சமீபத்தில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்ஸில் இந்தியா இரண்டு பதக்கங்களை மட்டுமே பெற்றது. அதனையொட்டி, சமூக வலைதளங்களில் ஒரு விமர்சனம் ஓடிக்கொண்டிருந்தது. பதக்கம் வெல்லாத சீன வீரர்களைக் கடுமையான வேலைகளுக்கு அந்நாட்டு அரசு அனுப்பியதைப் போல, இந்தியாவிலிருந்து கலந்துகொண்டவர்களையும் அனுப்ப வேண்டும் என்றெல்லாம் பதிவுகள் எழுதப்பட்டிருந்தன. உண்மையான வருத்தத்தின் வெளிப்பாடுகள்தான் அவை. ஆனால் இதே பொதுச் சமூகம், விளையாட்டு விஷயத்தில் விமர்சனங்களைத் தாண்டி எவ்வளவு அக்கறை காட்டுகிறது என்பதையும் பார்க்க வேண்டும்!
15 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசு நடத்தும் விளையாட்டு விடுதிகளில் ஒரு விளையாட்டு வீரருக்கு நாளொன்றுக்கு உணவுப் படியாக சுமார் 25 ரூபாய் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்த விடுதிகளில் கிடைக்கும் உணவை முகர்ந்துகூடப் பார்க்க முடியாது. ஒன்றிரண்டு கோழிக் கறித் துண்டுகளோ, மாட்டுக் கறித் துண்டுகளோ கிடைத்தால், அந்த விளையாட்டு வீரருக்கு அதிர்ஷ்டம். அங்கு தங்கி விளையாட்டுக் கல்வி கற்றவர்கள் முட்டைகோஸ் தவிர்த்து, வேறு காயையே பார்த்ததில்லை என்பது அனுபவத்தில் கிடைத்த உண்மை. ஆனாலும், அந்த விடுதிகளில் சேர்வதற்கு அப்போது கடும் போட்டி நிலவும். சிபாரிசுகளோடு கூட்டம் முண்டியடிக்கும் நிலை இருந்தது.
விரும்பப்படாத விளையாட்டு
இப்போது உணவுப் படியைச் சுமார் 200 ரூபாய்க்கு மேல் உயர்த்தியிருக்கிறார்கள். பாதம் பருப்புகள் வழங்கப்படுகின்றன. போதுமான அளவு இறைச்சி கிடைப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், கடந்த மாதத்தில் அத்தகைய விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான சேர்க்கைப் போட்டிகள் மூன்று முறை தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றன. மாணவர்கள் அந்த விடுதிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் அதற்குக் காரணம். இந்த 15 ஆண்டுகளில் அப்படியென்ன மாற்றம் நிகழ்ந்து விட்டது?
தேசிய அளவில் விளையாட்டு உபகர ணங்கள் விற்கும் நிறுவனம், ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஒட்டுமொத்தமாக விற்கப்படும் விளையாட்டுப் பொருட்களில் 57% கிரிக்கெட் சார்ந்தவை என்கிறது அந்த ஆய்வு. இங்கு பார்வையாளர்களும்கூட கிரிக்கெட் சார்ந்து மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றனர். கிரிக்கெட் தவிர்த்த மற்ற விளையாட்டு வீரர்கள் குறித்து எதுவும் தெரிந்துகொள்ள தமிழ்ச் சமூகம் விரும்புவதே இல்லை.
உலகம் போற்றும் சத்துவாச்சாரி
வேலூர் சத்துவாச்சாரி, உலக அளவில் பளுதூக்கும் விளையாட்டில் பெயர் பெற்ற ஊர். சுமார் நான்கு அர்ஜுனா விருது பெற்றவர்கள் அங்கு இருக்கிறார்கள். ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட ஐந்து பேரும் அந்த ஊர்வாசிகள். தஞ்சாவூர் மாவட்டத்தில் வடுவூர் என்கிற சிறிய கிராமம் இருக்கிறது. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக 6 கோடி ரூபாய் செலவில் கபடி மற்றும் வாலிபால் உள் விளையாட்டு அரங்கம் கட்டப்படுகிறது. 1964-ல் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்ட ராஜசேகரன் அந்த ஊரைச் சேர்ந்தவர்தான். ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்ட முதல் தமிழர் அவர். இப்போதும் காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொண்ட கபடி வீரர்களும் கைப்பந்து வீரர்களும் அந்த ஊரில் இருக்கிறார்கள். கன்னியாகுமரிக்கு அருகே தூத்தூர் என்று ஒரு ஊர் இருக்கிறது. அந்த ஊரில் சின்னக் குழந்தைகள்கூடக் கால்பந்தை உதைத்துக்கொண்டு அலைவார்கள்.
தயான்சந்தை இந்திய ஹாக்கி விளை யாட்டின் தந்தை என்பார்கள். ஹிட்லரே வியந்து பார்த்த வீரர் அவர். ஜெர்மனி யில் தயான்சந்துக்குச் சிலை வைத்திருக் கிறார்கள். அப்படிப்பட்ட தயான்சந்தே ஒரு ஊரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அங்குள்ள மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க வந்திருக்கிறார். அந்த ஊர் கோவில்பட்டி.
புறக்கணிக்கும் அரசு
இவையெல்லாம் மிகச் சிறிய உதா ரணங்கள்தான். இப்படி தமிழகம் முழுக்கப் பல ஊர்கள் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், குறிப்பிட்ட விளையாட்டு களை வளர்த்தெடுக்கும் விளைநிலங்க ளாக இருக்கின்றன. அரசாங்கத்தின் எந்த உதவியும் போய்ச் சேராமல், அங்குள்ள ஆர்வலர்கள் போராடிக்கொண் டிருக்கிறார்கள்.
கிரிக்கெட்டில் ரஞ்சிப் போட்டியில் விளையாடிய வீரருக்கே ‘ப்ளெக்ஸ் போர்டு’ வைக்கும் தமிழகத்தில், பளுதூக்கும் விளையாட்டுக்காகப் பதக்கம் பெற்ற ஒருவர் அமைதியாக சாலையோர தேநீர்க் கடையில் பரிதாபமாக நின்றுகொண்டிருக்கிறார். அர்ஜுனா விருது பெற்றவர்களும் ஒலிம் பியன்களும் நிறைந்திருக்கிற வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு விளையாட்டரங்கம் கிடையாது.
கோவில்பட்டியில் கட்டப்பட்டிருக்கிற செயற்கை இழை ஹாக்கி மைதானம் பல மாதங்களாகத் திறக்கப்படாமல் இருக்கிறது. வடுவூரில் கட்டப்பட்டுவரும் உள்விளையாட்டரங்கப் பணிகள் பாதியில் நிற்கின்றன. பல இந்திய விளையாட்டு வீரர்களை உருவாக்கித் தந்த தூத்தூரில் இன்னமும் ஒரு சிறந்த கால்பந்து மைதானம் கிடையாது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 5 இலட்சத்து 9 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதில் எத்தனை பேர் உடற்கல்வி ஆசிரியர்கள் தெரியுமா? வெறும் 3,500. ஒரு சதவீதம்கூட இல்லை.
யார் குற்றம்?
கைகொடுத்துத் தூக்கிவிட்டால், அந்த விளையாட்டு விளைநிலங்களில் இருந்து செழிப்பான பயிர்கள் விளையக்கூடும். ஆனால், உரமிடாத பயிர்களிடம் பெரும் விளைச்சலை மட்டும் எப்படி எதிர்பார்க்க முடியும்?
இன்றைக்கு இந்திய ரயில்வே துறை மட்டும் இல்லாமல்போனால், பல விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பே கிடையாது. தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்கள் எவற்றிலும் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. தமிழகத்தில் காவல் துறையில் மட்டும் கொஞ்சம் வேலைவாய்ப்பு கொடுக்கிறார்கள். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழக அரசு, விளையாட்டுத் துறைக்கு ஓரளவு வசதிகளைச் செய்துதருகிறது என்றாலும், கிராமப்புற விளையாட்டு வீரர்களை அது கண்டுகொள்வதே இல்லை. விளையாட்டுக்கான நல்ல காலணி ஒன்றின் விலை 5,000 ரூபாய்க்கும் மேல். செருப்பு வாங்கவே வழியில்லாத கிராமப்புற மாணவர்கள் என்னதான் செய்வார்கள்?
விளையாட்டுத் துறை மீதான புறக் கணிப்புகள் பற்றி அறியாமல், பதக்கங் கள் வெல்லாதவர்களைக் கொத்தனார் வேலைக்கு அனுப்ப வேண்டும் என சமூக வலைதளங்களில் எழுதிக்கொண் டிருக்கிறோம். இதையெல்லாம் அறிந்து கொள்ள விரும்பாத தமிழ்ப் பொதுச் சமூகத்தை எந்த வேலைக்கு அனுப்புவது?
- சரவணன் சந்திரன், எழுத்தாளர், ஊடகவியலாளர். தொடர்புக்கு: saravanamcc@yahoo.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago