நான் லா.ச.ரா.வின் வாசகனாவதற்கு முன்பிருந்தே அவருடைய ரசிகன். அப்பாவின் ரசிகன். என் சின்னஞ்சிறு வயதிலிருந்தே என்னை அடிக்காமல், கோபிக்காமல், எதையும் நயமாக என் மனதுக்கு அவர் சொல்லியதே அடிப்படைக் காரணம் என்று நினைக்கிறேன்.
என் ஐந்து வயதில் அப்பா சொன்னது இது: ‘‘நாய்க்குப் பயப்படலாம். அது கடிக்கும். பேய்க்குப் பயப்படலாம். அது இருக்கா இல்லையான்னு குழப்பம். திருடனுக்குப் பயப்படலாம். திருட உன்னிடம் ஏதுமில்லை என்றாலும். பொணத்துக்குப் போய் பயப்படுறியே. அதுவே தன்னைத் தூக்கிண்டு போக நாலு பேரை நம்பிண்டு இருக்கறது. உன்னை அது என்ன பண்ணும்?’’
என் பத்து வயதில் அப்பா சொன்னது இது: ‘‘படி. நிறைய படி. எது வேணா படி. ஆனால் படிச்சிண்டே இரு. தன்னாலயே தேவையில்லாத்தெல்லாம் உதிர்ந்துபோய் என்ன வேணுமோ அதை மட்டும் படிப்பாய்.’’
என் பதினைந்து வயதில் அப்பா சொன்னது: ‘‘சுருட்டு புடிக்கறதானால் புடிச்சு முதல் புகையை என் மூஞ்சில விட்டுடு. ஊருக்கெல்லாம் தெரிஞ்சு கடைசியா தெரிஞ்சுக்கறது உன் அப்பன்னு என்னை ஆக்கிடாதே. அப்பாவுக்குப் பயந்து பிடிக்கலைன்னா அப்பா இல்லாத நேரம் புகைக்கத் தோணும். சுருட்டுக்குப் பயந்து பிடிக்காமலிரு. பிடிக்க மாட்டாய்.’’
என் இருபது வயதில் அப்பா சொன்னது: ‘‘வேலைக்குப் போகாத பிச்சைக்காரன் வாழலியான்னு நீ கேக்கறே. நீ சொல்றது வாஸ்தவம்தான். ஆனா, அவன் வாழறது பிச்சைக்கார வாழ்வு. நீ அப்படி வாழத் தயார்னா வேலைக்குப் போக வேணாம்.’’
என் இருபத்தைந்து வயதில் அப்பா சொன்னது: ‘‘அப்பனுக்குப் பைசா அனுப்பலைன்னாலும் பரவாயில்லை. கடன் வாங்காதே. மளிகைக்கடை உட்பட எங்கேயும் அக்கவுன்ட் வெச்சுக்காதே.’’
என் முப்பது வயதில் அப்பா சொன்னது: ‘‘ரேடியோலயும், பத்திரிகைலயும் என்னென்னவோ வர்றது. நீ இன்னும் வீடு வந்து சேரலையேன்னு கவலையோட வாசல்ல வந்து உக்காந்தா, ‘எனக்கு ஒண்ணும் ஆகாதுப்பா. அப்படி ஆச்சுன்னா சேதி வரும்’னு விதண்டா வாதம் பேசறே. ப்ரதர்... சேதி வர்றதுக்கா வாசல்ல உக்காந்திருக்கேன். நீ வர்றதுக்குத்தாண்டா உக்காந்திருக்கேன்.’’
இப்படி ஒரு அப்பா - அவர் லா.ச.ரா.வாக இல்லாமலேயே - அவருக்கு யாரும் ரசிகனாக இருக்கலாம். நானும் அப்படித்தான் இருந்தேன்.
நான் பெரியவனான பின் அவருடைய ஒவ்வொரு செய்கையும் அவரை ரசிப்பதற்காகவே அவரைக் கவனமாக கவனிக்க ஆரம்பித்ததில் ஒன்று புரிந்தது. அவரது எல்லா சொல்லிலும், செய்கையிலும், அசைவிலும், ஏதோ ஒரு செய்தி இருந்தது. அதைக் கண்டுகொண்டவர்கள் பாக்கியவான்கள். நான் பாக்கியவான்.
அவருக்கும் எனக்குமான சம்பாஷணைகள் ஒவ்வொன்றையுமே இன்றைக்கு பொக்கிஷமாகப் பார்க்கிறேன்.
அவரால் காலையில் ‘தி ஹிண்டு’ படிக்காமல் இருக்க முடியாது. அன்று அவருக்கு ஏதோ ஃபுட் பாய்சன் ஆகி, கிட்டத்தட்ட பதினான்கு தடவைக்கு மேல் வயிற்றுப்போக்கு கண்டு, தண்ணீரில் நனைத்த பாண்டேஜ் துணி மாதிரி கட்டிலில் கிடந்தார். ஹீனமான குரலில் “கண்ணா, ஹிண்டு பேப்பரைப் பிடிச்சிக்கக்கூட சக்தியில்லை. எனக்கெதிரே பேப்பரைப் பிடிச்சிண்டு ஒவ்வொரு பக்கமாய்த் திருப்புறீயா. நான் படிச்சுக்கறேன்’’ என்றார்.
‘‘நானே படிச்சுக்காட்டறேனேப்பா’’ என்றேன்.
அவர் சொன்னார், ‘‘குலோப்ஜாமூனைப் பத்தி நீ எவ்வளவு விவரிச்சாலும் என் வாயிலே போட்டாத்தானேடா நான் ருசிச்சிக்க முடியும்!’’
அப்பாவின் கட்டிலிலிருந்து பெரிய கூடம் தாண்டி டிவி முப்பதடி தூரத்தில் இருக்கும்.
“அது யாருடா, கோவை சரளாவா?”
“ஐயையோ… எப்டிப்பா கண்டுபிடிச்சே?”
“அவளோட தலை செம்பட்டையா தெரிஞ்சது. கண் பாதி பாக்கறது. மீதியை மனசு இட்டு நிரப்பறதுடா…”
“சாமியைக் கல்லால அடிக்கறவனும் நல்லாதானேப்பா இருக்கான்?”
“இருக்கட்டுமே…” உனக்குத்தான் பூவும் கல்லும் வேற வேற. சாமிக்கு எல்லாமே சமம். கல்லும் பூதான். கல்லால பூஜை பண்றவனுக்கும் குடுக்கட்டுமே. உனக்கு என்ன வலிக்கறது?’’
“அப்பா, என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் நாம பழகறதைப் பாத்து அப்பா - புள்ளை மாதிரி தெரியலை. சினிமால பாக்கற அப்பா - புள்ளை மாதிரி இருக்குன்றாங்க…”
“எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்குடா கண்ணா. அவங்களும் அவா அப்பா - அம்மாகிட்ட இப்பிடித்தான இருக்கணும்? அப்படி இல்லேங்கிறதைத்தானே இந்த ஆச்சரியம் சொல்லுது?’’
நான் அப்பாவானதும் என் மகளை நானாகவும் என்னை என் அப்பாவாகவும் நினைத்து வளர்க்க ஆரம்பித்தேன். அவளுடைய நாலாவது வயதில் ஒரு சம்பவம். அந்த வருஷம் நோபல் விருது, ஆஸ்கர் விருது, புலிட்சர் விருதுகள் எல்லாம் யார் யாருக்குப் போயிருக்கின்றன என்று அவளுக்குச் சொல்லிக்கொடுத்து, அப்பாவிடம் சொல்லச் சொன்னேன். மளமளவென்று அவள் சொல்லி முடித்ததும் பெருமையாய் அப்பாவைப் பார்த்தேன். அவர் கோபம் அடைந்திருந்தார். “ஏற்கெனவே இந்தக் காலக் குழந்தைகளுக்கு தாச்சுக்கோ, உம்மாச்சி, தச்சு மம்மு, ஜோஜோ மழலையெல்லாம் மறந்துபோச்சு. இதுல புதுசா நீ வேற பெரிய மனுஷ விஷயத்தை அவகிட்ட புகுத்தறியா. குழந்தையை குழந்தையா வள. அப்பதான் அது குழந்தை!’’
எம்ஜிஆர் மறைந்த அன்று காலை ஆறே முக்கால் மாநிலச் செய்திகளில் “ஒரு நம்ப முடியாத செய்தி. தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் இன்று அதிகாலை மரணமடைந்தார்” என்று செய்தி வாசித்தார்கள். அப்பா கேட்டுக்கொண்டிருந்தார். ‘’மனிதராகப் பிறந்தவர்கள் மனிதரில் புனிதராயிருந்தாலும் மறைந்துதானே ஆக வேண்டும். அதென்ன நம்ப முடியாத செய்தி!” என்றார் அப்பா.
அப்படித்தான் இருந்தது எனக்கும். 2007 அக்டோபர் 30 அன்று அதிகாலை 4.10 மணிக்கு. மனதில் எந்த வருத்தமும் இல்லை. மனம் லேசாகத்தான் இருந்தது. பாலகுமாரன், சிவகுமார், சுபா, அனுராதா ரமணன், கே.எஸ்.சுப்ரமணியன், கலைஞன் மாசிலாமணி என்று ஒவ்வொருவராக வந்தபோதும்கூட வழக்கம்போல, அவரைப் பார்த்துப் பேசவே அவர்கள் வந்துகொண்டிருப்பதாகவே மனம் நம்ப விரும்பியது. நேரம் ஆக ஆக அவரை ஸ்நானம் செய்விக்கும்போதுதான் - மெல்ல அடிபட்டவுடன் ரத்தம் வராமல் வெண்மையான உள்தோல் பகுதியில் லேசாய் கொஞ்சம் கொஞ்சமாக ரத்த நரம்பு பூத்து கொத்து நரம்புகளிலும் ரத்தம் பரவுவதுபோல - மனதுக்கு அது உறைக்க ஆரம்பித்தது.
ஐயோ.. அப்பா கண்ணம்மாபேட்டைக்குக் கிளம்பிவிட்டாரா! இனி அவர் திரும்ப வர மாட்டாரா? இனி நான்? நிஜம்தான். நிஜம்தான். அவரது அறையின் கட்டிலில் மட்டுமல்ல; என் மனதில் உருவான அந்தக் காலியிடத்தை எவர் நிரப்ப முடியும்?
அப்பாவுக்கு வீட்டில் ஒரு ரசிகன் மட்டும் இல்லை. அதனால், சொத்து பிரிக்கும்போது பெரிய இழுபறி வந்தது. கடைசியில் அம்மா இப்படிப் பிரித்துக்கொடுத்தாள். எனக்கு அப்பாவின் பழைய வேட்டி, இரண்டு செட் ஜிப்பா, காபி குடித்த டம்ளர், கதை எழுதிய க்ளிப் பேட். கூடவே, அவருடைய முக்கியமான சில புகைப்படங்கள். சில கையெழுத்துப் பிரதிகள். அப்பாவைப் பற்றிய 50 வருட பேப்பர் கட்டிங்குகள். தங்கை காயத்ரிக்கு அப்பாவின் புத்தக பீரோ, அப்பாவின் நெய் சம்புடம், முப்பது வருடங்களாக இரவில் தயிர்சாதம் சாப்பிட்ட கிண்ணம், ஸ்பூன், பிரம்பு நாற்காலி. தம்பி காந்த்துக்கு அடித்தது லக்கி பிரைஸ். அப்பா இரவில் மூத்திரம் போகப் பயன்படுத்திய குடுவை, அப்பாவின் விருதுச் சான்றிதழ்கள், இரண்டு வருடங்களாய் அப்பாவின் தொடையில் வைத்துத் தைத்திருந்த எவர்சில்வர் தகடு. முக்கியமாக, ஐம்பது வருடங்களாக அம்மா எழுதிக்கொண்டிருக்கும் - அப்பா மரணித்த அன்றுகூட அதையும் விரிவாகப் பதிவுசெய்து வைத்திருக்கும் - அவளுடைய டைரிக் குறிப்புகள் அவனுக்கு. சிங்கப்பூர் தம்பி சேகர் விட்டுக்கொடுத்துவிட்டான்.
அப்பாவுக்குப் பிந்தைய காலங்கள் ஆக ஆக அவருடைய ஆகிருதி அதிகரிக்கிறதே அன்றி குறையவில்லை. புதிது புதிதாக அவருக்கு வாசகர்கள் உருவாகிறார்கள். அவர்கள் அவரைத் தேடுகிறார்கள். அவர் இல்லாத சூழலில், செல்லும் இடமெல்லாம் என் கரம் பற்றுகிறார்கள். “நான் லா.ச.ராவைப் பார்க்க முடியவில்லை; உங்களைப் பார்த்துவிட்டேன்; ஒரு படம் எடுத்துக்கொள்ளலாமா?’’
எனக்குத் தெரியும், எந்தத் தகுதியும் அற்றவன் நான். இவை எல்லாமே லா.ச.ரா.வின் மகன் என்பதற்காகவே கிடைக்கும் மரியாதைகள். இந்த உலகத்தில் லா.ச.ரா. மகனாகப் பிறந்த பெருமையைத் தவிர, எனக்கு வேறு ஒன்றும் இல்லை. ஆனால், அந்த ஒன்று போதுமே ஐயா! நான் தன்யனானேன்; தன்யனானேன்!
-லா.ச.ரா. சப்தரிஷி, தொடர்புக்கு: lasarasaptharishi@gmail.com
அக். 30 லா.ச.ரா. பிறந்த, மறைந்த நாள். 2016 அவருடைய நூற்றாண்டு.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago