மனநலப் பிரச்சினைகள்: தேவை ‘தமிழ்நாடு மாடல்’!

By செய்திப்பிரிவு

மாணவர்கள் உளவியல் பரிசோதனை செய்துகொண்டு வருமாறு சமீப காலத்தில் நிறைய தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதைக் கவனித்துவருகிறேன். மிகுந்த பதற்றத்துடனும் அச்சத்துடனும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துவந்து மருத்துவமனையில் காத்திருக்கிறார்கள். குழந்தை நன்றாக இருக்கிறது எனச் சொன்னால்கூட, நன்றாக இருப்பதாகச் சான்றிதழ் வாங்கிவருமாறு பெற்றோர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

மூன்றாவது படிக்கும் குழந்தைக்குச் சிறிது கற்றல் குறைபாடு இருப்பதைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளைச் சில வாரங்களுக்குமுன் தொடங்கியபோது, அந்த மருத்துவ அறிக்கையை வைத்துக்கொண்டு பள்ளியிலிருந்து அந்தக் குழந்தை நீக்கப்பட்டிருக்கிறது. கற்றல் குறைபாடு இருக்கும் குழந்தைகளின்மீது ஆசிரியர் தனிக்கவனம் செலுத்துவார் என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால், அதற்கெல்லாம் மெனக்கெட முடியாது என அந்தக் குழந்தையை நிரந்தரமாகப் பள்ளியிலிருந்து நீக்கியிருந்தது அதிர்ச்சியாக இருந்தது.

பள்ளிகளின் பொதுவான நடத்தை விதிகளிலிருந்து குழந்தைகள் சற்று விலகினாலும்கூட, உடனடியாக அந்தக் குழந்தைகளை உளவியல் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நிர்ப்பந்திக்கும் போக்கு அதிகரித்துவருகிறது. குழந்தைகளின் உளவியல் பிரச்சினைகள் அதிகரித்துவரும் காலகட்டத்தில் அதற்கான உதவியை நாடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும்கூட, அதைக் குழந்தைக்கு இணக்கமான சூழலிலும், அச்சுறுத்தாத வகையிலும் நன்றாகத் தெரிந்த நபர்களின் வழியாகவும் மேற்கொள்வதே சிறந்தது.

குழந்தைகளின் சிறு தவறுகளுக்குத் தண்டனைபோல மனநல மருத்துவரிடம் அனுப்பும் போக்கு சரியானதல்ல. இது தொடர்பாகத் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவருடன் உரையாடியபோது, ‘என்ன பண்றது டாக்டர், நாளைக்கே ஏதாவது பிரச்சினைனு வந்தா எங்க மேலதான் நடவடிக்கை எடுக்குறாங்க. நிர்வாகத்திற்கு அரசாங்கம் கொடுக்குற நெருக்கடியால நாங்க எங்களைக் காப்பாத்திக்க ஏதாவது செய்ய வேண்டியிருக்கு. அதான் எல்லோரையும் உங்ககிட்ட அனுப்பிவெச்சிடறோம். எங்க பாதுகாப்புக்குத்தான் சார் எல்லாம்’ என்றார்.

பள்ளி மாணவர்களிடம் சமீப காலத்தில் அதிகரித்திருக்கும் தற்கொலைகள், உளவியல் பிரச்சினைகள், போதைப் பொருள் பழக்கங்கள் போன்றவற்றில் இருந்தெல்லாம் மாணவர்களை எப்படிப் பாதுகாப்பது என்று செய்வதறியாமல் தவித்துவருகிறோம். அப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும்போது பொதுச் சமூகத்தின், சமூக ஊடகங்கங்களின் அழுத்தத்துக்குப் பயந்துகொண்டு, அப்போதைக்கு அந்தப் பள்ளியின்மீதும், ஆசிரியர்களின்மீதும் நடவடிக்கை எடுத்துவிட்டு, அந்தப் பிரச்சினையை அத்துடன் மறந்துவிடுகிறோம்.

மாணவர்களிடையே அதிகரித்துவரும் மனநலப் பிரச்சினைகளுக்கான தீர்வை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அணுக முடியாது. புதிய செயல்திட்டங்களையும் வழிமுறைகளையும் உருவாக்க வேண்டியிருக்கிறது. மாணவர்களின் நலன்மீது உண்மையான அக்கறையும் ஆக்கபூர்வமான அணுகுமுறையும்தான் இதற்குத் தேவை. அதற்கான படிநிலைகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மனநல மருத்துவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவைக் கொண்டு கலந்தாலோசித்து உருவாக்கிட வேண்டும்.

ஒரு பிரச்சினை நடைபெறும்போது வெளிப்புற அழுத்தத்தினால் அவசர கதியில் செயல்படும் முறைகளின் விளைவாக மாணவர்களின் பிரச்சினைகள்இன்னும் அதிகரிக்குமே தவிர குறையாது. சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவ மாணவர்களின் மனநலனைப் பாதுகாக்கும் பொருட்டு ‘மனநல நல்லாதரவு மைய’த்தைத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். அது தொடர்பான ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசாங்கம் வெளியிட்டது. மருத்துவ மாணவர்களிடையே அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுக்கும் பொருட்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், மாணவர்களின் மனநலனைப் பாதுகாப்பதில் முன்னோடியாக இருக்கிறது. இந்தத் திட்டத்தின் செயல்முறைகளைப் பின்பற்றி அதேபோன்ற அமைப்பு ஒன்றை ஒவ்வொரு பள்ளியிலும் தொடங்கி அதன் வழியாகப் பள்ளி மாணவர்களின் மனநலனை மேம்படுத்துவதும் பாதுகாப்பதும் சரிசெய்வதும் முறையானதாக இருக்கும்.

மனநல நல்லாதரவு மையம்:

# மாணவர்கள், ஆசிரியர்கள், தேவையேற்படின் உளவியல் ஆலோசகர்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பை ஒவ்வொரு பள்ளியிலும் ஏற்படுத்தலாம்.

# இந்த அமைப்பில் இருப்பவர்களுக்கு மாவட்ட, மாநில அளவில் பல்வேறு நிபுணர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கலாம்.

# மனநலப் பிரச்சினைகளின் தன்மைகளையும் அதன் தாக்கங்களையும் ஆரம்பகட்ட வெளிப்பாடுகளையும் உள்ளடக்கிய மனநலன் தொடர்பான விழிப்புணர்வை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இந்த மையத்தின் வழியாகத் தொடர்ச்சியாக ஏற்படுத்த வேண்டும்.

# ஆரோக்கியமான வாழ்க்கை முறை, மானுட அறம், மதிப்பீடுகள், கற்றல் தாண்டிய மாணவர்களின் செயல்பாடுகள் போன்றவற்றை இந்த மையம் ஒருங்கிணைக்க வேண்டும்.

# தங்கள் பிரச்சினைகளை மாணவர்கள் வெளிப்படுத்துவதற்கான தன்னிச்சையான, சுதந்திரமான மனநலப் பாதுகாப்பு அமைப்பாக இந்த மையங்களைப் பள்ளிகள் உருவாக்கிட வேண்டும்; மாணவர்களைப் புரிந்துகொள்ளக்கூடிய, இணக்கமாகச் செல்லக்கூடிய ஒன்றாக இந்த அமைப்பு இருந்திட வேண்டும். குறிப்பாக, மாணவர்களின் பிரச்சினைகளை எந்த முன்முடிவுகளும் அற்று அவர்களின் கற்றலுக்கு எந்தவிதப் பாதிப்பும் வராமல் அணுகும் வகையிலும் இந்த அமைப்பின் செயல்பாடு இருக்க வேண்டும்.

# மாணவர்களிடம் ஆரம்பத்தில் தெரியும் சிறு மாற்றங்களையெல்லாம் கவனித்து, அதைப் பள்ளியில் உள்ள ஆசிரியர்களே கவனம்கொடுத்துச் சரிசெய்திட முயல வேண்டும். அதற்கு அடுத்த நிலையில் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மையத்தின் வழியாகத் தீர்வு காண முற்படலாம். மனநலப் பிரச்சினை மிகவும் தீவிரமடையும்போதுதான் மாணவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

பெரும்பாலான நேரம் மாணவர்களிடம் தோன்றும் சிறு மாற்றங்கள் என்பவை அவர்களின் சமூக, பொருளாதாரச் சூழ்நிலைகள் சார்ந்ததாகவே இருக்கின்றன. அப்படிப்பட்ட மாற்றங்களை அவர்களுக்கு நன்கு தெரிந்த இணக்கமான சூழலிலேயே சரிசெய்வதுதான் ஏதுவானதாகவும், பாதுகாப்பானதாகவும், சுலபமாகத் தீர்க்க முடிந்ததாகவும் இருக்கும். அது மட்டுமில்லாமல், மனநல மேம்பாடு என்பது எப்போதும் சமூகத்தின் ஊடாகச் செய்யப்படும் ஒன்றாக இருக்க வேண்டுமே தவிர, அதை மருத்துவமனைகளின் வாயிலாக அணுகக் கூடாது. மருத்துவமனைச் சூழல் என்பது நோய்களைக் களைவதற்கானதாகவும், சமூகத்தின் வழியான செயல்பாடுகள் அந்த நோய்களைத் தடுக்கும் வகையிலானதாகவும் இருக்க வேண்டும்.

மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் அதிகரித்துவரும் மனநலப் பிரச்சினைகளைத் தடுப்பதற்கு உண்டான, களைவதற்கான உலகளாவியச் செயல்திட்டங்கள் எதுவுமில்லாத நிலையில், அதற்கான முயற்சிகளைத் தமிழக அரசு உடனே தொடங்கிட வேண்டும். நாம் உருவாக்கும் புதிய செயல்திட்டங்கள் வழியாகக் கிடைக்கும் அனுபவங்கள், பாடங்கள், இந்தப் பிரச்சினையை அணுகும் முறையில் உலகுக்கேகூட ஒருவேளை முன்மாதிரியாக அமையலாம்; ‘தமிழ்நாடு மாடல்’ என நாம் பெருமையாக அதைப் பரிந்துரைக்கலாம். - சிவபாலன் இளங்கோவன் மனநல மருத்துவர், பேராசிரியர், தொடர்புக்கு: sivabalanela@gmail.com

To Read in English: Mental health: Let us create a ‘Tamil Nadu model’

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்