லட்சக்கணக்கான நூலிழைகளைச் சேர்த்து ஒரு துணியை நெய்வது எவ்வளவு சிரமமான காரியமோ, அதேபோல சுதந்திர இந்தியாவின் முக்கால் நூற்றாண்டு ஆடை வரலாற்றைச் சொல்வதும் சிரமமானதே!
‘இதுதான் இந்தியாவின் ஆடை’ என்று ஒன்றைப் பொதுமைப்படுத்திச் சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு மதத்துக்கும் ஏற்ப ஆடைகள் அணியப்படுகின்றன. இவ்வளவு விதமான ஆடைகள் புழக்கத்தில் இருந்தாலும் எல்லாருக்கும் ஆடை அணியும் வாய்ப்பு கிடைத்திருந்ததா என்றால், அதுவும் இல்லை. ஒரு காலத்தில் குறிப்பிட்ட சாதிப் பெண்கள் ரவிக்கை அணியக் கூடாது என்ற எழுதப்படாத சட்டம் இருந்தது. பல ஆண்டுப் போராட்டத்துக்குப் பிறகே ரவிக்கை அணியும் உரிமையை அவர்கள் பெற்றார்கள். அதேபோல சட்டையும் தோளில் துண்டும் அணியும் உரிமை குறிப்பிட்ட சாதி ஆண்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. காலம் செல்லச்செல்ல மக்களின் பார்வை விரிவடைய, அனைத்து ஆண்களும் சட்டை அணிவதற்கும் துண்டு போடுவதற்கும் உரிமை கிடைத்தது.
சுதந்திரப் போராட்டத்தில்... - சுதந்திரப் போராட்டத்தில் இந்திய ஆடைகளின் விற்பனையைத் தடுப்பதற்காக, ஐரோப்பாவிலிருந்து மலிவான விலையில் ஆடைகள் விற்பனைக்கு வந்தன. ஆடைகள் எவ்வளவு மலிவாகக் கிடைத்தாலும் அந்நிய ஆடைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார் காந்தி. ஏராளமான மக்கள் அந்நியத் துணிகளை நெருப்பில் இட்டு, தங்கள் எதிர்ப்பைக் காட்டும் விதத்தில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இது காதியும் கைத்தறியும் செழிக்கக் காரணமாக அமைந்தது.
‘ஆடை என்பது நம் ஆளுமையை வெளிப்படுத்தக்கூடியது’ என்பார்கள். அந்தக் கூற்றையும் பொய்யாக்கியவர் காந்தி. அவர் ஒருமுறை மதுரைக்குச் சென்றிருந்தபோது எளிய மனிதர் ஒருவரின் ஆடையைக் கண்டு, தன்னுடைய ஆடைகளைத் துறந்து வேட்டி, துண்டுக்கு மாறினார். அதே ஆடையில்தான் உலகமெங்கும் சென்றுவந்தார். இந்த எளிய ஆடை அவருக்கு மேலும் மரியாதையைத் தேடித் தந்ததே தவிர, எவ்விதத்திலும் அவருடைய புகழைக் குறைக்கவில்லை.
» ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
» நிதியே இல்லாத அரசாங்கத்துக்கு பேனா வைக்க மட்டும் நிதி வந்தது எப்படி?- இபிஎஸ்
காந்தி காலத்தில் மிக நேர்த்தியாக ஆடை அணிந்த நேருவின் 'ஜாக்கெட்', முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகும் உயர்பதவிகளில் இருப்பவர்கள் விரும்பி அணியக்கூடிய ஒன்றாகத் திகழ்கிறது.
சுதந்திரத்துக்குப் பிறகு... - நாடு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றாலும்கூட, மக்களின் வாழ்க்கை முறையில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து விடுபட முடியாத விஷயங்களில் ஆடையும் ஒன்று. விடுதலைக்குப் பிறகு இந்திய ஆடைகளில் மேற்கத்திய பாணி அதிக தாக்கத்தைச் செலுத்தியது.
பிரிவினை ஏற்படுத்திய பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்து 1980களில் மீண்ட இந்தியா, ஃபேஷன் துறையில் அடியெடுத்து வைத்தது. ஜவுளித் தொழில் வேகமாக வளர ஆரம்பித்தது. கைத்தறி, பருத்தியின் செல்வாக்கு குறைந்து, பாலியெஸ்டர் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. சாயம் போகாமல் நீண்ட காலத்துக்கு உழைப்பதால், மக்களிடம் இன்றுவரை அது செல்வாக்குப் பெற்றிருக்கிறது.
அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இன்று நான்கரை கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஜவுளி தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 35 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கைத்தறி தொடர்பான பணிகளில் இருக்கிறார்கள். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் ஈடுபடும் வேலை நெசவு சார்ந்ததே.
பெண்களும் ஃபேஷனும்: சுதந்திரத்துக்குப் பிறகு பெரும்பாலான பெண்கள் சட்டை, பாவாடை அணிந்து புடவை கட்டும் வழக்கத்துக்கு மாறினார்கள். ஆரம்பத்தில் புடவைக்கு ஏற்ப அதே வண்ண ரவிக்கை அணியும் வழக்கம் இல்லை. பின்னர் பொருத்தமான ரவிக்கையை அணியும் வழக்கம் வந்தது. தற்போது புடவையிலேயே ரவிக்கைக்கான துணியும் சேர்ந்தே வருவதால், தனியாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண நாள்களுக்குச் சாதாரண ஆடைகளும் விசேஷங்களுக்குச் சிறப்பான ஆடைகளும் அணியும் வழக்கம் அதிகரித்தது. ஆரம்பத்தில் அவசியத்துக்கு அணியப்பட்ட ஆடை, பிறகு ஃபேஷனுக்கு அணியும் நிலைக்குச் சென்றது.
திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து ஆடைகளை அணியும் வழக்கமும் உருவானது. ரவிக்கையில் நீளக் கை, குட்டைக் கை, பஃப் கை, முழுக்கை, வட்டக் கழுத்து, சதுரக் கழுத்து, படகுக் கழுத்து எனக் கதாநாயகிகள் அணியும் விதத்தைப் பார்த்துப் பெண்கள் ரவிக்கைகளைத் தைத்துக்கொண்டார்கள்.
தொண்ணூறுகளில் பாவாடை, தாவணியி லிருந்து பெண்கள் சிறிதுசிறிதாக சுடிதாருக்கு மாறி, இன்று பெரும்பாலான இந்திய இளம் பெண்களின் ஆடையாக அது நிலைத்துவிட்டது. தாவணி, புடவையிலிருக்கும் வசதிக் குறைபாடு சுடிதாரில் இல்லை என்பதால் பெண்களின் மனங்களை வென்றுவிட்டது!
இன்றைய இளம் தலைமுறை பாவடை தாவணியைப் புறக்கணித்தாலும், அதுக்கு நெருங்கிய உறவான வட இந்திய ‘லெஹங்கா’ என்ற நவீன வடிவத்துக்குத் தங்கள் ஆதரவை நல்கிவருகிறார்கள்.
இந்தியா முழுவதும் பல்வேறு விதங்களாகப் புடவைகளை அணிந்துவந்த பெண்கள், இன்று பெரும்பாலும் ஒரே விதமாக அணியும் நிலைக்கு வந்துவிட்டார்கள். கணவனை இழந்த பெண்கள் வெள்ளைச் சட்டை, வெள்ளைப் புடவை அணியும் வழக்கம் ஒருவழியாக வழக்கொழிந்துவிட்டது. இரவு நேரத்தில் மட்டுமே அணிய ஆரம்பித்த ‘நைட்டி’ இன்று நேரம் காலம், இடம் பொருள் பார்க்காத பெண்களின் விருப்பத்துக்குரிய ஆடையாக மாறிவிட்டது!
ஆடைகளில் எவ்வளவோ முன்னேற்றம் வந்துவிட்டாலும் இன்றும் பெண்கள் அணியும் ஆடைகள் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு முதல் காரணமாக, அவர்கள் அணியும் ஆடைகள் தேவையற்று முன்னிறுத்தப்படுகின்றன. சமீபத்தில் கேரள நீதிமன்றம் ஒரு வழக்கில், ‘பாதிக்கப் பட்டதாகச் சொல்லும் பெண், பாலியல் உணர்வைத் தூண்டக்கூடிய வகையில் ஆடை அணிந்திருந்தார்’ என்று கூறி, பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் அளித்தது அதிர்ச்சியான விஷயமே.
ஆண்களும் ஆடைகளும்: புடவையைப் போலவே வேட்டியும் முண்டு, கன்னட பஞ்சகச்சம், வங்காள கோச்சானோ, மகாராஷ்டிர தோத்தார், ராஜஸ்தானி டுலாங்கி தோத்தி, பஞ்சாபி சத்ரா என்று விதவிதமாக அணியப்படுகிறது. குர்தா வேட்டியும் குர்தா பைஜாமாவும் இன்றும் புழக்கத்தில் இருக்கின்றன.
வேட்டி கட்டாத இன்றைய இளைய தலைமுறையைக் கவர்வதற்காக வெல்க்ரோவும் பாக்கெட்டும் வைத்த வேட்டிகளும் தயாரிக்கப்பட்டு புதிய சந்தையை உருவாக்கியுள்ளன.
தோளில் துண்டு அணியும் பழக்கமும் இருந்தது. அரசியல்வாதிகள் வெள்ளை வேட்டி, சட்டை, துண்டுகளில் தங்களுக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கினர். கதர் துண்டு, தேங்காய்ப்பூ துண்டு, கம்பளித் துண்டு என்று துண்டிலும் பல மாற்றங்களை அவர்கள் கொண்டுவந்தனர். இன்றோ துண்டு அணியும் வழக்கம் ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம்.
திரைப்படங்களில் கதாநாயகர்கள் அணியும் பெல்பாட்டம், ஸ்லிம் ஃபிட், ஜாகர்ஸ், கார்கோ, ப்ளீட்டட், டிராக்சூட் போன்றவற்றைப் பார்த்து, ஆண்களும் தங்கள் ஃபேஷனை மாற்றிக் கொள்கிறார்கள். அதேபோல் கேஷுவல், ஃபார்மல், முழுக்கை, அரைக்கை, ஸ்லிம் ஃபிட் எனச் சட்டைகளிலும் பல விதங்கள் இருக்கின்றன.
ஒரு முறை அணிந்த வேட்டியைத் துவைக்காமல் பயன்படுத்த முடியாது என்றால், ஜீன்ஸை விருப்பமும் நேரமும் இருக்கும்போது துவைக்கலாம் என்ற அளவுக்கு வசதியாக இருப்பதால், இளைஞர்களின் மனத்தில் அது சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டது! இவை போக லுங்கி, அரைக்கால் சட்டை, டிசர்ட்டை போன்று வீட்டில் பயன்படுத்தும் ஆடைகளும் உண்டு.
வீடு தேடிவரும் ஆடைகள்
அந்தக் காலத்தில் தலையில் துணிகளைச் சுமந்துகொண்டு, வீடுவீடாக வந்து ஆட்கள் விற்பனை செய்துகொண்டிருந்தார்கள். முழுப் பணத்தையும் கொடுத்து வாங்க இயலாதவர்கள், ஒவ்வொரு மாதமும் சிறு தொகை கொடுத்து வாங்குவார்கள். இந்த வழக்கம் ஏறக்குறைய ஒழிந்துவிட்டது. மக்கள் கடைகளுக்குச் சென்று நிறைய துணிகளைத் தேடி, தங்களுக்குப் பிடித்த ஆடைகளை வாங்க ஆரம்பித்தனர். தற்போது இணையவழி விற்பனை மூலம், மீண்டும் ஆடைகள் இல்லம் தேடி வர ஆரம்பித்துவிட்டன.
ஒருகாலத்தில் விலை உயர்ந்த ஆடைகளை பொருளாதார வசதியில் பின்தங்கியவர்களால் வாங்க இயலாத சூழல் இருந்தது. இன்றோ அவற்றை மலிவு விலையிலும் கொண்டுவந்து, எல்லாரின் விருப்பத்தையும் பூர்த்தி செய்ய முடிவது வரவேற்கத்தக்கது.
தேவை - விசேஷங்களுக்காக மட்டுமே வாங்கப்பட்ட ஆடைகள், இன்று ஃபேஷனுக்காக வாங்கப்படுகின்றன. கடன் அட்டை மூலம் ஆன்லைனில் தேர்ந்தெடுக்கப்படும் ஆடைகள், வீட்டுக்கே வந்து சேர்ந்துவிடுவதால், ஆடம்பரச் செலவாகவும் இது மாறிவருகிறது. அதேபோல இன்றைய துணிகளில் சில வகைகள் எளிதில் கிழிவதும் இல்லை, மண்ணில் மட்கிப் போவதும் இல்லை என்பதால் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
எவ்வளவு காலம் ஆனாலும் எவ்வளவு ஃபேஷன்கள் வந்தாலும் விசேஷங்களில் அணியும் ஆடைகளாக சேலை, வேட்டி இருந்துகொண்டுதான் இருக்கும்! ஃபேஷன் தொழில் மேலும் மேலும் முன்னேறிக்கொண்டுதான் இருக்கும்! ஆடை என்பது ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட விருப்பம், வசதியைச் சார்ந்தது. எல்லாருக்கும் அவரவர் விரும்பிய ஆடைகளை அணிய உரிமை இருக்கிறது.
என்னதான் முன்னேற்றம் வந்தாலும் பெண்கள் அணியும் ஆடைகளில் கைக்குட்டை, பணம், திறன்பேசி போன்றவற்றை வைக்கும் விதத்தில் ஒரு பாக்கெட் வைத்துத் தைக்க இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமோ?
தொடர்புக்கு: sujatha.s@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago