சிறுமி ஒருத்தி (1970) சாதாரண அஞ்சலட்டையில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதம் மிகவும் பிரபலம். ஆங்கிலேயர் காலகட்டக் கல்வி சி.வி.ராமன், மேக்நாட் சாகா, சத்தியேந்திரநாத் போஸ் போன்ற அறிவியலாளர்களை உருவாக்கியதுபோல், நமது கல்வி முறையால் யாரையும் உருவாக்க முடிந்ததா என்பது அந்தச் சிறுமியின் கேள்வி. புதுடெல்லியில் உள்ள பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் சிலருக்குப் பிரதமர் இந்திரா காந்தி அதை அனுப்பி, உண்மையில் அப்படி உருவானவர்கள் குறித்து அந்தச் சிறுமிக்கு எழுதி உதவுமாறு கேட்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக அந்தக் கேள்விக்கு யாரிடமிருந்தும் பதில் வரவில்லை. அந்தச் சிறுமி என்ன ஆனார் என்பதும் தெரியாது என்றாலும், நாடு விடுதலை அடைந்த 75ஆவது ஆண்டிலும்கூட அந்தக் கேள்விக்குச் சரியான பதில் நம்மிடம் இல்லை. இந்த ஆண்டும் இந்தியர் எவரும் நோபல் பரிசு பெறவில்லை என்பதை எந்தச் சலனமும் இன்றி நாம் எளிதாகக் கடந்துவிட்டோம். நோபல் பரிசை விடுங்கள்; பொதுவாகவே நம் பல்கலைக்கழகங்களில் அறிவியல் ஆராய்ச்சிகள் எந்த நிலையில் உள்ளன என்பது ஆய்வுக்குரியது.
ஆங்கிலேயர் ஆட்சியில் அறிவியல்: ஆங்கிலேயர் ஆட்சியின்போது ராமன், சாகா, போஸ் போன்ற இந்திய அறிவியலாளர்கள் கேம்பிரிட்ஜிலும் ஆக்ஸ்போர்டிலும் சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை. கல்கத்தாவின் இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம், காசி இந்து பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் என ஆங்கிலேயர் காலத்தில் செயல்பட்ட இந்தியக் கல்விக்கூடங்களில்தான் இயங்கினர். அவற்றுக்குச் சுதந்திரப் போராட்டச் சதி நடப்பதாகப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொடுக்காத தொல்லை இல்லை. போதுமான நிதி ஆதாரம் என்றைக்குமே கிடைத்திடாத நிலையில்தான் அறிவியல் ஆராய்ச்சி இங்கு பல சாதனைகளைப் படைத்தது. சுதந்திரத்துக்கு முன்பே சர்வதேச அறிவியல் ஆய்விதழ்களில் இந்தியப் பல்துறை அறிவியலாளர்களின் 6,000 ஆய்வுகள் வெளிவந்ததாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலை: இந்திய அறிவியலில் அடிப்படை ஆய்வின் இன்றைய நிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. வேலைக்குச் செல்வது எனும் சமூக அழுத்தம் இன்றைய இளைஞர்களை ஆய்வு வட்டத்துக்கு வெளியே நிறுத்திவிட்டது. அதையும் மீறி உள்ளே வருபவர்களைப் பல்கலைக்கழக ஆய்வுச் சூழல் விரட்டியடிக்கிறது; சிலர் தற்கொலை வரைகூடப் போகிறார்கள். ஆய்வு நிதியைப் பங்கிட்டுக்கொள்வது எப்படி என்ற மோசமான அதிகாரச் சுரண்டலாலும் ஊழல்களாலும் கருத்தரங்கங்கள் வெறும் சடங்குகளாகச் சுருங்கிவிட்டன. ஆய்விதழில் வெளிவரும் அளவுக்குத் திறம்பட அறிவியல் ஆய்வுகளை எழுதும் மாணவர், அவர் பெயரில் அந்த ஆய்வை வெளியிட்டுவிட முடியாது. ஆய்வுக்கு வழிநடத்தும் பேராசிரியர்கள் பலர் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி, அந்த அற்புதங்களைத் தாம் வெளியிட்டுக்கொள்ளும் வெட்கக்கேடான சூழலே இந்தியப் பல்கலைக்கழகங்களில் நிலவுகிறது. கடந்த 20, 30 ஆண்டுகளாக ஆய்வுத் துறையைப் புறக்கணித்து, பொருளீட்டுவதே வெற்றி எனப் பொறியியல், மருத்துவம் படிக்கச் சென்று, பலர் காணாமல் போனது உண்மை. ஆய்வுத் துறைகளான இயற்பியல், வேதியியல் என அடிப்படை அறிவியலுக்குள் தப்பித்தவறி நுழைபவர்கள் காண்பது என்ன? இந்தியாவில் இன்று முனைவர் பட்ட ஆய்வுகளில் மூன்றில் இரண்டு போலியானவை. தரம்வாய்ந்த ஆய்வுகளுக்கு அரசின் நிதியுதவி பெருமளவு குறைந்துவிட்டது. அறிவியல் சார்ந்த ‘பட்நாகர் விருது’ உட்பட 300 விருதுகளை நீக்கிவிட்டு, நோபல் போன்று ஒரே விருதாக வழங்கப்படும் என்கிற அறிவிப்பும் நம் ஆய்வுச் சூழலை மேலும் நீர்த்துப்போகச் செய்யும்.
நோபல் அறிஞர்களின் பின்னணி: இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்ட பிரான்ஸின் அலான் ஆஸ்பெக்ட், அந்நாட்டின் 72ஆவது நோபல் அறிஞர். பிரான்ஸின் பள்ளி, பல்கலைக்கழகக் கல்வியில் மதிப்பெண்கள் கிடையாது; ஆறு படிநிலைத் தரச்சான்று தரப்படுகிறது. அறிவியல் பட்டப்படிப்பு, ஆறு மாத ஆய்வக உதவியாளர் பணியிடப் பயிற்சியை உள்ளடக்கியது. மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்வாந்தே பேபு, அந்நாட்டின் 32ஆவது நோபல் அறிஞர். ஸ்வீடனில் கல்லூரிக் கல்வி வரை தாய்மொழியிலேயே கற்பிக்கப்படுகிறது. ஆய்வு மாணவர்களைத் தத்தெடுத்து உலகெங்கும் செல்வதற்கான செலவை அரசே ஏற்கிறது. வேதியியலில் நோபல் பரிசு பெறும் மோர்டன் மேல்டால் டென்மார்க்கைச் சேர்ந்தவர். அங்கே பள்ளிக் கல்வியின் இறுதி ஆண்டில் குறைந்தபட்சம் 100 பக்கம் கொண்ட ஆய்வறிக்கையை விருப்பமான அறிவியல் துறை சார்ந்து சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம். இதுவரை 14 நோபல் அறிஞர்களைத் தந்த டென்மார்க்கில் மொத்தம் எட்டுப் பல்கலைக்கழகங்களே உள்ளன. ஆஸ்திரியா நம்மைவிடப் பல மடங்கு சிறிய நாடு. இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்டிருக்கும் ஆண்டன் ஸாய்லிங்கர் ஆஸ்திரியாவின் 23ஆவது நோபல் விருதாளர். இங்கு பாக்சோ சூலன் கல்விச் சீர்திருத்தம் அறிமுகமான பிறகு, பயன்பாட்டு அறிவியல் ஆய்வுக்கூடங்கள் பல திறக்கப்பட்டன. அவற்றில் பல பள்ளிகளோடு நேரடித் தொடர்புடையவை. பள்ளிப் பருவத்திலிருந்தே கோடை விடுமுறையில் மாணவர்கள் அங்கு சிறப்புப் பயிற்சிகள் பெறவும் முடியும். அறிவியல் என்பதே ராக்கெட்டும் ஏவுகணையும் மட்டும்தான் என்கிற நிலை அங்கு இல்லை.
» நேரடி பணப் பரிமாற்ற கட்டமைப்பு ஓர் அதிசயம் - இந்தியாவுக்கு ஐஎம்எஃப் பாராட்டு
» கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவில் சில்லரை பணவீக்கம் - 7.41 சதவீதமாக உயர்வு
கல்லூரி - பள்ளி இணக்கம் எப்போது?: நாம் நமது கல்லூரி, பல்கலைக்கழகங்களை மட்டுமே குறை கூற முடியாது. நம் பள்ளிக் கல்வி பொதுத்தேர்வு மையக் கல்வியாக இருப்பது முதல் சிக்கல். பெரும்பாலான கலை, அறிவியல் கல்லூரிகளில் கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்ட அறிவியல் பிரிவுகளான இயற்பியல், வேதியியல் பாடங்களைப் படிக்க ஆளில்லை. பள்ளிக் கல்வித் துறைக்கும் உயர்கல்வித் துறைக்கும் ஒரு இணக்கமும் பிணைப்பும் ஏற்பட வேண்டும். பள்ளி மாணவர்கள் ஆய்வுத் திறனை மேம்படுத்த ‘இன்ஸ்பயர்’, ‘மானக்’ போலவும் தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடு போலவும் பல திட்டங்களோடு அந்தந்த ஊர்களின் கல்லூரிகள் பள்ளிக்குள் நுழைய வேண்டும். புத்தக அறிவைக் கடந்து செயல்பட பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். உண்மையான முனைவர் பட்ட ஆய்வு முயற்சிகளும் நோபல் பெறும் அளவுக்கான திருப்புமுனைக் கண்டுபிடிப்புகளும் சுயசிந்தனை, தேடல் சார்ந்தவை. வெற்று மனப்பாடப் பொதுத்தேர்வு மதிப்பெண் கல்வியைத் தூக்கி எறியாதவரை பிரதமர் இந்திராவிடம் அந்தச் சிறுமி அன்று எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நம்மால் சரியான பதிலைத் தர முடியாது என்பதே துயரமான உண்மை.
ஆயிஷா இரா.நடராசன்
கல்வியாளர், எழுத்தாளர், தொடர்புக்கு: eranatarasan@yahoo.com
To Read in English: Why don’t Indians get Nobel honour?
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago