சுதந்திரச் சுடர்கள் | இளவரசர்களை வழிக்குக் கொண்டுவந்த மன்னர்!

By செய்திப்பிரிவு

மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைப்பைப் போல அல்லாமல், இந்தியாவின் சுதேச சமஸ்தானங்களை இந்திய அரசுடன் இணைக்கும் வேலை படு சுறுசுறுப்புடன் நடந்தது.

காஷ்மீர், ஹைதராபாத், ஜுனாகட் (குஜராத்) ஆகிய சமஸ்தானங்களைத் தவிர ஏனைய சமஸ்தானங்கள் இந்திய நாட்டுடன் இணைய சம்மதித்துவிட்டிருந்தன.

இந்திய அரசின் தலைமையை ஏற்று, அதற்குக் கட்டுப்பட்டு நடப்போம் என்று உடன்படிக்கையில் கையெழுத்திட அனைத்து சமஸ்தானங்களும் ஒப்புதல் தெரிவித்துவிட்டிருந்தன. ராணுவம், வெளியுறவுத் துறை, தகவல் தொடர்பு ஆகியவை மத்திய அரசிடம் இருக்கவும் அவை சம்மதித்தன.

இந்த சமஸ்தானங்களை இந்திய ஒன்றிய அரசுடன் ஏதாவது ஒரு மாநிலம் வழியாக இணைக்கும் வேலையும் எளிதாக நடந்தது. சமஸ்தானங்கள் மீதான உரிமைகளை விட்டுக்கொடுத்து, இந்திய அரசுடன் இணைவோருக்கு மன்னர் மானியம் வழங்கப்பட அரசு ஒப்புக்கொண்டது.

இந்திய அரசமைப்புச் சட்டப்பேரவையுடன் இணைய மறுக்கும் சமஸ்தானங்கள் ‘விரோதி’ நாடாக கருதப்படும் என்று 1945 டிசம்பர் முதல் 1947 ஏப்ரல் வரையில் தொடர்ச்சியாக நடைபெற்ற அனைத்திந்திய மாநில மக்கள் மாநாடுகளில் இயற்றப்பட்ட தீர்மானங்களும் சுதேச மன்னர்களின் மனங்களில் கிலியை ஏற்படுத்தியிருந்தன.

சுதேச மன்னர்களுக்கு அளிக்கப்பட்ட நெருக்கடிகளால் இந்திய அரசுடன் சேர்வது விரைவடைந்தது. சர்தார் வல்லபபாய் படேலின் மிகப் பெரிய சாதனை இது. இந்திய அரசுடன் சேராமல் தனியரசாக இருந்துவிடலாம் என்று கருதிய மன்னர்களுடைய சமஸ்தானங்களில் மக்கள் இயக்கம் வலுவடைந்து, அந்த எண்ணத்தை மன்னர்கள் மாற்றிக்கொள்ள நேர்ந்தது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் திவான் சர் சி.பி. ராமஸ்வாமி ஐயர் இந்த யோசனையை ஏற்க மறுத்தார். அதனால் புன்னப்புரா– வயலார் ஆயுதமேந்திய மோதல்கள் ஏற்பட்டன. இறுதியில் சமஸ்தானம் இணைந்தது. ஒடிசா மாநிலம் உள்பட பலவற்றில் – குறிப்பாக நீலகிரி, தென்கனால், தால்சேர் பகுதிகளில் சில பழங்குடிகள் தங்களுடைய தலைக்கட்டு சுதந்திரம் போய்விடும் என்பதற்காகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். மைசூரு மகாராஜாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி எடுத்த நடவடிக்கைகளுக்குப் பிறகு அவர் சம்மதம் தெரிவித்தார்.

ஹைதராபாதில் நிஜாம், தன் பிரதேசத்தை சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்தார். காஷ்மீரத்தில் மன்னர் ஹரி சிங்கும் அதே போலவே காஷ்மீர் தனி நாடாக இருக்கும் என்றார்.

தேசிய மாநாட்டு கட்சியின் தலைமையில் திரண்ட காஷ்மீர் மக்கள், காஷ்மீரை விட்டு மன்னர் வெளியேற வேண்டும் என்று கிளர்ச்சி செய்தனர். குஜராத்தின் ஜுனாகட் பகுதியின் ஆட்சியாளர் பாகிஸ்தானுடன் சேர விரும்பினார். ஆனால், அப்பகுதி மக்களோ இந்தியாவுடன்தான் சேர வேண்டும் என்றனர் (ஜுனாகட் பிறகு சேர்ந்துவிட்டது).

ஹைதராபாத், காஷ்மீர் சமஸ்தானங்களை இணைக்கும் பொறுப்பு படேலுக்கு ஏற்பட்டது. ஹைதரா பாத்துக்கு படைகளை அனுப்பி 48 மணி நேரத்துக்குள்

நிஜாமைப் பணியவைத்தார் படேல். நிஜாமுக்கும் அவருடைய ரஜாக்கர்கள் என்ற சிறப்புப் படைக்கும் எதிராக மக்கள் கொண்டிருந்த வெறுப்பு தெலங்கானா போராட்டங்களில் எதிரொலித்தது. எனவே, படேல் எடுத்த நடவடிக்கைக்கு தார்மிக ஆதரவு கிடைத்தது.

1946 முதலே காஷ்மீர் மன்னருடன் படேல் பேசிவந்தாலும், அவர் இந்தியாவுடன் சேருவதை எதிர்த்துக்கொண்டிருந்தார். சுதந்திரத்துக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்து துப்பாக்கியேந்திய தீவிரவாதிகள் வந்து காஷ்மீர் மீது திடீர் தாக்குதலை நடத்திய பிறகு, அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாது என்று உணர்ந்த மன்னர் ஹரி சிங், இந்தியாவுடன் இணையும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இப்படியாக காஷ்மீர் பிரதேசமும் இந்தியாவுடன் சேர்ந்தது.

நன்றி: ‘தி இந்து’ ஆவண காப்பகம்

தமிழில்: வ. ரங்காசாரி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE