இந்தியா டிஜிட்டல்மயமாகி கொண்டிருக்கிறது. டிஜிட்டல் இந்தியாவில் தேர்தல் பிரச்சாரமும் டிஜிட்டல்மயமாகி கொண்டிருக்கிறது. முன்னணி அரசியல் கட்சிகள், களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்வதில் காட்டும் தீவிரத்துக்கு நிகராக, சமூக ஊடக பரப்பிலும் போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளன.
பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களை மக்கள் தீவிரமாக பயன்படுத்தும் நிலையில், மக்களை கவர்வதற்காக அரசியல் கட்சிகளும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை புரிந்து கொள்ளலாம். எனினும், இந்த டிஜிட்டல் பிரச்சாரத்தின் புதியபோக்காக, சமூக ஊடகங்களில் பிரச்சார நோக்கில் விளம்பரங்களை வெளியிடுவதும் அதிகரித்துள்ளது. அரசியல் கட்சிகள் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வதோடு, கட்சியின் ஆதரவாளர்கள் சமூக ஊடக பக்கங்கள் அமைத்து பரஸ்பரம் அவதூறு, பிழை தகவல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது.
குஜராத் தேர்தல்: குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், சமூக ஊடகத்தில் தேர்தல் பிரச்சாரம் இப்போதே சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக எதிரணியினரை குறிவைக்கும் வகையிலான பேஸ்புக் பக்கங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
பால்து எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ‘பேஸ்புக்’ பக்கம் இதற்கு உதாரணமாக அமைகிறது. முதலை கண்ணீர் மற்றும் பச்சோந்தி படங்களை கொண்டுள்ள இந்த பக்கம், குஜராத்தி மொழியில் தகவல்களை வெளியிடுகிறது. அரவிந்த் கேஜ்ரிவாலை நம்ப வேண்டாம் என்ற வாசகம் கொண்ட இந்த பக்கம், ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலை குறி வைத்து தினமும் 3 பதிவுகளையேனும் வெளியிட்டு வருகிறது.
மூன்று மாதங்களாக செயல்பட்டு வரும் இந்த பக்கம், 20 ஆயிரம் பாலோயர்களை கொண்டுள்ளதோடு, மெட்டா மேடையில் (பேஸ்புக்) ரூ.142 கோடி அளவுக்கு விளம்பரம் செய்துள்ளது. இந்த பக்கம் எந்த கட்சிக்கு ஆதரவானது என குறிப்பிடாவிட்டாலும், குறுகிய காலத்தில் இந்த தளம் மெட்டா மேடையில் கணிசமான தொகையை விளம்பரத்துக்காக செலவிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
மெட்டா விளம்பரம்: முன்னணி சமூக ஊடக சேவையாக பேஸ்புக் இருப்பதால் அதில் கணிசமாக விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. அரசியல் கட்சிகள் சார்பிலும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஜூலை முதல் அக்டோபர் மாத காலத்தில், மெட்டா மேடையில் செய்யப்படும் அரசியல் விளம்பரங்களில் குஜராத் மாநிலம் முன்னிலை வகிப்பதும் கவனிக்கத்தக்கதாக அமைகிறது.
இந்த கால கட்டத்தில், குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்ட பேஸ்புக் பக்கங்கள் மூலம் ரூ.5.27 கோடி விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக மெட்டா விளம்பர நூலக தகவல்கள் வாயிலாக அறிய முடிகிறது. இதில் பால்து எக்ஸ்பிரஸ் பக்கம் முதலிடம் வகிக்கிறது. குஜராத் ஆம் ஆத்மி கட்சி அடுத்த இடத்தில் உள்ளது.
விளம்பர செலவு: தேர்தல் பிரச்சாரத்துக்கான செலவு குறித்து தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், முன்னணி அரசியல் கட்சிகள் தேர்தல் காலத்தில் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வதில் கோடிகளை செலவிடுவதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல், சமூக ஊடகங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்காக பெரிய அளவில் பயன்படுத்தப்பட்ட முதல் தேர்தலாக கருதப்படுகிறது. இதில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்தது. இந்த தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமரானதில் சமூக ஊடக பிரச்சாரம் முக்கிய பங்கு வகித்ததாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அடுத்து 2019 தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சமூக ஊடக பிரச்சாரத் தில் ஈடுபட்டாலும், மற்ற கட்சிகளை விட பாஜக இதில் முன்னிலை வகிக்கிறது. இதற்கிடையில், சமூக ஊடக மேடைகளில் விளம்பரம் செய்வதிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது. கூகுள் தளத்திலும் கணிசமாக விளம்பரம் செய்யப்படுகிறது.
அவதூறு பிரச்சாரம்: மக்களை கவர அரசியல் கட்சிகள் சமூக ஊடக பதிவுகளை வெளியிட்டு வருவதோடு, ஒவ்வொரு அரசியல் கட்சியும் தகவல் தொழில்நுட்ப அணி வாயிலாகவும் ஆதரவு பகிர்வுகளை வெளியிட்டு வருகின்றன. இதற்கென வியூகம் அமைத்து தரவும் ஆலோசகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், சமூக ஊடக பிரச்சாரம் அவதூறு, பதில் அவதூறாக மாறுவதும் நிகழ்ந்து வருகிறது. பேஸ்புக்கில் மேற்கொள்ளப்படும் அரசியல் கட்சி விளம்பரங்கள் தொடர்பான தகவல்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும் என்றாலும், பல அரசியல் பக்கங்கள் குறிப்பிட்ட எந்த கட்சி சார்பிலானது என குறிப்பிடாமல் செயல்படுகின்றன.
தற்போது குஜராத் மாநிலத்தில் இந்த போக்கை காண முடிகிறது. இதற்கு முன்னர் மாநில தேர்தல்களில் இதேபோன்ற போக்கை காண முடிந்ததாக தகவல் சரிபார்ப்பு தளமான ‘பூம்லைவ்’ தெரிவிக்கிறது. பிஹார் மற்றும் உத்தர பிரதேச மாநில தேர்தல்களின் போது, குஜராத்தின் பால்து எக்ஸ்பிரஸ் பக்கம் போன்ற பேஸ்புக் பக்கங்கள், பாரதிய ஜனதாவின் எதிரணி கட்சிகளை குறி வைத்து அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க தேர்தலிலும் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பக்கங்கள் தீவிரமாக செயல்பட்டன. இந்த பக்கங்கள் சார்பாக கணிசமாக விளம்பரமும் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கு பதிலடி தரும் பக்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அரசியல் விளம்பரங்கள்: இந்தியாவில் பேஸ்புக் மேடையில் செய்யப்படும் விளம்பரங்களில் அரசியல் விளம்பரம் ஆதிக்கம் செலுத்துவதாகவும் இந்த செய்தி தளம் தெரிவிக்கிறது. அதிக விளம்பரங்கள் செய்யும் 15 பக்கங்களில் 65 சதவீதம் அரசியல் பக்கங்கள் என தெரிவிக்கிறது. தேர்தல் முடிவுகளை தீர்மானிக்க, சமூக ஊடக பிரச்சாரம் எந்தளவு உதவும் என்பது தெரியவில்லை. எனினும் இவற்றின் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவு இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதை புரிந்து கொண்டு அரசியல் கட்சிகள் சமூக ஊடகத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றன. எனினும், அவதூறு நோக்கில் சமூக ஊடக பக்கங்கள் அமைக்கப்படுவது மற்றும் அவற்றின் சார்பாக கோடிக்கணக்கில் செலவு செய்து விளம்பரம் செய்யப்படுவது கவலை தரும் போக்காக அமைகிறது.
பெரும்பாலான அவதூறு பக்கங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அவற்றின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி தகவல் தெரியாதது, தேர்தல் பிரச்சார களத்தில் ஒரு பிரச்சனையாக அமைகிறது. சமூக ஊடகங்களில் செய்யப்படும் தேர்தல் விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடு வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. எனினும், இது சமூக ஊடக நிறுவனங்கள், ஜனநாயக செயல்முறையை தீர்மானிப்பது போல அமைந்துவிடும் ஆபத்து உள்ளது என்ற கருத்தும் பலமாக முன்வைக்கப்படுகிறது.
தேர்தல் பிரச்சாரத்தில் சமூக ஊடகங்கள் முக்கிய அங்கம் வகிக்கும் நிலையில், அவதூறு பிரச்சாரமும், பதிலடி பிரச்சாரமும் புதிய அவதாரம் எடுத்துள்ளன. இது சமூக ஊடக நிறுவனங்கள், ஜனநாயக செயல்முறையை தீர்மானிப்பது போல அமைந்துவிடும் ஆபத்து உள்ளது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago