தமிழ்நாடு என்றால் உங்களுக்கு சட்டென்று என்னென்ன மனத்தில் தோன்றும்? அதிகமானோர் மனங்களில் இடம்பிடித்த சில அம்சங்களை பற்றி ஒரு விரைவுப் பார்வை:
கவி பாடும் கற்கள்
தமிழகத்தின் பழமையான கோயில்களில் பல, கலையழகுக்காகவும் கட்டுமானத்துக்காகவும் உலகப் புகழைப் பெற்றிருக்கின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், ராமநாதபுரம் ராமநாத சுவாமி கோயில் பிரகாரம் போன்றவை பிரம்மிக்க வைக்கக்கூடியவை. ஆன்மிக, கலை, வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட இக்கோயில்கள் ஆச்சரியமூட்டும் சிற்பங்கள், கலையம்சம் நிறைந்த வேலைப்பாடுகள், தொன்மை வாய்ந்த அம்சங்களால் தனி அடையாளத்தைப் பெற்றுள்ளன.
» பரமக்குடி | அரசு நடவடிக்கை எடுக்காததால் கால்வாயை சீரமைக்கும் பணியில் இறங்கிய விவசாயிகள்
» தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற ‘உழவன் செயலி’ மூலம் விண்ணப்பிக்கலாம்
வீரம் விளைந்த மண்
தமிழர்களின் மரபுவழி வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு என்று வேறு பெயர்களும் இதற்கு உண்டு. ஏறு என்பது காளையைக் குறிக்கும். காளையை ஓடவிட்டு இளம் காளையர்கள் அதன் திமிலைத் தழுவிப் பிடிப்பதே இந்த விளையாட்டு. மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் விளையாடப்பட்டாலும், மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுகள் உலகப் புகழ்பெற்றவை. ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்கக் கோரி 2017இல் நடைபெற்ற போராட்டங்கள் தேசிய அளவில் கவனம் ஈர்த்தன.
12 ஆண்டு அதிசயம்
உலகில் அதிசயங்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சொல்லிவைத்தாற்போல் பூக்கும் இயற்கை அதிசயம் குறிஞ்சிப் பூ. பூப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நீண்ட காலத்தின் காரணமாகவே குறிஞ்சிப் பூ தனித்து அறியப்படுகிறது. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இடம்பிடித்த குறிஞ்சிச் செடியில் நீலம், கரு நீல மலர்கள் எனப் பல வகைகள் உண்டு. தமிழகத்தில் உதகமண்டலம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இவை பூக்கின்றன. கடைசியாக 2018இல் குறிஞ்சி மலர்கள் பூத்தன.
சுபநிகழ்வுகளின் அடையாளம்
விசேஷ நிகழ்வுகளுக்குப் பெண்களின் விருப்பத் தேர்வு பட்டுச் சேலை. அந்தஸ்து என்கிற அம்சத்தைத் தாண்டி கலாச்சார, ரசனை சார்ந்த வெளிப்பாடும் இதில் அடங்கும். தமிழகத்தில் காஞ்சிபுரம், ஆரணி, தர்மாவரம், திருப்புவனம், சின்னாளப்பட்டி ஆகியவை பட்டு நெசவுக்குப் பெயர்பெற்ற ஊர்கள். என்றாலும் தேசிய அளவில் காஞ்சிபுரம் பட்டு தனி அடையாளம் பெற்றிருக்கிறது. அங்கு நெய்யப்படும் பட்டுப் புடவைகள் பட்டு நூல், தங்க, வெள்ளி ஜரிகை மூலம் தயாரிக்கப்படுவதும், தனித்துவத் தையல் வடிவமைப்புமே இதற்குக் காரணம்.
சப்புக்கொட்ட வைக்கும் சுவை
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் ஓர் அடையாள உணவு உண்டு. மாநிலம் எங்கும் பிரியாணி பிரியர்கள் உண்டு என்றாலும், ஆம்பூர் பிரியாணி தனி மகுடம் சூடிய ஒன்று. பொதுவாக பாஸ்மதி அரிசியில் சமைக்கப்பட்டாலும், தமிழ் மரபு அரிசி வகையான சீரக சம்பாவில் ஆம்பூர் பிரியாணி சமைக்கப்படுகிறது. இதே போல செட்டிநாடு உணவுக் கலாச்சாரமும் சிறப்புப் பெற்றது. தனித்துவ மசாலாக்களைக் கொண்டு உருவாக்கப்படும் இறைச்சி உணவு வகைகள் செட்டிநாட்டு உணவு வகைகளுக்கு அடையாளம் பெற்றுத் தந்துள்ளன. சென்னையின் புகழ்பெற்ற புகாரி ஹோட்டல் மூலம் அறிமுகமானதாகக் கருதப்படும் சிக்கன் 65, டிரை கோபி மஞ்சூரியன் வரை மற்ற உணவு வகைகளும் பெரும் தாக்கத்தை செலுத்தியிருக்கின்றன.
கடல் விழுங்கும் சூரியன்
கடற்கரை ஊர்களில் சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் காண முடியும். ஆனால், இவை இரண்டையும் பார்ப்பதற்காகவே ஒரு ஊரைத் தேடிப் பலரும் வருகிறார்கள் என்றால், அது கன்னியாகுமரிக்குத்தான். முக்கடலும் சங்கமிக்கும் புள்ளி என்பது ஒரு காரணமாக இருந்தாலும், இந்திய முதன்மை நிலப்பகுதியின் இறுதி முனை குமரி என்கிற தனிச் சிறப்பும் இதற்குக் காரணம். அதிலும் பௌர்ணமி அன்று சூரிய அஸ்தமனத்தையும் சந்திர உதயத்தையும் ஒரே நேரத்தில் காணக் கண் கோடி வேண்டும்.
இந்தியாவின் முதல் நவீன நகரம்
பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரான்சிஸ் டேயும் ஆண்ட்ரு கோகனும் 17ஆம் நூற்றாண்டில் மதராசப்பட்டினத்துக்கு வந்தனர். தற்போது ஜார்ஜ் கோட்டை அமைந்திருக்கும் இடத்தை வணிகம் செய்ய அவர்கள் தேர்ந்தெடுத்தனர். குறுநில மன்னர் சென்னப்ப நாயக்கரிடமிருந்து அந்த இடம் வாங்குவதற்கான ஒப்பந்தம் 1639 ஆகஸ்ட் 22 அன்று இடப்பட்டது. 1644இல் புனித ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை இது. அது மட்டுமல்ல, பிரிட்டனுக்கு வெளியே ஆங்கிலேயர்கள் முதன்முதலில் அமைத்த மாநகராட்சியும் அன்றைய மதராஸே.
நீரின் மேல் நிற்கும் அற்புதங்கள்
காவிரியால் ஏற்படும் வெள்ள அழிவைத் தடுக்கவும், மிகுதியான நீரை பயன்படுத்தி பாசனப் பரப்பை அதிகரிக்கவும் கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட அணைதான் கல்லணை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அணை, தற்போது வெளியே தெரியும் அணைக்கு அடியில் இருக்கிறது. தற்போது நாம் பார்க்கக்கூடிய கல்லணையைக் கட்டியது ஆங்கிலேயப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன். ராமேஸ்வரம் தீவையும் முதன்மை இந்திய நிலப்பகுதியையும் இணைக்கக்கூடிய பாலம் தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் மற்றொன்று. பாம்பன் சாலைவழிப் பாலம் 1988இல் கட்டி முடிக்கப்பட்டது என்றால், பாம்பன் ரயில் பாலம் 1914இல் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த இரண்டு பாலங்களும் கடந்த நூற்றாண்டின் பொறியியல் அற்புதங்கள்.
பேரைக் கேட்டாலே வெடிக்கும்
பட்டாசை சீனா கண்டுபிடித்திருந்தாலும் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், உலகின் பல பகுதிகளுக்கும் அதைக் கொண்டுபோய் சேர்த்தது என்னவோ சிவகாசிதான். கொல்கத்தாவில் தீப்பெட்டித் தொழிற்சாலையைப் பார்த்த சிவகாசியைச் சேர்ந்த பி. ஐயன், ஏ. சண்முகம் ஆகியோர் 1928இல் சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலையைத் தொடங்கினர். பின்பு பட்டாசுத் தொழிலுக்கும் சிவகாசி பெயர்பெற்றது. ‘குட்டி ஜப்பான்' சிவகாசிதான், இந்தியாவில் 90 சதவீத பட்டாசை உற்பத்திசெய்கிறது.
ஆசியாவின் டெட்ராய்ட்
இந்திய வாகன உற்பத்தித் துறையின் முன்னணி நகரம் சென்னை. அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள சிறிய நகரான டெட்ராய்ட், அமெரிக்க வாகன உற்பத்தித் துறையின் தலைநகராக விளங்கிவருகிறது. அதே போல் பிஎம்டபிள்யு, ஹூண்டாய், ரெனால்ட் நிஸ்ஸான், ராயல் என்ஃபீல்ட், அசோக் லேலண்ட், சுந்தரம் கிளேடன், டாஃபே உள்பட சென்னையிலும் அதிக எண்ணிக்கையிலான வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. அதனால்தான் ஆசியாவின் டெட்ராய்ட் என்று சென்னை அழைக்கப்படுகிறது. நாட்டின் வாகன உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு சென்னையில் நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
24 days ago