வேளாண்மையில் அதிகரித்துவரும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டால் ஏற்படும் பல்வேறு தீங்கான விளைவுகளைக் கருத்தில்கொண்டு பஞ்சாப், ஹரியாணா மாநில அரசுகள் 10 பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைத் தடைசெய்துள்ளன. இந்தத் தடைக்கான காரணங்களை அறிந்திருந்தும், பூச்சிக்கொல்லி உற்பத்தியாளா்களின் அமைப்பான, இந்தியப் பயிர் பராமரிப்புக் கூட்டமைப்பு இத்தடையை விமா்சித்துள்ளது.
தொடக்கப் புள்ளி: இந்தியாவில் 1960-களில் நிகழ்ந்த பசுமைப் புரட்சியின் விளைவால் மகசூலை அதிகரிக்கும் வீரிய விதைகள், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்ற இடுபொருட்களின் பயன்பாடு கணிசமாக உயர்ந்தது. இது உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியில் மெச்சத்தக்க பங்களிப்பை ஏற்படுத்தியுள்ளது. 1951-52இல் 52 மில்லியன் டன்னாக இருந்த உணவு தானியங்களின் உற்பத்தி 2020-21இல் 309 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது; காய்கறி, பழங்கள் போன்ற தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தி 1991-92இல் 97 மில்லியன் டன்னிலிருந்து 2020-21இல் 331 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தீவிர வேளாண் முறை, பூச்சிகள், பூச்சி அல்லாத நோய்கள் போன்ற தேவையற்ற இடர்பாடுகளை வேளாண்மைக்குக் கொண்டுவந்துள்ளது. மிகக் குறைந்த அளவில் தொடங்கிய பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, 1970-களுக்குப் பின் பல்வேறு காரணங்களால் நெல், பருத்தி போன்ற பயிர்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. 1965-66இல் 14,630 டன்னாக இருந்த பூச்சிக்கொல்லிகளின் மொத்தப் பயன்பாடு, 2017-18இல் 62,180 டன்னாக அதிகரித்துவிட்டது; ஒரு ஹெக்டேருக்கான பயன்பாடு 94 கிராமிலிருந்து 315 கிராமாக (4 மடங்கு) அதிகரித்துள்ளது. உயிரினப் பன்மையை (biodiversity) குறைத்து மண், நீர், காற்று மாசுபாட்டை அதிகரித்து பல நீண்ட காலச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. அதனால், பூச்சிக்கொல்லிகளின் அதீதப் பயன்பாட்டைச் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளா்களும் செயல்பாட்டாளர்களும் கடுமையாக விமர்சித்தனர்.
அதிகரித்த சாகுபடிச் செலவு: பூச்சிக்கொல்லிகளின் அதீதப் பயன்பாடு நீண்டகால, சரிசெய்ய முடியாத உடல்நலப் பிரச்சினைகளை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. ஆராய்ச்சி முடிவுகள், அரசால் அமைக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் வெவ்வேறு காலகட்டங்களில் சில பூச்சிக்கொல்லிகளின் உற்பத்திக்கும், பயன்பாட்டுக்கும் மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் நெல் விளையும் பகுதிகளில் நவீன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், வேளாண் தொழிலாளர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரியல், ரசாயன, கலாச்சார நடைமுறைகளை ஒன்றிணைத்துச் சாகுபடியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைத் திட்டம் 1992இல் அறிமுகப்படுத்தப்பட்டது. பூச்சி, நோய் எதிர்ப்பு வீரிய விதைகளை உருவாக்கவும் முக்கியத்துவம் தரப்பட்டது. இம்முயற்சிகளால் வேளாண்மையில் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு குறைந்ததா?
புதிய ரசாயனப் பூச்சிக்கொல்லிகளின் அதிகரித்த பயன்பாடு, பல்வேறு பயிர்களில் அதன் சாகுபடிச் செலவை காலப்போக்கில் கணிசமாக அதிகரித்துள்ளது. வேளாண் செலவுகள், விலைகள் ஆணையத்தின் தரவுகளின்படி பஞ்சாபில் நெல் சாகுபடியில், பூச்சிக்கொல்லிக்காக ஒரு ஹெக்டேருக்கு 1990-91இல் ரூ.262 செலவிடப்பட்டது; அதுவே 2019-20இல் ரூ.5,624 ஆக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில், ஆந்திரத்தில் ரூ.154லிருந்து ரூ.4,278 ஆக அதிகரித்துள்ளது. பருத்திப் பயிருக்கு குஜராத்தில் ரூ.680லிருந்து ரூ.5,082 ஆகவும், ஆந்திரத்தில் ரூ.757லிருந்து ரூ.7,360 ஆகவும் உயா்ந்துள்ளது. இதேபோன்று பெரும்பாலான மாநிலங்களில் இவ்விரண்டு பயிர்களிலும் விலை உயர்ந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் பருத்திப் பயிரில் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைக்க, மரபணு மாற்றப்பட்ட பி.டி. பருத்தி விதை 2002-03இல் அறிமுகப்படுத்தப்பட்டது. வெறும் 5% சாகுபடிப் பரப்பளவைக் கொண்டிருந்தாலும், மொத்த பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டில் 40-50% ஆகும். பி.டி. பருத்தி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதன் பரப்பளவு கணிசமாக அதிகரித்து, பூச்சிக்கொல்லிகளின் மொத்தப் பயன்பாடும் அதிகரித்தது. பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டில், பருத்திக்கு அடுத்தபடியாக நெல் இருக்கிறது. 1960-களுக்குப் பின் இதன் பரப்பளவு சுமார் 10 மில்லியன் ஹெக்டேர் அதிகரித்துள்ளதால் பூச்சிக்கொல்லிகளின் மொத்தப் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
செய்ய வேண்டியவை: பூச்சிக்கொல்லிகளுக்குத் தடை விதித்தால் பயிர்களின் உற்பத்தி பாதிக்கப்படும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. பூச்சிக்கொல்லிப் பயன்பாடு முழுமையாகத் தடை செய்யப்பட்டால், உலகின் மொத்த வேளாண் பயிர்களின் உற்பத்தியில் 50% குறையும்; இது உணவுப் பொருட்களின் விலையை 4-5 மடங்கு உயர்த்தும் என்று பசுமைப் புரட்சியின் தந்தையும் நோபல் விருதாளருமான நார்மன் போர்லாக் 1970-களிலேயேகூறியுள்ளார். பூச்சிக்கொல்லி இல்லாதிருந்தால் பருத்தியில் உற்பத்தி இழப்புகள் உலகளவில் 80% ஆக இருந்திருக்கும் என்று சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் பஞ்சாப், ஹரியாணா மாநில அரசுகள் 10 பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்திருப்பதை, அதன் உற்பத்தியாளர்கள் கூறுவதுபோல் தன்னிச்சையான முடிவாகக் கருத முடியாது. இது அரிசி ஏற்றுமதி செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயித்துள்ள அதிகபட்ச பூச்சிக்கொல்லி எச்ச அளவுகளை (maximum residual limits) நிறைவேற்றும் நோக்கில், விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (APEDA) பரிந்துரைப்படியும், பஞ்சாப் மாநில அரிசி ஆலைகள் - ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டும் எடுக்கப்பட்ட முடிவாகும். இதனைக் குறைசொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பூச்சிக்கொல்லிப் பயன்பாடு மேலும் அதிகரித்தால், உழவர்களின் செலவுச் சுமை அதிகரிக்கும்; ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் கடுமையாகச் சேதமடையும். வேளாண்மைக்கும் சுற்றுச்சூழலுக்கும் இன்றியமையாதவையாகக் கருதப்படும் பாம்பு, நத்தை, நண்டு, மண்புழு, தவளை போன்ற உயிரினங்கள் வேளாண் நிலங்களிலிருந்து வேகமாக அழிந்துவருகின்றன. பயிர்களின் உற்பத்தித்திறனைப் பாதிக்காமல் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தேவைப்படும் நடவடிக்கைகளைக் காலம் தாழ்த்தாமல் எடுக்க வேண்டும்.
பூச்சிக்கொல்லிகள் தேவைப்படாத இயற்கை வேளாண்மை, நவீன இடுபொருட்களைப் பயன்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் பயிர் சாகுபடி முறையான இயற்கை சார்ந்த வேளாண்மையின் பரப்பளவை அதிகரிக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை. பருத்தி, நெல் ஆகிய இரண்டு பயிர்களுக்கு மட்டும் இந்தியாவின் 65% பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. சிகரெட் விளம்பரத்தைப் போல், உழவர்களின் மனதைத் தூண்டி பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் உடனடியாகத் தடைசெய்யப்பட வேண்டும். மாறிவரும் சூழலைக் கருத்தில் கொண்டு, பூச்சிக்கொல்லி உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திமுறையைக் கடும் நச்சுத்தன்மையிலிருந்து மாற்றி சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பூச்சிக்கொல்லிகளைத் தயாரிக்க வேண்டும். - அ.நாராயணமூர்த்தி, மூத்த பேராசிரியர், முன்னாள் முழுநேர உறுப்பினா் - CACP. தொடர்புக்கு: narayana64@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago