பெண் குரங்குகளுக்கு ஆணிடம் என்ன பிடிக்கும்?

By கே.என்.ராமசந்திரன்

கெலாடா சமூகத்தில் பெண்களின் ஆதிக்கமும் அதிகாரமும் அதிகம்



ஒரு கோழிக் கூட்டத்தில் மிகவும் பெரிய அல்லது மூத்த கோழி மற்ற கோழிகளின் தலையில் கொத்தும். ஒவ்வொரு கோழியும் தன்னைவிட, இளைய கோழிகளைக் கொத்தும். வீட்டில், கல்விக்கூடங்களில், அலுவலகங்களில், அரசியல் இயக்கங்களில் என்று எங்கும் ஒவ்வொருவரும் தன்னை அடுத்துக் கீழ்நிலையில் இருப்பவரின் தலையில் குட்டுவார்கள். இதை ‘கொத்தல் வரிசை’ எனலாம்.

கல்வி நிலையத்தில், அலுவலகத்தில், வீட்டில் அல்லது வீதியில் கொத்தல் வரிசையில் நமது இடம் எது என்று எப்படிக் கண்டுபிடிப்பது? எத்தியோப்பியாவின் மேட்டு நிலங்களில் மட்டுமே காணப்படுகிற, அவ்வளவாக அறியப்படாத வாலில்லாக் குரங்குகளின் சமூகத்தை ஜசிந்தா பீனர், தோர் பெர்க்மேன் என்ற இரு ஆய்வர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்தனர். அவற்றின் நடத்தைகளின்போது வெளிப்படும் ஆக்ரோஷம், பகை, அனுதாபம், அனுசரித்துப் போதல், மன இறுக்கம், இணை தேர்வு, சமூகப் படிநிலை போன்றவற்றை அவர்கள் பதிவுசெய்தனர். ‘பாபூன்’ என்ற வாலில்லாக் குரங்குகள் எண்பது முதல் நூறு உறுப்பினர்கள் வரை அடங்கிய சமூகங்களாக வசிக்கின்றன. அத்தகைய ஒரு கூட்டத்தில் ஒவ்வொரு குரங்குக்கும் தனது படிநிலை வரிசை எண் (சீனியாரிட்டி) தெரிந்திருக்கிறது.

கெலாடா குரங்குகள்

பாபூன்களின் நெருங்கிய உறவினர் களான ‘கெலாடா’ என்ற இனக் குரங்குகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பெருங் கூட்டங்களாக வசிக்கின்றன. மனிதர்களைத் தவிர, வேறு எந்தப் பாலூட்டி (பிரைமேட்) இனமும் இவ்வளவு பெரிய சமூகக் கூட்டங்களாக வாழ்வதில்லை.

கெலாடா சமூகத்தில் பெண்களின் ஆதிக்கமும் அதிகாரமும் அதிகம். ஒவ்வொரு குடும்பத்திலும் ஓர் ஆண் குரங்கும் பத்து முதல் பன்னிரண்டு பெண் குரங்குகளும் இருக்கும். பெண் குரங்குகள் ஒன்றுக்கொன்று நெருக்கமான உறவினர்களாயிருக்கும். ஒவ்வொரு கூட்டத்திலும் இத்தகைய குடும்பங்கள் பத்து முதல் பன்னிரண்டு வரை இருக்கும். ஆண் குரங்குகள், பெண் குரங்குகளைவிடக் கிட்டத்தட்ட இரு மடங்கு உருவில் பெரியவை என்றாலும், ஆண் குரங்கின் செயல்பாடுகள் திருப்தியளிப்பவையாக இல்லாவிட்டால், பெண் குரங்குகள் அதை விரட்டிவிட்டு, வேறு ஓர் ஆண் குரங்கை அதனிடத்தில் நியமித்துக்கொள்ளும். பேன் பார்ப்பது ஆண் குரங்குகளின் முக்கியமான பணிகளில் ஒன்று. அத்துடன் அது பெண்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர வேண்டும். பெண் குரங்குகளின் நட்புக்கு ஏங்கிக் காத்திருக்கும் ஆண் குரங்குகளின் எண்ணிக்கை அதிகமாயிருக்கும். ஓர் ஆணுக்கு வயதாகி அல்லது காயம்பட்டு வலு குறைந்துவிட்டால், அதை விரட்டிவிட்டு அதனிடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளப் பல ஆண் குரங்குகள் தருணம் பார்த்துக் காத்திருக்கும்.

அவ்வாறு அந்தப்புரத்தை ஆக்கிரமிப் பதற்காக இரு ஆண் குரங்குகள் சண்டையிடும்போது, பெண் குரங்குகள் இரு கட்சிகளாகப் பிரிந்து நின்று தமக்குப் பிடித்த ‘வேட்பாள’ரை ஆதரித்து ஆரவாரம் செய்வதுண்டு. ஓர் ஆண் குரங்கு பெண்களுக்குப் பிடித்தமானதாயிருப்பதற்குப் பல காரணிகள் உள்ளன. அதனுடைய மார்பும் பிட்டமும் உச்ச அளவு செந்நிறமாயிருப்பது அத்தகைய காரணிகளில் ஒன்று என்று ஆய்வர்கள் கண்டறிந்துள்ளனர். அடுத்து, ஆணின் குரல் காத்திரமாயும் கம்பீரமாயுமிருப்பது பெண் குரங்குகளுக்கு மிகவும் பிடித்தமான தகுதி.

தலைவரின் பலம்

தலைவர் எப்போது சாய்வார், பதவி எப்போது காலியாகும் என்று மற்ற ஆண்கள் எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிற நிலையில், தலைவர் அடிக்கடி எம்பிக் குதிப்பது, முஷ்டி தட்டுவது, கூட்டத்தைச் சுற்றிச் சுற்றி ஓடுவது போன்றவற்றால் தன் பலத்தைப் பறைசாற்றும். அடுத்து, ஓர் உச்சாணிக் கிளையிலோ, பாறையின் மீதோ, மேடான இடத்திலோ ஏறி நின்று “ஈஈஈயோ” என்று கர்ஜனை செய்யும். மற்ற ஆண்கள் பம்மிப் பதுங்கிவிடும்.

பீனரும் பெர்க்மானும் இரண்டு ஆண்டுகள் ஆண் குரங்குகளின் அறைகூவல்களைப் பதிவு செய்திருக்கி றார்கள். அந்தக் குரலின் சுரம், ஸ்தாயி, உரப்பு ஆகியவை ஆண் குரங்கின் தகுதிக்கேற்ப அமையும். ஓர் ஆண் தனது காத்திரமான குரலில் ஓசையிட்டு, தான் ஒன்றும் ஏப்பை சாப்பையான ஆள் இல்லை என்று மற்ற ஆண் குரங்குகளுக்கு எச்சரிக்கை செய்கிறது. வாய் வீராப்பு காட்டுவது மட்டுமின்றி, அவசியமானால் அடிதடியில் இறங்கவும் தயார் என்று உரக்க ஒலிபரப்பு செய்கிறது. ஓர் ஆண் குரங்கின் மார்பிலுள்ள சிவப்பு நிறத்தை அளவிடுவதன் மூலமே மற்ற ஆண்கள் அதனுடன் போட்டி போடுவதா அல்லது விலகிப் பின்வாங்குவதா என்பதை முடிவுசெய்துவிடும். ஆண் கெலாடா குரங்குகளின் நெஞ்சுப் பகுதியில் மயிரற்ற ஒரு பரப்பு உள்ளது. குரங்கின் சமூகப் படிநிலையைப் பொறுத்து அதன் நிறம் மங்கவோ, பொலிவு கூடவோ செய்யும். அந்த நிறம் ‘டெஸ்டாஸ்டிரோன்’ என்ற ஆண்மை ஹார்மோன் சுரப்பின் அளவைப் பொறுத்து அமையும். அது அதிக அளவில் சுரந்தால் நெஞ்சுப் பகுதி ரோஜா நிறத்திலிருந்து அடர் சிவப்பாக மாறும். அதைப் பார்த்தவுடன் பெண் குரங்குகளுக்கு ஆர்வம் மேலிடும்.

அதே போல அந்தச் சிவப்பு நிறத்தின் பொலிவு ஆண் குரங்கின் இளமையையும் வீரியத்தையும் பறை சாற்றுகிறது. அதைப் பார்த்தே, வலு குறைந்த பிற ஆண்கள் அதனுடன் போட்டியிடுவதா அல்லது கவுரவமாகப் பின் வாங்குவதா என்பதை முடிவு செய்துகொள்ளும்.

குரல் ஒலிகள்

மிகவும் இளைய அல்லது மூப்படைந்த ஆண் குரங்குகளின் நெஞ்சுப் பகுதி வெளிறிய சிவப்பு நிறத்துடன் இருக்கும். இனப் பெருக்கப் பருவத்தின் உச்சத்தில் அது பிரகாசமான சிவப்பு நிறமடைந்து, பெண் குரங்குகளின் கண்ணையும் கவனத்தையும் ஈர்ப்பதாயிருக்கும். சிவப்பு நிறம் மிக்கதாயிருக்கிற மார்பை உடைய ஆணை, பெண் குரங்குகள் அதிக எண்ணிக்கையில் சூழ்ந்து கொள்ளும். அந்தச் சிவப்பு நிறம் மற்ற ஆண்களை மிரட்டி விரட்டுவதற்கும் பயன்படுகிறது.

சுமார் முப்பது விதமான குரல் ஒலிகளைப் பயன்படுத்தி கெலாடா குரங்குகள் தமக்குள் செய்திகளைப் பரிமாறிக்கொள்கின்றன. பாபூன் களுக்குப் பதினைந்து தினுசான குரல் ஒலிகள் மட்டுமே வாய்த்திருக்கின்றன. பாபூன்களைவிட கெலாடாக்களுக்கு அதிக விதமான செய்திகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டிய அவசியமிருப்பதே இதற்குக் காரணமென ஆய்வர்கள் அனுமானிக் கிறார்கள்.

- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்