‘டிக்... டிக்.. நியூரான்கள்!

By கே.என்.ராமசந்திரன்

ஒவ்வொருவரின் மூளைக்குள்ளும் ஒரு கடிகாரம் இருக்கிறது



அலுவலகத்துக்குக் கிளம்புகிற அவசரத்தில் கைக் கடிகாரத்தைக் கட்டிக்கொள்ள மறந்துவிட்டால் ஒருவர் படுகிற அவஸ்தை சொல்லி மாளாது. அடிக்கொரு தரம் தன் மணிக்கட்டைப் பார்ப்பதும், வழியிலிருக்கிற கடிகாரக் கடைகளில் எல்லாம் மணி பார்ப்பதும், பேருந்தில் பக்கத்தில் இருப்பவரின் கைக் கடிகாரத்தை எட்டி எட்டிப் பார்த்து அவருடைய சந்தேகத்துக்கு ஆளாவதும் பலருடைய வழக்கம். அது ஓர் அடிமைத்தனமாகவே ஆகிவிட்டது. ‘கடிகாரத்துக்கு நான் அடிமை!’ என்று பாடக்கூட நேரிடலாம்.

கடிகாரம் கண்டுபிடிப்பதற்கு முன், “கோழி கூவுற நேரமாச்சு… வயலுக்குப் போ மச்சான்!” என்றுகூட எழுப்பியிருப்பார்கள். “கோழி கூவுகிறது; கீழ்வானம் சிவக்கிறது; சூரியன் உதிக்கிறது; இதெல்லாமிருக்கும்போது கடிகாரம் ஏதுக்கடி?” என்று கவிமணி பாடியிருக்கிறார். ஆனால், அவர் வீட்டில் கடிகாரங்கள் இல்லாமல் இருந்திருக்காது.

உயிர்க் கடிகாரம்

வீட்டிலோ, கையிலோ, பையிலோ கடிகாரம் இல்லாவிட்டால் என்ன, ஒவ்வொருவரின் மூளைக்குள்ளும் ஒரு கடிகாரம் இருக்கிறது. அதற்கு ‘உயிரியல் கடிகை’ என்று பெயர். கிராமவாசிகளை அது, பொழுது விடியப்போகுது - வயலுக்குக் கிளம்பு என்று எச்சரித்து எழுப்பிவிடும். கோழிகள்கூட அதற்குப் பின்னால்தான் கூவும். மூளையிலுள்ள கடிகாரம் விநாடி, மணி, பகல், இரவு, நாள், மாதம், ஆண்டு எனச் சரியாக நேரம் காட்டும். அது பல லட்சம் ஆண்டுகளாக உயிரிகள் பரிணமித்து வந்ததன் விளைவு.

சுற்றிலும் என்ன நடக்கிறது, அதற்கு எப்படி எதிர்வினையாற்ற வேண்டும், எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை யெல்லாம் புரிந்துகொள்ள நேரக் கணிப்பு இன்றியமையாதது. ஓர் ஓசை எங்கிருந்து, எந்தத் திசையிலிருந்து வருகிறது என்பதை அறிய, அது நமக்கு இரு காதுகளையும் எட்டுவதில் உள்ள கால வேறுபாட்டைப் பயன்படுத்துகிறோம். நாம் பிறரிடம் பேசும்போது, துல்லியமான கால இடைவெளிகளை விட்டால்தான், நாம் பேசுவது மற்றவர்களுக்குப் புரியும். நமது வாய், நாக்கு, தொண்டை ஆகிய இடங்களிலுள்ள தசைகள் சரியான காலப் பிரமாணத்துடன் இயங்க வேண்டும். ஒருவர் ‘பாதகமில்லை’ என்று சொன்னதை ‘பாதாம் அல்வா’ என்று புரிந்துகொண்டு குழம்புகிறவர்கள் உண்டு.

நேர அளவைக் கணிக்க முடிவது விலங்கினத்துக்கும் அத்தியாவசியமானது. எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சில ஆய்வர்கள் பிளாஸ்டிக் மலர்களுக்குள் சர்க்கரைக் கரைசலை நிரப்பித் தேன் சிட்டுகள் வருமிடத்தில் வைத்தார்கள். ஒரு தேன் சிட்டு ஒரு மலரிலிருக்கும் தேனை உறிஞ்சிய பின், அந்த மலரில் மீண்டும் தேன் சுரக்கச் சற்று நேரமாகும். ஆய்வர்கள் சில பிளாஸ்டிக் மலர்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு முறையும் வேறு சில மலர்களில் 20 நிமிடங்களுக்கு ஒரு முறையும் தேன் நிறையுமாறு செய்தனர். தேன் சிட்டுகள் சீக்கிரத்திலேயே ஒவ்வொரு மலரிலும் தேனைப் பருகிய பிறகு, எவ்வளவு நேரத்துக்குப் பிறகு அந்த மலருக்கு மீண்டும் வர வேண்டும் என்று கணித்துக்கொண்டன.

ஜார்ஜியா பல்கலைக்கழகத்து ஆய்வர்கள் எலிகளுக்கு 48 மணி நேரத்துக்கு ஒரு முறை உணவளித்துப் பழக்கிவிட்டார்கள். அதன் பிறகு, அவை சரியாக 48 மணி நேரத்துக்கு ஒரு முறை வந்து உணவுத் தட்டைச் சுற்றி உட்கார்ந்துகொள்ளும்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர் களும் விலங்குகளும் தமது மூளையில் உள்ள உயிரியல் கடிகை அமைப்பின் உதவியால் நேரத்தைக் கணிப்பதாக உயிரியல் விஞ்ஞானிகள் கருதிவந்தனர். மூளையின் ஏதோ ஓரிடத்தில் ஒரு கடிகார உறுப்பு இருப்பதாகவும், அதிலிருந்து ஒரு சீரான கதியில் துடிப்புகள் தோன்றுவதாகவும் விவரித்தனர். ஒரு நிகழ்வு தொடங்கும்போது துடிப்புகளை மூளை எண்ணத் தொடங்கி, அந்த நிகழ்வு முடியும் நேரத்தை மதிப்பிடுவதாக விளக்கம் தரப்பட்டது.

காதலின் நேரம்

இந்த விளக்கம் எளிமையானதாக இருந்ததால் எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டனர். ஒவ்வொருவரும் நேரத்தை மதிப்பீடு செய்வது கால - தேச - வர்த்தமானத்தைப் பொறுத்தது. சூடான கணப்பின் மீது ஒரு நிமிடம் உட்கார்ந்திருப்பது ஒரு மணி நேரமாகவும், காதலியுடன் பேசுகிறபோது ஒரு மணி நேரம் ஒரு நிமிடமாகவும் உணரப்படும் என்று மேதை ஐன்ஸ்டீன் சார்பு நிலைத் தத்துவத்துக்கு விளக்கம் தந்திருக்கிறார். இத்தகைய அனுபவங்கள் மூளையின் கடிகை தப்பாக மணி காட்டும்படி செய்துவிடுகின்றன. சுவாரசியமான அரட்டையின்போது நேரம் போனதே தெரியவில்லை என்று ஒருவர் சொல்லுவார். வீட்டில் அவருக்காகக் கண் விழித்துக் காத்திருக்கும் மனைவிக்கு ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாகத் தோன்றும்.

மூளை செய்யும் பிழை

ஆனால், மூளையின் உயிரியல் கடிகை நமது வீட்டிலுள்ள கடிகாரத்தைப் போல இயங்குவதில்லை. அதனால்தான் நாம் சினிமா பார்க்கிறபோது, நேரம் போனதே தெரியவில்லை என்றும், ஆசிரியரிடம் பாடம் கேட்கும்போது, ஒரு மணி நேரம் ஒரு யுகமாக நீள்வதுபோல இருந்தது என்றும் சொல்கிறோம். உயிர் நண்பனை அல்லது காதலியை நேற்று பார்த்திருந்தால்கூட, “என்ன… பார்த்து பல நாளாச்சு!” என்று விசாரிக்கிறோம். ஓரிரு ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கிற நண்பனை, “என்ன… போன மாமாங்கத்தின்போது பார்த்ததுதான்!” என்று கேட்கிறோம். இது நேரத்தை அளவிடும் போது மூளை செய்கிற பிழை.

கால இடைவெளிகளை மூளை எவ்வாறு அளவிடுகிறது என்பதை இன்னமும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மூளையில் நியூரான்கள் எனப்படும் மின் கடத்திகள் கோடிக்கணக்கில் இருக்கின்றன. ஒரு கடிகாரத்தின் ‘டிக்.. ‘டிக்’ ஓசை உங்கள் காதில் விழுவதாக வைத்துக்கொள்வோம். ஒரு ‘டிக்’, நியூரான்களை உசுப்பிவிட்ட பின், அடுத்த ‘டிக்’ வருவதற்குள் அவை ஓய்வு நிலைக்கு மீள்வதில்லை. ஆனால், இரண்டாவது ‘டிக்’ நியூரான்களைச் சற்றே மாறுபட்ட வகையில் உசுப்புகிறது. இதன் காரணமாகவே மூளை இரண்டு டிக்குகளுக்கு இடையிலான நேர இடைவெளியை அனுமானித்துக்கொள்கிறது.

- கே.என்.ராமசந்திரன்,

அறிவியல் கட்டுரையாளர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்