பெருநிறுவனங்களுக்கா... மக்களுக்கா... வளர்ச்சி யாருக்கு?

By ஜி.ராமகிருஷ்ணன்

16-வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. ஏப்ரல் 7-ல் துவங்கி மே 12-ம் தேதியுடன் முடிவடைகிறது. தனி விமானத்திலும் ஹெலிகாப்டரிலும் காங்கிரஸ் தலைவர்களும், பா.ஜ.க. தலைவர்களும் நாடு முழுவதும் பறந்து பறந்து பிரச்சாரம் செய்தார்கள், செய்கிறார்கள்.

அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் தேர்தல் பிரச்சாரங்களைச் செய்திகளாகவும் காட்சிகளாகவும் வெளியிட்டன, வெளியிட்டுவருகின்றன. தேர்தல் முடிவுபற்றிய கருத்துக்கணிப்புகளும் வருகின்றன. ஆனாலும், தேர்தலில் விவாதப்பொருளாக இடம்பெற வேண்டிய முக்கியமான பிரச்சினைகள் வாக்காளர்களின் கவனத்துக்கு வராமலேயே போய்விட்டன.

கேள்விக்கென்ன பதில்?

விவசாயம் ஏன் நலிந்துவருகிறது? சிறு குறுதொழில்கள் ஏன் நெருக்கடியில் உள்ளன? வேலையின்மை ஏன் அதிகரித்துவருகிறது? நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளின் அடிப்படை வசதிகள் ஏன் தீர்க்கப்படாமல் உள்ளன? பெரும்பான்மையான மக்கள் ஏழ்மையில் உழல்கின்றபோது, விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மட்டும் டாலர் பில்லியனர்களாகக் கொழுத்துள்ளார்களே, எப்படி? இது போன்ற கேள்விகளை எழுப்பாமல், நாங்கள் வந்தால் ‘வானத்தை வில்லாக வளைப்போம்;

மணலைக் கயிறாகத் திரிப்போம்!’ என்றரீதியில் வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். மேற்கண்ட கேள்விகளுக்கு விடைகாண கடந்த 23 ஆண்டுகாலமாக அமலாக்கப்பட்ட, தற்போது அமலில் உள்ள நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையைப் பின்நோக்கிப் பரிசீலிக்க வேண்டும்.

சுரண்டல் வரலாறு

இந்தியா, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் காலனியாக அடிமைப்பட்டுக் கிடந்தபோது, சராசரியாக இந்திய உற்பத்தியில் 10% ஆண்டுதோறும் ஆங்கிலேயர்கள் இங்கிலாந்துக்கு எடுத்துச்சென்றனர். இந்த உபரி அந்த நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளது.

சொல்லப்போனால், வரலாற்றில் ஒரு கட்டத்தில், குறிப்பாக 18-ம் நூற்றாண்டின் இறுதியில் (1795) இங்கிலாந்தின் மொத்த உற்பத்தியைவிட (157.44 மில்லியன் பவுண்டுகள்) இந்தியாவின், குறிப்பாக வங்கம், பிஹார் ஆகிய பகுதிகளின் மொத்த உற்பத்தி மதிப்பு அதிக அளவில் (214 மில்லியன் பவுண்டுகள்) இருந்தது எனத் தனது ஆய்வு நூலில் வல்லுநர் அமியகுமார் பக்ஷி கூறுகிறார்.

இந்தியாவைவிட மிகவும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டிருந்த இங்கிலாந்து, காலனி நாடுகளைக் கொள்ளையடித்து, பொருள் உற்பத்தியில் உலகத்தின் முதன்மையான நாடாக (முதல் உலகப் போர் வரையில்) தன்னை வளர்த்துக்கொண்டது. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, நேரடியான காலனி ஆதிக்கம் சாத்தியமில்லாமல் போயிற்று.

ஆனால், நவீனத் தாராளமயக் கொள்கை மூலமாக மேலைநாடுகள் கொள்ளையை (காலனி ஆதிக்கத்தின்போது இருந்ததை விடப் பல மடங்கு) புது வடிவத்தில் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன.

வளர்ச்சி யாருக்கு?

கடந்த 23 ஆண்டு காலமாக (6 1/2 ஆண்டுகள் பா.ஜ.க., 16 ஆண்டுகள் காங்கிரஸ்) காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் ஆட்சியில் இருந்தன. இக்காலத்தில் இரண்டு கட்சிகளின் தலைமையிலான அரசுகள் கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கையால், ஆண்டுக்குச் சராசரி யாக 6% வளர்ச்சி ஏற்பட்டது. இந்த வளர்ச்சியின் பலன் யாருக்குச் சென்றது?

சுமார் 120 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில், 70 பணக்காரர்கள் டாலர் பில்லியனர்களாக வளர்ந்தனர். இந்த டாலர் கோடீஸ்வரர்கள் 70 பேரின் மொத்தச் சொத்து மதிப்பு, நாட்டின் மொத்த உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு என்பது நம்மை மலைக்க வைக்கிறது. மறுபுறம், கிராமப்புறங்களில் 80% மக்களும் நகர்ப்புறங்களில் சரிபாதியினரும் நாள் ஒன்றுக்கு ரூ. 50 கூடச் செலவுசெய்ய முடியாத ஏழ்மையில் உள்ளனர்.

ஏற்பட்ட வளர்ச்சியும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவில்லை. உருவாகியுள்ள தொழில்களிலும் முறைசாராத் தொழில்களிலும் கூலி மிகவும் குறைவு. சமூகப் பாதுகாப்பு எதுவும் இல்லை. வேளாண்மை நெருக்கடிக்கு உள்ளாகிக் கடந்த 15 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3 லட்சம் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர்.

அரசின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கை யினால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கேந்திரத் தொழில்களில் பலமாகக் காலூன்றியுள்ளன. அவர்களும் இந்தியப் பெருமுதலாளிகளும் தங்கள் லாபத்தைத் தங்குதடையின்றி வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்கின்றனர்.

சலுகைசார் பொருளாதாரக் கொள்கையினால் வளர்ந்துள்ள பல இந்தியப் பெருநிறுவனங்கள், இந்தியாவில் மூலதனம் செய்து தொழில் தொடங்காமல் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் தொடங்குகின்றனர். கடந்த 2013 ஏப்ரல் முதல் 2014 பிப்ரவரி வரை மட்டுமே சுமார் 29 பில்லியன் ( ஒரு பில்லியன் என்பது 100 கோடி) அமெரிக்க டாலர் அளவுக்கு மூலதனத்தை வெளியே கொண்டுசென்றுள்ளனர்.

இங்குள்ள உழைப்பாளிகளைச் சுரண்டியும் இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் அடிமாட்டு விலைக்குப் பெற்றும் சேர்க்கப்படுகின்ற மூலதனத்தை இங்கு வேலைவாய்ப்பைப் பெருக்க உதவாமல், வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்கிறார்கள். காலனி ஆதிக்க நாட்டில் நடந்ததைப் போல் தற்போது பல வடிவங்களில் சுரண்டல் நடைபெறுகிறது.

மெகா ஊழல்களின் காலம்

மேலும், நவீனத் தாராளமயக் கொள்கை அமலாக்கம் தொடங்கிய பிறகுதான் மெகா ஊழல்கள் நடந்துள்ளன. இதற்கு முன்பு ஊழல் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், ஆளும் அரசியல்வாதிகள், முதலாளிகள், அதிகாரிகள் போன்றோரின் கூட்டுக்கொள்ளை (2ஜி, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு போன்றவை) இன்றைய பொருளாதாரக் கொள்கையுடன் ஒட்டிப்பிறந்த ஒன்று. இயற்கை வளங்களைப் பெருநிறுவனங்கள் கொள்ளை யடிக்க அனுமதிப்பதோடு, அரசின் நிதிவருவாயைப் பெருநிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளாக வழங்குவதும் இன்றைய பொருளாதாரக் கொள்கையின் முக்கிய அம்சம்.

இதுதான் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் பொருளாதாரக் கொள்கை. நாட்டில் ஏற்பட்டுள்ள மக்களின் அனைத்து வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கெல்லாம் மேற்கண்ட பொருளாதாரக் கொள்கையே அடிப்படைக் காரணம்.

மாநிலங்களில் அதிகாரத்துக்கு வரும் மாநிலக் கட்சிகளும் இதே கொள்கைகளைத்தான் அமலாக்கிவருகின்றன. உதாரணமாக, 2003-ம் ஆண்டு பா.ஜ.க. கொண்டுவந்த மின்சாரச் சட்டத்தை தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் ஆதரித்தன. இடதுசாரிக் கட்சிகள் நீங்கலாக, அனைத்து மாநிலக் கட்சிகளும் தாராளமயக் கொள்கைகளின் தீமைகளைப் பற்றிப் பேசுவது கிடையாது.

இடதுசாரிக் கட்சிகளின் பிரச்சாரங்களைத் தவிர, வேறு எந்தக் கட்சிகளின் பிரச்சாரங்களிலும் தேர்தல் அறிக்கைகளிலும் இந்தப் பிரச்சினைகள் இடம்பெறாமல் போய்விட்டது அவலமே. பெருநிறுவனங்களின் பிரதி நிதிகளே நாடாளுமன்றத்துக்குச் செல்லவிருக்கிறார்கள் என்பதன் அறிகுறியன்றி வேறென்ன இதெல்லாம்?

- ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்,
சி.பி.ஐ.எம், தொடர்புக்கு: grcpim@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்