ஐந்தாண்டுத் திட்டங்களை இந்தியா ஏன் தேர்ந்தெடுத்தது?
சோவியத் ஒன்றியம் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஐந்தாண்டுத் திட்டங்கள் வாயிலாக எட்டியதால் பிரதமர் ஜவாஹர்லால் நேருவையும் அது வெகுவாக ஈர்த்திருக்க வேண்டும். திட்டமிடலை மேற் கொள்வதன் மூலமே இந்தியாவும் விரைவாகப் பொருளாதார வளர்ச்சி காணும் என்று அவர் நம்பினார்.
மற்றவர்களுடன் இது பற்றி விவாதித்தாரா, இல்லையா என்பது தெரியாது, வளர்ச்சிக்கு ஐந்தாண்டுத் திட்டங்கள் அவசியம் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
பொருளாதார வளர்ச்சி பெற உள்நாட்டில் மக்களுடைய சேமிப்பும், தொழில்களில் அவர்களுடைய முதலீடும் அதிகமாக இருக்க வேண்டும் என்பதே முதல் படி என்பதை அவருக்கு விளக்க வேண்டிய கட்டாயம், பொருளாதாரம் படித்த எங்களுக்கு இருந்தது. அப்போது இந்தியாவில் மொத்தமாக மக்களுடைய சேமிப்பு எவ்வளவு என்று கணக்கிட்டதில், தேசிய வருமானத்தில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவுதான் என்பது தெரிந்தது.
மிகப் பெரிய அளவில் வெளிநாட்டிலிருந்து எந்த உதவியும் கிடைக்காது என்பது எங்களுக்குத் தெரியும். ஐந்து சதவீதம்தான் மக்களுடைய சேமிப்பு என்றால், திட்டக் காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதத்திலிருந்து ஒன்றரை சதவீதம்வரைதான் இருந்திருக்கும். ஆண்டுதோறும் அது முக்கால் சதவீதத்துக்குத்தான் வளர முடியும் என்பது அப்போதைய உலக அனுபவங்களிலிருந்து தெரிந்தது.
சேமிப்பின் முக்கியத்துவம்
நாட்டு மக்களிடையே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பது தெளிவானது. சோவியத் ஒன்றியத்தில் சேமிப்பு 30% ஆக இருந்தது. சோவியத் ஒன்றியத்தில் பொதுவுடைமை அரசு ஆட்சியில் இருந்ததாலும் முதலாளித்துவப் பொருளாதார முறைக்கு எதிரான வழியை அது தேர்ந்தெடுத்ததாலும் பல சவால்களை எதிர்கொண்டது. அதே வேளை சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைப் பாணி அரசியல் அமைப்பு இந்தியாவில் கிடையாது. இதைச் சொன்னபோது, ஜனநாயக அமைப்பு முறையிலிருந்து இனி எதற்காகவும் இந்தியா மாறுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவிட்டார் நேரு.
திட்டமிடல் தொடர்பான விவாதம் தொடர்ந்தபோது, மக்களின் சேமிப்பு அளவு மிகமிகக் குறைவாக இருப்பதால் ஐந்தாண்டுத் திட்டத்தில் முதலில் ஒவ்வொரு துறையிலும் முன்னுரிமை அடிப்படையில் சிலவற்றை மேற்கொள்ளவும், சேமிப்பு அளவைப் படிப்படியாக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கலாம் என்றார் நேரு. நம்முடைய நடவடிக்கைகள் மூலம் தேசிய வருமானத்தை உயர்த்தும்போது, அப்படி உயரும் அளவில் 20 முதல் 25 சதவீதம் வரையில் சேமிப்பாக இருப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கலாம் என்று கூறினோம்.
மெதுவாக விரைதல்!
இந்த வகையில் முதலாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தின் தொடக்கத்தில் ஐந்து சதவீத மாக இருக்கும் தேசிய சேமிப்பின் அளவை, திட்டம் முடியும் காலத்தில் ஏழு சதவீதமாக உயர்த்தலாம் என்று கூறினோம். இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் இதையே 11%, பிறகு மூன்றாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 15%, 1970களில் 20% என்ற அளவுக்கு உயர்த்தலாம் என்று திட்டமிட்டோம். இந்த வழிமுறை நேருவுக்குப் பிடித்திருந்தது, இதற்கு ‘மெதுவாக விரைதல்’ (Hastening Slowly) என்று பெயர் ஏற்பட்டது.
ஐந்தாண்டுத் திட்டங்களைத் தொடங்கிய முதல் 15 முதல் 20 ஆண்டுகள் வரை பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டோம். உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க முடியாததால், இந்தப் பிரச்சினைகள் ஏற்பட்டன. சேமிப்பும் முதலீடும் மிகவும் குறைவாக இருந்த 1950 களின் தொடக்கத்தில் கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களின் விலை உயர்வு மிகப் பெரிய நெருக்கடியை அரசுக்கு ஏற்படுத்தியது. அத்தியாவசிய உணவு தானியங்களின் விலை உயரும்போது, குறைந்த வருவாய்ப் பிரிவினரை அது வெகுவாக பாதிக்கிறது. அதனால் திட்டமிட்டபடி பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் தடைகள் ஏற்பட்டுவிடுகின்றன.
1970களில் ‘பசுமைப் புரட்சி’ மூலம் முதலில் கோதுமை விளைச்சலும் பிறகு நெல் விளைச்சலும் அமோகமாக உயர்ந்தன, பிறகு எல்லாமே மாறிவிட்டன. அதற்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம், திட்டக்குழு நிர்ணயித்த இலக்குக்கு நெருக்கமாக வளர்ச்சி காண ஆரம்பித்தது. கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, ‘சாதிக்க முடியும்’ என்று நம்பி நாங்கள் இறங்கிய செயலில், எங்களுடைய இலக்கையும் மிஞ்சி சாதித்திருக்கிறோம் என்பது புரிகிறது.
இன்றைக்கு (1997) இந்தியாவில் தேசிய சேமிப்பு விகிதம் 25 முதல் 27 சதவீதமாக இருக்கிறது. இதன் காரணமாகத்தான் நம்முடைய தேசிய வருவாயின் வளர்ச்சியும் வேகம் பெற்றுள்ளது. இப்போது தேசியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 7% என்கிற அளவில் வளர்கிறது. இது மிகவும் அருமையான வளர்ச்சி. இப்படியே போனால் அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் தேசிய வருமானம் இரட்டிப்பாகிவிடும்.
பன்முகப் பயன்கள்
ஐந்தாண்டுத் திட்ட நடைமுறையை நாங்கள் தொடங்கிய காலத்துடன் ஒப்பிடுகையில் இது திருப்திகரமான வளர்ச்சியாக இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் மிகவும் சிக்கலான இந்த காலகட்டத்தில்தான் அரசியல் களத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள்கூட சுமுகமாகவே தொடர்ந்தன.
சோவியத் ஒன்றியத்தில் ஏற்பட்ட அளவுக்கு இங்கே மாநிலங்களுக்கு இடையில் பெரும் மோதல்களும் பிளவு மனப்பான்மையும் உருவாகிவிடவில்லை. பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்தபோதிலும், நாடு ஒற்றுமை மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையோடு செயல்பட்டது.
அரசாங்கத்துக்குக் கிடைத்த நிதியாதாரம் மிகவும் குறைவு என்பதால், கிடைத்தவற்றை உயர் முன்னுரிமை தேவைப்பட்ட துறைகளில் மட்டுமே செலவிட்டோம். எங்களுடைய உயர் முன்னுரிமைத் துறையாக வேளாண்மை, அதிலும் குறிப்பாக பாசன வசதிகள்தான் இருந்தன.
தொழில்துறை வளர்ச்சியை விரைவுபடுத்த விரும்பிய நாங்கள், அதற்கு முதல் தேவை ‘மின்சார உற்பத்தி’ என்று அடையாளம் கண்டோம். இவ்விரண்டுக்கும் சேர்த்துத்தான் மிகப் பெரிய நீர்த்தேக்கங்களைக் கட்ட முன்னுரிமை அளித்தோம். நீர்மின்சாரம் தயாரிக்கும் மின்னுற்பத்தி நிலையங்களுக்காக மிகப் பெரிய அணைகளைக் கட்டினோம்.
அவற்றை மின்னுற்பத்திக்கு, பாசனத் தேவைக்கு, நகரங்களின் பாதுகாக்கப்பட்ட குடிநீருக்கு, தொழில் நிறுவனங்களின் உற்பத்திச் செயல்களுக்கு என்று பல்வேறு பயன்பாடுள்ளவையாகப் பார்த்துக் கொண்டோம். இந்த மாபெரும் அணைக்கட்டுத் திட்டங்களைத்தான் இந்தியாவின் ‘நவீனக் கோயில்கள்’ என்று நேரு வர்ணித்தார். முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது எவ்வளவு தொகை தேவைப்படும் என்று கணக்கிட்டபோது, கையில் இருந்த நிதியாதாரம் மிகவும் குறைவாக இருந்ததால், ஏற்கெனவே தொடங்கிவிட்ட பக்ரா-நங்கல் போன்ற நீர்மின் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தோம்.
முதலாவது ஐந்தாண்டுத் திட்ட இறுதிக் காலத்தில், புதிய உருக்காலையை நிறுவவும் திட்டமிட்டு நிதி ஒதுக்கினோம். நேருவிடம் அதிக செல்வாக்கு பெற்றிருந்த பேராசிரியர் மகலனோபிஸ், கனரகத் தொழிற்சாலைகளை அதிக எண்ணிக்கையில் விரைவாக நிறுவிவிட வேண்டும் என்றார். இதற்கிடையில் இந்தியா வின் ஐந்தாண்டுத் திட்டங்கள் வெளிநாடுகளின் கவனத்தையும் ஈர்த்தன.
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் மூன்று பெரிய உருக்காலைகளை நிறுவ உதவி அளிக்க சோவியத் ஒன்றியம், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் முன்வந்தன. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்திலேயே, இந்திய ராணுவத்துக்குத் தேவைப்படும் ஆலைகளை நிறுவுவதற்கும் கவனம் செலுத்தப்பட்டது. ஆசியப் பிராந்தியத்தில் பாகிஸ்தானைத் தனது கூட்டாளியாகப் பயன்படுத்த அமெரிக்கா முடிவுசெய்துவிட்டதால், அதை ஈடுகட்ட ராணுவத்துக்கான உற்பத்தியை அதிகப்படுத்துவது அவசியமாகிவிட்டது.
முதல் திட்டக் குழு
திட்டக் குழு முதல் முறையாக அமைக்கப்பட்ட போது பிரதமர் ஜவாஹர்லால் நேரு, குல்சாரிலால் நந்தா, வி.டி. கிருஷ்ணமாச்சாரி, ஜி.எல். மேத்தா ஆகியோர் உறுப்பினர்கள். திட்டத்துக்கான ஒட்டுமொத்த வரையறைகளைத் தீர்மானிப்பது உறுப்பினர்களின் வேலை.
ஆனால் திட்டமிடல் என்பதே புதிய துறை என்பதால், பொருளாதாரத்தில் நமக்குள்ள நிதி - இதர ஆதாரங்கள், சவால்கள், செயல்படுத்துவதற்குத் தேவைப்படும் சாதனங்கள் ஆகியவை குறித்து குழு உறுப்பினர்களுக்கே விவரித்தாக வேண்டிய கடமை, பொருளாதாரம் படித்த என்னைப் போன்ற சுமார் 20 தொழில்முறை நிபுணர்களுக்கு ஏற்பட்டது.
திட்டக் குழு அப்போது மிகவும் சிறியதாக இருந்தது. திட்டக் குழு உறுப்பினர்களைத் தவிர என்னைப் போன்ற 20 தொழில்முறை நிபுணர்கள் மட்டுமே இருந்தோம். திட்டக் குழுவுக்கென்று தனி அலுவலகம் இல்லை, குடியரசுத் தலைவர் மாளிகையின் ஒரு பகுதியிலேயே அலுவலகத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
பொருளாதாரப் பிரிவில் ஜே.ஜே. அஞ்சாரியா, டாக்டர் கே.எஸ். கிருஷ்ணசாமி (பின்னாளில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகப் பதவி வகித்தார்), டாக்டர் ஐ.எஸ். குலாத்தி (இப்போது கேரள மாநில திட்டக்குழு துணைத் தலைவர்), ஆகியோருடன் நானும் இருந்தேன்.
பேரியியல் பொருளாதாரத் திட்டமிடலை நாங்கள் மேற்கொண்டு, வெவ்வேறு துறைகளுக்கு எவ்வளவு நிதி என்று ஒதுக்குவோம். எங்களைப் போலவே இருந்த வேறு குழுக்கள் விவசாயம், மின்னுற்பத்தி போன்றவை குறித்துத் தீர்மானிக்க உதவின. இவையெல்லாவற்றையும் இணைத்து விரிவான அளவில் திட்டமிடல் நடந்தது.
(தொடரும்)
(கே.என். ராஜ், பொருளியல் அறிஞர். முதலாவது ஐந்தாண்டுத் திட்டக் குழுவில் பணியாற்றியவர்களில் ஒருவர்)
நன்றி: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம், கே.ஆர். நரேஷ் குமார், விபா சுதர்சன்
தமிழில்: வ. ரங்காசாரி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago