பிரிட்டிஷ் இந்தியாவின் வங்க மாகாணத்தில் (இன்றைய வங்கதேசம்) பிறந்த மகாஸ்வேதா தேவி, அடக்குமுறைக்கும் ஆணாதிக்கத்துக்கும் எதிராக ஒலித்த பெண்ணியக் குரல்களில் முதன்மையானவர்.
13 வயதில் சிறார் கதைகள் எழுதத் தொடங்கிவிட்டாலும் 30 வயதில் அவர் எழுதிய ‘ஜான்சியின் ராணி’தான் எழுத்தாளராக அவரது முதல் படைப்பு என்று கருதப்படுகிறது. சுதந்திர இந்தியாவில் சாதியக் கட்டுமானங்களாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வாலும் அல்லல்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்றார்.
கற்பனைக் கதைகளுக்கும் மகாஸ்வேதா தேவிக்கும் ஏழாம்பொருத்தம். இவர் படைத்தவை எல்லாமே வாழ்க்கைக் கதைகள்தாம். ஏழை விவசாயிகள், பழங்குடியினர், ஆதரவற்ற பெண்கள், சுரண்டலுக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்படும் பெண்கள் போன்றோரைத் தன் கதைகளின் மாந்தர்களாக்கினார். விளிம்புநிலை மக்களுக்குத் தன் கதைகளில் புராண அடையாளம் கொடுத்து, அவர்களது உரிமைக் குரலை ஒலிக்கவைத்தார்.
எழுத்தாளராக மட்டுமல்லாமல் உண்மையை உலகுக்குச் சொல்லும் இதழாளராகவும் அவர் அறியப்பட்டார். ஒடுக்கப்பட்டோர் மீது நிகழ்த்தப்படும் அடக்குமுறையையும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும் கட்டுரைகளின் வாயிலாக ஆவணப்படுத்தினார்.
அதிகாரமற்ற எளிவர்களின் குரலாக ஒலிக்கும் வகையில் ‘போர்திகா’ என்கிற காலாண்டிதழை நடத்தினார். சிறந்த சமூக அரசியல் விமர்சகராகவும் செயல்பட்டார். திருமண உறவிலிருந்து வெளியேறுவது என்பது அரிதாக இருந்த 1960-களில் துணிவுடன் மணவிலக்குப் பெற்றார். திருமண வாழ்க்கையின் காயங்களும் கசடுகளும் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கினாலும் எளியவர்களுக்காக எழுதுவதைத் தவம்போல் தொடர்ந்தார்.
மகாஸ்வேதா தேவியின் படைப்புகள் சமகால அரசியல் செயல்பாடுகளின் எதிரொலியாக வெளிப்பட்டன. தங்கள் காடுகளுக்குள் ஆங்கிலேயர்கள் நுழைவதை எதிர்த்த வங்க மாகாணத்தின் (தற்போதைய ஜார்கண்ட்) சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவைப் பற்றி இவர் எழுதிய ‘காட்டின் உரிமை’, எழுபதுகளில் வங்கத்தில் எழுச்சிபெற்ற நக்சலைட் இயக்கம் குறித்த ‘மதர் ஆஃப் 1084’, சந்தால் பழங்குடியினப் பெண்ணைப் பற்றிய ‘திரௌபதி’, பழங்குடியினப் பெண்ணின் அனுமதியின்றி அவரைப் படம்பிடித்த புகைப்படக் கலைஞர் பற்றிய ‘காங்கோர்’ போன்றவை மகாஸ்வேதா தேவியின் முக்கியப் படைப்புகள்.
தன் சுயசரிதையை எழுதத் தொடங்கியவர், அது முற்றுபெறும் முன்பே இறந்துவிட்டார். ஆனால், அவரது படைப்புகள் இறவாப் புகழுடன் அவரது சரித்திரத்தைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.
- ப்ரதிமா
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago