மருது சகோதரர்கள்: போற்றப்பட வேண்டிய வீரம்

By செய்திப்பிரிவு

அக்டோபர் 24, 1801 தொடங்கி ஜெனரல் ஆக்னியூ தலைமையில் மருது பாண்டிய சகோதரர்கள்,அவர்களது போர்ப்படையில் பணியாற்றிய தளபதிகள், மருது பாண்டியர்களின் ஆண் வாரிசுகளான 10, 12 வயதே நிரம்பியபாலகர்களைத் தூக்கிலிட்ட கொடுமை உலக வரலாற்றில் ஒப்பீடு சொல்லவியலாத நிகழ்வுகளாகும். இந்நிகழ்வுகளை நேரில் கண்ட ஆங்கில ராணுவ அதிகாரி வெல்ஸ், ராணுவச் சட்டப்படி அவற்றைப் பொது வெளியில் தெரிவிக்க இயலவில்லை. எனவே, லண்டன் சென்றபின் ஜே.கோர்லே என்கிற எழுத்தாளர் மூலமாக Mahradu, an Indian Story of the Beginning of the Nineteenth Century: With Some Observations (1813) என்ற புத்தகத்தில் விவரித்துள்ளார்.

சிவகங்கைச் சீமையில் திருப்பத்தூர் மண்ணில்நடைபெற்ற கோரக் கொலைகளை ஆங்கில ராணுவ அதிகாரியாலேயே பொறுக்க முடியவில்லைஎன்றால், எத்தகைய கொடூரமான கொடுமைகள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். கோர்லே 10, 12 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் ராணுவ அதிகாரி தெரிவித்த செய்திகளைத் தானே அச்சிட்டு வெளியிட்டுள்ளார் என்றால், இவை குறித்த செய்திகள் வெளிவரக் கூடாது என்பதில் எத்தகைய அச்சுறுத்தலும், அபாயகரமான சூழ்நிலைகளும் நிலவியிருக்க வேண்டும் என்பதை அனுமானிக்கலாம்.

மருது பாண்டிய சகோதரர்களும், அவர்களது ஆண் வாரிசுகளும், தளபதிகளும், போராளிகளும் சிவகங்கை– திருப்பத்தூர் பகுதிகளில் கண்ணில்பட்டவுடன் உரிய விசாரணையும் மேலிட ஆணையுமின்றி அழித்தொழிப்பதற்கு ஆங்கிலேயர்களும் இங்குள்ள துரோகிகளும் இணைந்து திட்டமிட்டதுதான் காரணம். இந்தக் கொடூரங்களால் கிடைத்த பயனை எதிரிகளும் துரோகிகளும் பங்கிட்டுக்கொண்ட நிகழ்வுகள் வரலாற்றில் தெளிவாகவே பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

மைசூர் பகுதியில் ஆங்கிலேயருக்கு எதிரான போரில் திப்பு சுல்தான் 1799இல் மரணமடைந்தநிலையில், ஆங்கிலேயருடைய முழுக் கவனமும் ஆங்கில ஆதிக்கத்திற்கு அடிபணியாத ராஜ்ஜியங்கள், பாளையங்கள் மீது பாய்ந்தது. படிப்படியாக வாரிசுரிமை, வரிபாக்கி, ராணுவ உதவி என சுதேசி மன்னர்களிடமும் பாளையக்காரர்களிடமும் பிரச்சினைகளை உருவாக்குவதும், அந்தப் பிரச்சினைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அடிபணியாத அல்லது இசைவு தராதவர்களின் ராஜ்ஜியங்களையும் பாளையங்களையும் ராணுவ பலத்தின் மூலம் ஆக்கிரமித்துக் கைவசப்படுத்தினர். அப்பகுதிகளுக்குப் ‘பொம்மை ராஜா’க்களையும் போலி ஜமீன்தார்களையும், பாளையக்காரர்களையும் உருவாக்கும் திட்டப்படி ஆங்கிலேயர்கள் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார்கள்.

இந்த இருண்ட அரசியல் சூழ்நிலையில்தான் ஆங்கிலேயரின் ராணுவ பலத்துக்கும் நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க ஆயுதம் தாங்கிய மக்கள் புரட்சிக்கு மருது பாண்டியர்கள் திட்டமிட்டார்கள். இதற்கான யுத்தக் கூட்டணியும் அமைத்திருந்தார்கள். இந்த விவரங்களையும் நடவடிக்கைகளையும் ஆங்கிலேயர்கள் ஒற்றர்கள் மூலம் அறிந்துகொண்டார்கள். திப்பு சுல்தான் போர்க்களத்தில் இறந்துவிட்டமையாலும் இங்கிலாந்துக்கும்பிரான்ஸுக்கும் தொடர்ந்து போர் நடந்துகொண்டிருந்ததாலும் ராணுவ உதவி கிடைக்க வாய்ப்பில்லை என்பதைத் தீர்க்கமாக அறிந்துதான் ஆயுதம் ஏந்திய மக்கள் புரட்சிக்கு மருது பாண்டியர்கள் திட்டமிட்டார்கள்.

அதன் முதல் வெளிப்பாடாக சின்ன மருது பாண்டியர் தலைமையில் திருச்சி ஆர்க்காடு நவாப் கோட்டைக்கும் திருவரங்கம் கோயிலுக்கும் சென்று ஆங்கிலேயருக்கு எதிரான போர்ப் பிரகடனத்தை 1801 ஜூன் 16 அன்று பகிரங்கமாக மக்கள் பார்வைக்கு ஒட்டினர். இந்தச் செய்தி அறிந்த ஆங்கிலேய ராணுவம் சிவகங்கைப் பகுதியை முற்றுகையிட்டது. இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதன்முதலாக ஆங்கிலேயருக்கு எதிரான போர்ப் பிரகடனத்தை வெளியிட்டு, ஆங்கிலேயப் படைகளைப் போர்க்களத்தில் சந்தித்தவர்கள் மட்டுமல்ல, தங்கள் ஆண் வாரிசுகளையே முழுமையாக இந்த மண்ணின் விடுதலைக்காகத் தியாகம் செய்தவர்கள் மருது சகோதரர்கள். ஆனால், இந்த நிகழ்வுக்கு 50 ஆண்டுகள் கழித்து 1857இல் நடைபெற்ற சிப்பாய் எழுச்சியை முதல் சுதந்திரப் போராட்டம் எனப் பதிவுசெய்திருப்பது வரலாற்றுப் பிழையாகும்.

தென்னகத்தில் நடைபெற்ற இந்தப் போர்க்களங்கள்தான் இந்திய நாட்டின் முதல் சுதந்திரப் போராட்டமாக இருக்க முடியும். அதற்கான சான்றுகள் பல உண்டு. இந்த வரலாற்றுப் பிழையைத் திருத்திக்கொண்டு இந்தத் தென்னாட்டுப் போர்க்களங்கள்தான் முதல் சுதந்திரப் போராட்டம் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும். ஆங்கிலேய ஆதரவாளர்களின் கொடுமையும் கொடூரமும் நிறைந்த இந்தப் படுகொலைகள் நடைபெற்ற சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முதல் சுதந்திரப் போராட்ட வீர மரணங்கள் குறித்த நினைவிடங்களை உள்ளடக்கிய அருங்காட்சியகம் உருவாக்கப்பட வேண்டும்.

இந்த முயற்சிகளின் முன்னெடுப்பாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மருது பாண்டியர்களுக்குச் சென்னையில் சிலை வைப்பதாக அறிவித்துள்ளார். தென்னகத்தின் இந்தப் போர்க்களங்கள்தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என அறிவிக்கவும், அது தொடர்பான அருங்காட்சியகம் அமைப்பதற்கும் மத்திய அரசின் உரிய ஒத்துழைப்புடன் முதல்வர் செய்து முடிப்பதன் மூலம் நமது பெருமை, புகழ், வீரத்தை உலகம் மீண்டும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

மருது பாண்டியர்களுக்கும், ஆங்கிலேயருக்கும் எதிரான அனைத்து தென்னகத்துப் போர்க்களங்களில் போராடி, உயிர் துறந்த, தூக்கிலிடப்பட்ட, நாடுகடத்தப்பட்ட முதல் சுதந்திரப் போராட்ட தீரர்களுக்கும் இந்தச் சிவந்த மண்ணில் உருவாக்கப்படவுள்ள நினைவாலயம் காலம் கடந்தும் இந்த வரலாற்றின் அணையா விளக்காக என்றும் ஒளி பரப்பிக்கொண்டே இருக்கும். - பொன்.முத்துராமலிங்கம், முன்னாள் அைமச்சர், தொடர்புக்கு: officeofponmuthu@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்