நீர்வளக் கொள்கை நிபுணரும், மத்திய திட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான மிஹிர் ஷா, இந்தியாவின் நீர்வளம் தொடர்பான சட்டங்களைத் திருத்துவதற்கான குழுக்களில் தலைவராகப் பணியாற்றிவருகிறார். நம்முடைய தண்ணீர்த் தேவையைப் பூர்த்திசெய்ய இப்போதுள்ள அமைப்புகள் போதாது என்கிறார்.
இப்போதுள்ள ‘மத்திய தண்ணீர் ஆணையம்’ (சி.டபிள்யு.சி.), ‘மத்திய நிலத்தடி நீர் வாரியம்’ (சி.ஜி.டபிள்யு.பி.) என்ற இரண்டையும் இணைத்து ‘தேசியத் தண்ணீர் ஆணையம்’(என்.டபிள்யு.சி.) அமையப்போகிறது. இது நாட்டின் நீர் நிர்வாகத்தை மேம்படுத்த எப்படி உதவும் என்று குறிப்பாகச் சொல்ல முடியுமா?
நீர் வளத்தை மேம்படுத்துவதற்காக, வெவ்வேறு காலகட்டங்களில் மத்திய தண்ணீர் ஆணையம் 1945-லும், மத்திய நிலத்தடி நீர்வாரியம் 1971-லும் உருவாக்கப்பட்டன. அப்போது உணவு தானிய விளைச்சலில் தன்னிறைவு காண வேண்டும் என்பதால், பாசனத் திறனை மேம்படுத்துவது முக்கியமாக இருந்தது. இப்போதுள்ள சவால்களோ வேறு மாதிரியானவை. ரூ.4 லட்சம் கோடி செலவில் 1,130 லட்சம் ஹெக்டேருக்குப் பாசன வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறோம். இந்தத் தண்ணீர் விவசாயிகளைச் சென்றடைகிறது.
“நாட்டில் உள்ள பெரிய அணைகளில் 40% மகாராஷ்டிரத்தில்தான் உள்ளன. அப்படியிருந்தும் மாநிலத்தின் 82% நிலங்கள் வானம் பார்த்த பூமியாகத்தான் இருக்கின்றன. விவசாயியின் நிலத்துக்குத் தண்ணீர் அளிக்க முடியாவிட்டால் அவரைத் தற்கொலையிலிருந்து காப்பாற்றவே முடியாது. நாம் பெரிய பெரிய அணைகளைத்தான் கட்டினோம், பாசன வசதிகளை அளிக்கவில்லை. இது மாறியே தீர வேண்டும்” என்று மகாராஷ்டிர முதலமைச்சர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. இந்த சவாலைத்தான் எதிர்கொள்ள எங்களுடைய அறிக்கை தயாராகிவருகிறது.
இந்தியாவில் மழை நீர், நதி நீரைவிட நிலத்தடி நீர்தான் பெருமளவுக்குத் தேவையைப் பூர்த்திசெய்கிறது. அதற்காக நாம் மேலும் மேலும் ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டிக் கொண்டே இருக்க முடியாது. மத்திய நிலத்தடி நீர்வாரியம் இதைத்தான் இத்தனைக் காலம் ஊக்குவித்து வந்திருக்கிறது. ஆனால், இத்தகைய நடவடிக்கைதான் இந்தியாவின் நிலத்தடி நீர் நெருக்கடியை முற்றவைத்துவிட்டது. பெரும்பாலான மாநிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகு ஆழத்துக்குக் குறைந்துவிட்டது. கிடைக்கும் தண்ணீரும் நல்ல தரத்தில் இல்லை. ஆர்சனிக், ஃப்ளோரைடு, சில இடங்களில் தோரியம்கூடக் குடிநீரில் கலந்துவருகிறது.
நீர் நிர்வாகத்தில் முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் என்று உங்கள் அறிக்கை எவற்றையெல்லாம் பரிந்துரைக்கிறது?
முதலாவதாக, தண்ணீர் தொடர்பாகப் பல்வேறு துறை நிபுணர்களின் கருத்துகளை நாம் பெற்றாக வேண்டும். வெறும் பொறியியல், நீரியல் நிபுணர்களின் கருத்துகள் மட்டும் போதாது. இரண்டாவதாக, தண்ணீர் மேலாண்மையில் பங்கேற்பு அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். உலகம் முழுக்க இந்த முறையைத்தான் கையாள்கிறார்கள். மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரப் பிரதேசத்திலும் இம்முறை கடைப்பிடிக்கப்படுகிறது. மூன்றாவதாக, நிலத்தடி நீரையும் நிலத்துக்கு மேலே இருக்கும் நீரையும் ஒட்டுமொத்தமான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். தேசியத் தண்ணீர் ஆணையமும் மத்திய தண்ணீர் ஆணையமும் இப்போது இருப்பதைப் போலத் தனித்தனியாக, சுயேச்சையாக இனியும் செயல்படுவது முடியாது. தேசிய தண்ணீர் ஆணையத்தையும் மத்திய தண்ணீர் ஆணையத்தையும் இணைத்தாக வேண்டியதன் அவசியத்துக்கு முக்கியக் காரணம், தென்னிந்தியத் தீபகற்பத்தில் ஓடும் நதிகள் ஒவ்வொன்றாக வற்றிவருவதுதான். இதற்கு முக்கியக் காரணம், நிலத்தடி நீரை வரம்பில்லாமல் உறிஞ்சிப் பயன்படுத்துவதுதான்.
நதிகளுக்குப் புத்துயிர் ஊட்டுவதுதான் மத்திய தண்ணீர்வள அமைச்சகத்தின் முக்கியமான தேசியக் கடமை என்றால் நீரியல் நிபுணர்கள், நீர்புவியியலாளர்கள், சமூக அறிவியலாளர்கள், வேளாண்பொருளியல் நிபுணர்கள் மற்றும் நீர்வளத்தைப் பயன்படுத்தும் விவசாயிகள் உள்ளிட்டோர் இணைந்து செயல்பட்டாக வேண்டும். இல்லாவிட்டால் இது சாத்தியம் இல்லை.
நான்காவதாக, தண்ணீர் மேலாண்மைக்கு ஆற்று வடிநிலங்களைத்தான் நாம் அடிப்படை அலகாக வைத்துக்கொள்ள வேண்டும். மத்திய தண்ணீர் ஆணையத்திலும், மத்திய நிலத்தடிநீர் வாரியத்திலும் பிராந்தியங்களின் பங்கேற்பு அல்லது பங்கேற்பில்லாமையைக் கருத்தில்கொண்டு, தேசிய தண்ணீர் ஆணையத்தை நிறுவ யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் எல்லா பெரிய ஆறுகளின் வடிநிலங்களும் இடம்பெற்றுவிடுகின்றன.
ஏற்கெனவே பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதால், தேசிய தண்ணீர் ஆணையம் கூடாது என்று மத்திய தண்ணீர் ஆணையம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது; புதிய அமைப்பை ஏற்படுத்துகிற சாக்கில் இதுவரை தொடங்கிய சீர்திருத்த நடவடிக்கைகளைக் கைவிட்டுவிட எண்ணுகிறீர்களா?
இல்லவே இல்லை. மத்திய தண்ணீர் ஆணையம் இப்போது மேற்கொண்டுள்ள பணிகளையும் அதில் ஈடுபட்டுள்ளவர்களையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். தேசிய தண்ணீர் ஆணையத்தின் 8 டிவிஷன்களிலும் அனைவரும் உரிய வகையில் இடம்பெறுவார்கள். பாசனச் சீர்திருத்தம், ஆறுகளுக்குப் புத்துயிர் ஊட்டல், நிலத்தடி நீர்மேலாண்மையில் அனை வரின் பங்கேற்பு, நகர்ப்புறங்களுக்கும் தொழில் துறைக்கும் தேவையான தண்ணீர், வறட்சி - வெள்ளம் - பருவ மாறுதல் போன்ற இயற்கை நிகழ் வுகளின்போது நீரைப் பாதுகாப்பது, தண்ணீரின் தரம் ஆகிய அனைத்து அம்சங்களுக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் தரப்படும்.
ஒருங்கிணைந்த தண்ணீர் ஆணையம் தொடர்பாக நீங்கள் பரிந்துரைப்பது இது முதல்முறை அல்லவே?
இந்த அடிப்படை மாறுதல் முழுதாகப் புரிந்துகொள்ளப்பட சிறிது காலம் பிடிக்கும். அதன் பிறகே அரசின் கொள்கையிலும் இடம்பெறும். மத்திய தண்ணீர் ஆணையத்திலும் மத்திய நிலத்தடிநீர் வாரியத்திலும் பணிபுரியும் பொறியாளர்கள் - நீரியல் நிபுணர்கள் தங்களுடைய தொழில்நுட்பத்திறனை மேம் படுத்திக்கொள்ளவும் எதிர்காலத்தில் பெரிய பொறுப்புகளை மேற்கொள்ளவும் புதிய அமைப்பு பேருதவியாக இருக்கும்.
பல மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் என்பது அரசியல் விவகாரமாகிவிட்டது; மாநிலங்கள் ஏன் தேசிய தண்ணீர் ஆணையம் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும்?
ஒரு குழு என்ற அளவில் அனைத்து மாநிலங்களின் கருத்துகளையும் அறிய நாங்கள் அதிக அக்கறை எடுத்துக்கொண்டோம். மத்திய - மாநில அரசுகள் இணைந்து தேவைகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும். தேசிய அளவில் மதிப்பு பெற்றுள்ள அமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறோம். நாங்கள் கூறும் சீர்திருத்தத்தில் இது முக்கியமான அம்சம். தேசிய தண்ணீர் ஆணையம் மந்தமாகச் செயல் படும் அமைப்பாக இருக்காது. மாநில அரசுகள், விவசாயிகள், இதர தண்ணீர் பயன்பாட்டாளர்கள் ஆகியோர் அணுகினால் பிரச்சினைகளுக்குத் தீர்வுகூறும் அறிவார்ந்த அமைப்பாகச் செயல்படும். நட்புணர்வுடனும் பயனுள்ள முறையிலும் ஆலோசனைகள் தெரிவிக்கப்படும்.
நதிகளை இணைக்க வேண்டும் என்று தண்ணீர் வளத்துறை அமைச்சர் உமா பாரதி வலியுறுத்திக் கூறிவரும்போது, உங்களுடைய பரிந்துரை அறிக்கை நதிகளை இணைப்பதை ஊக்குவிக்கவில்லையே?
நதிகளை இணைப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து நிபுணர்கள் மேற்கொண்ட அனைத்து ஆய்வுகளின் அடிப்படையில் எங்களுடைய அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. நதிநீரைக் கடலில் ‘வீணாகக் கலக்கவிடக் கூடாது’ என்ற தவறான வாதத்தை முறியடிக்கும் வகையில் எங்கள் ஆய்வறிக்கை அமைந்துள்ளது. ஆறுகளிலிருந்து பெருமளவுக்குச் சுத்தமான நீர் கடலில் கலந்தால்தான் கடலின் உப்புத்தன்மை மட்டுப்படும். கடலில் வாழும் நீர்வாழ் உயிரினங்களும் தாவரங்களும் வாழ முடியும். கடல் இயல்பாக இருந்தால்தான் மேகத் திரட்சி ஏற்பட்டு மழை பொழியும். கடலின் தன்மை கெட்டுவிட்டால் பருவமழையே ஏற்படாமல் போகும், பருவ காலம் மாறிவிடும். அவற்றால் ஏற்படக்கூடிய தீமை நாடு தாங்க முடியாததாக இருக்கும் என்று அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்.
எங்களுடைய அறிக்கை பெரிய அணைகளுக்குச் சாதகமாகவோ, எதிராகவோ மையம் கொண்டிருக்கவில்லை. அணையில் தேக்கப்படும் நீர் விவசாயிகளைச் சென்றடைவதுதான் எங்களுடைய நோக்கம். நதிகளை இணைக்க கோடிக்கணக்கான ரூபாயைச் செலவிடுவதைவிட வேறு வகைகளில் நீர்ப்பெருக்கத்துக்கு முயல்வதும், அணைகளுக்கு வரும் நீரைச் சிக்கனமாக அதே சமயம் உரிய நேரத்தில் நிலங்களுக்குக் கொண்டுசெல்வதிலும் அதிக ஆதாயம் பெற முடியும். இதற்கு அதிக காலம் செலவாகாது. நதிகளை இணைக்கும் திட்டங்களுக்கு மாநிலங்களுக்கு இடையில் ஒத்துழைப்பு நிலவுவது அவசியம். புதிய வாய்க்கால்களுக்கும் மடைகளுக்கும் புதிதாக நிலங்கள் தேவைப்படும். நிலங்களை அரசு கையகப்படுத்துவது எளிதாக இருக்காது. பாசனத் திட்டங்களை ஆண்டுக்கணக்கில் இழுத்துக்கொண்டே போனால், அதில் ஊழலும் பெருகிவிடும்.
சுருக்கமாகத் தமிழில்: சாரி
© ‘தி இந்து’ ஆங்கிலம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago