இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (எம்சிஐ) மாற்றாக தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தேசிய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
மருத்துவக் கவுன்சில் நிர்வாகத்தில் மாணவர்களின் கல்விக் கட்டணம், பேராசிரியர்களின் ஊதியத்துக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கல்வியின் தரம், கற்பிக்கும் திறனில் கவனம் செலுத்தப்படவில்லை. புதிய மசோதா அமலுக்கு வரும்போது மருத்துவ மாணவர்கள் என்ன கற்றுக் கொள்கிறார்கள் என்பதில் முழு கவனமும் திருப்பப்படும். இதன் மூலம் நமது சமுதாயத்துக்குத் திறமையான மருத்துவர்கள் கிடைப்பார்கள்.
மருத்துவக் கவுன்சிலில் பெருகிய ஊழல், முறைகேடுகளால் மருத்துவக் கல்வியின் தரம் தாழ்ந்துள்ளது. ஊழலின் மறுபெயர் எம்சிஐ என்றுகூட அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. கவுன்சிலின் முன்னாள் தலைவர் இப்போது சிறைக் கம்பிகளுக்கு பின்னால் உள்ளார். சர்வதேச நாடுகளின் மருத்துவப் பாடத்திட்டங்களில் புதியவைகள் புகுந்து கொண்டிருக்க இந்தியாவில் மட்டும் மருத்துவ பாடத்திட்டம் அப்படியே முடங்கிக் கிடக்கிறது.
மருத்துவர்கள் பற்றாக்குறை, கல்விக் கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எம்சிஐ அமைப்பே மூல காரணமாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகை யிலேயே தேசிய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
இனிமேல் தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேர முடியும்.
மருத்துவ மாணவர்கள் என்ன கற்றுக் கொண்டார்கள்? அவர்களின் மருத்துவ அறிவு எவ்வாறு உள்ளது என்பதை அறிய படிப்பின் நிறைவில் பொதுத் தேர்வு நடத்த புதிய மசோதா வழிவகுக்கிறது. இதன்மூலம் அந்தந்த கல்லூரிகளின் தரத்தையும் நாம் அறிந்து கொள்ள முடியும். பின்தங்கிய மருத்துவக் கல்லூரிகள் தங்களின் தரத்தை மேம் படுத்திக் கொள்ள முயற்சிக்கும். மருத்துவ ராகப் பணியைத் தொடங்க இறுதியாண்டு பொதுத்தேர்வு கட்டாயமாக்கப்பட உள்ளது. முதுகலைப் படிப்புகளில் சேருவதற்கும் அது நுழைவுத் தேர்வாக அமையும்.
புதிய மசோதா நடைமுறைக்கு வரும்போது மருத்துவ மாணவர்களின் கல்விக் கட்டணம், பேராசிரியர்களின் ஊதியம், பாடத்திட்டங்களை அந்தந்த மாநில அரசுகள் நிர்ணயிக்க முடியாது. சம்பந்தப்பட்ட ஆணையமே இந்தப் பணி களை மேற்கொள்ளும். மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு எவ்வாறு கல்வி கற்பிக்கப்படுகிறது என்பதை ஆணையம் உன்னிப்பாகக் கண்காணிக் கும். இந்த நடைமுறைகளின்மூலம் தகுதி யின் அடிப்படையில் மட்டுமே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுவது உறுதி செய்யப்படும்.
ஒட்டுமொத்த மருத்துவச் சேர்க்கையில் 40 சதவீத இடங்களில் தகுதியுள்ள ஏழை மாணவர்களுக்கு முழு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். பேராசிரியர்களின் ஊதியத்தில் வரம்புகள் நீக்கப்படுவதால் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள்கூட ஆசிரியர் பணிக்கு திரும்பக் கூடும். குறைந்தபட்சம் பகுதிநேர பேராசிரியராகப் பணியாற்றவாவது முன்வருவார்கள். பாடத்திட்டங்களில் வரம்புகள் விலக்கப் படுவதால் தேவைக்கேற்ற பாடத்திட்டங்கள் அறிமுகமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் 55 ஆயிரம் மருத்துவப் படிப்பு இடங்களுக்கு சுமார் 11 லட்சம் மாணவர்கள் போட்டியிடுகின்றனர். இன்றைய நிலையில் கூடுதலாக 30 லட்சம் மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். தற்போதைய மருத்துவச் சேர்க்கை முறை நீடித்தால் இந்த இலக்கை எட்ட இன்னும் 50 ஆண்டுகளாகிவிடும். இதனால் அடுத்த இரண்டு தலைமுறைகள் பாதிக்கப்படுவார்கள்.
கல்விப் பணியில் அரசு மட்டுமே ஈடுபட வேண்டும் என்பது சோஷலிஸ்டுகளின் விருப்பமாக உள்ளது. அதற்கு அரசிடம் நிதிஆதாரம் இல்லை. எனவே மருத்துவக் கல்வித் துறையில் தனியாரை அனுமதிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அதேநேரம் புதிய கல்லூரிகளைத் தொடங்க சில கட்டுப்பாடுகளை விதிப்பதும் அவசியமாகிறது.
புதிய மசோதாவில் தனியார் மருத் துவக் கல்லூரிகள் தொடங்க ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகத்தரம் வாய்ந்த மருத்துவக் கல்லூரி கள் இந்தியாவில் உருவாகக்கூடும். மருத்துவர்கள் பற்றாக்குறையும் படிப் படியாகக் குறையும்.
பல்வேறு சாதகங்கள் இருந்தாலும் புதிய மசோதாவில் 2 முக்கியக் குறை பாடுகள் உள்ளன. முதலாவது, கிராமப் புறங்களில் மருத்துவர்கள் சேவையாற்ற முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இரண்டாவது மருத்துவர்களின் தவறு களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு போதிய நிவாரணங்கள் அளிக்கப்பட வில்லை. இந்த குறைகள் களையப்பட வேண்டும்.
புதிய மசோதாவை நிறைவேற்றுவது அவ்வளவு எளிது அல்ல. எம்சிஐ உடன் தொடர்புடைய மருத்துவர்கள் செல் வாக்குமிக்கவர்கள். அவர்கள் மருத்துவர் கள் எண்ணிக்கை அதிகரிப்பதை விரும்ப மாட்டார்கள். அரசு மட்டுமே மருத்துவ கல்விச் சேவையில் ஈடுபட வேண்டும் என்ற கொள்கை கொண்ட வயதான சோஷ லிஸ்டுகளும் எம்சிஐ மருத்துவர்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடும்.
எனினும் அதிர்ஷ்டவசமாக எம்சிஐ அமைப்பை கலைப்பதில் நாடாளுமன்றம், நீதித் துறை, நிர்வாகத் துறை ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன. புதிய மசோதா சட்டமானால் மருத்துவக் கல்வியில் புரட்சி ஏற்படும். அதன் தாக்கம் இதர கல்வித் திட்டங்களிலும் எதிரொலிக்கும்.
நமது நாட்டின் தொடக்கக் கல்வி திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் கல்வி உரிமைச் சட்டம். இந்த சட்டத்தில் குழந்தைகள் என்ன கற்றுக் கொள்கிறார்கள் என்பது குறித்து கவனம் செலுத்தப்படவில்லை. வகுப்பறைகளின் விசாலம், கழிவறை வசதி, மைதானங்களின் பரப்பளவு ஆகியவை குறித்து மட்டுமே சட்டம் அதிகம் கவலைப்படுகிறது.
அனைத்து கல்வித் திட்டங்களிலும் ஒழுங்காற்று கொள்கை அமல் செய்யப்பட்டால் அது ஒரு புதிய புரட்சிக்கு வித்திடும். ஊழலை ஒழித்து நல்லாட்சி வழங்குவேன் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். அவரிடம் மக்களும் அதையே எதிர்பார்க்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago