ஒரு ஊருக்குப் பயணமாகிறோம். முன்பின் தெரியாத ஊர். ஆனாலும், அந்த ஊரைப் பற்றி அதுவரை கேள்விப்பட்டிருந்த, அதுவரை படங்கள் வழியாகப் பார்த்திருந்த, புத்தகங்கள் வழியாகப் படித்திருந்த விஷயங்கள் நம் மனதுக்குள் ஒரு சித்திரத்தை உருவாக்கும் இல்லையா? தனுஷ்கோடியைப் பற்றி அப்படி எனக்கும் ஒரு சித்திரம் இருந்தது. தனுஷ்கோடி என்றால், நம் எல்லோருக்கும் உடனே என்ன ஞாபகத்துக்கு வரும்? கடலில் சிதிலமடைந்த அந்த தேவாலயமும் அதையொட்டிய கடலும்... என் மனச்சித்திரத்தில் உயிர்பெற்றிருந்த தனுஷ்கோடி அதைத் தாண்டியும் வளர்ந்திருந்தது. இந்திய வரைபடங்களும் வரலாற்றுப் புத்தகங்களும் ஆவணப் புகைப்படங்களும் ஊட்டி வளர்த்த சித்திரம் அது. கடலில் புதையுண்ட ஒரு பண்டைய துறைமுக நகரத்தின் எச்சங்களிலிருந்து உருவான ஊரின் சித்திரம் அது.
இந்தியாவின் 8,118 கி.மீ. நீளக் கடற்கரையில் தனுஷ் கோடிக்கு முக்கியமான இடம் உண்டு. இந்தியாவைக் கடல் வழியே தொட நினைக்கும் ஒரு அந்நிய நாட்டுக்கு, நம்முடைய கடற்கரையில் மிக எளிய நுழைவாயில் தனுஷ்கோடிதான். தனுஷ்கோடியிலிருந்து வெறும் 15.6 கடல் மைல் தொலைவில் இருக்கிறது இலங்கையின் தலைமன்னார். இந்திய - இலங்கை அளவில் மட்டும் அல்ல; சர்வதேச அளவிலும் இரு நாடுகளுக்கு இடையேயான மிக நெருக்கமான கடற்கரையோர எல்லைகளைக் கொண்ட நுழைவாயில்கள் தனுஷ்கோடியும் தலைமன்னாரும்.
தனுஷ்கோடி தீவு உருவான கதை
இன்றைக்கு இந்திய நிலப்பரப்புக்கு வெளியே இருக்கும் ஒரு கடல்சூழ் தீவு தனுஷ்கோடி. அதாவது, நாம் சென்னையிலிருந்து புறப்பட்டால், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் என்று மண்டபத்தோடு முடிந்துபோகிறது நம் நாட்டின் நிலப்பரப்பு. நடுவே, ஒரு ஆறுபோலக் குறுக்கிடுகிறது கடல். அதைப் பாலம் வழியே கடந்தால், பாம்பனில் தொடங்கி ராமேஸ்வரம் வழியாக தனுஷ்கோடி வரை தீவு.
ஆரம்பக் காலத்தில் இப்படி இல்லை என்கிறார்கள். தனுஷ்கோடி வரை நீண்ட நிலப்பரப்பைப் பெரும் புயல்களே கடலால் பிரித்தன என்கிறார்கள். குறிப்பாக, கி.பி.1480-ல் ஏற்பட்ட புயலுக்குப் பின்னரே நிலத்தை உடைத்துக்கொண்டு கடல் உள்ளே வந்தது என்கிறார்கள்.
இயற்கைச் சீற்றத்தின் நெருக்கம்
தனுஷ்கோடியைப் பற்றி ராமநாதபுரம் மாவட்ட மக்கள் சொல்லும் செவிவழிச் செய்திகள், பல்லாண்டு காலமாக இந்தப் பகுதி இயற்கைச் சீற்றம் மிக்க பகுதியாக இருப்பதைச் சொல்கின்றன. கடந்த 60 ஆண்டுகள் வரலாற்றை எடுத்துக்கொண்டாலே புயல்கள் நடத்திய சூறையாட்டம் அதிரவைக்கிறது. 1955 புயல் தாக்குதலின்போது ஊருக்குள் வெள்ளம் வடிய ஒரு மாதத்துக்கும் மேல் ஆகியிருக்கிறது. 1964 புயல் தாக்குதல் ஊரையே அழித்துவிட்டுச் சென்றிருக்கிறது.
பேய் நகரம்
ஒருகாலத்தில் வாழத் தகுதியற்ற இடம் என்று நம்முடைய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இடம் தனுஷ்கோடி. பேய் நகரம் என்று அரசாலும் ஊடகங்களாலும் வர்ணிக்கப்பட்ட இடம். ஆனால், காலங்காலமாக அங்கேயே வாழ்ந்துவந்த மீனவ மக்களால் அந்த ஊரை விட்டுவிட முடியவில்லை. கடல் தாக்குதலில் தப்பித்த பெரும்பான்மை தனுஷ்கோடிவாசிகள், அவர்களுடைய தலைமுறைகள் - கிட்டத்தட்ட இரண்டாயிரத்துச் சொச்சம் பேர் - இன்னமும் தனுஷ்கோடியை விட்டு அகலாமல் இருக்கிறார்கள். அந்த ஊரை உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள். இந்த விஷயங்கள்தான் தனுஷ்கோடி மேல் ஒரு பெரிய ஈர்ப்பை எனக்கு உருவாக்கக் காரணமாக இருந்தன.
இன்னொரு உலகின் முகம்
ராமேஸ்வரம் கடற்கரை பஸ் நிலையத்தில் தனுஷ்கோடி பஸ்ஸில் ஏறியதும் ஜன்னலோர இடம் கிடைத்தது. இருபுறமும் சவுக்குத் தோப்புகள் சூழ்ந்த சாலையில் பஸ் நுழைந்ததும் கொஞ்சம்கொஞ்சமாக விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்த என் மனச்சித்திரம், ஒரு மணி நேரம் கழித்து “தனுஷ்கோடி வந்தாச்சு இறங்குங்கப்பா” என்று நடத்துநர் இறங்கச் சொன்னபோது சுக்குநூறாக உடைந்து சிதறியது.
உண்மையில் பஸ் தனுஷ்கோடிக்குச் செல்லவில்லை. அதற்கு 8 கி.மீ. முன்னதாகவே முகுந்தராயச்சத்திரம் என்ற இடத்தோடு நின்றுவிட்டது. எல்லா பஸ்களும் அந்த இடத்தோடு நிறுத்தப்பட்டுவிடுகின்றன. அங்கிருந்து தனுஷ்கோடிக்குச் செல்ல பஸ்களும் இல்லை; சாலைகளும் இல்லை. இரு பக்கமும் நெருக்கமாக இருக்கிறது கடல். நடுவே, கடல் மண்திட்டு. கொஞ்ச தூரம் மணல் முட்டாக, அதற்கு அப்புறம் சேறும் சகதியுமாக. வேன்களும் ஜீப்புகளும் செல்கின்றன. ஒரு ஆளுக்கு 200 ரூபாய் கேட்கிறார்கள். ஜீப்பில் ஏறி உட்கார்ந்தால், அது செல்லச் செல்ல அங்கே இன்னொரு உலகம் விரிகிறது. சாலையின் இருபுறங்களிலும் தூரத்தில் கடல் தெரிகிறது. கடற்கரையோரங்களில் சீமைக்கருவைப் புதர். நடுவே சேறும்சகதியுமாக விரிந்த பரப்பு. பாதையை எதிர்கொள்ள முடியாமல், ஜீப் திமிறி - திணறி - முக்கி - பெருமூச்சு விட்டு முன்னேறுகிறது. போகிறது… போகிறது… போகிறது...
திடீரென அந்தப் பாதையில் - எந்தக் காலத்திலோ போடப்பட்டதன் எச்சம் - ஒரு சிதிலமடைந்த சாலையின் தடம் குறுக்கிடுகிறது. “தனுஷ்கோடியைத் தொட்டுட்டோம்... இந்த எடம் பேரு பாலம்... பாதி சனம் இங்கே இருக்கு, பாத்துக்குங்க” என்கிறார் ஜீப் ஓட்டுநர் வினோத்.
வெக்கை எரிக்கும் சீமைக் கருவைக் காடுகளின் நடுவே குடிசைகள் தெரிய ஆரம்பிக்கின்றன. அடுத்த சில நிமிடங்களில், “இதான் கம்பிபாடு. மீதி சனம் இங்கே இருக்கு. ஊரழிஞ்சுபோன எடம் வந்தாச்சு... இறங்குங்க” என்று சொன்னவர் வண்டியை நிறுத்தியபோது, சிதைந்துபோன அந்தத் தேவாலயம் முன் நின்றோம்.
பவளப் பாறைகளால் கட்டப்பட்ட கட்டிடம். படங்களில் பார்த்ததைவிடவும் மோசமாகச் சிதைந்து நிற்கிறது. அதற்கு வலதுபுறத்தில் கொஞ்ச தூரத்தில் ரயில் நிலையக் கட்டிடச் சிதைவுகள். இடதுபுறத்தில், அஞ்சல் நிலையக் கட்டிடச் சிதைவுகள். தொடர்ந்து, சின்னதும் பெரியதுமான கட்டிடச் சிதைவுகள். இந்தக் கட்டிடங்களுக்குப் பின்புறத்தில் எதுவுமே தெரியாததுபோல, அலை அடித்துக்கொண்டிருந்தது கடல். “உண்மையில இந்தக் கடலு நல்ல கடலுங்க. முன்பக்கம் தூரத்துல அமைதியா கெடக்கு பாருங்க... அந்தக் கடலுதான் அன்னைக்கு ஊருக்குள்ள நுழைஞ்சு முழுங்கிட்டுப்போயிட்டு. இந்தக் கடலு பதிலுக்குக் கொடுத்த பெருங்காத்துலதான் கொஞ்சநஞ்ச மக்களாச்சும் பொழைச்சுருக்கு. ஏதோ பொழைச்சுக் கெடக்காங்க, அவ்வளவுதான் சார். ரோடு கெடையாது, பஸ்ஸு கிடையாது, கரண்டு கிடையாது, அமயஞ்சமயத்துக்கு ஒரு ஆஸ்பத்திரி கிடையாது... தண்ணீ வசதிகூடக் கிடையாது” - அடுக்கிக்கொண்டே போகிறார் வினோத்.
எதிர்ப்படும் உள்ளூர்க்காரர்கள் முகங்களைப் பார்க்கிறேன். வெள்ளந்தியாய்க் கடக்கிறார்கள். சுற்றிலும் பார்க்கிறேன். தேவாலயத்தை ஒட்டியுள்ள ஐந்தாறு குடிசைக் கடைகள். அப்புறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சின்னச் சின்னக் குடிசை வீடுகள்… குடிசை வீடுகள்… குடிசை வீடுகள்... என்னையும் மீறி நான் உடைய ஆரம்பித்தேன். நான் அந்தக் கால தனுஷ்கோடியைப் படங்களில் பார்த்திருக்கிறேன், அதைப் பற்றி புத்தகங்களில் படித்திருக்கிறேன், அந்த நாட்களில் எப்பேர்ப்பட்ட ஊர் இது?
(அலைகள் தழுவும்...)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
4 days ago