இசைத் தமிழின் இலங்கை முகம்!

By மு.இளங்கோவன்

இசை, ஆன்மிகம், கல்விப் பணி, இதழியல் துறை என்று பல்வேறு தளங்களில் பரிமளித்தவர் விபுலாநந்தர்



பழந்தமிழரின் இசை நுட்பங்களைப் பற்றி விரிவாகப் பேசும் ‘யாழ்நூல்’ எனும் ஆய்வு நூலை எழுதியவர் இலங்கையைச் சேர்ந்த விபுலாநந்தர். இந்நூல் மூலமாகவே தமிழ் இலக்கிய உலகில் பெரும் புகழ்பெற்றவர். எனினும், இந்த அடையாளத்தைத் தாண்டி அவர் சாதித்தது நிறைய. அவரைப் பற்றிய முழுமையான அறிமுகம் தமிழ்ச் சூழலில் இல்லை என்றே சொல்லலாம். இதழாசிரியராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், ஆராய்ச்சியாளராகவும் தொடர்ந்து இயங்கியவர். இலங்கையில் பல்வேறு பள்ளிகளை உருவாக்கி மாணவர்களின் கல்விக்கண் திறந்த கல்வியாளராகவும், பேராசிரியராகவும் மிகச்சிறந்த துறவியாகவும் விளங்கியவர்.

1892-ல் இலங்கையில் மட்டக்களப்பை அடுத்துள்ள காரைத்தீவு என்னும் ஊரில் விபுலாநந்தர் பிறந்தார். இயற்பெயர் மயில்வா கனன். காரைத்தீவு, கல்முனை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தொடக்கக் கல்வி பயின்ற அவர், கொழும்பில் தொழில்நுட்பக் கல்வி பெற்றவர். ‘கேம்பிரிட்ஜ்’ தேர்வு எழுதி இளம் அறிவியல் பட்டமும் பெற்றிருக்கிறார். தனது 24-வது வயதில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ‘பண்டிதர்’ பட்டம் பெற்றார். இப்பட்டம் பெற்ற முதல் இலங்கைக் குடிமகன் இவர்தான். கொழும்பு, மட்டக்களப்பு, திரிகோணமலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர். காந்தி யாழ்ப் பாணம் சென்றபோது அவரை வரவேற்ற பெருமை விபுலாநந்தருக்கு உண்டு.

துறவறம்

திருவிளங்கம் எனும் தனது நண்பர் நோய்வாய்ப்பட்டு இறந்ததால், வாழ்வின் மீது பற்றிழந்த நிலைக்குச் சென்றார். இந்தக் காலகட்டத்தில் ராமகிருஷ்ண மடத்துடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னைக்கு வந்து ராமகிருஷ்ண மடத்தில் 1922 முதல் 1924 வரை துறவறப் பயிற்சி பெற்றார். பிரமச்சரிய காலத்தில் ‘பிரபோத சைதன்யர்’ என்ற பெயர் அவருக்குக் கிடைத்தது. 1924-ல் சிவானந்தரால் ஞான உபதேசம் பெற்றார். அவருக்கு ‘விபுலாநந்தர்’ என்ற பெயர் அமைந்தது அந்தக் காலகட்டத்தில்தான்.

பின்னர், 1925 முதல் 1931 வரை இலங்கையில் பல்வேறு பள்ளிகளை ஏற்படுத்தினார். தனக்கு ஞான உபதேசம் செய்த குருநாதர் நினைவாக மட்டக்களப்பில் ‘சிவானந்த வித்யாலயம்’ என்ற பெயரில் பள்ளியை உருவாக்கிப் பல்லாயிரம் மாணவர்கள் கல்வியறிவு பெற வழிவகுத்தார். ராமகிருஷ்ணர், விவேகானந்தர் கருத்துகளை இலங்கையில் பரப்பி, ஆன்மிக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியிருக்கிறார்.

அண்ணாமலை அரசர் ராஜா சர். அண்ணாமலை செட்டியாரின் அழைப்பின் பேரில் 1931 முதல் 1933 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அங்கு பணியாற்றியபோது, விவேகானந்தரின் ‘ஞானதீபம்’, ‘கர்மயோகம்’, ‘ராஜயோகம்’, ‘பதஞ்சலி யோகசூத்திரம்’ முதலான நூல்களை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தார். பாரதியார் கவிதைகளைப் பரப்புவதிலும் மாணவர்களுக்குப் பயிற்றுவிப் பதிலும் முன்னோடியாக இருந்தார். ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளை மொழி பெயர்த்திருக்கும் அவர், ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் தொடர்பாகவும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

தமிழறிஞர்களின் நட்பு

உ.வே.சா, ஞானியார் அடிகள், திரு.வி.க, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உமா மகேசுவரம் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், சதாசிவ பண்டாரத்தார், ஔவை. துரைசாமிப் பிள்ளை, சுத்தானந்த பாரதியார், பேராசிரியர் க.வெள்ளைவாரணன் உள்ளிட்ட அறிஞர்களுடன் நல்லுறவு கொண்டவர்.

ராமகிருஷ்ண விஜயம், பிரபுத்த பாரதம் (ஆங்கிலம்), வேதாந்த கேசரி, விவேகானந்தன் (இலங்கை) உள்ளிட்ட இதழ்களின் ஆசிரிய ராகப் பணிபுரிந்திருக்கிறார். சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங் களிலும், ஞானியார் மடம், மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளிலும், சென்னை, திருச்சிராப்பள்ளி வானொலி நிலையங்களிலும் இசைத் தமிழ்ச் சிறப்பினை எடுத்துரைத்து உரையாற்றியவர். அவரது உரைகளை அக்காலத்தில் ‘தி இந்து’ (ஆங்கில) நாளிதழ் பதிவுசெய்துள்ளது.

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் யாழ் குறித்த குறிப்புகளையும், சங்க இலக்கியங் களில் இடம்பெறும் யாழ் பற்றிய குறிப்பு களையும் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்து, ‘யாழ்நூல்’ என்ற நூலை 1947-ல் வெளியிட்டார். இந்த நூல் வெளிவருவதற்குப் புதுக்கோட்டை நற்சாந்துப்பட்டியைச் சேர்ந்த கோனூர் ஜமீன்தார் இராம. பெரி. பெரி. சிதம்பரம் செட்டியார் பொருளுதவியும் ஆதரவும் தந்துள்ளார். விபுலாநந்தரின் மீது பற்றுகொண்ட சிதம்பரம் செட்டியார், பதினோராயிரம் சதுரஅடி பரப்பளவுகொண்ட தனது வீட்டினை வழங்கி, ஆய்வுக்கு உதவினார். அந்தச் சமயத்தில் விபுலாநந்தரின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது.

இறுதி ஆசை

அந்த நூல் வெளியிடப்பட்டால் தனது உடல்நிலை தேறிவிடும் என்று விபுலாநந்தர் நம்பினார். அவரது விருப்பம் அறிந்து கரந்தைத் தமிழ்ச் சங்கம் வழியாக நூல் அச்சேற வழிவகை செய்தார் சிதம்பரம் செட்டியார். அவரைப் போன்ற பலரும் விபுலாநந்தருக்கு உதவி செய்தனர்.

பேராசிரியர் க.வெள்ளைவாரணன், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தாரின் உதவியுடன் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருக்கொள்ளம்புதூர் திருக்கோயிலில், 1947-ல் ‘யாழ்நூல்’ வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியின்போது, விபுலாநந்தர் உருவாக்கிய யாழினைச் சங்கீதபூஷணம் க.பெ.சிவானந்தம் பிள்ளை இசைத்து, அனைவரின் பாராட்டையும் பெற்றார். இரண்டு நாட்கள் நடைபெற்ற அந்த விழாவில், நாவலர் சோமசுந்தர பாரதியார், 'குமரன்' ஆசிரியர் சொ.முருகப்பா, பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சாம்பமூர்த்தி ஐயர், பேராசிரியர் சுவாமிநாத பிள்ளை, கரந்தைக் கவியரசு அ.வேங்கடாசலம் பிள்ளை, அறிஞர் தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார், சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப் பிள்ளை, சுவாமி சித்பவாநந்தர், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசன் உள்ளிட்ட அறிஞர்கள் கலந்துகொண்டனர்.

‘யாழ்நூல்’ வெளிவந்த 44-வது நாள், கொழும்பு மாநகரில் உள்ள மருத்துவமனை யில் இயற்கை எய்தினார் விபுலாநந்தர். அவரின் உடல் மட்டக்களப்புக்கு எடுத்துச் செல்லப் பட்டு, புதைக்கப்பட்டு சமாதி அமைக்கப்பட்டது. அவரது இறுதி நிகழ்ச்சியில் பல மதத்தவரும் கலந்துகொண்டு திருமறைகளை ஓதி வழிபட் டனர். அவரது நினைவு தினத்தைத் தமிழ்மொழி தினமாக அனுசரித்தது இலங்கை அரசு. அவரது கல்விப் பணியும் ஆன்மிகப் பணியும் இலங்கையில் பல்வேறு அறிவார்ந்த மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன. விபுலாநந்தர் உருவாக்கிய பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்கள் இன்று கல்வியில் முன்னேறி உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். அவரது வாழ்வின் மேன்மையைச் சொல்லும் செய்தி இது!

- மு.இளங்கோவன்,

புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய தமிழ்த் துறைப் பேராசிரியர்.

விபுலாநந்தரைப் பற்றிய விரிவான ஆவணப்படத்தை உருவாக்கிவருபவர்.

தொடர்புக்கு: muelangovan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்