இன்று உலகின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் முதலாளிகளில் ஒருவராக அறியப்படுபவர் ட்ரம்ப்
அமெரிக்காவின் பழம்பெரும் கட்சி குடியரசுக் கட்சி. அது Grand Old Party (GOP) என்றே அழைக்கப்படுகிறது. நமது காங்கிரஸ் கட்சியைப் போல மாபெரும் தலைவர்கள் வளர்த்த கட்சி. ஆபிரகாம் லிங்கனின் கட்சி. ஐசனோவரின் கட்சி. சோவியத் அரசை வீழ்த்தியவர்களில் முன்னணியில் நின்ற ரொனால்ட் ரீகனின் கட்சி. ட்ரம்பை எப்படி இந்தக் கட்சி தேர்ந்தெடுத்தது?
அமெரிக்க அதிபர் பதவிக்கு ஆசைப்படுபவர்களுக்கு நான்கு விஷயங்களில் கொஞ்சமாவது புரிதல் இருக்க வேண்டும்: சட்டங்கள் எவ்வாறு கொண்டுவரப்படுகின்றன, ராணுவம் எப்படிச் செயல்படுகிறது, அமெரிக்காவின் வெளிநாட்டு உறவுகள் எத்தகையவை, மைய அரசு எவ்வாறு இயங்குகிறது என்பவையே அவை. இவற்றில் எதிலும் ட்ரம்புக்கு அனுபவம் கிடையாது. இருந்தாலும் அவர் அந்தக் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கட்சிக்கு வேறு ஆட்களே கிடைக்கவில்லையா? எப்படி அவர் வந்தார்?
பெரும் பணக்காரர்
நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதி ஒரு காலத்தில் நகரத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதாகக் கருதப்பட்டது. இன்று அது பெரும் வளர்ச்சியடைந்த பகுதி. வெள்ளை இனத்தவர்கள் இங்கு சிறுபான்மையினர். இந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து பெரும் பணக்காரர் ஆனவர் ட்ரம்பின் தந்தை. குடும்பத் தொழிலையே மகனும் செய்தார். புகழ்பெற்ற வார்டன் பள்ளியில் பயின்றவர். எம்பயர் ஸ்டேட் கட்டிடம் உட்படப் பல நியூயார்க் கட்டிடங்களையும் உணவகங்களையும் சில பத்தாண்டுகளுக்கு முன்னால் வாங்கியவர். பெரும்புள்ளி. கடன் பெருகி எல்லாவற்றையும் இழக்கும் நிலைமையும் அவருக்கு வந்தது. எல்லாவற்றிலிருந்தும் மீண்டவர். இன்று உலகின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் முதலாளிகளில் ஒருவராக அறியப்படுபவர்.
அதிபர் பதவிக்கு இதுவரை போட்டியிட்ட எல்லோரையும்விடப் பெரும் பணக்காரராக இவர்தான் இருப்பார். சொத்துகளின் மதிப்பு சுமார் பத்து பில்லியன் டாலர்கள் என்கிறார்கள். தனது வருமான வரி விவரங்களைப் பகிரங்கமாக அறிவிப்பேன் என்று இன்றுவரை சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால், அறிவிப்பு வெளிவரக் காணோம். அவரே நான் வரிகள் கட்டுவதில்லை என்று அறிவித்திருக்கிறார். சட்டங்களில் இருக்கும் ஓட்டைகளை அவரைவிடத் திறமையாகப் பயன்படுத்தியவர்கள் மிகச் சிலரே இருப்பார்கள். 1995-ல் 916 மில்லியன் டாலர்கள் இழப்புகளைக் காட்டி, 18 ஆண்டுகள் வரிவிலக்கு பெற்றவர் என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை சொல்கிறது.
பல ஆண்டுகளாக அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வாய்ப்புகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் ட்ரம்ப். ராஸ் பெரோ என்பவர் தொடங்கிய ‘சீர்திருத்தக் கட்சி’ என்னும் அனாமதேயக் கட்சியில் 1999-ல் சேர்ந்து போட்டியில் குதிக்கலாமா என்றுகூட நினைத்தார். 2000-ல் திரும்பக் குடியரசுக் கட்சிக்கு வந்தார். 2012-ல் ஒபாமா அமெரிக்கக் குடிமகனே இல்லை என்று ஒரு பிரச்சினையைக் கிளப்பிக் கவனத்தைத் தன் மீது திருப்ப முயற்சி செய்தார். ஆனால், அவர் குடியரசுக் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம், அவர் அமெரிக்காவின் கவனத்தை அமெரிக்கா மீது திருப்பியதால் என்று சொல்லலாம் குறிப்பாக, வெள்ளை அமெரிக்காவின் கவனத்தை. வெள்ளை இனப் பணக்காரர்களும் பணக்காரர்களாக ஆவோம் என்று கனவு காண்பவர்களும் சொல்ல விரும்பியதை, ஆனால் சொல்லத் தயங்கியதை அவர் மிகத் தெளிவாக, உரத்த குரலில் சொன்னார். சொல்லிக்கொண்டிருக்கிறார்.
என்ன சொல்கிறார்?
முதலில் சட்டங்களின் ஓட்டைகளை அடைத்து, வரிகளைக் குறைக்க வேண்டும் என்கிறார். இதனால், மைய அரசின் வருமானம் குறையலாம். பணக்காரர்கள் பயன் பெறலாம். ஆனால், அவர்கள் முதலீடு செய்வதால் வேலை வாய்ப்புகள் பெருகும். அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெருக வேண்டுமானால், சீனா போன்ற நாடுகளுக்கு அமெரிக்க நிறுவனங்களின் வேலைகள் செல்வதைத் தடுக்க எல்லா முயற்சியும் செய்ய வேண்டும். இரண்டாவதாக அமெரிக்காவுக்கு மக்கள் குடியேறுவதைத் தடுக்க வேண்டும்; குறிப்பாக இஸ்லாமியரையும் ஹிஸ்பானிக்குகளையும் வரவிடக் கூடாது. மெக்ஸிகோ நாட்டிலிருந்து ஆட்கள் நுழைவதைத் தடுக்கச் சுவர் எழுப்ப வேண்டும். மூன்றாவதாக, இஸ்லாமியப் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும்; இரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும்; ரஷ்யாவுடன் நட்புகொள்ள வேண்டும்.
அனேகமாக எல்லாக் கருத்துக் கணிப்புகளும் ட்ரம்ப் வெற்றிபெறுவது கடினம் என்கின்றன. ஆனால், போட்டி கடுமை என்றும் சொல்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெறவே மாட்டார்கள் என்று நினைத்தவர்களும் வெற்றிபெற்ற வரலாறு இருக்கிறது. ஒருவேளை ட்ரம்ப் வெற்றி அடைந்தால், யாருடைய ஆதரவில் வெற்றி அடைவார்? அமெரிக்காவில் சிறுபான்மையினர் 25%. இவர்கள் யாரும் ட்ரம்புக்கு வாக்களிக்க மாட்டார்கள். மீதமிருப்பவர்களில் 37.5% பெண்கள். இவர்களில் 30% (அதாவது மொத்தத்தில் 11%) ட்ரம்புக்கு வாக்களித்தால் அதிசயம். எனவே, வெள்ளை இனத்து ஆண்களில் 80% மேலாக ட்ரம்புக்கு வாக்களித்தால் மட்டுமே அவரால் வெற்றிபெற முடியும். இது நடந்தால் சிறுபான்மையினரின் நிலைமை கேள்விக்குறிதான். அமெரிக்கா மதச்சார்பின்மையை வலியுறுத்தும் நாடாகவே இன்று வரை அறியப்படுகிறது. ட்ரம்ப் வெற்றியடைந்தால் அது பைபிளை முழுமையாக நம்புபவர்களும் பணத்தை முழுமையாக நம்புபவர்களும் இணைந்துகொடுத்த வெற்றியாகவே இருக்கும்.
நேற்று எனது நண்பரின் மனைவி, ‘‘ட்ரம்ப் வெற்றிபெற்றால் இந்தியா திரும்புவதாக இருக்கிறேன்’’ என்று சொன்னார். யார் வெற்றி பெற்றாலும் யாரும் திரும்பப்போவதில்லை. ஆனால், ட்ரம்பின் வெற்றி அமெரிக்க வரலாற்றின் திசையையே மாற்றிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.
(அமெரிக்காவைச் சுற்றுவோம்)
- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்.
தொடர்புக்கு: tigerclaw@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago