சுதந்திரச் சுடர்கள் | தவிர்க்க முடியாததா பாகிஸ்தான் பிரிவினை?

By செய்திப்பிரிவு

பிரிவினை ஏன்? அதைத் தவிர்த்திருக்க முடியாதா? இந்தக் கேள்விக்கு விடையளிப்பது மிகவும் கடினம், இந்தியத் துணைக் கண்டத்தை பிரிட்டிஷார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா – பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகளாகப் பிரித்த காலத்திலும் இதற்கு விடை காண்பது கடினமாகவே இருந்தது.

ஒருவேளை 1946இல் இந்தியா வந்த பிரிட்டிஷ் கேபினட் தூதுக்குழு முயன்றிருந்தால் இந்தியாவைப் பிளவுபடுத்தாமல் ஒரே நாடாக வைத்திருந்திருக்க முடியும். மத்திய அமைச்சரவையில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சம எண்ணிக்கையில் பதவிகளை அளிக்கலாம்; இந்தியாவைப் பல்வேறு மண்டலங்களாகப் பிரித்துவிட்டு வெளியுறவுத் துறை, ராணுவம், தகவல் தொடர்பு ஆகிய துறைகளைத் தவிர பிற அதிகாரங்கள் அனைத்தையும் அந்த மண்டலங்களுக்கு வழங்கலாம் என்கிற யோசனையை கேபினட் தூதுக்குழு தெரிவித்திருந்தது. அதை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் கட்சி நிராகரித்தது.

பிரிவினைதான் யதார்த்தம் என்றாலும், முஸ்லிம்களுக்கென்று தனி நாடு கோரிய முகம்மது அலி ஜின்னா, அனைத்துப் பகுதிகளுக்கும் ‘பொதுவான நிர்வாகத் தொடர்பு’ என்கிற அமைப்பை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடும். இந்தியாவை இரண்டாகப் பிரிக்க ஜவாஹர்லால் நேருவும் சர்தார் வல்லபபாய் படேலும் ஒப்புதல் தெரிவித்த பிறகு, ஜின்னாவைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலான மவுண்ட் பேட்டன் பிரபு 1972 ஜனவரியில் என்னைச் சந்தித்தபோது நினைவுகூர்ந்தார்.

“ஒன்றுபட்ட இந்தியாதான் தேவை என்று ஜின்னாவிடம் வாதிட்டேன்; அப்படி ஒரு ஒற்றுமையைப் பார்ப்பதுதான் தனக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய விஷயம் என்றாலும், இந்துக்களின் நடவடிக்கைகள்தான் அப்படியொரு நாட்டை அவர்களுடன் முஸ்லிம்கள் பகிர்ந்துகொள்ள முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டது என்றார் ஜின்னா”.

குல்தீப் நய்யார்

அவர் கூறியபடி, இந்துக்களின் நடவடிக்கைகள்தான் அதற்குக் காரணமோ இல்லையோ, ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிந்தது: முஸ்லிம்கள் தங்களுடைய எதிர்காலம் குறித்து மிகுந்த கவலையும் பதற்றமும் கொண்டவர்களாக இருந்தார்கள். எந்தெந்த மாகாணங்களில் அவர்கள் பெரும்பான்மையினராக இருந்தனரோ, அங்கே சிறிதளவும் அச்சமில்லாமல் வாழ்ந்தனர்.

ஆனால் இந்தியா என்கிற முழு நாட்டில் தாங்கள் சிறுபான்மையினராக இருக்கும்பட்சத்தில், சுதந்திர இந்தியாவில் தங்களுடைய சமூகநிலை, பொருளாதார எதிர்காலம் ஆகியவை பாதுகாப்பாக இருக்காது என்று அவர்கள் கவலைப்பட்டனர்.

“இந்தியாவைப் பிரிக்க நேர்ந்தது குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா” என்று மவுண்ட் பேட்டனைக் கேட்டேன்.

“ஆமாம், ஆனால் எனக்கு வேறு வழியில்லை. இந்தியாவின் வைஸ்ராயாக வேவல் பிரபு இருந்தார், அவருக்குப் பிறகு நான் அங்கே அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டேன். அவருக்கு முன்னதாக அங்கு நியமிக்கப்பட்டிருந்தால் நாட்டை ஒற்றுமையாக வைத்திருப்பதில் வெற்றி பெற்றிருப்பேன்” என்றார்.

யார் பொறுப்பு?

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையைத் தவிர்க்க 1937இல் ஒரு வாய்ப்பு கிடைத்தது. முஸ்லிம்களுக்கென்று தனி நாடு (பாகிஸ்தான்) வேண்டும் என்று லாகூரில் தீர்மானம் இயற்றுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அந்த வாய்ப்பு ஏற்பட்டது. தேசப் பிரிவினைக் காலத்தில், லண்டனிலிருந்து வெளிவந்த ‘டைம்ஸ்’ நாளிதழின் இந்திய நிருபராகப் பணியாற்றிய லூயி ஹெரனுடன் நிகழ்த்திய உரையாடல் அடிப்படையில் இதைக் கூறுகிறேன்.

“தேசப்பிரிவினைக்கு நேருதான் பொறுப்பு, 1937இல் ஐக்கிய மாகாண காங்கிரஸ் அரசில் (இப்போது உத்தரப் பிரதேசம்) முஸ்லிம் லீகும் சேர்ந்துகொள்ள நேரு சம்மதித்திருந்தால் பாகிஸ்தானைக் கேட்டிருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது” என்று முகம்மது அலி ஜின்னா தன்னிடம் கூறியதாக ஹெரன் நினைவுகூர்ந்தார்.

ஜின்னாவுடனான சந்திப்பை மீண்டும் நினைவுகூர்ந்து ஹெரன் எனக்கொரு கடிதத்தைக் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார். “ஒரு நாள் மாலை நானும் ஜின்னாவும் சந்தித்துக்கொண்டோம். பாகிஸ்தான் என்றொரு நாடு உருவாவதை ஏற்பதாகவும் அதற்கான அரசியல் அவசியத்தைப் புரிந்துகொள்வதாகவும் கூறிய நான், இந்திய துணைக்கண்டம் இப்படி இரண்டாகப் பிளவுபடுவது குறித்த வருத்தத்தையும் தெரிவித்தேன்.

பிரிட்டிஷார் உருவாக்கிய இந்திய ராணுவத்தையும் ஐ.சி.எஸ். என்கிற உயர் அதிகாரப் பணிப்பிரிவையும் பிளவுபடுத்துவதில் உள்ள துயரங்களையும் சுட்டிக்காட்டினேன். இவையெல்லாம் உண்மைதான் என்று வியப்பளிக்கும் வகையில் ஒப்புக்கொண்ட ஜின்னா, இந்தப் பிரிவினைக்கே காரணம் நேருதான் என்று லண்டனில் சந்தித்தபோதும் என்னிடம் கூறினார்” என்று கடிதத்தில் எழுதியிருந்தார் ஹெரன்.

நேரு மீது ஜின்னா பழி

தேசப் பிரிவினைக்குத் தான் பொறுப்பல்ல என்று காட்டுவதற்காகக் கூறினாரா அல்லது அடிக்கடி நேருவுடன் மோதிக் கொண் டிருந்ததால், அவர்தான் காரணம் என்று பழியை நேரு மீது போட்டாரா என்பதை எவர் வேண்டுமானாலும் ஊகித்துக்கொள்ளலாம். நேருவை ஜின்னா குற்றம்சாட்டியதெல்லாம், ஐக்கிய மாகாண அமைச்சரவையில் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டு இடங்களைத் தர மறுத்தார் என்பதுதான். ஆனால், இது மிகப் பெரிய சிக்கலை, மிகவும் அற்பமானதைப்போலச் சித்தரிக்கும் முயற்சியாகும்.

1937 பொதுத் தேர்தலில், மத அடிப்படையில் (வகுப்புவாரி) தேர்தல் நடந்தது. முஸ்லிம்கள், முஸ்லிம் வேட்பாளர்களுக்கும், இந்துக்கள் இந்து வேட்பாளர்களுக்கும் வாக்களித்தார்கள். ஐக்கிய மாகாணம் (உத்தரப் பிரதேசம்) தவிர பிற மாகாணங்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.

144 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய மாகாணப் பேரவையில் 36 முஸ்லிம் தொகுதிகளில் 29-ஐ முஸ்லிம் லீக் கைப்பற்றியது. அந்த மாகாணத்தில் மட்டும் காங்கிரஸும் முஸ்லிம் லீகும் ரகசிய உடன்படிக்கை செய்துகொண்டிருந்தன என்பது ஊர் அறிந்த ரகசியம். எனவே, இரண்டுமே புதிய அரசில் பங்கேற்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

முஸ்லிம் அமைப்புகளிலேயே வீரியம் மிக்கதாக இருந்த முஸ்லிம் லீகைத் தங்களுக்குள் இழுத்துவிட வேண்டும் என்று சில காங்கிரஸ் தலைவர்கள் விரும்பினார்கள். காங்கிரஸின் செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட முஸ்லிம்கள், தங்களுடைய லீக் அமைப்பு தனித்தேதான் இருக்கும் என்றும் அமைச்சரவையில் தங்களுக்கு இரண்டு பிரதிநிதிகள் வேண்டும் என்றும் கோரினர்.

வகுப்புவாத சித்தாந்த அடிப்படையில் பிரதிநிதித்துவம் தர முடியாது என்று நேரு உறுதியாக அதை எதிர்த்தார். சட்டப்பேரவையில் மத அடிப்படையில் தனி அமைப்பு இருக்கக் கூடாது என்றும் வாதிட்டார்.

முஸ்லிம் லீக் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு அமைச்சரவையில் இடம் தருவேன், ஆனால் இனி லீக் தனியமைப்பாகச் செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

இந்த நிபந்தனையை ஏற்காத முஸ்லிம் லீக் கட்சியினர், அரசில் சேராமல் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தனர். நேருவின் செயல், முஸ்லிம் லீகுக்குப் புத்துயிர் ஊட்டிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் அபுல் கலாம் ஆசாத் பெரிதும் வருத்தப்பட்டார்.

புருஷோத்தம்தாஸ் தாண்டன் (தீவிர இந்து தேசியவாதி) இந்த விவகாரத்தில் முக்கியப் பங்கு வகித்ததாகவும் நேருவின் தவறான முடிவுக்கு அவர் போட்ட தூபம்தான் காரணம் என்றும் அபுல் கலாம் ஆசாத் பிறகு குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தில் எப்படிச் செயல்பட்டிருக்க வேண்டுமோ அப்படிச் செயல்பட மகாத்மா காந்தியும் தவறிவிட்டார் என்று கருதினார் ஆசாத்.

(தொடரும்)

நன்றி: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம், கே.ஆர். நரேஷ் குமார், விபா சுதர்சன்

தமிழில்: வ. ரங்காசாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

24 days ago

கருத்துப் பேழை

24 days ago

மேலும்