சுதந்திரச் சுடர்கள் | மகளிர்: இஸ்லாமியப் பெண்களுக்கு நீதி?

By ப்ரதிமா

இந்தூரில் வழக்கறிஞராக இருந்த அகமது கானை 1932இல் மணந்தார் ஷா பானு. இவர்களுக்கு ஐந்து குழந்தைகள். இவர்களுக்கு மணமாகி 14 ஆண்டுகள் கழித்து வேறொரு பெண்ணை அகமது கான் மணந்துகொண்டார்.

இரண்டு மனைவியரோடு ஒரே வீட்டில் வசித்துவந்த அகமது, 1975இல் ஷா பானுவை வீட்டை விட்டு வெளியேற்றினார். அப்போது ஷா பானுவுக்கு 62 வயது. வீட்டை விட்டு வெளியேற்றிய மனைவி வாழ்க்கை நடத்த சொற்ப பணத்தை அளித்துவந்தவர், அதை நிறுத்திவிட்ட நிலையில் தனக்குக் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் வேண்டும் என்று 1978இல் ஷா பானு வழக்குத் தொடுத்தார்.

ஷா பானு வழக்குத் தொடுத்த சில மாதங்களில் அவரை முத்தலாக் முறைப்படி விவாகரத்து செய்தார் அகமது கான். இஸ்லாம் மதத்தின் தனிச் சட்டப்படி விவாகரத்தான மனைவிக்கு ‘இத்தா’ எனப்படும் குறிப்பிட்ட காலம்வரையில் பணம் கொடுத்தால் போதுமானது என்றும் தன் மனைவிக்குத் தான் இழப்பீட்டுத் தொகை ஏதும் வழங்கத் தேவையில்லை எனவும் அகமது கான் வாதிட்டார்.

இதை எதிர்த்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தை அணுகினார் ஷா பானு. திருமணம், வாரிசுரிமை உள்ளிட்ட மதச் சட்டங்களுக்குள் நீதிமன்றம் எந்த அளவுக்குத் தலையிடலாம் என்பதை இந்த வழக்கு விவாதப் பொருளாக்கியது. உயர் நீதிமன்றத்தில் ஷா பானுவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வர உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் அகமது கான்.

இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதிகள் குழு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125 (ஜீவனாம்சம்) அனைத்து மதத்தின ருக்கும் பொதுவானதுதான் என்பதை உறுதிசெய்தது. இதையடுத்து அகமது கானின் கோரிக்கையின்பேரில் இவ்வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதிகள் குழு, இஸ்லாமியப் பெண்களின் ஜீவனாம்ச உரிமையை உறுதிசெய்யும் தீர்ப்பை 1985இல் வழங்கியது.

இஸ்லாம் பெண்களின் திருமணம், விவாகரத்து உரிமையைப் பாதுகாக்கும் வகையில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்புக்கு எதிராகவும் ஆதரவாகவும் விமர்சனங்கள் எழுந்தன. 1986இல் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி தலைமையிலான அரசு இஸ்லாம் பெண்களின் விவாகரத்து உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது.

அரசு நிறைவேற்றிய இந்தச் சட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு பெண்களுக்கு வழங்கிய ஜீவனாம்ச உரிமையை நீர்த்துப்போகச் செய்தது. இந்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் விவாகரத்து செய்யப்பட்ட இஸ்லாமிய பெண்கள் எஞ்சிய வாழ்க்கை முழுமைக்கும் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறும் உரிமையை உறுதிசெய்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE