தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் சற்று முன்னேற்றம் தெரிகிறது. வாடிகனின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தப் பேச்சுவார்த்தையில், எதிர்க்கட்சிகளின் முக்கியக் கோரிக்கைகள் எதிரொலிக்கவில்லை - அதிபர் மதுரோவைத் திரும்பப் பெறுவது, முன்கூட்டியே அதிபர் தேர்தல் நடத்துவது உட்பட. எனினும் பணவீக்கம், வறுமை, வன்முறை, முறைகேடு என்று கொந்தளித்துக்கொண்டிருக்கும் வெனிசுலாவில் இன்றைய தேதிக்குப் பெயரளவில் ஆறுதல் தரும் செய்திதான் இது. உண்மையில், வெனிசுலாவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?
வெனிசுலாவில் திரும்பிய திசையெங்கும் உற்றுக் கவனித்துக்கொண்டே இருக்கின்றன, மறைந்த அதிபர் ஹியூகோ சாவேஸின் கண்கள். அடர்த்தியான கோடுகளில் வரையப்பட்ட அவரது புருவங்களையும் கண்களையும் பதாகைகள், சுவர்கள், டி-ஷர்ட்டுகள், கொடிகள் என்று எங்கும் பார்க்க முடியும். மக்கள் தலைவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டேயிருக்கிறார். ஆனால், வெனிசுலாவின் அன்றாட நடப்புகள் அந்நாட்டு மக்களைக் கடும் சிரமத்துக்கு உள்ளாக்கியிருப்பதை அந்தக் கண்கள் அறிந்திருக்குமா என்று தெரியவில்லை. வழக்கமாகத் தென் அமெரிக்க நாடுகள் மீது அமெரிக்க ஊடகங்கள் முன்வைக்கும் விமர்சனங்களையும் தாண்டி, உண்மையிலேயே கொந்தளிப்பான சூழல்தான் நிலவுகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
எண்ணெய் வளம் மிக்க வெனிசுலா, இன்றைய தேதிக்கு உலகி லேயே மிக மோசமான பணவீக்கத்தில் தவிக்கிறது என்கிறது சர்வ தேச நாணய நிதியம். வேலைவாய்ப்பின்மையில் உலகிலேயே ஒன்பதா வது இடத்தில் இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான பொலிவரின் (வெனிசுலா கரன்ஸி) மதிப்பு என்று சொல்லப்படும் மதிப்புக்கும் அசல் மதிப்புக்கும் இடையிலான வித்தியாசம் பல மடங்கு. கடுமையான உணவுப் பற்றாக்குறை வேறு. எல்லாவற்றுக்கும் காரணம், மோசமான நிர்வாகம், மதுரோவின் கையாலாகாத்தனம் என்று பொங்கி வெடிக்கிறார்கள் பெரும்பாலான மக்கள்.
உணவுப் பற்றாக்குறை
நாட்டின் உணவுப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம், தனியார் உணவு உற்பத்தி நிறுவனமான ‘போலா’ரின் உரிமையாளர் லோரென்ஸோ மெண்டோஸாதான்; அமெரிக்க சதியின் காரணமாக வேண்டுமென்றே உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்த போலார் முயல்கிறது என்பது மதுரோ தரப்பின் வாதம். வெனிசுலா மக்களின் பிரதான உணவான சோள மாவு முதல், பாஸ்தா, அரிசி, டூனா மீன்கள், ஐஸ் கிரீம், பீர் என்று பல்வேறு உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனம் அது. ஆனால், அந்நிறுவனத்துடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்துவரும் அரசு, உணவு உற்பத்திக்கும் பல்வேறு தடைகளை ஏற்படுத்துகிறது என்கிறார்கள். அதிபராகும் கனவு லோரென்ஸோ மெண்டோஸாவுக்கு இருப்பதாக மதுரோ கருது கிறார். மெண்டோஸாவின் சிகையலங்காரத்தைக் கிண்டல் செய்யும் அளவுக்கு அவர் மீது வன்மம் காட்டுகிறார் என்றும் சொல்கிறார்கள்.
போதுமான சோள மாவு தயாரிப்பதில் அந்நிறுவனம் தோல்வியடைந்துவிட்டது என்று மதுரோ தரப்பு குற்றம்சாட்டுகிறது. மற்ற தனியார் நிறுவனங்களிடமிருந்து கையகப்படுத்திய விளைநிலங்களைக் குத்தகைக்குத் தர அரசு முன்வந்தால், உற்பத்தியை அதிகரித்துக்காட்டுவோம் என்கிறது போலார் தரப்பு. ஆனால், அரசு அதை ஒப்புக்கொள்ளவில்லை. விளைவு, ஒவ்வொரு நாளும் உணவுப் பொருட்கள் வாங்க அங்காடிகளில் வரிசையில் நிற்கிறார்கள் மக்கள். கள்ளச் சந்தையில் பல மடங்கு விலை வைத்து உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இதன் பின்னணியில் சட்டவிரோதக் கும்பல்கள் செயல்படுகின்றன. சரி, ராணுவமும், போலீஸும் என்னதான் செய்கின்றன. அந்தக் கும்பல்களுக்கு நல்லவிதமாகத் துணை புரிகின்றன என்பதுதான் விநோதம்!
கள்ளச் சந்தை
அரசு மருத்துவமனைகளில்தான் இந்த அவலம் பெரிய அளவில் எதிரொலிக்கிறது. மருத்துவமனைகளின் ஒவ்வொரு மூலையிலும் ஆயுதம் ஏந்திய போலீஸார், ராணுவப் படையினர் நிற்கிறார்கள். மக்கள் பாதுகாப்புக்காக அல்ல. கள்ளத்தனமாக மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், உணவுப் பொருட்கள் விற்கப்படுவதை மேற்பார்வை செய்ய. காரணம், அவர்களுக்கும் முறையான சம்பளம் வழங்கப்படுவதில்லை. எப்படியேனும் சம்பாதித்தாக வேண்டிய கட்டாயம். ராணுவமே சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் அவலம்.
நோயாளிகளுக்குத் தேவையான சலைன், ஆண்டிபயாடிக் மருந்துகள், வலி நிவாரணிகள், பேண்டேஜ்கள் என்று எதுவுமே அரசு மருத்துவமனைகளில் கிடைக்காது - அதாவது இலவசமாகக் கிடைக்காது. கள்ளச் சந்தையில்தான் வாங்க வேண்டும். ‘குடிநீர் கூட வழங்கப்படுவதில்லை’ என்று வேதனைப்படுகிறார்கள் நோயா ளிகள். தவிர, போதிய படுக்கைகள் இல்லை, அறுவை சிகிச்சைக்கு உபகரணங்கள் இல்லை என்று பல்வேறு அவலங்கள் வேறு.
இத்தனைக்கும் பொதுச் சுகாதாரத்தில் ஒருகாலத்தில் சிறந்து விளங்கிய நாடு வெனிசுலா. 1961-ல் மலேரியாவிலிருந்து முற்றிலும் விடுபட்ட முதல் நாடுகளில் ஒன்று அது. ஆனால், இன்று நிலைமை தலைகீழ். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் மலேரியாவால் பாதிக்கப்படுகிறார்கள். ஊட்டச்சத்துக் குறைபாடு, டிப்தீரியா, பிளேக் என்று பல்வேறு பாதிப்புகள். அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் மூவரில் ஒருவர் உயிரிழக்கிறார் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. மனநல மருத்துவமனைகளில் போதிய வசதி இல்லாததால், மனநலன் குன்றிய நோயாளிகள் பலர், கைவிடப்பட்ட நிலையில் தெருக்களில் அலைந்து திரிகிறார்கள்.
இவற்றைத் தவிர ஆள் கடத்தல், கொள்ளையில் ஈடுபடும் சமூக விரோதக் கும்பல்கள், கடத்தப்பட்ட நபர்களை விடுவிக்கப் பெரிய அளவில் பேரம் பேசுகிறார்கள். வீடு, மனை விற்பனைக்கு என்று எழுதி வைக்கப்பட்டிருக்கும் போர்டுகளில்கூடத் தொடர்பு எண்கள் எழுதப்படுவதில்லை. அந்த எண்களில் அழைத்து மிரட்டிப் பணம் பிடுங்கும் கும்பல்கள் அதிகம். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் சட்டபூர்வமாகத் தண்டிக்கப்படுவதில்லை என்பது மற்றொரு குற்றச்சாட்டு. உலகின் மிக அதிகக் குற்றங்கள் நிகழும் நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில், 2%-க்கும் குறைவான குற்றங்கள் தொடர்பாகத்தான் விசாரணை நடத்தப்படுகிறது.
முடக்கப்படும் ஊடகம்
மிக முக்கியமாக, ஊடகங்கள் மீதான அடக்குமுறை. அரசை விமர்சித்து எழுதும் பத்திரிகைகள் மீது உடனடியாக ‘பாசிஸ’ முத்திரை குத்தப்படுகிறது. அரசின் அடக்குமுறைக்கு இடையிலும் தொடர்ந்து இயங்கிவரும் நாளிதழ் ‘எல்-நேஷனல்’. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தாள் விநியோக உரிமையைக் கையில் எடுத்துக்கொண்ட அரசு நிறுவனம் ஒன்று, இந்த நாளிதழுக்குத் தாள் விற்பனை செய்ய மறுத்துவிட்டது. இதையடுத்து, கொலம்பியா, பெரு போன்ற நாடுகளிலிருந்து தாள்களை வாங்கிச் சமாளித்துவருகிறது ‘எல்-நேஷனல்’. “நாளிதழின் இணையதளத்தை ஏராளமானோர் வாசிக்கிறார்கள். தொழில்நுட்பத்துக்கு நன்றி” என்று சிரிக்கிறார் அதன் துணை ஆசிரியர் எரியாஸ் பினோ. பத்திரிகை அலுவலகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பாக எவ்வித விசாரணையும் நடத்தப்படுவதில்லை. செய்தியாளர்கள் அரசுப் படைகளால் எந்நேரமும் தாக்கப்படலாம் என்ற சூழல்தான் நிலவுகிறது. எல்லாம் சரி, அமெரிக்காவின் அடக்குமுறைகளை எதிர்த்து தென் அமெரிக்க நாடுகளையும், மத்திய அமெரிக்க நாடுகளையும் ஒன்றிணைத்து பொருளாதார வலிமை காட்டிய ஹியூகோ சாவேஸுக்குப் பின்னர், எப்படி இத்தனை பெரிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது? உண்மையில், சாவேஸ் காலத்திலிருந்தே பிரச்சினைகள் தொடங்கிவிட்டன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். வெனிசுலா பொருளாதாரம் எண்ணெய் வளத்தை மட்டும் சார்ந்ததாக அல்லாமல் பல்வேறு தொழில் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பிய சாவேஸ், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், விளைநிலங்கள் என்று பலவற்றை அரசுடைமையாக்கினார். நல்ல முயற்சிதான் என்றாலும், நிர்வாகரீதியாக அதில் ஏற்பட்ட அடிப்படைக் கோளாறு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியதாகச் சொல்கிறார்கள்.
சாவேஸும் மதுரோவும்
ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாக இருந்த சாவேஸ், எளிய பின்னணியிலிருந்து வந்தவர். 1992-ல் அவர் தலைமையில் நடந்த ராணுவப் புரட்சி தோல்வியடைந்தாலும், தனது நோக்கங்களைப் பற்றி அவர் அளித்த தொலைக்காட்சிப் பேட்டிகள் மக்களிடம் அவர் மீது பெரும் மதிப்பை உருவாக்கின. விடுதலையானதும் ‘ஃபிஃப்த் ரிபப்ளிக் மூவ்மெண்ட்’ எனும் இடதுசாரிக் கட்சியைத் தொடங்கி எளிதில் ஆட்சியைப் பிடித்தவர். லட்சியத்துடன் ஆட்சி நடத்தியவர். (அவரைச் சர்வாதிகாரி எனும் அளவுக்கு அமெரிக்க ஊடகங்கள் முன்வைப்பது தனிக் கதை).
அவரது மறைவுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த மதுரோ மீது பல்வேறு விமர்சனங்கள். ஒரு காலத்தில் பஸ் ஓட்டுநராகப் பணிபுரிந்த மதுரோ, துணை அதிபராக இருந்தவர். ‘சாவேஸின் மகன்’ என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அவர், மறு உலகிலிருந்து சாவேஸ் தன்னிடம் ஒரு சிறு பறவை மூலம் பேசுகிறார் என்றெல்லாம் சொல்லிப் பரபரப்பை ஏற்படுத்தியவர். சாவேஸ் அளவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லாதவர். நிர்வாகத் திறமை அற்றவர். 2015-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் மூன்றில் இரண்டு இடங்களைப் பிடித்து மதுரோவுக்கு அதிர்ச்சியளித்தன. அதைத் தொடர்ந்து, மதுரோவைப் பதவியிலிருந்து விலக்க, கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராடிவருகின்றன. எனினும், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மதுரோ, அதற்கு முட்டுக்கட்டை போடுவதில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்.
இந்தப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு வரை தலைநகர் கராகஸிலும் பிற நகரங்களிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடிவந்தன. பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து ‘டெமாக்ரட்டிக் யூனிட்டி ரவுண்ட் டேபிள்’ எனும் கூட்டணியாக இயங்கிவருகின்றன. பிரச்சினை என்னவென்றால், எதிர்க்கட்சிகளிடம் ஒரு சரியான தலைமை இல்லை. இருப்பவர்களில் தேறக்கூடியவர் என்று கருதப்படும் ஹென்றி ராமோஸ் அல்லுப், ‘டெமாக்ரட்டிக் ஆக்�ஷன் பார்ட்டி’ கட்சியின் தலைவர். பழுத்த அரசியல்வாதி. சாவேஸ் காலத்துக்கு முந்தைய தலைவர். நிதானமாகவும் தெளிவாகவும் பேசக்கூடியவர். ஆனால், அத்தனை செல்வாக்கு உள்ளவர் அல்ல. உண்மையில், 33% பேர் மதுரோவுக்கு எதிரான மனப்பான்மை கொண்டவர்களாகவும், அதே சமயம் எதிர்க்கட்சிகளை ஆதரிக்காதவர்களாகவும் இருக்கிறார்கள் என்று தேர்தல் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இதே நிலை நீடித்தால், உள்நாட்டுப் போர் வெடிப்பது நிச்சயம் என்ற சூழலில், வாடிகன் தலையிட்டு இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. அவ்வப்போது முன்னேற்றம், அப்புறம் பின்னடைவு என்று தொடர்ந்துகொண்டிருக்கும் இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து, ஏதேனும் தீர்வு கிடைக்குமா என்று எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் வெனிசுலாவின் சாமானிய மக்கள். எல்லாவற்றையும் உற்றுப்பார்த்துக்கொண்டேயிருக்கின்றன சாவேஸின் கண்கள்!
- வெ.சந்திரமோகன்,
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago