தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவராக சசிகலா இருப்பார், எப்படி?

By ஆர்.முத்துக்குமார்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பை யார் ஏற்கப்போகிறார் என்பதுதான் இன்றைய பேசுபொருள். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி கட்சியின் மூத்த, முன்னணி நிர்வாகிகள் பலரும் சசிகலாவே பொதுச்செயலாளராக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். நேரடியாகப் பார்த்தால், வெறும் கட்சிப் பதவிபோலத் தோற்றம் அளித்தாலும், ஆளும்கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் என்பவர் மறைமுகமாக தமிழகத்தின் கடைக்கோடி நிர்வாகம் வரை தீர்மானிக்கும் வல்லமை படைத்தவர். எப்படி?

அதிமுக தொடர்பான அத்தனை நிர்வாக நடவடிக்கைகளுக்கும் பொறுப்பேற்கக்கூடிய பொதுச்செயலாளர் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களால் மட்டுமின்றி, கட்சியின் அடிப்படைத் தொண்டர்களின் பங்களிப்போடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அதிமுகவின் அடிப்படை விதி. மற்ற கட்சிகளில் இல்லாத விதிமுறை இது. பொதுச்செயலாளர் தேர்தலில் தமிழ்நாட்டுக் கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி, கட்சியின் கிளைகள் இருக்கின்ற புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, அந்தமான் என அனைத்து மாநில அடிப்படை உறுப்பினர்களும் தேர்தலில் வாக்களித்து அல்லது ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நிர்வாகிகளை நியமிக்கும் அதிகாரம்

கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந் தெடுக்கப்படும் பொதுச்செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களிலிருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைப் பொதுச் செயலாளர்கள், பொருளாளர், தலைமைக் கழகச் செயலாளர்களை நிர்வாக வசதிக்கேற்ப நியமித்துக்கொள்ளலாம். கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை உருவாக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கே உண்டு. அவற்றைக் கூட்டுகின்ற உரிமையும் அவருக்கே உண்டு. கட்சி யின் துணை அமைப்புகளுக்கான நிர்வாகிகளை நியமிக்கும் அதிகாரம் பெற்ற பொதுச்செயலாளர், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவின் வழிகாட்டுதலோடு கட்சிக்கான கொள்கைகளை உருவாக்குவது, செயல்திட்டங்களை வகுப்பது ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.

பொதுச்செயலாளர் விரும்பினால், கட்சியின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரத்யேகத் துணைச் செயலாளரை நியமிக்கலாம். அதேபோல, இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்களையும் நியமித்துக்கொள்ளலாம். ஒருவேளை, கட்சி நிர்வாகப் பதவிகளில் மூன்றில் ஒரு பங்கு இடம் பெண்களுக்குக் கிடைக்கப்படாத பட்சத்தில், அதை ஈடுசெய்யும் வகையில், குறிப்பிட்ட பொறுப்புகளில் பெண்களை நியமிக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. வெறுமனே பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தைத் தாண்டி, இந்த ஷரத்தை நோக்கினால், உள்ளர்த்தம் விளங்கும்.

நிதி சார் கணக்கு வழக்கு அதிகாரம்

கட்சியின் ஒட்டுமொத்த வரவு செலவுக் கணக்கையும் நிர்வகிக்கும் அதிகாரம் பெற்றவர் பொதுச்செயலாளர். குறிப்பாக, கட்சியின் தலைமை அலுவலகம் மட்டுமின்றி, அதன் இதர அசையும், அசையாச் சொத்துகளை நிர்வகிக்கும் அதிகாரமும் அவருக்கே. அந்தச் சொத்துகள் தொடர்பாக எழுகின்ற சட்டரீதியான சிக்கல்களை எதிர்கொள்ளும்போது, கட்சியின் பிரதிநிதியாகச் செயல்பட்டு, கட்சியின் சொத்துகளைக் காப்பாற்றும் பொறுப்பும் அவருக்கே உண்டு.

கட்சிக்கான பணத்தை எந்தவொரு சட்டபூர்வ வங்கியிலும் பாதுகாப்பாக வைப்பதற்கும், அந்தப் பணத்தை எடுத்து, கட்சி வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்குமான அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. முக்கியமாக, கட்சியின் சொத்துகளை மேற்குறிப்பிட்ட வங்கிகளில் அடகுவைத்துக் கடன் பெற்று, அந்தப் பணத்தையும் கட்சி வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம். பொதுச்செயலாளரின் அனுமதியோடு, இந்த விவகாரங்களைக் கட்சியின் பொருளாளரே செய்ய முடியும்.

ஒழுங்கு நடவடிக்கை அதிகாரம்

கட்சியின் விதிமுறைகள், கொள்கைக் கோட்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராகச் செயல்படுவோர், கட்சி நலனுக்குக் குந்தகம் விளைவிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. ஒழுங்கு நடவடிக்கை விஷயத்தில் இறுதிமுடிவு எடுக்கும் உச்சபட்ச அதிகாரம் பொதுச்செயலாளருடையது அல்லது அவர் எடுப்பதுதான் இறுதி முடிவு.

முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றங்கள் நிகழும்போது, கட்சியின் நிர்வாகக் குழுக்களைக் கூட்டுவதற்குப் போதுமான கால அவகாசம் இல்லாதபோது, முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. அந்த முடிவுக்கு அடுத்த பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்றுக்கொள்ளலாம். பொதுச்செயலாளர் விரும்பினால், கட்சி நிர்வாகிகளின் கருத்துகளைக் கடிதம் வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

தேர்தல் சார் அதிகாரம்

கட்சியின் உட்கட்சித் தேர்தல்களை நடத்தும் அதிகாரமும் பொதுச்செயலாளருக்கே உண்டு. அதில் போட்டியிடுவதற்குச் சில விதிமுறைகள் இருக்கின்றன. குறிப்பாக, ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு நிபந்தனைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றைத் தளர்த்திக்கொள்ளும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு.

உள்கட்சித் தேர்தலைத் தாண்டி, சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வுசெய்வது ஆட்சிமன்றக் குழுவுக்கு உண்டு. ஆனால், அவர்களுக்குக் கட்சியின் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய பொதுச்செயலாளரின் கையெழுத்து அவசியம். ஆட்சிமன்றக் குழு கூடுவதற்குக் கால அவகாசம் இல்லாதபோது, வேட்பாளர் தேர்வு விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு.

அதிகார எல்லை

கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகமும் பொதுச்செயலாளரின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. ஒருவேளை, அதுவிஷயமாகப் பொதுச்செயலாளரை எதிர்த்து ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைக்குச் செல்லும்பட்சத்தில், உடனடியாக அவர் தனது அடிப்படை உறுப்பினர் பதவியை இழந்துவிடுவார். கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடியும். ஆனால், அது பொதுச்செயலாளர் பதவிக்கும் பொருந்துமா என்பது கட்சியின் விதிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

மாற்று ஏற்பாடு

கட்சியின் பொதுச்செயலாளர் பதவி காலியாக இருக்கும்பட்சத்தில், புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, முந்தைய பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட செயற்குழு, பொதுக்குழு, ஆட்சிமன்றக் குழு உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் கட்சியை வழிநடத்துவர்.

எல்லாம் சரி, சசிகலா இப்போது பொதுச் செயலாளராக வர முடியுமா?

கட்சியின் நிர்வாகப் பதவிக்குப் போட்டியிடக் கூடியவர், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு, எவ்வித இடைவெளியுமின்றி உறுப்பினராக நீடித்திருக்க வேண்டும் என்கிறது கட்சியின் விதி 30 பிரிவு 5. கடந்த 19 டிசம்பர் 2011 அன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா, பிறகு மன்னிப்புக் கடிதம் கொடுத்து, 1 ஏப்ரல் 2012 அன்று மீண்டும் கட்சியில் சேர்ந்துகொண்டார். அதன்படி பார்த்தால், அவர் கட்சியில் மீண்டும் சேர்ந்து ஐந்தாண்டுகள் நிறைவடைய இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன. ஆகவே, அவர் பொதுச்செயலாளராக வர முடியாது என்கிறார்கள் சிலர். தவிரவும், பொதுச்செயலாளர் நினைத்தால், இந்த நிபந்தனையைத் தளர்த்த முடியும். ஆனால், இங்கே பொதுச்செயலாளர் பதவியே காலியாக உள்ளதால், அதற்கும் வாய்ப்பில்லை என்று சொல்லி, சசிகலா பொதுச்செயலாளராக வர கட்சியின் சட்ட விதிகளில் இடமில்லை என்கிறார்கள்.

ஆனால், மேற்கண்ட விதியின் உட்பிரிவுகளை நுணுக்கமாக ஆய்வுசெய்தால், இன்னொரு அம்சம் காணக் கிடைக்கிறது. மேலே சொல்லப்பட்ட ‘ஐந்தாண்டு நிபந்தனை’ தேர்தல்களில் கட்சி யின் அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டதற்காகக் கட்சியிலிருந்து நீக்கப் பட்டு, பிறகு சேர்த்துக்கொள்ளப்பட்ட உறுப்பினர் களுக்குத்தான் பொருந்தும். ஆனால், சசிகலா நீக்கப்பட்டது வேறு காரணங்களுக்காக. ஆகவே, அவருக்கு இந்த ஐந்தாண்டு நிபந்தனை பொருந்தாது. ஆகவே, அவர் கட்சியின் பொதுச்செயலாளராக ஆவதற்குக் கட்சி விதிகள் குறுக்கே நிற்கவில்லை என்பதுதான் யதார்த்தம்.

சசிகலாவே இனி தீர்மானிப்பவராக இருப்பார்

ஆக, அதிமுக விதிகளைப் பொறுத்த அளவில் சர்வ வல்லமை மிக்க பதவி பொதுச்செயலாளர் என்பதாலேயே சசிகலா அப்பதவி நோக்கி நகர்கிறார். அதிமுகவின் முதல்வர், அமைச்சரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களில் தொடங்கி உள்ளாட்சியின் வட்ட உறுப்பினர்கள் செயல்பாடுகள் வரை - பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் - இனி சசிகலா தீர்மானிப்பவராக இருப்பார்!

- ஆர். முத்துக்குமார், எழுத்தாளர். ‘தமிழக அரசியல் வரலாறு’ முதலான நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்