இந்தியா 75: சுதந்திர இந்தியாவின் சமூக நீதிப் பயணம்

By செல்வ புவியரசன்

இந்திய அரசமைப்பின் முகப்புரை பொருளியல் நீதிக்கும், அரசியல் நீதிக்கும் முன்னதாக சமூக நீதியைத்தான் முதன்மைப்படுத்துகிறது. அரசமைப்பு இயற்றப்பட்டபோதே பழங்குடியினருக்கும் பட்டியல் இனத்தவருக்கும் சமூக நீதி உறுதிசெய்யப்பட்டது.

தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அறிவித்ததோடு, சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்பதையும் அரசமைப்பு நிலைநாட்டியது. அனைவருக்கும் சம நீதி என்பதுதான் சமூக நீதியின் அடிப்படைத் தத்துவம்.

இந்திய அரசமைப்பைப் பொறுத்தவரையில் சமயம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும், இதே காரணங்களால் பாகுபாட்டை அனுபவித்துவருபவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத்தருவதற்கும் அது முயல்கிறது.

அரசு வேலைவாய்ப்புகளிலும் கல்வி நிறுவனங்களிலும் சட்டம்இயற்றும் அவைகளிலும் பட்டியலினத்தவருக்கும் பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை அது உறுதிப்படுத்தியுள்ளது. சமூக அளவிலும் கல்வியிலும் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான தடைகள், இந்திய அரசமைப்பின் முதலாவது திருத்தத்திலேயே களையப்பட்டன.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு அரசமைப்புக்கு எதிரானது என்று செண்பகம் துரைராஜன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அரசமைப்பின் முதலாவது திருத்தத்தால் சரிசெய்யப்பட்டது என்றாலும், இடஒதுக்கீடு தொடர்பில் மாநில அரசுகளுக்கும் நீதித் துறைக்கும் இடையிலான முரண்பட்ட பார்வைகள் இன்றும் நீடிக்கின்றன.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக்கு, அரசமைப்பு பாதுகாப்பை வழங்கும் முதலாவது திருத்தத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் ஜவாஹர்லால் நேருவும் பி.ஆர்.அம்பேத்கரும் மிகத் தீவிரமாக வாதாடினார்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக அரசமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்பதற்கு முன்னுதாரணமாகவும் முதலாவது திருத்தம் அமைந்தது.

மண்டல் கமிஷன்: 1978 டிசம்பரில் ஜனதா கட்சி ஆட்சியின்போது, சமூக நிலையிலும் கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கண்டறிவதற்காக பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் ஆணையம் நியமிக்கப்பட்டது. அதன் அறிக்கை 1980-ல் அளிக்கப்பட்டது.

சமூக, பொருளாதார, கல்வி ஆகிய வகைப்பாடுகளின்கீழ் 11 அளவீடுகளைக் கொண்டு பிற்பட்ட நிலையை வரையறுத்த அந்த ஆணையம், இந்திய மக்கள்தொகையில் 52% பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அடையாளம் கண்டதோடு அவர்களுக்கு அரசு - பொதுத் துறைப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை 1990-ல்அப்போதைய பிரதமர் வி.பி.சிங் நடைமுறைப்படுத்த முனைந்தபோது, அதற்குப் பெரும் எதிர்ப்பு எழுந்தது. ஆணையப் பரிந்துரையையும் அரசின் முயற்சியையும் எதிர்த்து இந்திரா சஹானி தொடர்ந்த வழக்கில், குடும்ப வருமானத்தின் அடிப்படையில் உயர் வருமான வகுப்பினர் என்ற வகைப்பாடு உச்ச நீதிமன்றத்தால் புகுத்தப்பட்டது.

மத்திய அரசுப் பணிகளிலும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டிலிருந்து உயர் வருமான வகுப்பினர் விலக்கிவைக்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கில், இடஒதுக்கீட்டின் ஒட்டுமொத்த அளவு 50%-ஐத் தாண்டிச் செல்லக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

மத்திய அரசுப் பணிகளிலும், மத்திய அரசின்கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களிலும் இதர பிற்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உயர் வருமான வகுப்பினர் அனுமதிக்கப்படுவதில்லை. தமிழ்நாடு அரசால் பின்பற்றப்பட்டுவரும் 69% இடஒதுக்கீடு, அரசமைப்பின் ஒன்பதாவது அட்டவணையின் 257 (அ)-ன் கீழ் தொடர்கிறது.

சமூக நிலையிலும் கல்வி நிலையிலும் பின்தங்கியவர்கள் என்ற அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுவரும் நிலையில், அரசமைப்பின் 103ஆவது திருத்தமானது, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீட்டை அனுமதித்துள்ளது.

அதே நேரத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணுவதில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் கேள்விக்குறியாகியுள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தாக்களுக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

தள்ளிப்போடப்படும் கணக்கெடுப்பு: மராத்தா வழக்கின் தீர்ப்பு, தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் இடஒதுக்கீட்டு முறையைப் பாதிக்காது எனினும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை வரையறுப்பதிலும் அவர்களுக்கான உள் இட ஒதுக்கீடுகளைத் தீர்மானிப்பதிலும் அறிவியல்பூர்வமான அணுகுமுறைக்கான நாடு தழுவிய தேவை எழுந்துள்ளது. சாதிவாரிக் கணக்கெடுப்பு மட்டுமே அதற்கான தீர்வு.

ஆனால், 1931-ல் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தற்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டுவருகிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சில மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையிலும், மத்திய அரசு தேர்தல் அரசியலை முன்னிட்டு, அதிலிருந்து விலகிநிற்கும் அணுகுமுறையையே கடைப்பிடித்துவருகிறது.

1993இல் நிறுவப்பட்ட தேசியப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம், 102ஆவது அரசமைப்புத் திருத்தத்தால் அரசமைப்பு அங்கீகாரம் பெற்ற அமைப்பாக மாறியுள்ளது ஆறுதல் அளிக்கும் விஷயம். சமூக நீதி ஆர்வலர்களின் நீண்ட காலக் கோரிக்கை நிறைவேறியுள்ளது என்றபோதும், ஆணையத்தின் செயல்பாடுகள் இன்னும் தீவிரமடைய வேண்டும் என்ற பொதுக்கருத்து நிலவுகிறது.

சமூகநிலையிலும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு அதிகாரமளிக்க முயன்றுவரும் வேளையில், சாதி அடிப்படையில் மட்டுமின்றி திருநர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரையும் உள்ளடக்கியதாக சமூக நீதிப் பார்வை விரிவடைந்துவருகிறது. இந்நோக்கில், திருநர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்- 2019 ஒரு முக்கியமான முன்னெடுப்பு. எனினும், திருநர் என்று சான்றளிப்பதற்கான நடைமுறைகள் கடுமையான அதிருப்தியையும் எழுப்பியுள்ளன.

அதிகரிக்கும் வன்முறைகள்: இடஒதுக்கீட்டின் வழியாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் கல்வியிலும் அரசு வேலைவாய்ப்புகளிலும் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கிறார்கள் என்றபோதும், ஒட்டுமொத்த மக்கள்தொகையில் அவர்களது விகிதாச்சாரத்துடன் ஒப்பிடுகையில் அதன் அளவு மிகவும் குறைவானதாகவே இருக்கிறது. அதிலும் மத்திய அரசு நடத்தும் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் பெரும் எண்ணிக்கையில் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன.

அரசு உயர் பதவிகளில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இன்னும் தங்களது எண்ணிக்கைக்குத் தக்க விகிதாச்சாரத்தில் இல்லை என்ற நிலையிலும் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு உறுதிப்படுத்தப்படவில்லை. அதற்கு மாறாக, சார்நிலைப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குப் போதுமான விகிதாச்சாரம் இருப்பதால், அந்நிலைகளுக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீடு தேவையில்லை என்ற கருத்தே நீதிமன்றங்களால் தொடர்ந்து முன்னிறுத்தப்படுகிறது.

பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அனைவரிடத்திலுமே வறுமை, கல்வியறிவின்மை, சுகாதார வாய்ப்பின்மை, ஒடுக்குமுறைகள், பாகுபாடுகள் ஆகியவை இன்றும்கூட நீடிக்கவே செய்கின்றன. குறிப்பாக, பட்டியலினத்தவர் - பழங்குடியினர் மீதான தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்துவருகின்றன. 2011-ல் 33,719 ஆக இருந்த வன்முறைகள் 2020-ல் 50,291 ஆக அதிகரித்துள்ளன.

இந்தியா முழுவதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையிலிருக்கும் வழக்குகளின் விகிதாச்சாரம், 2020-ம் ஆண்டு நிலவரப்படி சுமார் 90.5%. வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்படும் வழக்குகளில் பெருமளவிலானவை, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை வழக்கிலிருந்து விடுவிப்பதாகவே முடிவுக்கு வருகின்றன.

சமூக நீதிக் கோட்பாட்டின் உடனடி நடைமுறைப் பயன் என்பது இடஒதுக்கீட்டுக் கொள்கையாகத்தான் இருக்கிறது. ஆனால், தற்போது அதுவும்கூட சவாலை எதிர்நோக்கியுள்ளது. பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்குக் கைமாற்றும் கொள்கை முடிவை மத்திய அரசு எடுத்த பிறகு, இனிவரும் காலத்தில் அந்நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்படுவதற்கான வாய்ப்பு தொடருமா என்பதே நம்மை எதிர்நோக்கி நிற்கும் முக்கியமான கேள்வி.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு:puviyarasan.s@hindutamil.co.in

To Read this in English: Independent India’s journey of social justice

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்