பல வண்ணங்கள் ஒரே வண்ணமாக ஆக முடியுமா?

By பி.ஏ.கிருஷ்ணன்

ட்ரம்பின் வெற்றி அமெரிக்காவையே புரட்டிப் போட்டிருக்கிறது

நியூயார்க் நகரத்தின் நுழைவாயில் என்று சொல்லக்கூடிய சிறிய தீவு ஒன்று அதன் கீழ்த் திசையில் இருக்கிறது. எல்லீஸ் தீவு என்று அழைக்கப்படும் அந்த தீவில்தான், அமெரிக்காவுக்கு வருபவர்கள் முதன்முதலாக இறங்கினார்கள். பெரும்பாலும் ஐரோப்பாவிலிருந்து வருபவர்கள். 1892 முதல் 1954 வரை 1.2 கோடிப் பேர் இந்தத் தீவின் வழியாக அமெரிக்கா வந்திருக்கிறார்கள். இப்போது அது சுற்றுலா மையம். ‘கனவின் நுழைவாயில்’ என்ற இசைக் காட்சி சுற்றுலாப் பயணிகளுக்குக் காட்டப்படுகிறது. இந்த வழியாக வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெள்ளை மக்களுடன் இரண்டறக் கலந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். யூதர்களைப் போன்ற சில குழுவினர்கள் மட்டும் தங்கள் அடையாளத்தை அப்படியே தக்க வைத்துக்கொள்ள முயல்கிறார்கள்.

அமெரிக்காவின் மேற்கில் இருக்கும் பசிபிக் சமுத்திரத்தின் வழியாக ஜப்பானியர்களும் சீனர்களும் வந்தார்கள். கலிஃபோர்னியாவில் இன்றும் ஜப்பான் நகரம், சீன நகரம் என்ற பகுதிகள் இருக்கின்றன. இவர்கள் நடத்தப்பட்ட விதம் அவமானகரமானது. பிலிப்பைன்ஸிலிருந்தும் வந்தார்கள். சில சீக்கியர்களும் வந்தார்கள். ஆனால், இவர்கள் அனைவரையும் தூக்கியடித்துவிடும் குடியேற்றம் அமெரிக்காவின் தெற்கிலிருந்து நிகழ்ந்தது, நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொல்லலாம். மெக்சிகோ, க்யூபா, மத்திய அமெரிக்க நாடுகள், தென் அமெரிக்க நாடுகளிலிருந்து இன்னும் மக்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். மெக்சிகோவிலிருந்து மட்டும் 1.17 கோடிக்கும் மேல் மக்கள் குடியேறியிருக்கிறார்கள் என்று அரசுத் தரப்புப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இன்று விரிகுடா பகுதிகளில், இந்தியாவிலிருந்து வந்தவர்களின் வீடுகள் பளபளப்பாக இருக்கின்றன என்றால், அதற்குக் காரணம் இவர்கள்தான். மணிக்கு 10 டாலர்களிலிருந்து 17 டாலர்கள் வரை எந்தத் துப்புரவுத் தொழிலையும் செய்யத் தயாராக இருப்பார்கள். இவர்களைத்தான் ட்ரம்ப் நாட்டை விட்டு விரட்டத் துடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால், இவர்களைத் தவிர இரு ‘பழைய’ சிறுபான்மையினர் இங்கு இருக்கிறார்கள் - வெள்ளையர்கள் வருகைக்கு முன்னாலேயே இருந்து, ஏறத்தாழ முழுவதுமாக நசித்துப் போன அமெரிக்கப் பழங்குடி மக்கள், ஆப்பிரிக்காவிலிருந்து பருத்திக் காடுகளில் வேலை செய்வதற்காகக் கட்டாயமாகக் குடியேற்றப்பட்ட கறுப்பின மக்கள்.

இவர்கள் நிலைமை எவ்வாறு இருக்கிறது?

அமெரிக்கப் பழங்குடி மக்கள்

சில தினங்களுக்கு முன்னர் போல்க் தெருவில் நடந்துகொண்டிருந்தபோது வீடில்லாமல் தெருவில் திரிபவர்கள் மத்தியில் இரு பழங்குடிப் பெண்களைப் பார்த்தேன். இரட்டைப் பின்னல்கள். முகங்களில் இன்னும் சுருக்கங்கள் விழவில்லை. சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். கண்களில் கிறக்கம். போதைப் பொருளின் தாக்கமாக இருக்க வேண்டும். 2012-ல் மட்டும் 69%-க்கும் அதிகமான பழங்குடி இளைஞர்கள் போதைப் பொருட்களிலிருந்து விடுதலை பெற சிகிச்சை பெற்றிருக்கிறார்கள்.

மொத்தம் 30 லட்சம் பேர் இருக்கிறார்கள். 70%-க்கும் மேல் நகரங்களில் இருக்கிறார்கள். படிப்பில் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள். 12% மட்டுமே (மற்றவர்கள் 29%) கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறார்கள். சிலர் சமூகத்தின் மையத்துக்கு வந்துவிட்டார்கள். அலாஸ்காவின் லெப்டினென்ட் கவர்னரான பைரன் மாலட் ஒரு பழங்குடி மகன். ஆனால் பலர் ஏழ்மையில், படிப்பின்றி, எதிர்காலத்தைப் பற்றி எந்த நம்பிக்கையும் இன்றிக் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க அரசு 2009-ல் அவர்களிடம் மிருகத்தனமாக நடந்துகொண்டதற்கு மன்னிப்புக் கேட்டது. காலம் கடந்த மனமாற்றம் என்றாலும், பிரச்சினைகள் அதிகம் இன்றி அவர்கள் வழியிலேயே வாழ்க்கையை நடத்துவதற்கான உதவிகளை அமெரிக்க அரசு செய்துகொண்டிருக்கிறது என்று நிச்சயம் சொல்லலாம்.

கறுப்பின மக்கள்

சுமார் நான்கு கோடிக் கறுப்பின மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு லட்சத்தில் 2,207 பேர் சிறையில் இருக்கிறார்கள். அதாவது, மக்கள்தொகையில் 2%-க்கும் மேல் என்பது அதிர்ச்சியைத் தரும் தகவல். அதாவது, நாம் கறுப்பின மக்களாக இருந்தால், நமக்குத் தெரிந்த யாராவது ஒருவர் சிறையில் இருப்பார் என்ற செய்தி எவ்வளவு அதிர்ச்சியைத் தருமோ அவ்வளவு. ஒபாமா பதவி ஏற்றபோது இவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வெள்ளை அமெரிக்கர்களிடம் கறுப்பு அமெரிக்கர்களைவிட 13 மடங்கு பணமும் சொத்தும் அதிகமாக இருக்கிறது. அவர்களது வறுமை குறைந்ததாகத் தெரியவில்லை. பட்டப்படிப்பு முடித்த கறுப்பினத்தவருக்கு இருக்கும் வேலைவாய்ப்புகள் பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த வெள்ளையருக்கு இருக்கும் வேலைவாய்ப்புகளைவிடக் குறைவு. இப்போது ட்ரம்ப் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தப்போவதாகச் சொல்லியிருக்கிறார். ‘சமூகப் பிரச்சினைகளுக்குத் தொழில்முறையில் தீர்வுகளைக் காண முடியும் என்பதை அவர் முழுவதுமாக நம்புகிறார், அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என்று பாப் ஜான்சன் என்ற கறுப்பின ஊடக ஆளுமை ஒருவர் கூறியிருக்கிறார். ஆனால், கறுப்பு மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அவர் முற்றிலும் புதிதாக ஏதாவது செய்தாக வேண்டும். அவர்கள் நம்பிக்கை தேவை என்று நினைக்கிறாரா என்பதே சந்தேகத்துக்கு உரியது.

அடுத்த நான்கு ஆண்டுகள் எப்படி இருக்கும்?

ட்ரம்பின் வெற்றி அமெரிக்காவையே புரட்டிப் போட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும் கறுப்பினத்தவரும், சீனர்களும், ஹிஸ்பானிக்குகளும் முஸ்லிம்களும், இந்தியர்களும் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ‘நீங்கள் சுவாரஸ்ய மான காலத்தில் வாழுங்கள்’ என்பது ஒரு சீனச் சாபம். ட்ரம்ப் ஆட்சியில் சுவாரஸ்யமாக ஏதும் நடந்துவிடக் கூடாது, வாழ்க்கை சீராக இயங்க வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம்.

அமெரிக்கா பல வண்ணங்களைக் கொண்டது. பல வருடங்களாகச் சேர்த்த வண்ணம். அவை அனைத்தின் மீதும் வெள்ளையடித்து ஒரே வண்ணமாக ஒருவரால் நான்கு ஆண்டுகளில் ஆக்க முடியுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்.

தொடர்புக்கு: tigerclaw@gmail.com

(நிறைந்தது)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்