தங்களை வளப்படுத்தவும் வலுப்படுத்தவும் ஏற்பட்ட போட்டிகளே முதலாம் உலகப் போருக்கு முக்கியக் காரணம்
முதல் உலகப் போரின் நூற்றாண்டு இது. உலக வரைபடத்திலும் மக்களுடைய வாழ்க்கை முறையிலும் அரசுகளின் அமைப்பிலும் மிகப் பெரிய மாற்றங்களுக்கு வித்திட்ட முதலாம் உலகப் போர் 1914 - 1918 வரை நடந்தது. இந்தப் போரில் ஈடுபட்ட நாடுகளின் வரலாற்றாசிரியர்களாலேயே இந்தப் போர் எதற்காகத் தொடங்கியது, ஏன் நாடுகள் இதில் பங்கேற்றன, இதன் பலன்கள் யாது, இதிலிருந்து கற்ற பாடம்தான் என்ன என்று தெளிவாக அறுதியிட்டுக் கூற முடியாமல் தொடங்கி, நடந்து, முடிந்துவிட்டது.
இங்கிலாந்தில் முதலில் ஏற்பட்ட தொழில்புரட்சி பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியதைத் தொடர்ந்து சமூகத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. விவசாயம், தொழில்துறை உற்பத்தி இரண்டிலும் முன்னேற்றம் கண்ட நாடுகள் கடல் வாணிபத்திலும் செழிக்கத் தொடங்கின. புதிய கண்டங்களில் புதிய நாடுகளைக் காலனிகளாகப் பிடித்ததன் மூலம் மூலப்பொருள்களை மலிவாகப் பெற்று தங்களுடைய தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்து, அந்தக் காலனி நாடுகளுக்கே விற்றுப் பெரும்பொருள் ஈட்டின. இப்படி நாடுகளுக்கிடையே தங்களை வளப்படுத்தவும் வலுப்படுத்தவும் ஏற்பட்ட போட்டிகளே முதலாம் உலகப் போருக்கு முக்கியக் காரணங்களாகத் திகழ்ந்தன.
ஐந்து வல்லரசுகள்
முதலாம் உலகப் போருக்கு முன்னதாக ஐரோப்பாவில் ஐந்து பெரிய வல்லரசுகள் இருந்தன. ஆஸ்திரியா-ஹங்கேரி இணைந்த பரப்பு, ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவையே அந்த வல்லரசுகள். ஒருகாலத்தில் பிரஷ்யா என்று அழைக்கப்பட்ட நாடுதான் பிறகு ஜெர்மனி ஆனது. முதலில் தங்களுக்குள் ஒற்றுமைக்காக ஏற்படுத்திக்கொண்ட ராஜீய உறவுகளே பிற்பாடு இந்த நாடுகளின் ராணுவக் கூட்டணியாக உருப்பெற்றது. எல்லா நாடுகளும் தங்களுடைய பொருளாதார, ராணுவ வலிமையைப் பெருக்கிக்கொள்ளவும், பிரதேசங்களை விரிவுபடுத்திக்கொள்ளவும், கூடுதலாக நாடு பிடிக்கவும் விரும்பின. இதற்காகத் தங்களுடைய ராணுவத்தின் தரைப்படை, கப்பற்படை ஆகியவற்றைப் பெருக்கிக்கொள்வதில் அக்கறை காட்டின. 18-வது நூற்றாண்டில் ஏழாண்டுப் போர் என்றெல்லாம் நீண்ட காலப் போர்கள் நடந்தன. 19-வது நூற்றாண்டில் மிக வேகமாகவும் வலிமையாகவும் தாக்குதல் நடத்தி 7 வாரங்களுக்குள் முடிவுகளை எட்டும் போர் உத்தி ஏற்பட்டது. பிரான்ஸுக்கும் ஜெர்மனிக்கும் ஏற்பட்ட சண்டை அப்படிப்பட்டதுதான்.
பிஸ்மார்க் சேர்த்த வலு
நவீன ஜெர்மனியின் தந்தை ஆட்டோ வான் பிஸ்மார்க் அதன் வெவ்வேறு பிரதேசங்களை இணைத்து அதை வலுவான நாடாக்கினார். பிரான்ஸ் மட்டும்தான் தங்களுடன் போருக்கு வரும், பிரிட்டன் நடுநிலை வகிக்கும் என்று பிஸ்மார்க் கருதினார். எனவே, கிழக்கே உள்ள ரஷ்யா, ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகியவற்றுடன் நட்பை வளர்த்துக்கொள்ள முயற்சி மேற்கொண்டார். பிறகு, இத்தாலியுடனும் உறவை வலுப்படுத்தினார். 1882-ல் ஏற்பட்ட இந்தக் கூட்டு 1915 வரை நீடித்தது. அதேசமயம், ஆஸ்திரியா-ஹங்கேரிக்கும் ரஷ்யாவுக்கும் பல விஷயங்களில் கருத்துவேறுபாடுகள் இருந்தன. எனவே, இந்தக் கூட்டைத் தக்கவைத்துக்கொள்ள ஜெர்மனி பாடுபட வேண்டியிருந்தது. பிஸ்மார்க் பதவியிலிருந்து அகன்ற பிறகு, ஆஸ்திரியா-ஹங்கேரியுடன் நம்மால் சேர்ந்திருக்க முடியாது என்று ரஷ்யாவின் புதிய மன்னர் நினைத்தார். விளைவு, அந்தக் கூட்டு முறிந்தது. பிறகு, 1894-ல் பிரான்ஸுடன் ரஷ்யா ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டது. 1904-ல் எவருமே எதிர்பாராத வகையில் பிரான்ஸும் பிரிட்டனும்கூடச் சுமுக உறவுக்காக ஒப்பந்தம் செய்துகொண்டன.
அரச தம்பதி படுகொலை
1914 ஜூன் 28-ம் தேதி, செர்பிய தேசியவாதி கவ்ரிலோ பிரின்சிப், ஆஸ்திரியா-ஹங்கேரி நாட்டில் அடுத்து பட்டத்துக்கு வர வேண்டிய பிரபுவான, பிரான்சிஸ் பெர்டினாண்ட் மற்றும் அவருடைய மனைவி சோபியாவை அருகிலிருந்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இதற்குப் பதிலடி தர செர்பியா மீது படையெடுக்க ஆஸ்திரிய மாமன்னர் விரும்பினார். செர்பியாவுக்கு ஆதரவாக ரஷ்யா களம் இறங்குமோ என்று சந்தேகப்பட்டார். எனவே, ரஷ்யா தங்களைத் தாக்கினால் உதவிக்கு வர முடியுமா என்று ஜெர்மனியிடம் கேட்டார். ரஷ்யா இந்த விவகாரத்தில் தலையிடாது, அப்படித் தலையிட்டால் நாங்கள் உங்கள் உதவிக்கு வருகிறோம் என்று ஜெர்மனி பதில் அளித்தது. ஆனால், அடுத்த மூன்று வாரங்களுக்குக் கிணற்றில் போட்ட கல்லைப் போல ஒரே அமைதி. காரணம், ஆஸ்திரியாவுக்குள்ளேயே பலர் எதிர்த்ததால் செர்பியா மீது படையெடுப்பதுபற்றி இறுதி முடிவெடுக்கத் தாமதம் ஆகிக்கொண்டே இருந்தது. அதற்குள் செர்பியாவே பதற்றத்தைத் தணிக்க, சமரசம் பேச முன்வந்தது. திடீரென ஜூலை 28-ம் தேதி ஹங்கேரி போர்ப் பிரகடனம் வெளியிட்டுவிட்டு, பெல்கிரேடு மீது தாக்குதல் தொடுத்தது ஆஸ்திரியா. இதற்குப் பதிலடியாக ரஷ்யா தனது படையைத் திரட்டியது. ரஷ்யா மெதுவாகத்தான் படை திரட்டும் என்று எதிர்பார்த்த ஜெர்மனி, இந்த மாற்றம் காரணமாக ரஷ்யா மீது ஆகஸ்ட் 1-ம் தேதி போர் அறிவித்தது. இரு நாள்கள் கழித்து பிரான்ஸ் மீதும் போர் தொடுப்பதாக அறிவித்தது. இதனால் பிரிட்டனும் போரில் குதித்தது. பிரான்ஸுக்கு ஆதரவாக அல்ல, பெல்ஜியத்துக்கு ஆதரவாகவே பிரிட்டன் போரில் இறங்கியது. இவ்வாறு ஐரோப்பாவின் ஐந்து பெரிய நாடுகளும் திடீரெனப் போரில் இறங்கிவிட்டன.
ஏகாதிபத்தியம்
ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள நாடுகளைத் தங்களுடைய காலனிகளாகப் பிடித்துவைத்துக்கொண்டு மூலப் பொருள்களை அங்கிருந்து எடுத்துக்கொள்வதற்காக, ஏகாதிபத்திய ஆசையில் நாடுகள் செயல்பட்டதே போருக்கான அடிப்படைக் காரணம்.
ராணுவமயம்
20-வது நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடுகளுக்கிடையே ஆயுதப் போட்டி மூண்டது. 1914-க்குள் ஜெர்மனி தன்னுடைய தரைப்படையையும் கடற்படையையும் பல மடங்கு பெருக்கிவிட்டது. பிரிட்டன், ஜெர்மனி ஆகிய ராணுவத் தலைமையும் நாட்டின் பொதுக்கொள்கைகளை வகுப்பதில் முக்கியப் பங்காற்றின. இதுவும் போருக்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்தது.
ராணுவக் கூட்டு
நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட ராணுவக்கூட்டும் ஒரு முக்கியக் காரணம் என்று சொல்லலாம். ரஷ்யாவும் செர்பியாவும் கூட்டு; ஜெர்மனியும் ஆஸ்திரியா-ஹங்கேரியும் கூட்டு; பிரான்ஸும் ரஷ்யாவும் கூட்டு; பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம் கூட்டு; ஜப்பானும் பிரிட்டனும் கூட்டு.
தேசிய உணர்வு
போஸ்னியா, ஹெர்சகோவினா பகுதிகளில் வசித்த ஸ்லாவிய மக்கள் தேசிய உணர்வு ஏற்பட்டு செர்பியாவுடன் சேர விரும்பினர். ஆஸ்திரியா-ஹங்கேரியிலிருந்து பிரிய நினைத்தனர். அத்துடன் எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் தங்களுடைய நாடுதான் உயர்ந்தது, பிற நாடுகளிடம் அது பணியத் தேவையில்லை என்ற எண்ணம் மிகுந்ததால் போருக்கு அதுவும் ஒரு காரணமாகிவிட்டது.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நிலவிய பொருளாதார ஏற்றத்தாழ்வும், ராணுவ சமபலமற்ற நிலையும் பரஸ்பர சந்தேகமும், காலனிகளைப் பிடிக்கும் ஆசையும் புதிய படைப் பிரிவையும் ஆயுதங்களையும் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் போருக்குக் காரணங்களாகிவிட்டன. இந்தப் போர் சில வாரங்களுக்குத்தான் நடக்கும் என்றே ஒவ்வொரு நாடும் கருதின. ஆனால், போரானது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல், எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago