எவ்வளவோ மீன்களும் பிற உயிரினங்களும் இருக்கின்றன, ஓங்கல்போல (டால்பின்) ஒரு நண்பன் கடலோடிகளுக்குக் கிடைப்பதில்லை. உலகம் முழுக்கக் கடலோடிகள் சமூகம் ஆராதிக்கும் உயிரினம் ஓங்கல்.
தமிழக மீனவர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உண்டு, ஓங்கல்கள் கடந்த காலத்தில் மீனவர்களாகப் பிறந்தவர்கள் என்று. ஏனென்றால், கடலோடிகளிடம் அப்படி ஒரு பாசத்தை வெளிப்படுத்துபவை ஓங்கல்கள். மீனவர்கள் எவரிடமாவது ஓங்கல்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் நாளெல்லாம் நாம் கதை கேட்கலாம். மீன்பிடி படகுகளை ஒட்டி ஒட்டி வந்து, மூக்கைத் தேய்த்து அவை அன்பை வெளிப்படுத்தும் கதைகள்... கடலுக்கு மேலே தாவிக் குதித்து உற்சாகத் துள்ளல் போட்டு, மகிழ்ச்சியாட்டம் போடும் கதைகள்... வித்தியாசமான ஒலிகளை எழுப்பி ஏதேதோ செய்திகளைச் சொல்லவரும் கதைகள்.... யாரேனும் கடலடியில் சிக்கி, தத்தளித்துக்கொண்டிருப்பதைக் கண்டால், கூட்டத்தோடு அங்கு சூழ்ந்து, தத்தளிப்பவர்களை மூக்கில் தாங்கி உந்திஉந்தி அவர்களைக் கடற்கரைக்குக் கொண்டுவந்துவிடும் கதைகள்...
திமிங்கில உடன்பிறப்பு
உலகெங்கும் கடலில் காணக் கிடைக்கும் இனங்களில் ஓங்கல்கள் இனமும் ஒன்று. அடிப்படையில் இவை பாலூட்டிகள். திமிங்கிலங்களுக்கு நெருங்கிய சொந்தம் என்கிறார்கள். சுமார் ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் ஓங்கல்கள் இனம் தோன்றியிருக்கலாம் என்றும் ஓங்கல்களின் மூதாதை இனம் 5.5 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் தரையிலிருந்து கடலுக்குக் குடிபெயர்ந்திருக்கலாம் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன. ஆமாம், ஓங்கல்கள் தரைவாழ் பாலூட்டிகளின் வழித்தோன்றல்கள்.
பல் வெறும் பல் மட்டும் அல்ல
கடல் நீரில் மட்டுமல்லாமல், ஆற்று நீரிலும் வசிக்கக் கூடிய ஓங்கல்கள் சுமார் 4 அடி முதல் 30 அடி நீளம் வரை வளரக்கூடியவை. நன்கு வளர்ந்த ஓங்கல் 10 டன் எடை இருக்கும். கடல் நீரில் மட்டுமல்லாமல் ஆற்று நீரிலும் வசிக்கும் திறன் உண்டு. வேகமாக நீந்துவதற்கேற்ற உடலமைப்பு கொண்ட ஓங்கல்கள் தங்களுடைய தலையின் மேல்புறத்தில் உள்ள ஓட்டை வழியாக சுவாசிக்கின்றன. கடலுக்குள்ளும் சரி; கடலுக்கு வெளியிலும் சரி, ஓங்கல்களின் கண் பார்வைத்திறன் அபாரமானது. அதேபோல, மனிதர்களைவிட ஓங்கல்களுக்குக் செவித் திறன் 10 மடங்கு அதிகம் என்கிறார்கள். ஒலி எந்தத் திசையிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து வருகிறது என்பதை ஓங்கல்கள் பற்கள் மூலமாக அறிந்துகொள்கின்றன என்று சொல்கிறார்கள்.
கருணையுள்ளம் கொண்ட ராசா
சமூகப் பிராணிகளான ஓங்கல்கள் கூட்டமாகவே இருப்பதையே விரும்பும். இரை கிடைக்கும் இடங்களில் ஓங்கல்களின் குழுக்கள் பெரிய கூட்டமாகிவிடும். ஓங்கல்கள் தங்களுடைய இரைகளைப் பிடிப்பதிலும் வித்தியாசமானவை. மீன் கூட்டத்தை அப்படியே கும்பலாக, குறுகிய பகுதிக்கு விரட்டிச்சென்று சுற்றிவளைத்து அப்படியே விழுங்கிச் சாப்பிட ஆரம்பிக்கும். அதேசமயம், ஓங்கல்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வதும் உண்டு. முக்கியமாக, காதல் போட்டி. பெண் ஓங்கல்கள் அன்பைப் பெற ஆண் ஓங்கல்கள் இடையே கடும் சண்டை நடக்குமாம்.
அடிப்படையில், ஓங்கல்கள் கருணை மனம் படைத்தவை. ஏதேனும் ஒரு ஓங்கலுக்கு அடிபட்டுவிட்டாலோ, முடியவில்லை என்றாலோ அந்த ஓங்கலை சக ஓங்கல்கள் அன்பாகக் கவனித்துக்கொள்ளும். மூச்சுவிட சிரமப்படும் ஓங்கல்களை மற்றவை கடலின் நீர்மட்டத்துக்கு மேலே கைத்தாங்கலாக அழைத்துவரும். தங்களுடைய இனத்துக்கு மட்டுமல்லாது திமிங்கிலங்களுக்கும்கூட இவை உதவும். இந்த உதவியின் நீட்சிதான் மனிதர்கள் மீது அவை காட்டும் அன்பும்.
ஓங்கல்கள் பிற ஓங்கல்களுடனும் உரையாடுவதுடன் மனிதர்களிடமும்கூடப் பேச முற்படும் என்கிறார்கள் மீனவர்கள். விசில் ஊதுவதைப் போல ஓசை எழுப்பி எச்சரிக்கும். அதேபோல, சைகைகளையும் தெரிவிக்கும் என்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு திசையை நோக்கிச் சுட்டியபடி ஓங்கல்கள் எதையேனும் தெரிவிக்க முற்பட்டால், அந்தத் திசையிலிருந்து ஆபத்து வரும் என்கிறார்கள் மீனவர்கள்.
எதிரி சுறா
சுறாக்களுக்கும் ஓங்கல்களுக்கும் ஆவதில்லை. கடலில் ஒரு மனிதன் சிக்கிக்கொண்டு தத்தளிப்பதை ஒரு சுறா பார்த்தால், அவனை அப்படியே சாப்பிட்டுவிடத் துடிக்கும்; ஓங்கல்களோ காப்பாற்ற நினைக்கும். மீனவர்களைக் காப்பாற்றுவதற்காகச் சுறாக்களுடன் சண்டையிட்டு, கடும் காயங்களைச் சந்தித்த ஓங்கல்களெல்லாம் உண்டு என்கிறார்கள். ஓர் ஆச்சரியம் என்னவென்றால், இப்படி சுறாக்கடியில் சிக்கும் ஓங்கல்கள் வெகுசீக்கிரம் தாமாகவே தேறிவிடும்.
கைரேகைபோலக் குரல் ஒலி
சீட்டி ஒலியைப் போன்று இருக்குமாம் ஓங்கல்களின் குரலோசை. மனிதர்களுக்கு ஒவ்வொருவரின் கைரேகையும் பிரத்யேகமாக இருப்பதைப் போல, ஓங்கல்களுக்குக் குரலோசை பிரத்யேகமாக இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஒவ்வொரு குதிக்கும் ஓர் அர்த்தம்
கடலில் தண்ணீருக்கு வெளியே ஓங்கல்கள் தாவிக் குதிப்பதைக் காணக் கண் கோடி வேண்டும் என்று சொல்லும் மீனவர்கள், அதேசமயம், அவை இப்படிக் குதிப்பதற்குப் பல்வேறு அர்த்தங்கள் உண்டு என்கிறார்கள். உடம்பில் ஏதாவது ஒட்டிக்கொண்டால், அவற்றை உதறுவதற்காகவும்கூட அவை இப்படிக் குதிக்கும் என்கிறார்கள். படகுக்குப் பக்கத்தில் மூக்கை உரசிக்கொண்டு வரும் ஓங்கல்களுக்கு மீன்களைத் தூக்கி உயரே போட்டால், தாவிக் குதித்து மீனை வாயில் கவ்வும் ஓங்கல் நன்றி சொல்லி சப்தம் எழுப்புமாம். கடல் பறவைகளைத் தாவிப் பிடித்து தண்ணீரில் அமிழ்த்துவதும் ஓங்கல்களின் விளையாட்டுகளில் ஒன்றாம். தூங்கும்போதும்கூட எதிரிகள் யாரும் சூழ்கிறார்களா என்கிற விழிப்புடனேயே இருக்கும் ஓங்கல்கள் உலகின் சில பகுதிகளில் வேட்டையாடப்பட்டாலும் நம் மீனவர்கள் அவற்றைப் பிடிப்பதில்லை. தவறி வலையில் சிக்கி, வலையை அறுத்தாலும் கோபப்படுவதில்லை. ஒருவகையில் ஓங்கல்கள் அவர்களுக்கு நண்பர்கள்; இன்னொரு வகையில் கடல் தேவதையின் தூதர்கள்!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago