சுதந்திரச் சுடர்கள் | வீடுகளை மட்டுமல்ல, நம்பிக்கைகளையும் விட்டுவிட்டே வந்தார்கள்...

By செய்திப்பிரிவு

வீட்டில் மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். முதல் மாடியில் குடியிருந்த நாங்கள், வீதியில் காலடிச் சத்தம் தடதடவென்று ஒலிப்பதைக் கேட்டோம். ‘அடி – விடாதே அடி’, ‘அடித்துக் கொல்லு’ என்ற கூக்குரல்கள் மேலும் மேலும் உரத்துக் கேட்கத் தொடங்கின. சாப்பாட்டு அறையில் இருந்த இரண்டு பெரிய ஜன்னல்களை நோக்கி, நானும் என்னுடைய இரண்டு சகோதரர்களும் அம்மா, அப்பாவும் ஓடினோம்.

வீதியில் ஓடிய பெரிய கூட்டத்தின் கடைசிப் பகுதியை மட்டுமே ஜன்னல் வழியாகப் பார்க்க முடிந்தது. அச்சத்தில் உறைந்துபோய், பேச முடியாதவர்களாக மீண்டும் அறையின் மையப்பகுதிக்கு வந்தோம்.

அப்பா மட்டும் ஜன்னல் வழியாகத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். “முஸ்லிம்கள் ஒரு இந்துவை விரட்டிக்கொண்டு ஓடுகிறார்கள்” என்று கவலையுடன் சொன்னார். அவருடைய குரலில் பீதி தெரியவில்லை, ஆனால் கவலை தெரிந்தது.
“அப்ப, அது இங்கயும் ஆரம்பிச்சாச்சு” என்று என்னுடைய அண்ணன் ராஜீந்தர் கூறினான்.

தேசப் பிரிவினை பற்றிய அறிவிப்பு வந்தது முதலே அவன்தான், ‘நாம் அனைவரும் இந்தியாவுக்குச் சென்றுவிடுவோம்’ என்று கூறிக்கொண்டே இருந்தான். ‘உனக்குத் தேவையில்லாத அச்சம்’ என்று நாங்கள்தான் அவனை அடக்கி வைத்திருந்தோம்.

வெளியேறத் தயாரானோம்

நாங்கள் வசித்த சியால்கோட் நகரில் வகுப்புவாதப் பதற்றமோ கலவரமோ மூண்டதே இல்லை. மக்கள்தொகை 70,000. அவர்களில் 80% முஸ்லிம்கள், எஞ்சியவர்கள் இந்துக்கள், சீக்கியர்கள். அவரவர் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டி ருந்தார்கள். நாங்கள் பக்ரீத், தீபாவளி இரண்டையும் சேர்ந்தே கொண்டாடினோம்.

பாதுகாப்பான இடத்துக்கு இனி நாங்கள் போயாக வேண்டுமா? எங்களுடைய தந்தை டாக்டராக இருந்ததால், அந்த ஊரின் எல்லா முஸ்லிம்களையும் குடும்பவாரியாகவே அறிந்திருந்தார். அவர்கள் எங்களை வெளியே தூக்கி எறிந்துவிட மாட்டார்கள் என்றே நம்பினோம். அப்போது நகர ஜெயிலராக இருந்த எங்களுடைய உறவுக்காரர் அர்ஜுன் தாஸ் வேக வேகமாக வந்தார். பதற்றமாக இருந்தார்.

“இனி நீங்கள் யாரும் இந்த ஊரில் இருக்க முடியாது, உங்களைக் கூட்டிச் செல்லத்தான் வந்தேன், துணிமணிகளை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று படபடத்தார். எங்களைக் கூட்டிச் செல்ல காருடன் வந்திருந்தார். (பின்னாளில், மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்ஸேவை அம்பாலா சிறையில் தூக்கில் போடுவதை அதிகாரியாக நேரில் பார்த்தவர் அவர்.)

அவருடைய வீட்டை அடைந்ததும் என் தந்தையிடம் கூறினார்: “அடுத்து இந்த ஊரில் கலவரம் நடக்கப் போகிறது. இந்தியாவி லிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களில் பலர், நகருக்கு வரத் தொடங்கிவிட்டனர்” என்றார். சற்றுமுன் நாங்கள் வீதியில் பார்த்ததுதான் முதல் சம்பவம். பிறகு நாள் முழுவதும் நகரில் வெடிச் சத்தமும் வேட்டுச் சத்தமும் தொடர்ந்து கேட்டன.

அருகிலிருந்த சிறைச்சாலையின் நெடிதுயர்ந்த சுவர்கள், அந்த ஓசைகளை ஓரளவுக்கு மட்டுப்படுத்தின. நகரின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து புகை வெளிவந்தபடி இருந்தது. ஆங்காங்கே சூறையாடல்களும் தீ வைப்புகளும் தொடங்கிவிட்டன. மாலையில் பல இடங்களில் தீ ஜுவாலைவிட்டு எரிவதைப் பார்த்தோம். நகரின் வான வெளியில் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை நெருப்பால் பிரகாசமாகிக்கொண்டே இருந்தது.

இனி இந்த ஊரில் அமைதியும் இயல்புநிலையும் திரும்பப் பல நாள்களாகும் என்பது புரிந்தது. பாகிஸ்தானுக்கு வழங்கப் பட்ட பஞ்சாப் பகுதியில் வாழ்ந்தவர்களில் அதிகம் பேர் சாலைக்கு வந்துவிட்டதை பார்த்தோம். இந்துக்களும் சீக்கியர்களும் இந்தியப் பஞ்சாப்பை நோக்கிச் சென்றோம். எதிர்ச்சாரியில் முஸ்லிம்கள் வந்து கொண்டிருந்தனர்.

மனதைப் பிசையும் உண்மை

என்னுடைய தந்தையிடம் சிகிச்சை பெற்றுவந்த ராணுவ கர்னல், அவருடைய குடும்பத்தாருடன் என்னையும் லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றார். போகிற வழியில் கண்ட காட்சிகள் நெஞ்சைப் பிசைவதாகவே இருந்தன. மக்களுடைய முகங்களில் கவலையும் பீதியும் குடிகொண்டிருந்தன. அனைவருமே பசியாலும் களைப்பாலும் அச்சத்தாலும் சோர்ந்திருந்தனர்.

எல்லோருமே வீடு – வாசல் என்று அனைத்தையும் இழந்து, உயிர் பிழைத்தால் போதும் என்று வெறுங்கையோடு வெளியேறிக் கொண்டிருந்தனர். பல ஆடவர்களின் முகங்களில் ரத்த காயங்கள். பெண்களும் குழந்தைகளும் அழுக்கான உடைகளுடனும் நிலைகுலைந்தும் சென்றுகொண்டிருந்தனர்.

சீக்கிய முதியவர் ஒருவர் நீண்ட, பழுப்பேறிய தாடியுடன் எங்கள் லாரிக்கு அருகில் வந்து அவருடைய ஒரே பேரனை என்னிடம் திணிக்க முயன்றார். “இவன் மட்டும்தான் எங்கள் குடும்பத்தில் மிஞ்சினான், இவனாவது பிழைத்துப்போகட்டும் இந்தியாவுக்குக் கூட்டிச் செல்லுங்கள்” என்று என்னிடம் கெஞ்சினார். ஒரு இளம் பெண் அவளுடைய குழந்தையை லாரியில் போட வந்தாள். “நீ இந்தியாவுக்குப் போடா செல்லமே, அங்கு வந்து உன்னைத் தேடிக் கண்டுபிடித்துக்கொள்கிறேன்” என்றாள்.

என்னுடைய குடும்பத்திலேயே நான் மட்டும் தான் இந்த லாரியில் ஏற்றப்பட்டிருக்கிறேன், நான் எப்படி மற்றவர்களுக்குப் பொறுப்பேற்க முடியும்? இதை எப்படி அந்தத் தாத்தாவுக்கும் இளம் பெண்ணுக்கும் புரியவைப்பது? ஆதரவற்ற இந்த மக்களை இப்படியே விட்டுச் செல்வதும் கடினமாக இருந்தது. இந்தச் சூழலில் எல்லோரும் அவரவர் பாதுகாப்பை மட்டும்தான் உறுதிசெய்துகொள்ளப் பார்க்கின்றனர், இதில் மற்றவர்களுக்கு உதவுவது எப்படி?

பதைபதைப்பான நிமிடங்கள்

இந்தியாவை நோக்கிச் செல்லும் நெடுஞ் சாலையில் நுழைந்தால், அடுத்தடுத்து வாகனத் தொடர்களாகவே தெரிந்தன. இப்படி எத்தனை மைல் செல்ல வேண்டும்? ஒருவருக்கும் விடை தெரியவில்லை. யாரும் அதைப் பற்றி அக்கறைப்படவுமில்லை, இந்தியா இருந்த திசை நோக்கிச் செல்வது மட்டுமே அனைவருடைய இலக்காக இருந்தது.

இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த ஊரையும் வீட்டையும் உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் விட்டுவிட்டுக் கண நேரத்தில் வெளியேறும்போது, இனி எதைத்தான் சிந்திப்பது அல்லது கவலைப்படுவது? சாலையின் இரண்டு பக்கங்களிலும் அடுக்கடுக்காகப் பிணங்களையே பார்த்தேன்.

ஆங்காங்கே ஆளே இல்லாமல் லாரிகள் நின்றதைப் பார்த்தபோது, அவற்றை நிறுத்தி அதிலிருந்தவர்களைக் கொன்றுவிட்டு சூறையாடியிருக்கிறார்கள் என்பது புரிந்தது.

பிற்பகலுக்குப் பிறகு எங்கள் வண்டிகள் லாகூரை நெருங்கின. ஆனால், வழியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன, ஏன் என்று ஒருவருக்கும் தெரியவில்லை.

முஸ்லிம்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரிகளை அமிர்தசரஸ் நகரில் தடுத்து அடித்தார்கள், அதற்குப் பழிவாங்க லாகூர் நகர முஸ்லிம்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றார்கள். லாரிகளிலிருந்து இறங்குமாறு உத்தரவிடப்பட்டோம். பிறகு லாரிகளை வட்ட வடிவில் நிறுத்தி அதையே முதல் கட்ட தடுப்பு அரண் ஆக்கினார்கள்.

லாரிகளுக்குப் பின்னால் ஆண்கள் கைக்கு கிடைத்த ஆயுதங்களுடன் மறைந்துகொண்டார்கள். பெண்களும் குழந்தைகளும் நடுவில் கும்பலாக அமர்த்தப்பட்டனர். நாங்கள் அமைதியாகக் காத்திருந்தோம். அவ்வப்போது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. பக்கத்திலிருந்த வயல்களிலிருந்து பிணங்களின் அழுகிய வாடை வீசியது.

‘அல்லாஹு அக்பர்’, ‘யா அலி’, ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற குரல்கள் கேட்டவண்ணம் இருந்தன. ஆனால், யாரும் தாக்கவில்லை. நீண்ட நேரம் இப்படியே காத்திருந்த பிறகு, எங்கள் அச்சம் சரியல்ல என்பது தெரிந்தது.

அனைத்தையும் துறந்து…

சிறிது நேரத்துக்குப் பிறகு ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்ற குரல் கேட்டது. அதுதான் பாகிஸ்தான் எல்லையின் கடைசிப் பகுதி என்பது புரிந்தது. அவசர அவசரமாக வெள்ளை வண்ணம் பூசப்பட்டிருந்த டிரம்கள், வேலிபோல அடுக்கி வைக்கப்பட்ட இடத்தை நோக்கி வேகமாகக் கடந்தோம்.

ஒரு மூங்கில் கம்பத்தின் உச்சியில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி, அதுதான் எல்லைப்புறக் காவல் சாவடி என்று அடையாளப்படுத்தியிருந்தார்கள்.

அப்போது பகல் நேரமாகவே இருந்தது. லாரியிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தேன். ஏராளமானோர் லாரிகளில் கும்பலாக அடைபட்ட நிலையிலும் நடந்தபடியும் சாரிசாரியாக பாகிஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.

நடந்து போனவர்களின் தலைகளில் ஏதோ சாமான் மூட்டைகள் இருந்தன. குழந்தைகள் பசி, களைப்பு ஆகியவற்றுடன் அச்சமடைந்தவர்களாக, அவர்கள் பின்னால் ஓடிக்கொண்டிருந்தனர். அவர்களுமே இந்தியாவில் தாங்கள் வாழ்ந்த ஊரையும் வீடுகளையுயம் உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் விட்டுவிட்டுத்தான் போய்க் கொண்டிருந்தார்கள்.

இரு தரப்பினரும் படுகொலைகளையும் வேறு கொடிய செயல்களையும் வழி நெடுகிலும் பார்த்தார்கள். இருதரப்பினரும் வரலாற்றின் பக்கங்களில் காயம் பட்டவர்களாகவே இருந்தனர். இரு தரப்பினருக்குமே பொதுவான ஒரே அடையாளம் – அகதிகள்!

நன்றி: ‘தி இந்து‘ ஆவணக் காப்பகம், கே.ஆர். நரேஷ் குமார்,
விபா சுதர்சன்
தமிழில்: வ. ரங்காசாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்