கி.ரா. என்றொரு மானுடம்: கி.ராஜநாராயணன் நூற்றாண்டு தொடக்கம்

By க.பஞ்சாங்கம்

கி.ரா.வின் படைப்புக்களில் குறிப்பிடத்தக்க மூன்று நாவல்கள், ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்லபுரத்து மக்கள்’; இதில் இரண்டாம் நூலுக்குத்தான் 1991இல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. பிறகு, ‘அந்தமான் நாயக்கர்’. இவை தவிர்த்து, இரண்டு குறுநாவல்களான ‘கிடை’, ‘பிஞ்சுகள்’ குறிப்பிடத்தக்கவை. கிட்டத்தட்ட எண்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். ஒவ்வொன்றும் அற்புதமான கதைகள். மனிதர்களை அலசக்கூடிய கதைகளும் அரசியல் கதைகளுமாக இருந்தாலும் எல்லாம் அழகியலோடு படைக்கப்பட வேண்டும் என்கிற விழிப்புணர்வோடு படைத்தார். அவரின் கதைகளைப் படித்துவிட்டு கதை இத்தோடு முடிந்துவிட்டது என்று நம்மால் வெளியேறிவிட முடியாது. கதை முடியும்போதுதான் நாம் கதைக்குள்ளே பயணம் செய்யக்கூடியவர்களாக மாறுவோம். அவ்வளவு நுட்பமாகக் கதைகளைப் படைப்பார்.

கைக்கொண்ட மொழி: கி.ரா. கலை இலக்கியப் பண்பாட்டுத் தளத்திலும் மேல், கீழ் என்கிற பேதங்களைக் களைந்து சமத்துவம் நிலவ வேண்டும் என்று விரும்பினார். குறிப்பிட்ட சிலருடைய கலைகள் மட்டும் சிறந்தவை என்றும், பெருவாரி மக்கள் கையாளுகின்ற கலைகளெல்லாம் தாழ்ந்தவை என்றும் கட்டமைக்கப்பட்டிருக்கக்கூடிய பொய்யான புனைவுகளை உடைக்க வேண்டும் என்று எண்ணினார். அதே மாதிரி, சிறுவாரி மக்களின் வாழ்க்கைதான் சிறந்தது. பெருவாரி மக்களின் வாழ்க்கை தாழ்ந்தது என்ற பண்பாட்டு ஆதிக்கத்தையும் சமப்படுத்த வேண்டும் என்று கருதினார். அவருடைய எழுத்துக்குப் பின்னால் இப்படியொரு பண்பாட்டு அரசியல் இருக்கிறது. இதைப் புரிந்துகொண்டு அவருடைய கதைகளையும் நாவல்களையும் வாசிக்கும்போதுதான் எவ்வளவு பெரிய மகத்தான பணியை அவர் சத்தமில்லாமல் செய்திருக்கிறார் என்பது நமக்குப் புரியவரும். அதனால்தான் அவர் ஆதிக்கவாதிகள் கையாளக்கூடிய மொழியைப் புறக்கணித்து, தன்னுடைய நாட்டுப்புற, வட்டார மக்கள் பயன்படுத்தக்கூடிய மக்களின் மொழியில்தான் கதை சொல்ல முன்வந்தார். இதற்கு எவ்வளவோ எதிர்ப்பு உருவானது. ‘அந்த வட்டார மொழி யாருக்குத் தெரியும், கி.ரா. வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் படித்துக்கொள்ள வேண்டியதுதானா, அதில் இருக்கக்கூடிய வழக்குச் சொற்கள் யாருக்குப் புரியும்?’ இப்படியான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. எதைப் பற்றியும் அவர் கவலை கொள்ளவில்லை. தொடர்ந்து அதில் இயங்குவேன் என்று உறுதியோடு இயங்கித் தனக்கான மொழியை அவர் உருவாக்கிக்கொண்டார். அதுதான் கி.ரா.வுடைய வெற்றி.

ஐரோப்பிய இலக்கியக் கோட்பாடுகளில் இன்று வரைக்கும் செல்வாக்குச் செலுத்திக்கொண்டிருக்கின்ற கிரேக்கத்தில் தோன்றிய அரிஸ்டாட்டிலுடைய ‘கவிதையியல்’. அத்துடன் நாடகத்திற்கும் காவியத்திற்கும் முக்கியமாகத் தேவைப்படுவது ‘pity’ என்று சொல்லக்கூடிய ‘இரக்கம்’தான். கி.ரா. இந்த ‘இரக்க’த்தைப் பிடித்துக்கொண்டார். அவருடைய படைப்பில் இரக்க உணர்ச்சியை அற்புதமாகப் படைத்திருப்பார். அதற்குச் சான்றாகச் சில கதைகளைச் சுட்டலாம்.

காட்சியாக விரியும் கதை: கி.ரா.வின் கதைகளில் மிக முக்கியமான, இன்று வரலாற்றில் பேசப்பட வேண்டிய ஒரு கதையாக, ‘கோமதி’ கதையைச் சொல்ல வேண்டும். மூன்றாம் பாலினத்தவரான திருநங்கையர் பற்றிய கதைதான் அது. இப்படிக் கி.ரா. சிந்தித்திருப்பதற்கு அந்த உயிரின் மேலிருந்த இரக்கம்தான் காரணம். கோமதியின் குடும்பத்தில் எட்டுப் பெண்கள். இவன் ஒருவன்தான் ஆண். ஆணாகத்தான் பிறந்தான். வளரவளர பெண்ணாக மாறிக்கொண்டிருக்கிறான். பெண்களைப் போல் பூச்சூடி தன்னை அலங்கரித்துக்கொள்கிறான். கோமதிக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும். சமையல் வேலைக்காகச் சென்ற இடத்தில் ரகு என்கிற அந்த வீட்டு இளைஞன் மீது அவளுக்குக் காதல் மலர்கிறது. ஆனால், அதை வெளிப்படுத்தும்போது அவன் கோமதியின் நெஞ்சில் ஓங்கி மிதித்துத் தள்ளுகிறான். ஆனால், இறுதியில் அவனது படத்தை வைத்துக்கொண்டு பூச்சூடி, புடவை கட்டி, வளையல்கள் அணிந்து தனி ஆளாய்ப் பூட்டிய அறையில் கோமதி அழுதுகொண்டிருக்கும் காட்சியை ரகுவின் தங்கை சுலோச்சனா என்கிற சுலோ கண்டு அதிர்ந்துபோய் வருத்தப்படுவதாய்க் கதை முடிகிறது.

இப்படியொரு கதையை எழுதுவதற்கு இரக்கம் மட்டும் போதாது. கி.ரா.விடம் அதற்கும் மேலாகக் கதையை அப்படியே காட்சிப்படுத்தும் நுட்பம் கைவந்த கலையாக இருந்தது. அதனால்தான் திரைத் துறையினர் கி.ரா.வைத் தேடியோடி வந்தனர். அவரின் எழுத்து, காட்சி காட்சியாக விரியும். இதற்குக் கதையிலிருந்து ஒரு சான்று: “எதாவது அதிசயமான சங்கதியைக் கேள்விப்பட்டால், பட்டென்று கையைத் தட்டி இடது மணிக்கட்டின்மேல் வலது முழங்கையை ஊன்றி, ஆள்காட்டி விரலை மூக்கின்மேல் ஒட்டவைத்துக்கொள்வாள்”. இதை நாம் வாசிக்கும்போதே நமக்குள் அந்தச் சித்திரம் காட்சியாய் ஓடும். இதுதான் கி.ரா.வின் மொழியாற்றல்.

ஒரு குடும்பச் சித்திரம்: கி.ரா.வின் எழுத்துக்களை வாசிக்கும்போது கதையைப் போலத்தான் இருக்கும். ஆனால், கதை அதனுடைய செயல்பாட்டை நம்முள் நிகழ்த்தத் தொடங்கிவிடும். இதற்குச் சான்றாக இன்னொரு அற்புதமான கதையைச் சுட்டலாம். ‘கன்னிமை’ என்கிற கதை. கதையை இப்படித் தொடங்குகிறார்: “சொன்னால் நம்ப முடியாதுதான். நாச்சியார் அம்மாவா இப்படி மாறுவார் என்று நான் நினைக்கவில்லை. அவர் எனக்கு ஒன்றுவிட்ட சகோதரி” என்று அந்தக் கதையைச் சொல்கிறவன் சொல்வதுபோலத் தொடங்குவார். ஒன்றுவிட்ட சகோதரி என்று சொல்வதற்குக் காரணம், அந்தக் குடும்பத்தில் எட்டுப் பேர் ஆண் பிள்ளைகளாகப் பிறக்கிறார்கள். ஒரு பெண் வாரிசு இல்லையே என்று அந்த அம்மா, தன் வீட்டுக்காரரின் சகோதரருக்குப் பிறந்த பெண் குழந்தையான நாச்சியாரம்மாவை எடுத்து வளர்ப்புப் பிள்ளையாக வளர்க்கிறார். எட்டு சகோதரர்களும் அவளிடம் பாசம்பொழிந்து வளர்க்க, நாச்சியாரும் பெரிய குடும்பத்தில் ஓடி ஓடி வேலை செய்கிற பெண்ணாக வளர்கிறாள். அந்த வீட்டுப் பணியாளர்களுக்குக் ‘கும்பா’ என்று சொல்லக்கூடிய கலயம் நிறைய கம்பங்கஞ்சியையும், குதிரைவாலிக் கஞ்சியையும் ஊற்றிப் பசியைப் போக்கும் தாராள மனம் கொண்டவளாய் நாச்சியார் விளங்குகிறாள். கஞ்சிக்குத் தொட்டுக்கொள்ள பச்சை மிளகாயும் உப்பும் தந்து வாஞ்சையோடு பார்த்துக்கொள்வதை, அந்த மக்கள் மனதில் நீங்காமல் வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

ரெங்கையாவை மணந்து பிள்ளைகள் பெற்ற பிறகு, கண்ணுங்கருத்துமாகக் குடும்பத் தலைவியாக மாறிய நாச்சியார், முன்புபோல நேசிப்பில் அகன்ற வானம்போல் இல்லாமல் தற்போது சுருங்கிச்சுருங்கிக் குடையைப் போல் தன்னைச் சுருக்கிக்கொண்டவளாய் மாறிப்போனாள். ஒரு கட்டத்தில், காய்ச்சலில் படுத்துக் கிடக்கும் ரெங்கையாவையும் கண்டுகொள்ளாமல், பிள்ளைகளையே கவனித்துக்கொண்டிருப்பதைக் கண்ட அவர் மனம் வெதும்பிப் பேசும் பேச்சை நாம் வாசிக்கும்போது கி.ரா.வின் மகத்துவமான சாரம் வெளிப்படும். ‘குடும்பம்’ என்பது பாதுகாப்பான வளையம் என்கிற பாவனையில், எவ்வளவு பெரிய மகத்தான உள்ளம் கொண்ட மனிதர்களையும் எப்படிப் புரட்டிப்போட்டுவிடுகிறது என்கிற வாதத்தை நம்மிடையே எழுப்புகிறார் கி.ரா.

கி.ரா. வெறுமனே கதைகளை மட்டும் எழுதிச் செல்லவில்லை; அவற்றினூடாக மானுடத்தின் சாரமான கருணைமிக்க மனதையும் அன்றாட வாழ்க்கைப்பாடுகளையும் ஒவ்வொரு கதையிலும் ஓராயிரம் துணுக்குகளாகப் பொதிந்துவைத்திருக்கிறார். அவற்றை இனங்கண்டு, அவற்றின் மகத்துவத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசேர்க்கும் பொறுப்பில் இருக்கிறோம் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

- க.பஞ்சாங்கம், பேராசிரியர் தொடர்புக்கு: drpanju49@yahoo.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்