ஒரு தேசமாக தொழிற்புரட்சி தொடங்கி மின்னணுப் புரட்சி வரை தொழில்நுட்ப வளர்ச்சிக்கான பல பேருந்துகளை இந்தியா தவறவிட்டதாகக் கூறப்படுவது உண்டு. பல்வேறு காரணங்களால் இந்தப் போக்குகளில் இந்தியா தாமதமாகவே இணைய வேண்டியிருந்தது.
ஆனால், இணையம் சார்ந்து அவ்வாறு நிகழவில்லை. உலக அளவில் இணையம் எனும் வலைப்பின்னல் விரியத் தொடங்கியபோதே இந்தியா அதில் இணைந்துகொண்டது. அதன் பயனைத்தான் நாம் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.
டிஜிட்டல் உலக வரைபடத்தில் இந்தியாவுக்கு உரிய இடம் இருக்கிறது; இணையப் பயனாளிகளைப் பொறுத்தவரை இந்தியா முக்கியச் சந்தையாக உருவெடுத்திருக்கிறது. ஃபேஸ்புக், கூகுள், ஆப்பிள், அமேசான் எனப் பன்னாட்டுத் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் இந்தியாவைத் தங்கள் வளர்ச்சித் திட்டத்தில் பிரதானமாகக் கருதுகின்றன. அதே நேரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட ‘யூனிகார்ன்’களைக் கொண்ட ஸ்டார்ட்-அப் தேசமாகவும் இந்தியா விளங்குகிறது.
இவற்றுக்கெல்லாம் அடிப்படை, இந்தியாவும் இந்தியர்களும் இணைய வசதியைத் திறம்படப் பெற்றிருப்பதுதான். இணைய விநியோகத்தில் இன்னமும் போதாமைகள் இருக்கின்றன என்றாலும், நாடு தழுவிய அளவில் இணைய வசதியும் கைபேசி சேவையும் சாத்தியமாகியிருப்பது, நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கான பின்புலமாக இருப்பதை மறுப்பதற்கில்லை. ஒப்பீட்டளவில், இணையக் கட்டணமும் கைக்கு எட்டக்கூடியதாகவே இருக்கிறது.
டிஜிட்டல் தேசம்: இணையமே காரணம்
விரல்நுனியில் பணப் பரிவர்த்தனையைச் சாத்தியமாக்கும் டிஜிட்டல் இந்தியாவாகத் தேசம் உருவாகியிருப்பதற்கும் இணையமே காரணம். 75ஆவது சுதந்திர தினத்தை நாடு கோலாகலமாகக் கொண்டாடும் தருணத்தில், 1995இல் சுதந்திர தினத்தன்றுதான் இந்தியாவில் இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது என்பதையும் நினைவில் கொள்வது பொருத்தமாக இருக்கும்.
1995இல்தான் இணையம் வர்த்தகமயமான ஆண்டு. அதே ஆண்டுதான் இணையத்தை எல்லோரும் அணுகுவதைச் சாத்தியமாக்கிய வைய விரிவு வலையும் (World Wide Web) பொதுப் பயன்பாட்டிற்கு வந்தது. அதைத் தொடர்ந்து, இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் இணையம் அறிமுகமாகிவிட்டது. அதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்பே, ‘எர்நெட்’ எனப்படும் கல்வி ஆய்வு வலைப்பின்னல் (Educational Research Network (ERNET)) மூலம் இணையம் எனும் வலைப்பின்னலில் இந்தியா இணைந்திருந்தது.
1969 இல் அமெரிக்காவில் அர்பாநெட்டாக உதயமான இணையம், அதன் தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்கிக்கொண்டிருந்த ஆரம்பக் காலகட்டத்தில் பெரும்பாலும் ஆய்வு அமைப்புகளாலும் கல்வி நிறுவனங்களாலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்தது.
இந்தச் சூழலில், இந்தியாவும் இந்த வலைப்பின்னலில் இணைந்ததை இப்போதும் வியப்பாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இந்தக் கல்வி வலைப்பின்னல் இந்தியாவில் உருவாகக் காரணமான னிவாசன் ரமணி, இந்திய இணைய முன்னோடிகளில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார். இந்தப் பங்களிப்பிற்காக அவர் இணையப் புகழரங்கிலும் இடம்பெற்றிருக்கிறார்.
வலைப்பின்னலுக்கான முதல் தொடர்பு
கிரிக்கெட்டில் இந்தியா உலகக் கோப்பையை வென்ற 1983இல்தான் னிவாசன் ரமணி, இந்தியக் கல்வியியல் வலைப்பின்னலுக்கான யோசனையை முன்வைத்தார். இதுவே எர்நெட்டுக்கான அடிப்படை. பொறியியல் பட்டதாரியான ரமணி அமெரிக்கா சென்று பணியாற்றிய பிறகு, 1973 இல் இந்தியா திரும்பினார்.
அமெரிக்காவில் மின்னஞ்சல் பயன்பாடு உள்ளிட்டவற்றைப் பார்த்து, அவற்றின் பின்னே இருந்த கணினி வலைப்பின்னலால் ஈர்க்கப்பட்டவர். நாடு திரும்பியதும், மென்பொருள் வளர்ச்சி, கணினியியல் நுட்பங்கள் மையத்தின் உருவாக்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார்.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட கணினிக்கான தகவல்தொடர்பு மென்பொருளை உருவாக்கிய குழுவுக்குத் தலைமை வகித்த ரமணி, 1981இல் மூன்று நகரங்களைச் செயற்கைக்கோள் வாயிலாக இணையத்தின் அடிநாதமான 'பாக்கெட் ஸ்விட்ச்' முறையில் இணைத்தார். இவற்றின் தொடர்ச்சியாக எர்நெட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இதன் மைய மின்னஞ்சல் ஸ்விட்ச், சர்வதேச கேட்வே ஆகியவற்றை அமைத்துக்கொடுத்தார். இந்தியாவிலிருந்து சர்வதேச வலைப்பின்னலுக்கான முதல் தொடர்பாக இது அமைந்தது.
ரமணி இந்தச் சாதனையை நிகழ்த்துவதற்கான அடிப்படையை, இந்தியாவின் முதல் கணினியை உருவாக்கிய கணினி விஞ்ஞானி ரங்கசாமி நரசிம்மன் உள்ளிட்டோர் அமைத்திருந்தனர்.
கல்வி நிறுவனங்களில் ஆய்வுப் பணிகளுக்காகவும், தகவல் பரிமாற்றத்திற்காகவும் இணையமும், மின்னஞ்சலும் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், மக்களுக்கு இந்தச் சேவையை அறிமுகப்படுத்தியதில் அப்போது வி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பில் இருந்த பி.கே.சிங்கால் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். 1995இல் இணைய வசதி இந்தியாவுக்கு வந்தது இரண்டாவது சுதந்திர தினம் என வர்ணிக்கப்பட்டது.
இந்திய இணையத்தின் தந்தை
இந்திய மக்களுக்கு இணைய வசதி தேவை என்பதை உணர்ந்து, இது தொடர்பாக வாதிட்டு, அரசைச் சம்மதிக்க வைத்தது மட்டுமல்லாமல், அறிமுகத்தின்போது இந்திய இணைய வசதியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கெல்லாம் பொறுப்பேற்று, தனிக் குழு அமைத்து, அடுத்த பத்து வாரங்களில் இவற்றைச் சரிசெய்த செயல்வீரராகவும் சிங்கால் அறியப்படுகிறார்.
அப்போது ஆபாசத் தளங்களைப் பார்வையிடும் வசதியைச் சுட்டிக்காட்டி, மக்கள் பிரதிநிதிகள் சிலர் இத்தகைய ஆபத்தான வலையை இந்தியாவுக்குக் கொண்டுவந்தது அவசியமா எனக் கேள்வி எழுப்பியபோது, இந்தியாவுக்கு இணையத்தை அளிப்பதுதான் என் வேலை என்றும் அதைப் பொறுப்பாகப் பயன்படுத்த வைப்பதில்லை என்றும் தெளிவாகப் பதிலளித்திருக்கிறார்.
3% மக்கள் ஆபாசத் தளங்களைப் பார்ப்பதில் எனக்கு அக்கறை இல்லை, எஞ்சிய 97% பேர் என்ன செய்கின்றனர் என்பதே முக்கியம் என்றும் கூறி இணையப் பயன்பாட்டைப் புரியவைத்திருக்கிறார்.
இணையத்தைப் பொதுப் பயன்பாட்டின்பொருட்டு அறிமுகம் செய்ததற்காக சிங்கால் ‘இந்திய இணையத்தின் தந்தை’ எனப் போற்றப்படுகிறார். மறைந்த பாலிவுட் நடிகர் ஷம்மி கபூரையும், அவரது இணைய நண்பர்களையும் நினைத்துப்பார்ப்பது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும்.
ஷம்மி கபூர் கணினித் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்ததோடு, இந்தியாவுக்கு அதிகாரபூர்வமாக இணையத்தைக் கொண்டுவருவதற்கு முன்பாகவே தொலைபேசியின் உதவியோடு ஆப்பிள் வேர்ல்டு சேவை மூலம் இணையத்தைப் பயன்படுத்தியிருந்தார். ஷம்மியும் அவரது நண்பர்களும் இணையத்தைப் பயன்படுத்துவதை ஒரு சந்திப்பில் தற்செயலாகத் தெரிந்தகொண்ட நிலையிலேயே சிங்கால் இது எப்படிச் சாத்தியம் எனக் குழம்பினாலும், இந்தியாவுக்கு இணைய வசதி தேவை என்பதையும் அந்நிகழ்ச்சி உணர்த்தியது.
பின்னர், கபூரும் நண்பர்களும் அவரை நேரில் சந்தித்து இது பற்றி வலியுறுத்தியிருக்கின்றனர். அந்தக் காலகட்டத்திலேயே ஷம்மி கபூர், ‘ஜங்லி’ எனும் சொந்த இணையதளத்தையும் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இணையம் அறிமுகமான அடுத்த ஆண்டு, இந்தியரான சபீர் பாட்டியா அமெரிக்காவில் ஹாட்மெயில் சேவையை அறிமுகப்படுத்தி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். மின்னஞ்சல் சேவையை எல்லோரும் எளிதாக அணுக வழிசெய்த வலைமெயிலான ஹாட்மெயில் வெற்றிக் கதை ஒருவிதத்தில் இந்திய ஸ்டார்ட்-அப் கதைக்கான ஊக்கம் என்றும் சொல்லலாம்.
- சைபர் சிம்மன்,இணையம்சார் தொழில்நுட்ப எழுத்தாளர்தொடர்புக்கு: enarasimhan@gmail.com
To Read this in English: Inspiring tales of Indian Internet pioneers
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
14 days ago
கருத்துப் பேழை
14 days ago
கருத்துப் பேழை
14 days ago
கருத்துப் பேழை
21 days ago
கருத்துப் பேழை
21 days ago
கருத்துப் பேழை
21 days ago