ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அவை (யுனெஸ்கோ) தாய்மொழி நாளாகப் பிப்ரவரி 21-ஐ 1999இல் அறிவித்தது. 2000ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் பன்னாட்டுத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
சூரத் நகரில் நடைபெற்ற இந்தி மொழி நாள் விழாவில் (செப்டம்பர் 14), மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நமது கலாச்சாரம், வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியைக் கற்க வேண்டும்” என்று பேசியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்குப் பதிலளிக்கும் வகையில், “இந்தி மொழி தோன்றுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழை முதன்மையாகக் கொண்ட திராவிட மொழிக் குடும்பமும், அதன் பண்பாட்டு விழுமியங்களும் இன்றைய இந்தியாவின் நிலப்பரப்பையும் அதன் எல்லைகளைக் கடந்தும் பரவியிருந்ததை வரலாற்று ஆசிரியர்கள் பலரும் எடுத்துக்காட்டியுள்ளனர்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதல்வரின் அறிக்கை பதிலுரை மட்டுமல்ல; இந்திய வரலாற்றை எங்கிருந்து தொடங்கிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான எடுத்துரைப்பு. இந்தியாவின் வரலாற்று, பண்பாட்டு ஆன்மாவைப் புரிந்துகொள்ள ஆய்வாளர்கள் தெற்கிலிருந்து தொடங்குகின்றனர் என்கிறார் ஸ்டாலின்.
ஆன்மாவின் மொழி?: இந்தியாவின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள அலுவல்மொழியான இந்தியைக் கற்க வேண்டும் என்று மத்திய அரசு அதிகாரத்தில் உள்ளோர் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். “இந்தியாவின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள சம்ஸ்கிருதம் உதவுகிறது” என்று இந்தியக் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியிருந்தார். கணிதம் முதல் அறிவியல் வரை அனைத்து நவீனத்துவத்துக்கும் பாதை அமைக்கும் வல்லமை கொண்டது சம்ஸ்கிருதம் என்பன போன்ற பெருமிதங்களை அம்மொழிக்குச் சூட்டிப்பார்க்கும் முயற்சிகள் நடந்துள்ளன. மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கையும் இதையே விதந்தோதுகிறது. 1947இல் அரசியல் அதிகாரம் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியர்களில் உயர் பிரிவினரின் கைகளுக்கு மாறியபோது சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகங்கள் உருவாயின.
2020இல் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் வழியாக மத்திய சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகம் (டெல்லி), ஸ்ரீலால்பகதூர் சாஸ்திரி பலகலைக்கழகம் (டெல்லி), ராஷ்டிரீய சம்ஸ்கிருத வித்யா பீடம் (திருப்பதி) ஆகிய மூன்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாகத் தரம் உயர்த்தப்பட்டன. சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகங்களின் செழிப்புக்காக இதுவரை கோடிக்கணக்கான வரிப்பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. சம்ஸ்கிருதம், இந்தி மொழிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியில் கால்வாசிகூடத் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளுக்கு ஒதுக்கப்படுவதில்லை. இந்திய நாட்டின் அலுவல்மொழியாக இந்தியை நிலைநிறுத்தும் பணி தொய்வில்லாமல் நடைபெறுவதற்கான தீவிர முயற்சியில் கணக்கில்லாத் தொகை செலவழிக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவின் இந்தி மொழி வளா்ச்சிக்கான 117 பரிந்துரைகள், பா.ஜ.க. ஆட்சியில் குடியரசுத் தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவை என்ன விளைவுகளை உருவாக்கும்?
மகாராஷ்டிர உத்தரவு: மகாராஷ்டிரம் போல் தாய்மொழிக்குத் தலைமையிடம்தரும் செயலாக வடிவு கொள்ளலாம்; மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள மத்தியஅரசின் அனைத்துத் துறைகளிலும் மராத்தியை அலுவல்மொழியாக்கி 5.12.2017இல் அம்மாநில அரசு ஆணை பிறப்பித்தது. ‘‘ஏற்கெனவே சட்டம் இருந்தும் மத்திய அரசு அலுவலகங்கள் அதைப் பின்பற்றவில்லை. அதைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென விரும்புகிறோம்” என்று மராத்தி மொழித் துறை அமைச்சா் வினோத் தாவடே சட்டமன்றத்தில் உரையாற்றினார்.
பி.ஜி.கெர் தலைமையிலான ஆட்சி மொழி ஆணையத்தின் (1956) பரிந்துரைகளில் ஒன்றாகத் தாவடே இதைச் சுட்டிக்காட்டுகிறார். தமிழ்நாட்டு மாணவர்களிடம் 1965இல் எழுந்த இந்தி ஆதிக்க எதிர்ப்பு, மொழிவழியிலான தேசிய இன எழுச்சியைப் பிற தேசிய இனங்களுக்கு உணர்த்தியது. “இந்தியாவின் அனைத்து தேசிய மொழிகளும் மைய அரசின் ஆட்சிமொழிகளாக வேண்டும். மைய அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாகத் தமிழ் ஆகும் வரை ஓயமாட்டேன்” என நாடாளுமன்ற மேலவையில் அறிஞர் அண்ணா உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
அந்த உரைக்கு, பூபேஷ் குப்தா போன்ற பொதுவுடைமைக் கட்சியினரும் பிற மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அளித்த வரவேற்பு, மொழிவழி தேசியப் பிரச்சினையைப் பிற மாநிலத்தவா் உணரத் தொடங்கிவிட்டனர் என்பதை உறுதிப்படுத்தியது. மகாராஷ்டிரத்தின் இன்றைய நடவடிக்கைஅனைத்து தேசிய மொழிகளும் மத்திய ஆட்சி மொழித் தகுதி பெற வேண்டும் என்ற கோரிக்கையின் செயற்பாட்டு வடிவம்தான்.
மொழி அரசியல்: மத்திய அரசின் அதிகாரத்துக்குள் மாநில அரசு ஊடுருவ இயலுமா என்னும் கேள்வி எழுகிறது. மாநில அரசின் எந்த எல்லைக்குள்ளும் மத்திய அரசு ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்ய இயலும் என்பதை 1947 முதல் பார்த்துவருகிறோம். தனது துறையினருக்கு இந்தியில் ஒரு வாரத்துக்குக் கையொப்பமிடும்படி 1990இல் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பல மாநில ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்; அவர்களில் பெரும்பான்மை இந்தி தெரியாதவர்கள். ஆங்கிலம் படித்தவர்கள், ஆங்கிலத்தில் தேர்வெழுதி பணிக்குச் சேர்ந்தவர்கள். இந்தியில் தேர்வெழுதி பணியில் சேர்ந்த இந்தி மாநிலத்தவர்கள்போல் அரசுப் பணிகளை இந்தி மூலம் எளிதாகக் கையாள இயலாது. பஞ்சாபில் வாழும் பஞ்சாபி ஒருவரால் கர்நாடகத்தில் வாழும் கன்னடரின் பண்பாட்டைப் புரிந்துகொள்ள முடியாது. அவரவர் பண்பாட்டின், வரலாற்றின் ஆன்மாவை அறிய அவரவர் மொழிதான் உதவும். இந்தி அல்லது சம்ஸ்கிருதம் இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்க முடியாது. இந்தி மூலமாக இந்தியாவின் ஒட்டுமொத்த ஆன்மாவையும் புரிந்துகொள்ள முடியாது. அந்தந்த பண்பாட்டைப் புரிந்துகொள்ள அந்தந்த மொழியறிவு அவசியம்.
“இந்திய அரசு, இந்தி பேசும் மாநிலங்களோடு இந்தியில் மட்டுமே தொடர்புகொள்ளும்; இந்தி பேசாத பிற மாநிலங்களோடு இந்தியிலும் ஆங்கிலத்திலும் தொடர்புகொள்ளும். தமிழ்நாட்டோடு ஆங்கிலத்தில் மட்டுமே தொடர்புகொள்ளும். தமிழ்நாடு அரசு மத்திய அரசோடு தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்புகொள்ளலாம்” என இந்தி ஆட்சிமொழி ஆணையம் (1976) வகுத்த திருத்தத்தினை - இங்கு ஆட்சிக்கு வந்த அரசுகளும் கண்டுகொள்ளவில்லை. இந்தத் திருத்தங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டிருந்தால் இதுபோன்ற ஒற்றை மொழித் திணிப்பு முயற்சிகளைத் தடுத்திருக்கலாம்.
அறிவின் விசாலமான ஆயிரம் வாசல்களை ஆங்கிலம் திறந்து வைக்கலாம். நிர்வாகக் கட்டமைப்புக்கான நூறு வாசல்கள் வழி இந்தி நுழையலாம். அறிவின் வாசல்களாயினும் நிர்வாக அலகுகளாயினும் தாய்மொழிப் பயன்பாடே வேண்டுமென, தாய்மொழிச் சாவியைக் கையில் எடுத்துள்ளது மகாராஷ்டிரம். அறிவும் அதிகாரமும் மக்கள் நலனுக்கு என ஆக்கி வெளிச்சத்தின் முதல் கீற்றைக் கைவசப்படுத்தியுள்ளது. எனவே, இந்திக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் பாய்கிற வெளிச்சம் பிறமொழிகளின் மீதும் பாயட்டும். இந்திக்கும் பிறமொழிகளுக்கும் இடையேயான மேல்-கீழ் பாகுபாடு, மகாராஷ்டிரம் போல் மாநில சுயாட்சியைத் தன் சுய அதிகாரத்தைத் தானே நிலைநிறுத்திக் கொள்கிற செயல்வடிவாக உருக்கொள்ளும். - பா.செயப்பிரகாசம்எழுத்தாளர், தொடர்புக்கு: jpirakasam@gmail.com
To Read in English: Mother languages that reflect India’s soul
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago