குழந்தைகள் உங்களுடையவை அல்ல. அவை, வாழ்வு தன்னையே தான் அடையக் கொள்ளும் ஏக்கத்தின் மகனும் மகளுமாக ஜனித்தவை.
உங்கள் குழந்தைகள் உங்களூடே தோன்றியவர்கள், உங்களிடமிருந்து அல்ல.
உங்களுடன் இருப்பினும் அவர்கள் உங்கள் உடமைகளல்லர்.
அவர்களுக்கு உங்களுடைய அன்பை நீங்கள் தரலாம், உங்கள் எண்ணங்களை அல்ல.
ஏனெனில், சுயமாக அவர்களிடத்தே எண்ணங்கள் பிறக்கின்றன.
அவர்கள் உடலுக்கு மட்டுமே நீங்கள் வீடமைக்கலாம், உயிருக்கு அல்ல.
ஏனெனில், உங்கள் கனவில்கூட நீங்கள் அடைய முடியாத எதிர்காலம்தான் அவர்களது உயிர் உறையும் வீடு.
நீங்கள் அவர்களைப் போல ஆவதற்காக கடின முயற்சி செய்யலாம்.
ஆனால், உங்களைப் போல அவர்களையும் ஆக்கிவிடக் கூடாது.
ஏனெனில், வாழ்வு பின்னடித்துச் செல்வதில்லை. நேற்றைய நாட்களில் சுணங்குவதுமில்லை.
உயிருள்ள அம்புகளாக உங்களிடமிருந்தே எய்யப்படும் குழந்தைகளுக்கு நீங்கள் வில்லுகள்.
வில்லாளி, காலாதீதத்தின் மார்க்கத்தில் குறிவைத்து, தனது அம்புகள் அதிவேகத்துடன் தொலை தூரம் செல்லும்படி, உங்களைத் தனது மகாசக்தியால்
வளைக்கிறான்.
வில்லாளியின் கரத்தில் உங்கள் வளைவு ஆனந்திக்கட்டும்.
ஏனெனில், பறக்கும் அம்புகளை அவன் விரும்புகிற அளவுக்கு அசைவற்ற வில்லின் உறுதியையும் விரும்புகிறான்.
- கலீல் ஜிப்ரானின் ‘தீர்க்கதரிசி’ புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி. தமிழில்: பிரமிள்
*
நீங்கள் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடினீர்களா? அல்லது குழந்தைகளைக் கொண்டாடினீர்களா?
நேரு குழந்தைகளுக்காக என்ன செய்தார்? என்பது பற்றியெல்லாம் பள்ளிகள், தொலைக்காட்சிகளில் பேசியாகிவிட்டது.
தினங்களைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு எப்போது குழந்தைகளைக் கொண்டாடுவோம் என்று பட்டிமன்றங்களில் பேசி கைதட்டல்களும் வாங்கியாகிவிட்டது.
ஆனால், குழந்தைகளுக்காக நாம் என்ன செய்கிறோமோ, எந்தக் குழந்தைகளுக்காக நாம் பேசுகிறோமோ அது குழந்தைகளிடமோ அல்லது பெற்றோர்களிடமோ
சரியாகச் சென்று சேர்கிறதா, அதன் நோக்கம் நிறைவேறுகிறதா?
நாட்டில் குழந்தைகளிடம் நிலவும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் அதிகமாக உள்ளது. இது தேசிய அவமானம்.
- இது மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது (2012-ம் ஆண்டு) டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்து.
நாட்டில் பசி, வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு என்பது பெரும் சவாலாக இருக்கிறது. மேற்கண்ட 3 சவால்களுக்கும் அறிவியலைக் கொண்டு விஞ்ஞானிகள் தீர்வு காண வேண்டும்.
- இது பிரதமர் மோடி டெல்லியில் கடந்த நவம்பர் 7-ல் நடைபெற்ற சர்வதேச வேளாண் பன்முகத் தன்மை மாநாட்டில் தெரிவித்த கருத்து.
குழந்தைகள் இறந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? ஊட்டச்சத்து குறைபாடுகளை தடுக்கவே அரசு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
- மகாராஷ்டிராவில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 600 குழந்தைகள் பலியானது குறித்து, செய்தியாளர்கள் கேட்டபோது மாநில பாஜக அமைச்சர் விஷ்ணு சவ்ரா தெரிவித்த கருத்து.
இதுதான் ஊட்டச்சத்து குறித்த அரசியல் தலைவர்களின் கருத்தாக உள்ளது.
புள்ளி விவரங்கள் உணர்த்தும் உண்மை
உலக நாடுகளில் மற்ற எந்த நாட்டைக் காட்டிலும் இந்தியாவில் அதிகப்படியாக 19 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநாவின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய குழந்தைகளில் 46 விழுக்காட்டினர் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த Institute of Development Studies (IDS) என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய விபரப்படி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எடை குறைவு கொண்டதாக 29 சதவீதம் உள்ளனர். இந்தியாவில் எலும்புருக்கி நோயின் தாக்கம் தமிழகம், ஆந்திர மாநிலங்களில் அதிகரித்துள்ளது என்று ரேபிட் சர்வே ஆப் சில்ட்ரன் மற்றும் யூனிசெப் நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 15 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா கூறியுள்ளது. உலக அளவில் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ள 3 குழந்தைகளில் 1 குழந்தை இந்தியக் குழந்தை என்கிறது HUNGAMA-வின் [Hunger and malnutrition] புள்ளி விபரம்.
உலகில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 45 சதவீதத்தினரின் இறப்புக்கு மூல காரணம் ஊட்டச்சத்து குறைவு. ஏறக்குறைய அனைத்து குறைபாடுகளும் கருவுற்ற பிறகு அக்குழந்தையின் முதல் 1000 நாட்களில் நடைபெறுகிறது. (ராபர்ட் E பிளாக், et al, Lancet, 2013).
ஊட்டச்சத்து குறைவால் (பிறந்த குழந்தையின் முதல் 1000 நாட்களில் ஏற்படுவது) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 6 சதவீதம் இழப்பு இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது (உலக சுகாதார அமைப்பு, 2004)
ஊட்டச்சத்துக் குறைபாடு என்றால் என்ன?
ஊட்டச்சத்துக் குறைவு என்பது வறுமையுடன் தொடர்பு படுத்தப்படுகிறது. உணவு கிடைக்காதவர்கள் மட்டுமல்ல, சரிவிகித உணவு உண்ணாதவர்களும் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு ஆளாகின்றனர்.
உதாரணத்துக்கு அதிகம் அரிசி சோறு மட்டுமே சாப்பிடுவதும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். ஏனெனில், அரிசியில் கார்போஹைட்ரேட் மட்டும் அதிகம்
உள்ளது. ஆனால், மற்ற கலோரிகள் அதிகம் இல்லை. இதனால் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, மாவுச்சத்து ஆகியவை கிடைக்காமல் போய்விடும். எனவே, இந்த எல்லா சத்துகளும் நிறைந்த உணவே ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கும்.
வயதிற்கேற்ற உயரம் இல்லாதது, உயரத்திற்கேற்ற எடை இல்லாதது, வயதிற்கேற்ற எடை இல்லாமல் இருப்பது ஊட்டச்சத்துக் குறைபாடாகும்.
ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகள்
* ஊட்டச்சத்து குறைபாடு என்பது குழந்தையின் உடல், எடை, உயரம் உள்ளிட்ட தனி மனித வளர்ச்சியைப் பாதிக்கும். நினைவுத்திறனைப் பாதிக்கும். இன்னும்
சொல்லப்போனால் நாட்டின் பொருளாதாரத்தையும், சமூகத்தின் ஆரோக்கியத்தையும் கூட பாதிக்கும்.
* இந்தியாவில் 6 வயதுக்குட்பட்டவர்கள் 16 கோடி பேர் உள்ளனர். அவர்கள் வருங்காலத்தில் விஞ்ஞானிகளாகவோ, விவசாயிகளாகவோ. ஆசிரியர்களாகவோ
நமது சமூக அமைப்பில் இணைவார்கள். ஆனால், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் ஆரோக்கியம் இழக்கும்போது அவர்களின் வளர்ச்சி தடைபடும். மகிழ்ச்சி, பதவி உயர்வு, வருமானம் என எல்லாமே தடைபட வாய்ப்புள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் இறப்பது கூட சாத்தியம். உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக கேரளத்தின் அட்டப்பாடியை சொல்லலாம்.
கேரள மாநிலம், அட்டப்பாடியில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவை காரணமாக, கடந்த ஜனவரி மாதம் முதல் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 15-ஐ எட்டியது.இதேபோல், அட்டப்பாடி பகுதியில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 2013ல் 73 குழந்தைகள் உயிரிழந்தனர்.
இப்படி இந்தியாவில் 42% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சரியான உணவு கிடைக்காமல் வறுமையில் வாடும் குழந்தைகள்,பலவிதமான ஊடச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் நோய்களுக்கு ஆட்பட்டு பலியாகிறார்கள்.
ஊட்டச்சத்துக் குறைபாட்டை சரி செய்வது எப்படி?
குழந்தை பிறந்தவுடன் சத்து மாத்திரைகள் கொடுப்பது, தாய்ப்பால் கொடுப்பது ஆகியவற்றின் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய முயற்சிப்பதைக் காட்டிலும் அதற்கு முன்னதாகவே ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் பார்த்துக்கொள்வது சிறந்தது.
குழந்தை பிறப்பதற்கு முன்னதாக, ஒரு பெண் கர்ப்பம் அடைவதற்கு முன்பாக ஊட்டச்சத்து மிக்க உணவை உட்கொள்வது முக்கியம். ஒரு பெண் தாயாவதற்கு முன் எப்படி தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்? என்ன மாதிரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் வசந்தா மணியிடம் பேசினேன்.
(டாக்டர் வசந்தா மணி)
> பொதுவாக பெண்கள் எடை குறைவாகவோ அல்லது எடை அதிகமாகவோ உள்ளனர். இப்படி இரண்டு விதமாக இருக்கும் பெண்கள் கருவுறுவது கஷ்டம். சரியான எடையில் பெண்கள் இருப்பதே கருவுறுதலுக்கு ஏற்றது.
> தற்போது 2%முதல் 10% பெண்களுக்கு அபார்ஷன் ஏற்படுவதற்குக் காரணம் நீரிழிவு நோய், ஹார்மோன் குறைபாடு, தைராய்டு குறைபாடு ஆகியவை இருப்பதே ஆகும்.
> ஊட்டச்சத்து குறைபாட்டால் அபார்ஷன் ஆகாது. ஆனால், சத்தற்ற குழந்தைகளாக இருப்பார்கள். இதனால் குழந்தையின் உடை, உயரம் உள்ளிட்ட வளர்ச்சி தடைபடும். எனவே, திருமணமான பெண்கள் கருவுறுதலுக்கு முன் மகப்பேறு மருத்துவரை சந்திப்பது நல்லது. ஏனெனில், ரத்த சோகை இருந்தாலோ ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலோ மருத்துவர் உரிய மாத்திரைகளைக் கொடுப்பார்.
> வழக்கமாக கருவுறுதலுக்கு முன் எல்லா பெண்களும் (போலிக்) உப்புச்சத்து மாத்திரைகளையும், வைட்டமின்கள் அடங்கிய மாத்திரைகளையும் சாப்பிடலாம்.
இது தாயின் ஊட்டச்சத்துக்கும், குழந்தையின் இதயம் மற்றும் மூளை வளர்ச்சிக்கும் உதவும். 3 மாதங்கள் வரை இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.
> பொதுவாக அரிசி சோறு அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால் நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ளது. (நீரிழிவு நோயில் நம்பர் 1 இடத்தில் இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது.)
> பெண்கள் ஊட்டச்சத்துக்காக கார்போஹைட்ரேட்டை 30% மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். கோதுமை, சிறு தானியங்கள், இறைச்சி, புரதச் சத்துள்ள பொருட்கள், இரும்புச் சத்து பொருட்கள், கால்சியம், பருப்பு வகைகள், சுண்டல், மொச்சை, பழங்கள், காய்கறிகள், ஜூஸ் ஆகியவற்றையும்எடுத்துக்கொள்வது சிறந்தது.
> கருவுற்ற பிறகும் (போலிக்) உப்புச் சத்து மாத்திரையை எடுத்துக்கொள்வது நல்லது.
> ரத்தத்தின் அளவுக்காக இரும்புச்சத்துள்ள உணவு / மாத்திரைகளை சாப்பிடலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவையும் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
> கருவுற்ற தாய்க்கு தைராய்டு பிரச்சினை இருந்தால் அதற்குச் சிகிச்சை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
> கருவுற விரும்பும் பெண்ணின் கணவர் புகை/ மதுப் பழக்கத்தில் இருந்தால் அதை முழுமையாகக் கைவிட வேண்டும்.
> ஊட்டச்சத்துள்ள உணவை பெண்கள் எடுத்துக்கொண்டால் 28 வாரங்களில் குழந்தையின் எடை ஒரு கிலோவாக இருக்கும். பிறக்கும்போது குழந்தையின் எடை சராசரியாக 2.75 கிலோ இருப்பது அவசியம். ஆனால், ஊட்டச்சத்து குறைபாட்டால் ஒரு கிலோ அல்லது 1.5 கிலோவில் கூட குழந்தைகள் பிறக்கின்றன.
> மருத்துவர் குறித்துக் கொடுத்த தேதிக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே குழந்தை பிறப்பதற்கும் ஊட்டச்சத்து குறைபாடும் ஒரு காரணம். எனவே, இந்த உணவைப் பிடிக்கும், பிடிக்காது என்ற தனிப்பட்ட காரணங்களுக்காக எந்த உணவையும் புறம்தள்ளாமல் சரிவிகித உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் டாக்டர் வசந்தா மணி.
ஆரோக்கியம் என்பது குழந்தையின் முழு முதல் உரிமை. அதை பெற்றோர் முழுமையாக குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். அதில் சின்ன அலட்சியமும் இருக்கக் கூடாது.
கருவுறுதலுக்குப் பிறகு குழந்தையின் முதல் 1000 நாட்கள் அந்தக் குழந்தையின் சுகாதாரத்தையும் ஊட்டச்சத்து நிலையையும் முடிவு செய்வது மட்டுமல்லமால், அக்குழந்தையின் புத்திக் கூர்மை, உயரம்,பள்ளியில் செயல்படும்விதம், மற்றும் அவரது வாழ்நாளில் ஒரு தனிநபரின் சம்பாதிக்கும் திறன் ஆகியவற்றைகூட முடிவு செய்கிறது என்று யுனிசெஃப் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
அந்த 1000 நாட்கள்:
கருவில் 270 நாட்கள் + முதல் வருடத்தின் 365 நாட்கள் + இரண்டாம் வருடத்தின் 365 நாட்கள்.
குழந்தையின் ஆரம்ப ஆண்டுகளில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைவும் குறைந்த எடையோடு பிறப்பதும் அக்குழந்தையின் வளரிளம் பருவத்தில் உயர் ரத்த அழுத்தம், உயர் சர்க்கரை அளவு, உடல் வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு மிகக் குறைவாக இரத்தல் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட காரணமாக இருக்கின்றன.
ஒரு குழந்தையின் முதல் 1000 நாட்கள் ஒரு தனிநபர், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டின் சமூக, மனித மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளத்தைக் கட்டமைக்கிறது.
எனவே, முதல் 270 நாட்களில் கருவில் குழந்தை இருக்கும் போது என்ன செய்ய வேண்டும். அதில் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது எப்படி? அடுத்த அத்தியாயத்தில் பகிரலாம்.
க.நாகப்பன், தொடர்புக்கு nagappan.k@thehindutamil.co.in
முந்தைய அத்தியாயம்: >பதினெட்டுக்குள்ளே 1 - மீறல்களும் உரிமைகளும்!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago