தெளிப்பது, நடவுக்கு மாற்று முறையாக நுழைந்து, பிறகு நடவே இல்லாமல் போய்விட்டது
காவேரி கல்யாணம் என்று ஒரு நாட்டிய நாடகம். நாடகத்தை எழுதிய தஞ்சை சகஜி மன்னர் முன்பாக மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஒரு பதினெட்டாம்பெருக்கு நாளில், இதனை ஆடியிருக்கிறார்கள். காவிரிக்கும் கடலரசனுக்கும் அகத்திய முனிவர் திருமணம் செய்துவைப்பதாகக் கதை. தண்ணீருக்கு வாய்த்த பள்ளம்போல் காவிரிப் பெண்ணுக்கு வாய்த்த பிள்ளை கடலரசன் என்று இந்தச் சம்பந்தத்தைப் பாடுகிறது நாடகம்.
ஆடியில் அலையெறிந்து, கரைபுரண்டு கிளை கிளையாய் விரிந்துவரும் காவிரி கை கொள்ளாமல் கடலைத் தழுவிக்கொள்வாள். கரை நெடுக நீராடு துறைகளும், சந்தியா மண்டபங்களுமாக சிந்தை நிறைந்த காவிரி கலை வடிவில் நாடகமாகப் பெருகுவதும் இயற்கை.
காவிரியின் கடைமடை
ஆடி கழிந்தது. ஆவணியும் சென்றது. புரட்டாசியும் போகவிருந்த வாரம் பூம்புகாருக்குச் சென்றேன். காவிரி கடலோடு சங்கமிக்கும் இடத்துக்குச் சற்று முன்பு ஒரு மதகு. அதன் பலகைகளை இறக்கினால் இடமும் வலமுமாகப் பிரியும் வாய்க்கால்களில் தண்ணீர் ஏறும். மேட்டூரில் தண்ணீர் திறந்து அன்று இருபத்துநான்காவது நாள். முறைப் பாசன ஏற்பாட்டில் காவிரியின் முறை கல்லணையில் முடிந்த மறுநாள். இருந்தாலும், காவிரியில் தண்ணீர் இருக்க வேண்டிய நியாயம். ஆனால், தண்ணீர் வந்து நனைந்ததற்கான அடையாளம்தான் இருந்தது. அதற்கும் சற்றுக் கிழக்கே பல்லவனேஸ்வரர் கோயிலும் குளமும். தன்ணீர் இல்லாத குளத்தில் மண்டியிருந்த புல்லை வெள்ளாடு மேய்ந்துகொண்டிருந்தது.
முதல் நாள் தஞ்சாவூர், தென்பெரம்பூர், வெட்டாறு தலைப்பு வழியாகக் கல்லணை வரை சென்றேன். அது காவிரிப் படுகையின் செம்பாதியான ஆறு லட்சம் ஏக்கர் கொண்ட வெண்ணாறு பாசனப் பகுதி. ஆழ்துளைக் கிணற்று நீரைக் கொண்டு விரல்விட்டு எண்ணும் இடங்களில் குறுவைச் சாகுபடியாகி அறுவடை முடிந்திருந்தது. நாற்றோ, நாற்றுப்பறியோ, சேற்று உழவோ கண்ணுக்குப் படவில்லை. எல்லா இடங்களிலும் புழுதியாக உழுது, விதையைத் தெளித்துவிட்டு வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
பார்க்கக் கிடைக்குமோ இனி?
இரண்டு நாட்கள் கழித்து கொள்ளிடத்தில் கீழணை இருக்கும் அணைக்கரை வரை சென்றேன். காவிரிப் படுகையின் கிழக்குப் பகுதியில் பேரளத்துக்கு வடக்கிலும், மேற்குப் பகுதியில் குடந்தைக்கு வடக்கிலும் ஆழ்துளைக் கிணறு உள்ள சில இடங்களில் மட்டும் நாற்றுப் பறி, நடவு என்று வேலைகள் நடந்தன. இனி மேல் இது பார்க்கக் கிடைக்காதோ என்று ஏக்கமே வந்துவிட்டது. மேட்டூரில் தண்ணீர் திறந்து அன்று இருபத்தாறாவது நாள். திறந்தபோது கிட்டத்தட்ட எண்பத்தெட்டு அடியாக இருந்த மேட்டூர் நீர்மட்டம் அறுபத்தேழு அடியாகவும், 5,000 கோடி கன அடியாக இருந்த நீர் 3,000 கோடி கன அடியாகவும் குறைந்திருந்தது. குத்துமதிப்பாகச் சொன்னால் நீர்மட்டம் 20 அடி குறைந்து, 2,000 கோடி கன அடி நீர் செலவு செய்தும் வந்தது என்று சொல்லும்படியாக வெங்கார் பாயக்கூட வயலுக்குத் தண்ணீர் வரவில்லை.
மும்முனைப் போராட்டம்
தண்ணீர் சிக்கனத்துக்காக முறைப் பாசனம், உள்முறை என்று ஏற்பாடு. மூன்று வாரம் காத்திருந்து ஏமாற்றமடைந்த விவசாயிகள், முறைவைக்காமல் தண்ணீர் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். முளைத்துவந்த விதை கருகியதால் கொள்ளிடம் பகுதியில் மழை வேண்டி திருவருட்பா அகவல் பாராயணம் செய்தார்கள். ஆறுகள் இருக்கும் நிலையில் அவை வழக்கமாக வாங்கும் அளவுக்கு மேல் தண்ணீர் திறந்தால்தான் வாய்க்காலுக்கு வரும் என்று விவசாயிகள் சரியாகக் கணித்தார்கள். காவிரிப் பகுதி கட்டுமானங்களைச் சீரமைக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் ஒருவர் கூறினார். மேட்டூர் திறந்து ஆறு நனைந்ததுதான் மிச்சம் என்று ஆயிற்று. தெளித்த விதை முளைக்கக்கூடச் சில இடங்களில் தண்ணீர் இல்லை.
தண்ணீர் கூடுதலாகத் திறக்கக் கோரி சாலை மறியலும் நடந்தது. மேல் மடையிலிருக்கும் திருச்சி, கரூர் பகுதி விவசாயிகளும் தண்ணீர் வயலுக்கு எட்டவில்லை என்று போராட வேண்டியதாயிற்று. அக்டோபர் முதல் வாரத்தில் ஒன்றும், இரண்டாவது வாரத்தில் ஒன்றுமாகப் பெய்த மழைதான் வெண்ணாறு பகுதி விதைப்பைக் கொஞ்சம் முளைக்க வைத்தது. விவசாயிகளின் கதறல் காதில் விழுந்ததுபோல தண்ணீர் திறப்பு 18,000 கன அடியாக உயர்ந்து, மூன்று நாட்களில் 16,000 ஆகி, கையோடு பழையபடியே 12,000 ஆயிற்று. சென்ற முறைக்குத்தான் வெண்ணாறு பகுதியில் முதல்மடை வயலுக்குத் தண்ணீர் வந்ததைப் பார்த்தோம். ஆக, விவசாயிகள் ஒரு மும்முனைப் போராட்டத்தில் இருக்கிறார்கள் - கர்நாடக அரசோடு, மத்திய அரசோடு, நமது முறைப் பாசன மேலாண்மையோடு!
விவசாயிகளின் மொழி
கடந்த 30 ஆண்டுகளாகவே நிலைமை மோசமாகி வருகிறது. அருகில் உள்ள நகரங்களில் சந்தித்துக்கொள்ளும் விவசாயிகள் அப்போதெல்லாம், “நடவு ஆயிற்றா?” என்று கேட்டுக்கொள்வார்கள். பின்நாட்களில் “நடவா?, ‘தெளியா?” என்று குசலம் விசாரிப்பதுபோல் கேட்டுக் கொண்டார்கள். இப்போது, “தெளித்தது ஏதாவது முளைத்ததா?” என்று கேட்கிறார்கள். தெளிப்பது நடவுக்கு ஒரு மாற்று முறையாக மெதுவாக நுழைந்து, பிறகு நடவே தெளிப்பதற்கு ஒரு மாற்று முறையாகக் குன்றி, இப்போது நடவே இல்லாமல் மறைந்துவிட்டது. ஒரு வரியில் சொல்வதானால், சோழ நாடு மானாவாரி ஆகிறது.
இப்படிச் சொல்லாமல், ‘நீர் பற்றாக்குறை’, ‘கடுமையான பாதிப்பு’, ‘வறட்சி’ ‘மாற்றுமுறை விவசாயம்’ என்று நிலைமையை வெளிறிப் போன சொற்களால் விவரிக்கிறோம். உணர்வுகளைக் கழுவிக் களைந்துகொண்ட கலாசாலைகளின் ஆய்வுக்கட்டுரை மொழி. இது மொழிச்சிக்கல் மட்டுமல்ல. உள்ளதை உள்ளபடியே பிடித்துக்காட்டாத சொல்லாடல். விவசாயம் பற்றிய நமது சொல்லாடலுக்குள் விவசாயிகளின் மொழி நுழைய முடியாது. வெள்ளம், வறட்சி என்ற இருமைக்குள்ளேயே பின்னப்பட்ட வறிய சொல்லாடல். ஒருவகையான அரசியலையும், இயந்திரமயத்தையும், பெரும் முதலீட்டையும் நியாயப்படுத்தும் சித்தாந்தச் சாயலேறிய சூட்சுமமான சொல்லாடல். உரிமை, உரிமை மறுப்பு என்ற இருமைக்குள்ளே முடங்காமல் இந்தச் சொல்லாடல் விரிவாக வேண்டும்!
- தங்க. ஜெயராமன், பேராசிரியர், தொடர்புக்கு: profjayaraman@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago