கைச் செலவுக்குக் காசில்லாமல் ‘கரன்ஸி’ கத்தையுடன் அலைகிறது இந்தியா
“டீயும் போண்டாவும் சாப்பிடலாமா?” என திடீரென்று சிவசு சார் கேட்டபோது, மொத்த டீமும் விலுக்கென்று தலையைத் தூக்கிப் பார்த்து, நூறு ரூபாய் கட்டை நேரில் பார்த்த கோடீஸ்வரன் போல் குதூகலித்தது. மறுகணமே, “யார் இன்னிக்கு செலவு பண்றீங்க?” என்று சிவசு கேட்டதும், மோடியின் கை சொடக்கில் மதிப்பிழந்த கரன்ஸிகளைப் போல் மொத்த உற்சாகமும் காணாமல்போனது. பிறகு, அணியின் உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு, (மோடி போலவே) முடிந்தவரை முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு யோசனையில் ஆழ்ந்தோம். எல்லோரிடமும் தலைக்கு ஆயிரம் ரூபாய் கரன்ஸி இருக்கிறது. ஆனால், ஆயிரத்தை விட அதிக மதிப்பு கொண்ட நூறு ரூபாய் எவரிடத்திலும் இல்லை. “கடல்லேயே இல்லையாம்!” என்று கலாய்த்தபடி வந்தமர்ந்தார் மானா பாஸ்கரன்.
மனிதருக்கு தி.நகரில் கூட்டமில்லாத ஏடிஎம்மில் சில்லறை எடுத்துவிட்ட செருக்கு. பாக்கெட்டி லிருந்து பத்து நூறு ரூபாய்களை எடுத்து விசிறிக் காட்டி வெறுப்பேற்றினார். உடனடியாக அவரிடம் கடன் கேட்கும் முடிவை எடுத்தோம். மனிதர் வெகு வாகப் பிகு செய்து கடைசியில் பணம் தர ஒப்புக் கொண்டார். அதேசமயம், “எப்போது திரும்பக் கிடைக்கும் என்று எழுதி ‘ஸ்டாம்ப்’ ஒட்டித் தாரு மய்யா” என்று புதுமைப்பித்தனின் வேதாளம் போல் முரண்டுபிடித்தார். கடன் அன்பை முறிக் கும் கேள்விப்பட்டிருக்கிறோம். ‘டிமானிடைசே ஷன்’ நட்பையே முறித்துவிடுமோ என்று நடுங்கி விட்டோம். என்செய்ய! நிலைமை அப்படி. ஒப்பந்தம் கையெழுத்தாகி கரன்ஸியும் கைமாறியது. (மானா முன்பு என்னிடம் வாங்கிய நூறு ரூபாய் தனிக் கதை)
வழியெல்லாம் நூறு ரூபாயை எடுத்து விசிறிக்கொண்டே போன எங்களைப் பார்த்துப் பொறாமையில் வயிறெரிந்தார்கள் காரில் சென்ற ஏழைகள். மூடிக் கிடக்கும் ஏடிஎம்கள் அடுத்த வாரமாவது வேலை செய்யுமா என்று தெருவுக்குத் தெரு தேவுடு காக்கும் தேசபக்தர்களைக் கடந்து சென்றபோது, தேசபக்தியில் தேகமே சிலிர்த்தது. கையில் ஒரு ‘அமவுண்ட்’ இருந்தால் செலவு செய்யாமலேயே ஒரு துணிச்சல் வரும். அந்தத் துணிச்சலில் துள்ளிக் குதித்துச் சென்றாலும் மனதில் ஒரு வாரத்துக்கு முன்பு வாழ்ந்த ராஜவாழ்க்கை நினைவுக்கு வந்து வாட்டியது. நேரம் கிடைக்கும்போது தாராளமாகச் செலவுசெய்து சமோசா, வடை சாப்பிடுவோம். டீ குடிப்போம். ஏன் சாக்லேட் கூடச் சாப்பிட்டிருக்கிறோம். அத்தனை வளமாக வாழ்ந்த காலம் போய், இன்றைக்குப் போதாத காலம்; கடன் வாங்க வேண்டிய நிலைமை.
இதாவது பரவாயில்லை. எந்த விவரமும் தெரியாத நண்பர் ஒருவர் நவம்பர் எட்டு அன்று நள்ளிரவில் (திகில் படம் மாதிரி இருக்கிறதல்லவா!) ஓட்டல் ஒன்றில் புரோட்டாக்களை விழுங்கிவிட்டு ஆயிரம் ரூபாய் நீட்டியிருக்கிறார். எட்டு மணி அளவில் மோடி இந்தத் தேசத்துக்கு விட்டுச்சென்ற மாபெரும் செய்தியைப் பார்த்ததிலிருந்து விக்கித்துப்போயிருந்த ஓட்டல் ஓனர், பதிலுக்கு ரிவால்வரை நீட்டியிருக்கிறார். நண்பர் குடல் நடுங்க கடிகாரம், நகையெல்லாம் கழற்றிவைத்து உயிர்ப் பிச்சை கேட்டுக் கதறிவிட்டார். அவற்றைத் தொட்டுக்கூடப் பார்க்க விரும்பாத ஓட்டல்காரர் “இன்றைய ஸ்பெஷல் நர பிரியாணின்னு எழுதி வைடா” என்று சர்வரைப் பணித்துவிட்டு, குறிபார்த்த படி வெறியுடன் நின்றிருக்கிறார். ஒருவழியாக ஆபத்பாந்தவனாக வந்த ஒருவர் ஐம்பது ரூபாய் கடன் கொடுக்க அநாமத்தாகப் போயிருக்க வேண் டிய நண்பரின் உயிர் ஒரு வழியாகத் தப்பியது.
அடுத்த நாள் அதிகாலையிலிருந்தே கறுப்புப் பணம், சிவப்புப் பணம், மாநிறப் பணம் வைத்திருந்தவர்கள் என்று வர்ஜாவர்ஜம் இல்லாமல், அத்தனை பேரும் (ரஜினி போன்ற புதிய இந்தியாவின் குடிமக்கள், முற்பிறவியிலிருந்தே உத்தமமாக வாழ்ந்துவரும் அருண் ஜேட்லி போன்ற அரசியல் தலைவர்கள், அஃப்கோர்ஸ் - தேசத்துக்காகவே வீட்டை விட்டு வெளியில் வந்து நடந்து சென்ற பிரதமர் மோடி உள்ளிட்டோர் நீங்கலாக) தெருவில் இறங்கி ஒருவர் சட்டையின் பின்புறத்தை மற்றவர் பிடித்தவாறு ரயில் விளையாட்டு விளையாடியபடி வங்கிகள் முன்பு குதூகலத்துடன் கூடினார்கள். அனைவர் முகத்திலும் அத்தனை களிப்பு. இருக்காதா பின்னே! ஏழை, பணக்காரன் வித்தியாசமில்லாமல் அனைவரையும் சமமாக வைத்து அழகு பார்க்கும் அரசுக்கு நன்றி சொல்லி, வாழ்த்தியபடி வங்கிக் கதவு திறக்கக் காத்திருந்தார்கள். கதவு திறந்ததும்தான் தாமதம், ஒருவரை ஒருவர் கீழே தள்ளி, வயிற்றில் ஏறி மிதித்துக்கொண்டும், தள்ளுமுள்ளில் முண்டியபடி சந்தோஷமாக உள்ளே போனார்கள். வெளியில் வரும்போது சட்டை கிழிந்திருந்தாலும் சம்பாதித்த பணத்தை மீட்டெடுத்ததில் பரம திருப்தி.
அதிரடியாக அறிவித்துவிட்டு அடுத்த ஃப்ளைட் டில் ஜப்பான் சென்று பிடில் வாசித்துக்கொண்டிருந்த மோடியைப் பார்த்தபோது, கரன்ஸி கைநழுவுவதைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் மக்கள் கைதட்டி மகிழ்ந்தார்கள். ஆனால், அடுத்த இரண்டாவது நாளில் இந்தியா வந்து அவர் கண்ணீர் சிந்தும் காட்சியை ஸ்மார்ட்போனில் பார்த்தபோது அத்தனை பேர் கண்களிலும் ‘நீரோ’ நீர்!
கதையில் ஒரு ‘ஆன்ட்டி - கிளைமாக்ஸ்’. போண்டா கடையை நெருங்கும்போது ரங்காச்சாரி சாரின் அழைப்பு. எடுத்தால், ‘பத்து பஜ்ஜி வாங்கி வந்துருக்கேன். எங்கிருந்தாலும் அலுவலகத்துக்கு வரவும்’ என்றார். நூறு ரூபாய் செலவாகாமல் சேகரமானதில் ஏக திருப்தி. ஓட்டோட்டமாக அலுவலகத்தை வந்தடைந்தோம். சில்லறை முக்கியம் அமைச்சரே!
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago