஆங்கிலப் புலமை, கலை நாட்டம், நகைச்சுவைத் திறன் என்று சொல்லக்கூடிய பண்புகள் எல்லாம் இருந்திருக்க வேண்டும்.
ஜெயலலிதாவின் தனிமை வாசம், அவரது ஆளுமை, அவர் வாழ்ந்த வாழ்க்கை, உடல் நலக்குறைவு மற்றும் அவரது மரணம், கட்சி சாராத அனைத்துத் தரப்புப் பெண்களையும் கடுமையாகப் பாதித்துள்ளதை உணர முடிகிறது. சாதாரணப் பெண்கள் தங்களது சொந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள், அவமானங்கள் மற்றும் தனிமையோடு ஜெயலலிதாவையும் அவரது வாழ்க்கையையும் ஆறுதலாகவும், விடுதலை யாகவும் அடையாளம் காண்கிறார்கள்.
மகளாகவும், காதலியாகவும், மனைவியாகவும், அன்னையாகவும், பாட்டியாகவும் பெண்கள் மிகுந்த தனிமையை உணர்கிறவர்களாக இருக்கிறார்கள். இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட, இரவு சீக்கிரமே தூங்கிவிடக் கூடிய எனது மாமியார், காலை நாலரை மணி வரை விழித்திருந்து, ஜெயலலிதா காலமான செய்தியைப் பார்த்துவிட்டு, தொலைக்காட்சி தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த நிலையில், அறை விளக்குகள் எரிந்துகொண்டிருந்த நிலையில், தூங்கிக்கொண்டிருந்ததை நேற்று காலை பார்த்தேன். எனது 12 வயது மகள், எங்கள் வீட்டில் வாங்கப்படும் ஆங்கில தினசரியை முதல் முறையாக எடுத்து தலைப்புச் செய்தி படிப்பதைப் பார்த்தேன்.
பெண்கள் தனிமையாக உணரும்போது, ஆண்களும் தனிமையாக உணர வேண்டும்தானே! ஆமாம். ஆனால், சொல்வதற்கு நிறைய ஆதிக்கக் கதைகளும், கொச்சையான பேச்சுகளும்தான் அவர்களுக்கு இருக்கின்றனவே!
- தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
15 days ago