முதலாளித்துவம் முடிவுறும் என்ற எண்ணமே சுகமாகத்தான் இருக்கிறது
வானைப் பிளக்கின்றன குரல்கள்.. ‘சோஷலிஸம் வீழ்ந்துவிட்டது, சோவியத் ஒன்றியம் சிதறுண்டதுடன் கனவுகள் சிதறிவிட்டன. பெர்லின் சுவரின் இடிபாடுகளில் சோஷலிஸம் புதைக்கப்பட்டுவிட்டது. இனி, முதலாளித்துவத்துக்கு முடிவில்லை’ என்று எக்காளமிடுகிறார்கள். ‘முதலாளித்துவத்துக்கு மாற்று ஏதும் இல்லை’ என்ற அகங்கார முழக்கம் எழுப்புகிறார்கள். அதேசமயம், இவற்றையெல்லாம் மறுக்கும் எதிர்மறை உணர்வுகளும் கொந்தளிக்கத்தான் செய்கின்றன.
அனைத்துக் கொடுமைகளுக்கும் மூலாதாரம் மூர்க்கத்தனம் கொண்ட இன்றைய முதலாளித்துவம்தான் என்கின்ற உண்மையும் மக்களுக்கு மெல்லப் புரியத் தொடங்கியிருக்கிறது. முதலாளித்துவக் கோட்டைகளிலிருந்தே எதிர்க் குரல்கள் ஒலிக்கின்றன.
நாணயத்தின் இரு பக்கங்கள்
நவம்பர் புரட்சியின் நூற்றாண்டைக் கொண்டாடும் தருணத்தில், சில கேள்விகள். 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மார்க்ஸியம் உருவாக்கிய அரசியல்-பொருளாதாரச் சித்தாந்தத்தின் ஆன்ம லட்சியம் என்ன? மார்க்ஸின் தீர்க்கதரிசனம் பல காரணங்களால் 20-ம் நூற்றாண்டில் பொய்த்துவிட்டது. 21-ம் நூற்றாண்டில் அது மெய்யாகுமா?
ஒன்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சோஷலிசத்துக்கான இயக்கம் பின்னடை வுகளைச் சந்தித்திருக்கிறது. சோவியத் ஒன்றியம் சிதறுண்டதே அதன் முக்கிய சாட்சி. எதிரிகளின் தாக்குதலைச் சந்திக்க வேண்டுமென்றால், இடதுசாரி இயக்கங் களுக்குச் சுய விமர்சனமும், தவறு களைத் திருத்திக்கொள்ளும் முதிர்ச்சியும் தேவை.
முதல் பாடம், சோஷலிஸமும் ஜனநாயக மும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஜனநாயகமின்றி சோஷலிஸமில்லை; சோஷலிஸமின்றி ஜனநாயகம் இல்லை. இதனை மறுத்துச் செய்துகொள்ளும் சமரசங்கள் மார்க்ஸியத்தின் மன்னிக்கவியலா திரிபுகள். சோவியத் ஒன்றியத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வர்க்க சமுதாயத்தை ஒழிப்பதைவிட்டு, ஒரு மோசமான மேலாண்மை வர்க்கத்தை உருவாக்கிவிட்டது. ஜனநாயகம் மறுக்கப்பட்டது என்ற விமர்சனங்கள் சோவியத் ஒன்றியத்துக்கு மட்டுமல்ல, பல நாடுகளின் கம்யூனிஸக் கட்சிகளுக்கும் பொருந்தும். 21-ம் நூற்றாண்டின் சோஷலிஸம் இத்தவறுகளையெல்லாம் விடுத்து, பன்முக ஜனநாயகத்துக்கு வழிவகுக்க வேண்டும்.
சோஷலிஸ சமுதாயம்
20-ம் நூற்றாண்டின் சோஷலிஸ அரசுகள், முதலாளித்துவ நாடுகளுடன் முதலாளித்துவத் தளத்திலேயே போட்டி போட்டுக்கொண்டு, அவற்றை எட்டிப் பிடித்து விட வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டன. தங்களுக்கென்ற தனிப் பாதையை வகுக்கத் தவறிவிட்டன. அது தற்கொலைப் பாதையாயிற்று.
மார்க்ஸியம் பொருளாதார உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்குத்தான் முன்னுரிமை அளிக்கிறது என்பது தவறு. சோஷலிஸ சமுதாயம் வடிவெடுக்கும்போது, அதன் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியுடன் கூடவே உருவாக வேண்டியவன் சோஷலிஸ மனிதன். அவன் முதலாளித்துவ சமு தாய மனிதனிலிருந்து முற்றிலும் வேறு பட்டவன். சிந்தனையில், உணர்வுகளில், லட்சியங்களில், உழைப்பில், நம்பிக்கை களில், விழுமியங்களில் மாறுபட்டவன். இதை மறந்து, சோவியத் யூனியனும், மற்ற புரட்சிக்குப் பிந்தைய சமுதாயங்களும், உற்பத்திச் சக்தியின் வளர்ச்சியில் மட்டும் கவனத்தைச் செலுத்தின. ஒரு புதிய சோஷலிஸ மனிதனை உருவாக்கத் தவறிவிட்டன.
முதலாளித்துவம் முடிவுறும் என்ற எண்ணமே சுகமாகத்தான் இருக்கிறது. ஆனால், அதற்கு முன் ஒரு பயங்கர ஊழித் தாண்டவம் ஆடிவிட்டுத்தான் அது சாகும். இன்றைய நிதி மூலதனம் உண்மைப் பொருளாதாரத்திலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது. சூதாட்டம்தான் இன்று அதன் பிரதான வடிவம். அதன் மாய வலையில் உலகம் முழுவதையும் கட்டிப்போட்டிருக்கிறது. அதிலிருந்து தப்புவது எளிதல்ல.
முதலாளித்துவத் தந்திரங்கள்
நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அச்சாணி ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி. அதற்கான சந்தை உலகெங்கும் வியாபித்துள்ளது. அதன் வியாபாரம் செழிக்க வேண்டுமென்றால், லாபம் பெருக வேண்டுமென்றால் போர்கள் மூண்டுகொண்டே இருக்க வேண்டும். போர்களைத் தூண்டுவதும், ஒற்றுமையை உடைப்பதும், விரோதங்களை வளர்ப்பதும், அந்தப் பேரழிவில் முதலீடு செய்வதும், அதன் வியாபாரத் தேவைகள், வியாபாரத் தந்திரங்கள்.
இன்று உலகாளும் முதலாளித்துவம் வன்முறையின் பாதுகாவலன், அமைதியின் பேரெதிரி. உலக வரலாறு முழுவதிலும் இத்தனை பிரம்மாண்ட சர்வ சக்தி கொண்ட ஓர் ஆதிக்க வல்லமை இதற்கு முன் இருந்ததே இல்லை. இந்தக் கொடூர எதிரியின் அனைத்துப் பரிமாணங்களையும், அனைத்து சாணக்கிய ராஜதந்திரங்களையும் புரிந்துகொண்டுதான் மக்களின் எதிர்ப்பு இயக்கங்கள் கட்டப்பட வேண்டும்.
வளர்ச்சிக்கான மார்க்கம்
ஒன்று நிச்சயம். சோஷலிஸம் கனிந்து, ஆகாயத்திலிருந்து தானாக நம் மடியில் விழப்போவதில்லை. தெளிந்த இலக்கும், கடுமையான உழைப்பும், ஜனநாயக அமைப்பும், உழைக்கும் மக்களைத் திரட்டிய ஒருமைப்பாடும் தேவை.
இந்தியாவில் இடதுசாரி இயக்கங்களின் முன் நிற்கும் பணிகளை எவ்வாறு புரிந்துகொள்வது? நம் மண்ணுக்கேற்ற மார்க்ஸியம் எது? இந்தியாவில் எது புரட்சிகர வர்க்கம்? சாதியம்-பெண்ணடிமை என்ற இரும்புச் சட்டகத்துள் சிறைபட்டுக் கிடக்கும் இந்தியாவில், வர்க்கம் என்பதற்குப் பொருள் என்ன? தலித்துகளும், பழங்குடியினரும் மற்ற அடித்தட்டுச் சாதிகளும் புரட்சிகர வர்க்கமாக முடியுமா? மார்க்ஸ், “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். உங்கள் விலங்குகளைத் தவிர, இழப்பதற்கு உங்களிடம் ஒன்றும் இல்லை” என்று அறைகூவல் விடுத்தார். இன்று நம்மிடையே இழப்பதற்கு ஒன்றுமில்லாதவர்கள் யார்? அவர்கள்தான் புரட்சிப் படையாக முடியுமா?
ஆயிரம் கேள்விகளுக்கு இடையில் ஒன்று மட்டும் தெளிவு. முதலாளித்துவத்துக்கு மனித நேய முகமூடி மாட்டி, அதனையே தொடரலாம் என்பது பகல்கனவு; ஏமாற்று வித்தை. முதலாளித்துவமும் மனிதமும் முரண்பட்டவை. முதலாளித்துவம் முடிக் கப்பட வேண்டும்; உடைக்கப்பட வேண் டும்; புதைக்கப்பட வேண்டும். சோஷ லிஸம் ஒன்றுதான் மனித சமுதாயத்தின் விடுதலைக்கு, மகோன்னத வளர்ச்சிக்குமான மார்க்கம். ஆனால், அது இருபதாம் நூற்றாண்டின் சோஷலிஸமாக இருக்க முடியாது. ஒரு புனர்ஜன்மம் எடுத்த சோஷலிஸத்தினால்தான் அது இயலும். இருபதாம் நூற்றாண்டின் இமாலயத் தவறு களையும், மனித உரிமை மீறல்களையும், தவிர்த்த சோஷலிஸம்தான் இருபத்தியோராம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கும், நீதிக்கும், மானுட விடுதலைக்கும் சித்தாந்தத் தளமாக முடியும்!
( 2016, நவம்பர் 7 அன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சென்னையில் நடத்திய ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டுத் தொடக்க விழாவில் நிகழ்த்திய உரையின் சுருக்கம்.)
- வே. வசந்தி தேவி, மூத்த கல்வியாளர், ‘கல்வி ஓர் அரசியல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: vasanthideviv@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago